தொல்காப்பியர்
காட்டும் கற்பும் மனவள மேம்பாடும்
முனைவர்
வீ.உதயகுமார்
மரபுவழி
வாழ்க்கைக் கூறுகளில் இருந்து மனித சமுதாயம்
விலகிக்கொண்டிருக்கிறது. அடிப்படைகளற்ற நவீன செயல்பாடுகளில் ஈடுபட்டு படிப்படியாகத்
தன் இயல்புகளை இழந்து வருகின்றது. இயற்கை அறிவை பயன்படுத்துவதற்கு கடந்தகால நெறிமுறைகளைப்
புறந்தள்ளி அண்மைக் கால அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டு அதைச் சீரழிக்கும் போக்கை
வளர்த்துக்கொண்டிருக்கின்றது.
மனித உறவுகளைப்
பேணி வளர்த்து உவகையுடனும் உயிர்ப்புடனும் வாழ்க்கை வாழ்வதற்குப் பதிலாக அடக்கு முறைமையை
உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இத்தகைய போக்குகளுக்கெல்லாம் முதன்மையான காரணம் நம்முடைய
மனதின் செயல்பாடுகள்.
தொல்காப்பியர் காட்டும் கற்பு வாழ்க்கையை இன்றைய இளைஞர்களுக்குக் கற்பிக்க
வேண்டும். அதனை இன்றைய வாழ்க்கையுடன் ஒப்பிட்டுக் காட்டி அதன் மேன்மை தன்மையை உணரும்படிச்
செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
குடும்ப வாழ்க்கை
தொல்காப்பியர் வெளிப்படுத்தும் குடும்ப வாழ்க்கையானது இன்றைய இளைஞர்களுக்கு
இனிய இல்லற நெறிகளைக் கற்றுத்தந்தது. களவுக்குறிய வாயில்கள் போலவே, கற்பு வாழ்க்கை நடைபெறுவதற்கு கற்பு கால வாயில்கள் துணை நின்றனர்.
காதல் இன்பத்தைத் துய்ப்பதில் களவு, கற்பு என்ற இரு வேறு நிலைகள் உள்ளன.
அகப்பொருள் பாடல்களைப் பயில்வோர் இந்த இரண்டு நிலைகளையும் காண்பர். காதலனும் காதலியும்
தொல்காப்பியர் கூறும் ‘பால்வரைத் தெய்வம்| என்ற ஊழின் துணையால், முன்பின் அறியாதவர்களாக
இருந்தாலும் ஓரிடத்தில் சந்தித்துக் காதல் கொள்ளுகின்றனர், கலந்து இன்பந் துய்க்கின்றனர்.
இதனைக் களவு என்று அகப்பொருள் இலக்கணம் கூறும். இவ்வாறு களவு முறையில் காதல் புரிபவர்கள்
பிறகு, பல்லோரறிய மணந்துகொள்வர். இதனைக் கற்பு என்று கூறுவர் அகப்பொருள் நூலார். முதலில்
களவு ஒழுக்கத்தில் ஈடுபட்டு, அப்பால் திருமணம் புரிந்துகொண்டு, இல்வாழ்க்கையாகிய கற்பொழுக்கத்தை
மேற்கொள்வது ‘களவின் வழி வந்த கற்பு|1 என்று சொல்லப்பெறும். களவின்றி நேரடியாகக் கற்பில்
வாழும் நிலையும் அக்காலத்தில் இருந்தது. ‘களவின்வழி
வராக் கற்பு|2 என்று இதனைக் குறிப்பர். இந்த இரண்டு வகைக் கற்பிலும் களவின் வழி வந்த
கற்பே சிறப்புடையது என்று பண்டைத் தமிழர்கள் எண்ணினர். தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர்
புரிந்து கொள்ளும் தன்மை களவினால் ஏற்படுகிறது. புரிதலோடு ஏற்படும் வாழ்க்கை சிறப்பாக
அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமகளுக்கு இல்லறத் தலைமை
பொது உடைமைச் சமுதாயத்தில் கூட்டு வாழ்க்கைமுறை இருந்தது. அதற்குப்
பெண் தலைமை வகித்திருந்தாள். அக்காலத்தில் மக்கள் சீரான வாழ்க்கை நடத்தியதை வரலாற்றுச்
சான்றுகள் வெளிப்படுத்துகின்றன. தொல்காப்பியர் காலத்தில் நில உடைமைச் சமுதாயம் வளர்ந்துவிட்டது.
இனக்குழுவிற்கும் பேரரசுக்கும் ஆண்; மக்களே தலைமை வகித்தனர். ஆனால் தொல்காப்பியர் காட்டும்
தலைவன் தன் குடும்பத் தலைமையைத் தலைமகளிடம் ஒப்படைக்கிறான். திருமணமானவுடன் அவளுடைய
இல்லறப் பண்புகளைக் கண்ணுற்று வியந்து அதே பண்புகளுடன் இல்லறத்தை நடத்த வேண்டும் என்று
அவளைப் பணிந்து வேண்டுகிறான்.
அவளை மனைவி
என்று மட்டும் நினைக்காமல் தன் குடும்பத்தை நடத்தும் ஆளுமையாக எண்ணுகிறான். அவளுக்குச்
சான்றோருடனும் ஏனைய சமுதாயத்தினருடனும் பழகும் முறைகளைக் கற்பிக்கிறான். அவளும் தன்
பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறாள். இதனை தொல்காப்பியர்,
‘பெற்ற
தேஎத்துப் பெருமையின் நிலைஇ
குற்றம் சான்ற பொருள் எடுத்து உரைப்பினும்
………………………………………………..
அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும்
அந்தம் இல் சிறப்பின் பிறர் பிறர் திறத்தினும்
ஒழுக்கம் காட்டிய குறிப்பினும்| (தொல்.கற்பு-5)
என்ற நூற்பாக்களில் விளக்குகிறார்.
தொல்காப்பியர்
வெளிப்படுத்தும் கூற்றுகளின் மொழியில் தலைவியின் மாட்சிமை பொருந்திய இல்லற இயல்புகளை
விளக்குகிறார். தலைவி தன் உயிரைவிட இல்லறத்தை மேலாகப் போற்றுபவள். தலைவன் மீது மிகுந்த
அன்பு கொண்டவள். சான்றோர் கூறும் நல்லொழுக்கங்களைப் பின்பற்றக்கூடியவள். பிறர் கூறும்
கடுஞ்சொற்களைப் பொறுத்துக்கொள்பவள். இன்சொற்களைப் பேசுபவள். பிறர் அறியாது இல்லத்தின்
நிகழ்ச்சிகளை மறைப்பவள். குடும்பத்தில் பொருளாதாரம், மனத்துயரம் போன்ற சிக்கல்கள் இருந்தாலும்
அதைப் பொருட்படுத்தாமல் விருந்தினரை வரவேற்று உபசரிக்கக் கூடியவள்.
ஊடலில் தலைவன் பணிதல்
தற்காலத்தில் தலைவன், தலைவி இருவரிடையே ஏற்படும் ஊடலைத் தணிக்கும்
பொருட்டு தலைவன் பணிந்துபோவது என்பது மிகவும் அரிதாகிவிட்டது. குடும்பத்தில் ஏற்படும்
பெரும்பாலான பிரச்சனைகளுக்குத் பணிந்துபோதல் என்பது சிறந்த தீர்வாக அமைகிறது. விட்டுக்கொடுப்பவர்
கெட்டதில்லை முதலிய பழமொழி;கள் மக்களிடையே நிலவினாலும் அவற்றை யாரும் வாழ்வில் பின்பற்றுவதும்
இல்லை. பணிந்து போகாமல், வீண்; பிடிவாதம் செய்வதால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும்
பாதிப்பு ஏற்படுகிறது. ஊடலில் பணிந்து செல்வதால் மன அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது.
சிக்கலுக்கான தீர்வாகப் பணிந்து நடத்தல் அக்காலச் சமூகத்தில் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விட்டுக்கொடுக்கும் மனநிலை என்பது நம் சிறு குழந்தைகளின் விளையாட்டுக்களில் இருந்து
ஆரம்பிக்கிறது. இம்மனநிலை நம் பண்பாட்டுடன் கலந்து காணப்படுகிறது. இம் மனநிலை ஆளுமைப்
பண்பின் அடிப்படை எனலாம். அதனைப் பின்பற்றி வாழும்பொழுது பல்வேறு பிரச்சனைகளுக்குத்
திர்வு காணமுடியும்.
தலைவன் தலைவி இடையே ஊடல்; ஏற்படும்போது தலைமகன் பணிந்து செல்கிறான்.
அவ்வேளை தலைமகள் உயர்வாகக் கருதப்படுகிறாள். ஆனால் அப்பணிவும் முடிவில் தலைவனுக்கு
வெற்றியையே தேடித்தரும் என்பதை,
“மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்
நினையும் காலைப் புலவியுள் உரிய" (தொல்.பொருள்:223)
என்ற நூற்பா மூலம் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
நான் இன்று தவறு செய்தேன் என்று தலைவன் நம் காலில் விழுதலும் உண்டு
எனத் தலைவி கூறுவதன் மூலம் தலைவன் பணிவைக் காணலாம். இதனை,
“தப்பினேன்
என்று அவன் அடி சேர்தலும் உண்டு" (கலி.89:14-15)
என்ற வரியின் மூலம் அறியலாம்.
தலைவன்
தலைவியின் ஊடலைத் தணிக்கும் பொருட்டு பணிந்து செல்வது என்பது சிறந்த செயலாகும். பெரும்பாலான
குடும்பங்களில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நீ பெரியவரா நான் பெரியவரா என்று நினைத்துக்கொண்டு
இருப்பதால் பிரச்சனைகளுக்குத் தீர்வு என்பது கிடையாது. அதனால், இருவரும் இல்லற வாழ்விலிருந்து
பிரிந்து வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சில குடும்பங்களில் தலைவனோ, தலைவியோ
அல்லது இருவருமோ பணிந்து செல்வதால் இல்லற வாழ்வில் சிக்கல்கள் குறைவதோடு மட்டுமல்லாமல்,
மனம் பண்பட்ட நிலையை அடைகிறது. எடுத்த காரியங்களைச் சிறப்பாக நடத்தி முடிக்க முடிகிறது.
குறிப்பால் உணர்தல்
பெற்றோர்கள் இக்காலத்தில் குழந்தைகளைக் கவனித்து வளர்த்தல் என்பது
சமூகச்சிக்கலாக மாறிவிட்டது. குழந்தைகளின்
நடத்தையைக் கவனிப்பது என்பது கிடையாது. பெற்றோர்கள் தினந்தோறும் குழந்தைகள் பள்ளிக்குச்
செல்வதற்கு முன் வேலைக்குச் சென்று இரவு குழந்தைகள் தூங்கிய பிறகுதான் வீட்டுக்கு வருகின்றனர்.
எனவே, குழந்தைகள் என்ன செய்கின்றார்கள் என்பதைக் கவனிக்க பெற்றோர்களுக்கு நேரம் இல்லாமல்
போய்விடுகிறது. அவர்களின் செயல்பாடுகளைக் கவனிப்பதற்கோ புரிந்துகொள்வதற்கோ வாய்ப்பு
இல்லாமல் போகிறது. இது போன்ற நிகழ்வுகள் தற்காலச் சமூகத்தில் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.
பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவு செய்யவேண்டும், நண்பர்களாக
மனம் விட்டு உரையாட வேண்டும், அப்போதுதான் குழந்தைகளும் மனம்விட்டு பேசுவதும், தயக்கம்
இல்லாமல் செயல்படுவதுமாக இது போன்ற செயல்பாடுகள் மூலம் மனவளமான சமூகத்தை உருவாக்க முடியும்.
தொல்காப்பியர் காலத்தில் தலைவி களவு வாழ்க்கையில் ஈடுபட்டுத் தலைவனை
நினைத்து வேட்கையில் வருந்துவதை அவள் நடத்தையின் மூலம் தாய் அறிந்திருந்தாள். அவளின் உடல் நிலையில் ஏற்படும்
மாற்றங்ளைக் கொண்டே குறிப்பாக உணர்ந்தாள் என்பதை,
“உற்றுழி அல்லது சொல்லல் இன்மையின்
அப்பொருள் வேட்கைக் கிழவியின் உணர்ப" (தொல்.பொருள்:205)
என்ற நூற்பா வழி அறியமுடிகிறது.
தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் மகளிர்க்கு உயிரினும் நாண் சிறந்தது என்பதை “உயிரினுஞ்
சிறந்தன்று நாணே"4 (தொல்.பொருள்:111) என்று விளக்குகிறார். மேலும்
“மற்று
இன்னுயிர்
கழிவ தாயினும் நின்மகள்
ஆய்மலர்
உண்கண் பசலை
காம நோயெனச்
செப்பா தீமே." (அகம்.52)
என்ற பாடல் விளக்குகிறது.
தலைவி அறிவுரை கூறுதல்
அறிவுரை வழங்குதல் எளிது அதை கேட்டு நடப்பது என்பது கடினம் என்று வேடிக்கையாகக்
கூறுவார்கள். ஆனால் அது நடைமுறை உண்மை. தற்காலத்தில் குடும்பத்தலைவன் குடும்ப உறுப்பினர்கள்
அனைவருக்கும் அறிவுரைகள் வழங்குகிறான். அதே இடத்தில் இருந்து தலைவி அறிவுரைகள் வழங்கினால்
அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவனுக்கு இல்லை என்றே கூறலாம். கணவன் துன்பத்தில் இருக்கும்போது
தலைவி அறிவுரை கூறுவதற்கோ அல்லது அரவணைத்துப் பேசுவதற்கோ பெரும்பாலான குடும்பங்களில்
இடம் இல்லாமல் போகிறது. உனக்கு ஒன்றும் தெரியாது நீ போ, வேலை இருந்தா பாரு என்று கூறுவதை
வழக்கமாக வைத்துள்ளனர்.
பண்டைய காலத்தில் தலைவன் கவலைப்பட்டுக் கலங்கி இருக்கும்போது அவனைத்
தாயைப்போலத் தழுவிக்கொண்டு தக்க அறிவுரைகள் வழங்கி ஆதரவு தருவது தலைவியின் கடமையாக
இருந்தது. என்பதை,
“தாய்போல் கழறித் தழீஇக் கோடல்
ஆய்மனைக் கழத்திக்கும் உரித்துஎன மொழிப
கவவொடு மயங்கிய காலை யான" (தொல்.கற்பு:32)
என்ற நூற்பா மூலம் அறியமுடிகிறது.
மேலும்,
“அழியல் அஞ்சல் என்று ஆயிறு பொருளினும்" (தொல்.கற்பு.144:22)
என்ற நூற்பா மூலம், களவுக் காலத்தில்
வந்த இன்னல்களை எண்ணி வருந்த வேண்டாம் என்று குறிப்பிடுகிறார்.
பழங்காலத்தில் தலைவிக்குத் தனி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவள் பெயரளவில்
குடும்பத் தலைவியாக இல்லாமல். குடும்பக் கடமைகளை நிறைவேற்றும் பொறுப்புடையவளாக இருந்தாள்.
அவள் கூறும் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்தனர். ஆனால் தற்காலத்தில் குடும்பத்தலைவிக்கு
அறிவுரைகள் வழங்குவதற்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. தலைவிக்குக் குடும்ப கடமைகளை
நிறைவேற்ற வாய்ப்பு வழங்க வேண்டும். அப்போது தான் தலைவியின் மனவள ஆளுமை வெளிப்படும்.
அவர்கள் மனநிம்மதியோடு சுதந்திரமாகச் செயல்பட முடியும்.
பெரியோரைப் பேணி பாதுகாத்தல்
இக்காலத்தில் ‘பெரியோரைப்
பேணுதல்| என்பது அரிதாகிவிட்டது. எங்குப் பார்த்தாலும் முதியோர் இல்லங்கள் நாளுக்கு
நாள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. குடும்ப உறுப்பினர்களுக்கு மதிப்பு கொடுப்பது கிடையாது. இச்சமூகத்தில் மதிப்பு மரியாதைக்காக முதியோர் இல்லங்களைத்
திறந்து அவற்றில் முதியோர்களை அனாதையாக விட்டுச்செல்வது என்பது இன்று நாகரிகமாக மாறிக்
கொண்டுவருகிறது. மனிதனுக்கான மதிப்பு இச்சமூகத்தில் இல்லை என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்
இம்முதியோர் இல்லங்கள். முதியவர்களைத் தனிமைப்படுத்துவது தன்னையும் தன் குடும்பத்தையும்
தனிமைப்படுத்துவதற்குச் சமம். தனிமையின் காரணமாகத்தான் பல்வேறு பிரச்சனைகளும் சிக்கல்களும்
எழுந்தவண்ணம் உள்ளன. முதியோர் இல்லங்கள் குறையும் போதுதான் இச்சமூகத்தில் மனிதனுக்கு
மரியாதை என்பது கிடைக்கும்.
கற்பு வாழ்க்கை
தொடங்கியவுடன் பெரியோரைப் பேணி பாதுகாத்து அவர்கள் நலனில் அக்கறை செலுத்தினால் மட்டுமே
முதியோர் இல்லங்களைக் குறைக்க முடியும். பெரியோரைப் பேணுதல் நம் முக்கிய பண்புகளில்
ஒன்று என்பதை,
“ஒழுக்கம் காட்டிய குறிப்பினும் ஒழுக்கத்துக்
களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி" (தொல்.கற்பு:144:16-17)
என்ற நூற்பா மூலம் தொல்காப்பியர்
எடுத்துரைக்கிறார்.
பெரியோரை மதித்து நடப்பது என்பது நம் பண்பாட்டின் வெளிப்பாடு. நம்
பண்பாடானது மரபோடு தொடர்புடையது. ஆனால், நம் பண்பாட்டை இழந்து வாழ்ந்து வருகின்றோம். நமது பண்பாட்டை மீட்டுருவாக்கம்
செய்ய வேண்டும் அப்போது தான் விழுமியமான சமுகத்தை உருவாக்க முடியும்.
கடுஞ் சொற்களைப் பயன்படுத்தாமை
இன்றைய குடும்பங்களில் தலைவன், தலைவி இருவருக்கோ அல்லது உறவினர்களுக்கோ
ஒருவருக்கொருவர் கோபம் காரணமாகச் சண்டையிடுதல்
இயற்கையாகக் காணப்படுகிறது. குடும்பங்களில் கோபம் ஏற்படும் போதோ, வாய் சண்டைகள்
நடக்கும் போதோ கடுஞ்சொற்களைப் பயன்படுத்துதல் ஒருபடி மேலே சென்று இழிவான (கொச்சை) சொற்களைப்
பேசுவது என்பது பெரும்பாலான குடும்பங்களில் இயல்பாகவே நிகழ்கிறது. அது அங்குள்ள குழந்தைகளைப்
பாதிக்கின்றது. அக்குழந்தைகள் அதைக் கற்றுக்கொண்டு வளர்ந்து பின்னர் அவர்களும் அப்படியே
பின்பற்றுகின்றனர். பொது இடங்களில் கோபம் காரணமாகக்
கடுஞ்சொற்களைப் பயன்படுத்துதல், இழிவான நாகரீகம் அற்ற கொச்சைச் சொற்களைப் பேசுதல் என்பது
இயல்பாக இன்றைய சமூகத்தில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. நாகரிகம் இல்லாச் சொற்களைப்
பேசுதல் என்பது இன்று நாகரிகமாகப் பார்க்கப்படுகிறதே தவிர தவறாகப் பார்க்கப்படவில்லை.
இது இன்றைய சமுதாய போக்காக மாறிவிட்டது. இப்படிப்பட்ட சமூகத்தில் நல்ல மனவளமான சமூகத்தை
உருவாக்குவது என்பது சிக்கலுக்குரியதாக மாறிவிட்டது.
இப்புலவியும் ஊடல் தலைவிக்கு உண்டானால்,
தலைவன் பரத்தமையால் தலைவிமாட்டு நிகழ்வதாகக் கூறுதல் புலனெறி வழக்கமாகும். இதனை,
அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றின்
சிறைப்புறம் குறித்தன்று என்மனார் புலவர் (தொல்.கற்பு:177)
என்ற நூற்பா மூலம் தொல்காப்பியர்
விளக்குகிறார்.
‘ தலைவன் தலைவியர் அன்பில்லாக் கொடுஞ்சொற்களைக் கூறுமிடத்து அவ்விருவர்முன்
நில்லாது ஒன்றன்மேல் வைத்துச் சிறைப்புறத்தாராகக் கூறுவர்5
இது போன்று நாகரீகம் கருதி, கடுஞ்சொற்களைப்
பயன்படுத்தாமல் வாழ்ந்தால், வளமான சமூகத்தை எதிர்காலத்தில் உருவாக்க முடியும். நம்
பண்பாட்டையும் பாதுகாக்க முடியும். என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
பாராட்டு மொழிதல்
மனித இன வராலற்றில் புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் இல்லை என்றே கூறலாம்.
பாராட்டு என்பதனை வெறும் வார்த்தையாக மட்டும்
பார்க்காமால், அந்த வார்த்தை மனிதனின் மனநிலையை மாற்றும் ஒரு உந்துசக்தியாகக்
கருதலாம்.
குடும்பமாக
ஒன்றாக இணைந்து உண்பது என்பது குறைவு என்றே கூறலாம். அதிலும் குடும்பத்தில் சமைத்த
உணவை உண்டு பாராட்டுதல் என்பது மிகவும் குறைவு. உண்ணும்போதும் உறங்கும்போதும் நிதானமாக,
நிம்மதியாகச் செயல்பட வேண்டும் அப்போது தான் வளமான வாழ்க்கை வாழமுடியும்.
இன்றைய
குடும்பச்சிக்கல்களுக்குத் தீர்வு காணும் உளவியல் மருத்துவர்களும் குடும்ப நல ஆலோசகர்களும்
கணவன் மனைவியின் சமையல், அவள் ஆசையாகச் செய்யக்கூடிய பிற செயல்பாடுகளை வாயாறப் பாராட்ட
வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். அவ்வாறு தலைவியின் செயல்பாடுகளைப் புகழ்வோரின்
குடும்பங்களில் சிக்கல்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். மனைவியுடன் சேர்ந்து வீட்டு
வேலைகளில் கணவன்மார்களும் பங்கெடுத்துக்கொண்டால் இருவரும் சேர்ந்து வேலை செய்யும் போது குடும்பங்களில் சிக்கல்கள் என்பதற்கு வேலை இல்லை.
சில சமயங்களில் சிக்கல்கள் எழுந்தாலும் அவை நொடிப்பொழுhதில் நீங்கிவிடும் என்பதில்
ஐயம் இல்லை.
பழங்காலத்தில்
தலைவன் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தலைவியின் அனைத்து செயல்களையும் பாராட்டுகிறான்.
அவனுடைய பாராட்டு மொழிகள் தலைவியின் கடமைகளை நன்கு நிறைவேற்றுவதற்கும் அவள் தலைவன்
மீது அன்பை வளர்ப்பதற்கும் காரணமாக அமைகின்றன.
பழங்காலத் தலைவன் தன்மனைவியின் சமையல் அமிழ்தத்தைவிட உயர்வாக இருப்பதாகப்
போற்றுகிறான். தலைவி சமைத்த உணவையும் அவள் சூடியுள்ள பூவையும் அவன் புகழ்கிறான். என்பதை,
‘ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது
வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கு என
அடிசிலும் பூவும் தொடுதற்கண்ணும்| (தொல்.கற்பு.5)
என்ற நூற்பா மூலம் அறியலாம்.
புதிதாகத் திருமணம் நடத்து தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர். அவளுக்குச்
சமைக்க தெரியாதே என்ன செய்வாள் என்று தாய் தவித்து இருக்க, செவிலித்தாய் பார்த்து வர
சென்றார். தலைவி மெல்லிய விரல்களால் பிசைந்து வைத்த மோர்க் குழம்பை தலைவன் சுவைத்து
உண்டு தலைவியைப் பாராட்டி பேசுவதை கண்ட செவிலி மகிழ்வோடு விடு திரும்பினாள்.
முளிதயிர்
பிசைந்த காந்தள் மெல்விரல்,
கழுவுறு
கலிங்கம், கழாஅது, உடீஇ,
குவளை உண்கண்
குய்ப்புகை கழுமத்
தான் துழந்து
அட்ட தீம் புளிப் பாகர்
'இனிது'
எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின்
மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே. (குறுந். 167)
என்ற குறுந்தொகைப் பாடல் மூலம் அறியலாம்.
தலைவியை விட்டுப் பிரிந்து செல்ல
நிகழும் இடங்களில் அவளுக்கு உணர்த்துவதற்காகப் பாராட்டிப் பேசுவதும், இடையூறு செய்வாள்
என்று அறியும் நேரங்களில்; முன்கூட்டியே தலைவியைப் பாராட்டிப் பேசுவதும் வழக்கமாக நிகழ்கின்றன.
“செய்பொருள் அச்சமும் வினைவயின் பிரிவும்
மெய்பெற உணர்த்தும் கிழவி பாராட்டே. (தொல்.பொருள்:228)
என்ற நூற்பா மூலம் அறியலாம்.
பொருள் தேடி பிரிதல்
இன்றைய காலத்தில் பொருள் தேடவோ அல்லது கல்வி கற்கவோ பிரிதல் என்பது
கால வரையறையின்றி நிகழ்கிறது. தற்காலத்தில் பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து செல்கின்றவர்கள்
கால வரையறையின்றி பொருள் தேடுகின்றனர். கல்வி கற்க சென்றவர்களும் அவ்வாறே செயல்படுகின்றனர்.
இதனால் இத்தகைய சமூகத்தில் பிரிவுகள் நீண்டுகொண்டே செல்வதால் குடும்ப வாழ்வில் பல்வேறு
சிக்கல்கள் ஏற்படுகின்றன. குடும்ப உறவில் விரிசல் ஏற்படுகிறது. தலைவியின் ஆசைகள் மனதோடு
புதைக்கப்படுகின்றன. அவளது வாழ்க்கை கடினத்தோடு முடிந்துவிடுகிறது. குழந்தைகள் தந்தையோடு
உறவாடும் பாசம் கனவோடு புதைந்துவிடுகிறது. இதனால் குழந்தைகளுக்குத் தந்தையின் மீது
பாசம் குறைந்து வெறுப்பு அதிகரிக்கிறது.
பொருள்
தேட சென்ற கணவன் வாழ்நாள் முழுக்க பொருள் தேடுவதிலே செலவிடுகின்றான். குழந்தையின் எதிர்காலக்
கனவுக்காகத் தினமும் உழைத்துக்கொண்டு இருக்கின்றான். அவன், தலைவி, குழந்தைகள் மீது
கொண்ட பாசம் என்றாவது ஒருநாள் நிஜமாகும் என்று கனவோடு கடல் கடந்து வாழ்ந்துகொண்டு இருக்கின்றான்.
கணவன் மனைவி
இருவரும் குழந்தைகள் நலனுக்காக ஆசைகளையும் பாசங்களையும் ஒதிக்கிவைத்து வாழ்கின்றனர்.
இதனால், இல்லற வாழ்வு துன்பம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. பிரிவின் காலம் நீட்டிக்கச்
செய்யக்கூடிய காரியங்கள் கூட சரிவர செய்யமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இச்சிக்கலில்
இருந்து நாம் வெளிவருவதற்குப் பண்டைய கால பண்பாடான பிரிவுக்குரிய கால முறையைப் பின்பற்றினால்
குடும்பச் சிக்கல்களில் இருந்து விடுபடமுடியும். குறிப்பிட்ட காலம் அளவு மட்டுமே பிரிவு
அல்லது பொருள் தேடுதல் என்பது இருக்கவேண்டும். அப்போது உறவைப் புரிந்துகொள்ளவும், உறவின் விரிசல்களைத் தவிர்க்கவும் முடியும். அப்போதுதான்
இன்பமான வாழ்வு வாழ முடியும்.
பண்டைய காலத்தில் பிரிவு முறையில் கால வரையறை பின்பற்றப்பட்டது. என்பதை,
“வேண்டிய கல்வி யாண்டு மூன்று இறவாது" (தொல்.கற்பு.186)
மேலும்,
“வேந்துறு தொழிலே யாண்டினது அகமே" (தொல்.கற்பு.187)
மேலும்,
“ஏனைப் பிரிவும் அவ்வியல் நிலையும்" (தொல்.கற்பு.188)
என்று தொல்காப்பியர் பிரிவு, அவற்றிற்;குறிய
காலம் ஆகியவற்றை வரையறுத்துள்ளார். ஓதல் பிரிவு, காவல் பிரிவு அல்லது தூதிற் பிரிவு,
பொருள்தேடும் பிரிவு, பரத்தையின் பிரிவு என ஓதல் பிரிவு மூன அனைத்திற்கும் காலங்களைக்
குறிப்பிட்டுள்ளார்.
குடும்ப ஆலோசகர்
குடும்ப
மருத்துவர் என்ற சொல் மதிப்புப் பெற்று வழங்குவதைக் காணமுடிகிறது. உடல் நலம் கருதி
இதுபோன்ற ஏற்பாட்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால், யாருடைய குடும்பத்திற்காவது
குடும்ப ஆலோசகர் இருக்கிறாரா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தொழில்ரீதியான உளவியல்
மருத்துவர்களையோ நெருங்கிய நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ குடும்ப ஆலோசகர்களாக ஏற்றுக்கொண்டு,
எந்தச் சிக்கலானாலும் அவரிடம் தெரிவித்து அவருடைய அறிவுரைப்படி நடப்பதை வழக்கமாககக்
கொண்டிருந்தால் இன்றைய குடும்பங்கள் சந்திக்கும் பெரும்பாலான சிக்கல்களை எளிதில் தீர்ந்துபோகும்.
பண்டைய காலத்தில் குடும்ப ஆலோசகராக தோழி, செவிலி, பார்ப்பான் பாங்கன்,
பாணன், பாடினி, இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர் என பன்னிரு
வாயில்கள் இருந்தார்கள். தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே வாயிலாக, வழியாக அமையக் கூடியவர்கள்.
இருவரையும் அன்பு பாராட்டக் கருத்து வேறுபாடுகளைக் களைந்து நல்வழிப்படுத்த உதவுவார்கள்.
தலைவியின் கற்பின் மேம்பாடு, அன்பின் மிகுதி, இல்லற ஒழுக்கம், மென்மைத்
தன்மை, பொறுமை, மனக்கட்டுப்பாடு, நிறை, விருந்தினரையும் சுற்றத்தாரையும் பேணும்முறை
போன்ற நற்குணங்களைத் தலைவன் விரும்பும் வகையில் உரைக்கும் பண்பு வாயில் நேர்பவர்களுக்கு
உரித்தாகும். எனபதை,
“கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
முகம்புகல் முறைமையின் கிழவோற்கு உரைத்தல்
அகம்புகல் மரபின் வாயில்கட்கு உரிய" (தொல்.கற்பு.11)
என்று நச்சினார்க்கினியர் வாயில்
காரணமாகத் தலைவனுடைய இல்வாழ்க்கையில் நிகழும் ஊடலைப் போக்க கற்புக்காலக் கூற்றுக்குரியோர்
பன்னிருவர் இருந்தனர்.
தற்காலத்தில்
குடும்ப உறவுகளிடம் அறிவுரை கூறுவதும், வழிகாட்டுவதும் யாரும் கிடையாது. குடும்ப சிக்கல்களைத்
தீர்த்து வைப்பதற்கு என குடும்ப ஆலோசகர்கள் இல்லை. அதனால் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும்
வராமல் பாதுகாப்பதற்கும் குடும்பத்தை நல்வழியில் நடத்துவதற்கும் வழி இல்லாமல் போய்விடுகிறது.
இதனால் பல்வேறு குடும்பங்கள் பிரச்சனைகளோடு வாழ்க்கை நடத்துகின்றனர். இது போன்ற சிக்கல்களில்
இருந்து விடுபடுவதற்குக் குடும்ப ஆலோசகர் என்ற ஒருவரை நம் குடும்பதில் இருந்து உருவாக்கிக்கொள்ள
வேண்டும். அதற்குப் பிறகு தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஏற்படும் பிரச்சனைகளையும்
சிக்கல்களையும் அவரிடம் மனம் விட்டு பேசுவதால் அவர் அச்சிக்கல்களை எவ்வாறு கையாள்வது,
அவற்றில் இருந்து எவ்வாறு நிரந்தரமாக வெளிவருவது என்பது பற்றி அறிவுரை வழங்குவார்.
இது போன்ற பண்டைய காலப் பண்பாடடு விழுமியங்களை நம் வாழ்வில் கடைபிடிக்கும்போது பல்வேறு
பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
தவறுகளைத் திருத்துதல்
ஒருவர் இன்னொருவரின் தவறுகளைத் திருத்துதல் என்பது மனித வாழ்க்கையின்
எல்லாக் கட்டங்களிலும் நிகழும் செயலாகும். அவ்வாறு திருத்துவோர் பெரும்பாலும் வெகுளி
மொழியிலேயே பிறரின் தவற்றைச் சுட்டிக் காட்டுகிறார்கள். தவறைத் திருத்த வேண்டியவர்கள்
தங்கள் மீது காட்டப்பட்ட சினத்தைப் பொறுத்துக்கொள்வதில்லை. எனவே, அவர்கள் திருத்திக்கொள்வதற்கு
மாறாக தவற்றைச் சுட்டிக்காட்டியவர் மீது வெறுப்பையே வளர்க்கிறார்கள். இந்த முரண்பாடுகள்
கலையப்பட்டால் மட்டுமே தவறுகளைத் திருத்த முடியும்.
இத்தகைய
சிக்கல்கலுக்குத் தொல்காப்பிய அக மாந்தர்கள் ஒரு நெறியைக் கடைபிடித்துள்ளனர். தலைவனும்
தலைவியும் நெறி தவறும்போதெல்லாம் அவர்களுக்குச் சரியான நெறியைச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்தும்
பொறுப்பை வாயில்கள் ஏற்றிருந்தனர். அவர்கள் தலைமக்களிடத்தில் பேசும்போது எச்சூழலிலும்
வெகுளியான சொற்களைப் பயன்படுத்த கூடாது. எப்போதும் மகிழ்ச்சி தரும் சொற்களையே பேசவேண்டும்.
ஒருவேளை அன்பற்ற சொற்களைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டால் அதைச் சிறைப்புறமாகவே கூற
வேண்டும். அதாவது மறைமுகமாகப் பிறரைச்சொல்வது போன்று சொல்ல வேண்டும் என்ற நடைமுறையைக்
கடைபிடித்தனர். என்பதை,
‘எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும்
புல்லிய மகிழ்ச்சிப் பொருள என்ப. (தொல்.கற்பு.37)
‘அன்பு தலைப்பிரிந்த கிளவி தோன்றின்
சிறைப்புறம் குறித்தன்று என்மனார் புலவர்| (தொல்.கற்பு.38)
என்ற நூற்பாகள் மூலம் அறியலாம்.
எடுத்த செயலை முடித்தல்
இன்றைய இளைஞர்கள் பல்வேறு செயல்களை முனைப்புடன் தொடங்குகிறார்கள்.
ஆனால் அவர்களால் இறுதிவரை முயன்று அவற்றை முடிக்க இயல்வதில்லை. அதற்கு ஆர்வம் குன்றல்,
பயிற்சி இன்மை, பொழுதுபோக்கு சாதனங்களின் பெருக்கம், மனம் வேறு செயல்களுக்குத் தாவுதல்,
காதல் என்று பலவிடயங்கள் உள்ளன. தொல்காப்பியர் ஒரு செயலில் ஈடுபட்டால் அதில் இறுதிவரை
நின்று வெற்றி கண்ட பின்னரே வேறு செயலை மனம் நாட வேண்டும் என்கிறார். வினைமேல் செல்லும்
தலைவன் அவ்வினை முடியும்வரை தலைவி குறித்த நினைவைக்கூட வளர விடுவதில்லை. செயலை வெற்றிகரமாக
முடித்த பின்னரே தலைவியை மனம் நாட வேண்டும். என்பதை,
‘கிழவி நிலையே வினையிடத்து உரையார்
வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்| (தொல்.கற்பு. 45)
என்ற நூற்பா மூலம் அறியலாம்.
முடிவுரை
தொல்காப்பியர்
காட்டும் கற்பு வாழ்க்கையை இன்றைய இளைஞர்களுக்குக் கற்பித்தால் அவர்கள் ஒரு செம்மையான
வாழ்க்கையை வாழ்வதற்கான மனவளத்தை உருவாக்க முடியும்.
இன்றைய
சமுதாயம் ஒவ்வொரு குடும்பத்துடனும்; இணைந்து ஒரு கூட்டுணர்வை வளர்க்க வேண்டும். பெயர்
தெரியாதார் வாழ்க்கையின் கூறுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்கின்றோம்.
தொல்காப்பியர்
அக வாயில்களின் மொழியில் தலைவியின் மாட்சிமை பொருந்திய இல்லற இயல்புகளை விளக்குகிறார்.
தலைவி தன் உயிரைவிட இல்லறத்தை மேலாகப் போற்றுபவள்.
பண்டைய
காலத்தில் தலைவன் கவலைப்பட்டுக் கலங்கி இருக்கும்போது அவனைத் தாயைப் போலத் தழுவிக்
கொண்டு தக்க அறிவுரைகள் வழங்கி ஆதரவு தருவது தலைவியின் கடமையாக இருந்தது.
தொழில்
துறைகளில் ஈடுபடுவோருக்குத் துறை சார்ந்த கற்றல் அறிவைத் தாண்டி அறம் சார்ந்த ஒரு செயலறிவுத்
தேவைப்படுகிறது. ஏனென்றால் இவை அனைத்துமே ‘மனிதம்| என்ற பண்பிற்குள் அடங்குபவை.
வாழ்க்கையின்
அனைத்துக் கூறுகளிலும் மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் உள்ளன. அதற்கு வேண்டிய மனப்பயிற்சியை அளிப்பதற்கான கூறுகளை நம் அக மரபிலிருந்து
பெற முடியும்.
அடிக்குறிப்புகள்
1.
சுப்புரெட்டியார்.ந, தொல்காப்பியர் காட்டும் வாழ்க்கை,
பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25 பீட்டர்ஸ் சாலை, சென்னை-14.ப.57.
2.
சுப்புரெட்டியார்.ந, தொல்காப்பியர் காட்டும் வாழ்க்கை,
பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25 பீட்டர்ஸ் சாலை, சென்னை-14.ப.57.
3.
சுப்புரெட்டியார்.ந, தொல்காப்பியர் காட்டும் வாழ்க்கை,
பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25 பீட்டர்ஸ் சாலை, சென்னை-14.ப.45.
4.
முனைவர் ச.சுபாஷ் சந்திரபோஸ் (உ.அ), தொல்காப்பியம் பொருளதிகாரம். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
23பி, தொப்புள் பிள்ளையார் கோவில் தெரு, தெற்கலங்கம், தஞ்சாவூர்-1.பா.95
5. சுப்புரெட்டியார்.ந, தொல்காப்பியர் காட்டும் வாழ்க்கை, பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25 பீட்டர்ஸ் சாலை, சென்னை-14.ப.239.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக