கலித்தொகையில்
நாட்டுப்புற வழக்காற்று கூறுகளில் நம்பிக்கைகள்
முனைவர் இரா.வேலுசாமி
முன்னுரை
நம்பிக்கைகள்
மக்களால் உருவாக்கப்பட்டு சமுதாயத்தால் பாதுகாக்கப்படுகின்றன. மனிதனின் தன்னல உணர்வும்
சமுதாய உணர்வுமே நம்பிக்கைகளை வளர்த்து வருகின்றன. நம்பிக்கைகள் காலங்காலமாகத்
தொடர்ந்து வரக் காண்கிறோம். நம்பிக்கைகள் பெரும்பாலும் அச்சவுணர்வின் அடிப்படையாகத்
தோன்றியதாகக் காட்சியளித்தாலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களை உணராதபொழுதும்
மனித வாழ்வில் ஏற்படும் சில நிகழ்ச்சிகளுக்குக் காரணம் கற்பிக்க இயலாதபொழுதும்
மனித மனமானது சிலவற்றைப் படைத்துக் காரணம் கற்பித்துக் கொள்கிறது. அவைகளே
நம்பிக்கைகளாக உருவாகின்றன.
மனித
மனத்தின் விளைவாக நம்பிக்கை தோன்றுகின்றது. மனிதன் அச்சத்தின் காரணமாக இயற்கையின்
தோற்றத்தினையும் செயற்பாடுகளையும் தனது வாழ்வோடு இணைத்து நோக்கிய நிலையில் தோற்றம்
கொண்டன.
நம்பிக்கைகள்
காலம் காலமாக ஒரு தலைமுறையினரிடமிருந்து மற்றொரு தலைமுறையினர்க்குப் பரவி
வருகின்றன. மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை பலவித நம்பிக்கைகளைக் கொண்டிருக்கக்
காண்கிறோம். நம்பிக்கைகளே மனித வாழ்வினை இயக்குகின்றன என்று கூறுமளவிற்கு அவன்
வாழ்வில் பெரும் பங்கு வகிப்பதையும் காண்கிறோம். எனினும் மக்களின் நடைமுறை
வாழ்வில் இந்நம்பிக்கைகள் தொடர்ந்து வருவதைக் கூர்ந்து நோக்கின் இவை சமுதாயப்
பண்பாட்டின் உணர்ச்சிக் கூறுகளின் தொகுதி எனலாம்.
பல்லி
சொல்லுக்குப் பலன் கேட்டல்
விரிச்சி
கேட்பது போல் பல்லிசொல் பலன் கேட்டலை மக்கள் நலன் நிமித்தமாக நம்பினர். இதனை
கலித்தொகையில்,
“இனைநலம் உடையகாளம் சென்றோர்
புனைநலம்
வாட்டுநர் அல்லர் மளைவயின்
பல்லியும்
பாங்குஒத்து இசைத்தன
நல்எழில்
உண்கணும் ஆடுமால் இடனே” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ),
2015)
என்ற
பாடலடிகள் மூலம் அறியலாம்.
பல்லி
சொல்லுதல் தமிழர்களது வாழ்வில் முக்கிய இடம் பெற்றுள்ளது. பல்லி சொன்னால் அது
நன்னிமித்தமாகக் கருதப்படும். எனவே, பல்லி
சொல்லுக்குப் பலன் கேட்டல் என்னும் நம்பிக்கை. இதேபோல் அகநானூற்றிலும் “பலவாய்ப்
பல்லி படுதொறும் பரவி”, (புலியூர் கேசிகன்
(உ.ஆ), 2010) என்றும் நற்றிணையிலும் “நெடுஞ்சுவர்ப் பல்லியும் பாங்கிற் தேற்றமும்”
(புலியூர் கேசிகன் (உ.ஆ), 1980) என்று பல்லி மூலம் பலன் கேட்டல்
சங்க காலத்தில் நம்பிக்கையாகப் பார்க்கப்பட்டது.
பிறவி
பற்றிய நம்பிக்கை
இப்பிறவியில்
தாம் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப தம்முடைய இறப்பிற்குப் பின்பு தமக்கு
சொர்க்கமோ,
நரகமோ கிடைக்கும். மனிதனின் பாவ புண்ணியக் கணக்குகளைத் தப்பாமல்
குறித்து, வைப்பவர் சித்திரகுப்தர் என்று நாட்டுப்புற மக்கள்
நம்புகின்றனர். தாம் படும் துன்பத்திற்கெல்லாம் காரணம் இந்த விதிதான் என்று நாட்டுப்புற
மக்கள் நம்புகின்றனர். நல்லவற்றைச் செய்தால் நன்மை கிடைக்கும், தீயவற்றைச் செய்தால் தீமை கிடைக் கும். எல்லாம் விதிப்படிதான் நடக்கும்
என்பதும் நம்பிக்கைதான். இதனை கலித்தொகையும்,
“கிழவோர் இன்னோர் என்னாது பொருள்தான்
பழவினை
மருங்கின் பெயர்ப்புபெயர்பு உறையும்” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ), 2015)
என்று
கூறுகின்றது. நீ தேடி அலையும் பொருள் தேடுபவர் முயற்சிகேற்பக் கிடைக்காமல் அவர்கள்
முற்பிறவியில் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப தானே அவற்றைத் தேடி வந்தடையும். அதேபோல்
புறநானூற்றில் “அருளும் அன்பும் நீங்கி நீங்கா நிரயம் கொள்பவரோடு ஒன்றாது காவல்”3 (புலியூர் கேசிகன் (உ.ஆ),
2010) மேலும், “இம்மைச் செய்தது மறுமைக்கு
ஆம் எனும்”4 (புலியூர் கேசிகன் (உ.ஆ), 2010) என்று
மனிதனுக்கு மறுபிறவி மற்றும் ஏழு பிறவி உண்டு என்ற நம்பிக்கை சங்க காலம் தொட்டு இருந்து
வருகிறது.
பறவைகள்
பற்றிய நம்பிக்கைகள்
காகம்
கரைந்தால் விருந்தினர் வருவர் என்பது அக்காலம் முதல் இக் காலம் வரை தமிழரிடையே
நிலவிவரும் நம்பிக்கையாகும். இதைப்போன்று கலித்தொகையில் தலைவன் பொருள்வயின்
பிரிவில் செல்லும்போது, தலைவி இவன்
பிரிவால் இறந்து விடுவாள் என்பதை சகுனப் பறவைகள் தலைவனுக்கு உணர்த்துவதாகக்
கூறப்பட்டுள்ளது. இதனைக் கீழ்வரும் கலித் தொகைப் பாடல்
வரிகள் விளக்குகின்றது.
“இறந்து நீர்செய்யும் பொருளிலும் யாம் உமக்கு
சிறந்தனம்
ஆதல் அறிந்தனிர் ஆயின்
நீள்இரு
முந்நீர் வளிகலன் வௌவலின்
அள்வினைக்கு
அழிந்தோர் போறல் அல்லதைக்கேள்” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ), 2015)
என்று
காட்டுகிறது.
அக்கால
மக்கள் வெளியில் செல்லும்போது, அவர்களுக்கு
நேரவிருக் கும் ஆபத்தைச் சகுனப் பறவைகள் அறிவிக்கும் என்ற நம்பிக்கை இருந்திருக்
கின்றது. இப்போதும் ஆந்தை அலறினால் ஆபத்து வரும். அதாவது உயிருக்கு ஆபத்து வரும்
என்ற நம்பிக்கை உண்டு. பறவைகளின் ஒலியால் ஏற்படும் சகுனம் பார்த்தல், அறிவித்தல் போன்ற நம்பிக்கைகள் காணப்படுகின்றன.
மேலும்,
“திண்தேர் நள்ளி காளத்து அண்டர்
பல்
ஆ பயந்த நெய்யின் தொண்டி...
விருந்து
வரக் கரைந்த காக்கையது பலியே” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ), 2015)
என்று
கூறுகின்றது. காகம் கரைதலைத் தலைவன் வரவு குறித்த நன்னிமித்தமாகக் கருதி தலைவி
காகத்துக்கு உணவு இட்டாள் என்பது புலப்படுகிறது.
மரங்கள்
குறித்த நம்பிக்கைகள்
பழக்க
வழக்கங்களுடன் நம்பிக்கைகள் மிகுந்த தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன. மக்களின்
பாரம்பரிய பண்பாட்டுக் கண்ணாடிகளாக நம்பிக்கைகள் திகழ்கின்றன. சங்ககால மக்கள்
மேற்கொண்ட நம்பிக்கைகள் கலித்தொகையில் இடம்பெறுகின்றன.
“பிரிவு அஞ்சாதவர் தீமை
மறைப்பென்மன் மறைப்பவும்
கரிபொய்த்தாள்
கீழிருந்த மரம் போல” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ),
2015)
என்று
கலித்தொகை கூறுகின்றது. பொய்ச்சாட்சி சொன்னவன் ஒரு மரத்தின்கீழ் இருப்பானாயின்
அந்த மரம் பற்றி எரிந்து விடும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது.
வானியல்
நம்பிக்கைகள்
எந்தக்
காரியத்தில் ஈடுபட்டாலும் அவற்றிற்கான நாளும் நட்சத்திரமும் பார்க்கப்பட்டு
வந்துள்ளது. அப்படிப் பார்த்து பின்பற்றினால் மட்டுமே வாழ்க்கை நல்ல முறையில் எந்த
ஒரு தீங்கும் ஏற்படாமல் இருக்கும் என்பதை நம்புகின்றனர். திருமணம்,
புதுமனை புகுதல் என பலவற்றிற்கு நாள் நட்சத் திரம் பார்க்கின்றனர்.
சங்க கால மக்களிடையே தான் செய்யும் செயல் அனைத் தும் நன்மை உடையதாக அமைய வேண்டும்
என்றும், அதை நல்ல நாளில் செய்தால் சிறந்தது என்றும்
நம்பினான். நல்ல நாளையும் காலத்தையும் பார்த் துச் செயல்களைத் தொடங்கினர் எனலாம்.
இதனை,
“பயங்கெழு பல்கதிர் பால்போலும் பொழுதொடு” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ), 2015)
என்று
கலித்தொகை கூறுகின்றது. பூமியின் துணைக்கோள் திங்கள் ஆகும். இதனை சிலம்பும்,
தாங்கள் செய்யும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் நாள் கோள் பார்த்தலை மக்கள்
வழக்கமாகக் கொண்டிருந்தனர். திருமணம் செய்யும்போது தீய கிரகங்களின் சேர்க்கையில்லா
நாளையும் சந்திரன் சுடர்விட்டு ரோகிணியுடன் கூடும் நாளையும் தேர்ந்தெடுத்தனர். இதனை
கலித்தொகையும்,
“அரும் பெறல் ஆதிரையான்” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ), 2015)
என்று
கூறுகின்றது.
மக்கள்
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு நாள் மீன் நிலை பெற்றுள்ளதாகவும் அவருடைய
வாழ்க்கை முடிந்தவுடன் அந்த மீனும் அழிந்துவிடும் என்ற நம்பிக்கை மக்களிடையே
காணப்படுகிறது.
“மீன்பூத்து அவிர் வரும் அந்திவான் விசும்பு” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ),
2015)
என்ற
கலித்தொகையும் விண்மீன்கள் பூத்து விளங்கும் அந்திவானை எரி நட்சத்திரம் என்று
கூறுகின்றது.
வானிலிருந்து
நட்சத்திரம் எரிந்தவண்ணம் விழுந்தால் அந்நாட்டு அரசனுக்கு ஆகாது என்ற நம்பிக்கை
தமிழ் மக்களிடையே நிலவியது. சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
மன்னன் இறந்தபோது எரியும் நட்சத்திரம் ஒன்று விழுந்ததாகவும் இறப்பிற்கு இது ஒரு
காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
“அரவுக்கண் அனியுறழ் ஆரல்மீன்
தலையொப்ப” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ), 2015)
என்ற
கலித்தொகை பாடலில் ஆரல்மீன் என்பதைக் கார்த்திகை நாள் மீன் எனக் குறிப்பிடுகிறது.
தேவதேவர்களின்
குருவாகிய வியாழனும் அசுரர்களின் குருவாகிய வெள்ளியும் அந்தணர் இருவர் என
அழைக்கப்படுவர். இவர்கள் கூறும் நீதியைத் தப்பாமல் ஆட்சி செய்பவன் அரசன் எனச்
சான்றோர் கூறுவர். இதனை கலித்தொகையும்,
“நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து,
அறவினை
இன்புறூஉம் அந்தணர் இருவரும்
திறம்வேறு
செய்தியின் நூல்நெறி பிழையாது” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ),
2015)
எனக்
கூறுகிறது. சந்திரனை இராகு என்னும் பாம்பு பிடித்துக் கொள்வதனால் சந்திர கிரகணம்
ஏற்படுகின்றது. மேலும்,
“பால்மதி சேர்ந்த அரவினைக்
கோள் விடுக்கும்” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ), 2015)
இராகு
என்பதை அரவம் எனத் தமிழ் இலக்கியங்கள் சுட்டுகின்றன. சந்திரனை அரவு தீண்டுகின்ற
நிகழ்வினைச் சந்திர கிரகணம் என்பர்.
உலகத்து
உயிர்கள் இன்பம் அடைதல் வேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஆறறிவு படைத்த
மக்களினம் அடையும் இன்பம் சொல்லுதற்கரியது. அத்தகைய இன்பத்தினை அதிகமாகப் பாடுவது
இலக்கியத்தின் தனிச்சிறப்பு எனலாம். பண்டைய கவிஞர்கள் அறிவியல் துறையிலும்
நுண்மான் நுழை புலம் பெற்றிருந்தனர். இதனைக் கலித்தொகையும்,
“அகன்ஞாலம் விளக்கம் தன் பல்கதிர் வாயாகப்
பகல்
நுங்கியது போலப் படுசுடர் கல்சேர
இகல்மிகு
நேமியான் ” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ),
2015)
என்றும்,
“ஒண்சுடர் கல்சேர உலகு ஊரும் தகையது
தென்கடல்
அழுவத்துத் திரை நீக்கா எழுதரூஉம்
தண்கதிர்
மதியத்து அணிநிலா நிறைத்தர” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ), 2015)
என்று
கூறுகின்றது. வான மண்டலத்தில் மையமாக இயங்கக்கூடியது சூரியன். அச்சூரியனை ‘நேமியான்’ எனக்
கலித்தொகை சுட்டுகிறது. ஞாயிற்றின் தோற்றம் மற்றும் மறைவு குறித்த செய்திகளைக்
கலித்தொகை வெளிப்படுத்துகின்றது. நாள், கோள் பார்த்தல்
பற்றிய செய்திகள் வழக்காற்றைக் காட்டுகின்றன.
கண்ணிமை
துடித்தல் நம்பிக்கை
பண்டைய
கால மக்கள் கண்ணிமை துடிப்பதை வைத்தும் நிமித்தம் பார்த்தனர். பெண்களுக்கு இடதுகண்
துடித்தாலும், ஆண்களுக்கு வலதுகண்
துடித்தாலும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை அவர்களிடம் பின்னிக் கிடந் தது.
கண்ணும் தோளும் துடித்தால் அவற்றில் எவை நன்மை தரும் தீமையை விளைவிக்கும் என சங்க
காலம் முதற்கொண்டே நம்பியிருந்தனர். இதனை கலித்தொகையும்,
“நல்எழில் உண்கணும் ஆடுமால் இடனே” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ),
2015)
என்று
கூறுகின்றது.
கண்துடிப்பது
கொண்டு நன்மை தீமை பார்க்கும் நம்பிக்கை சங்க கால மக்களிடம் இருந்துள்ளது. ஆண்
மகனின் வலக்கண் துடித்தலும், பெண்களின் இடக்கண்
துடித்தலும் நன்று என்பதை அறியமுடிகிறது. கலித்தொகையும்,
“மாண்தலைக் கொடியோடு மண்ணி அமைவர
நெய்யோடு
ஐயவி அப்பி ஐது உரைத்து
குடந்தம்பட்டு
கொடுமலர் சிதறி”
(புலியூர்க் கேசிகன் (உ.ஆ), 2015)
என்று கூறுகின்றது.
பெண்களுக்கு
இடக்கண் துடித்தாலும் உடல் பூரித்து முன் கை வளையல் இறுகினாலும் நல்லது நடக்கும்
என்று சங்க மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். இதனைக் கலித்தொகையும்,
“மனைவயிற் பலியும் பாங்கொத்து
இசைத்தன
நல்லெழில்
உண்கணும் ஆடுமாய் இடனே” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ), 2015)
என்று
கூறுகின்றது.
மழை
பற்றிய நம்பிக்கைகள்
மழை
பெய்வதற்கு வெள்ளி என்ற கோள் காரணமாக உள்ளது. அந்த வெள்ளிக் கோளானது வடபக்கத்தில்
தாழ்ந்தால் மழை பெய்யும் என்றும், தெற்குப்
பக்கம் எழுந்தால் மழை பெய்யாது என்றும் மக்களிடையே நம்பிக்கை காணப்படுகிறது. இதனைக் கலித்தொகையும்,
“ஆளந்து கடையறியனு மனப்பருங்குரைய
வளம்
வீங்கு பெருக்க மினிது கண்டிடுமே” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ),
2015)
என்று
கூறுகின்றது. கிரகங்களின் மாறுபாட்டால் மழை பெய்யும் என்பதைக் காட்டுகிறது.
தவளைகள்
ஒலி எழுப்பினால் மழை பெய்யும் என்றும், எறும்புகள்
வரிசையாக ஊர்ந்து சென்றால் மழை பெய்யும் என்றும், ஈசல்
வீட்டிற்குள் பறந்து வந்தால் மழை பெய்யும் என்றும் நம்புகின்றனர். இதனை
கலித்தொகையும்,
“அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
மழை
வேண்டு புலத்து மாரி நிற்ப” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ),
2015)
என்று
காட்டுகின்றது.
கடவுள்
நம்பிக்கை
முல்லை
நிலத்து மக்கள் நீர்த்துறை, ஆலமரம், மாமரம், கடம்ப மரம் போன்றவற்றில் தெய்வம் உறையும்
என்ற நம்பிக்கையுடன் வழிபட்டு வருகின் றனர். இதனைக் கலித்தொகையும்,
“நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்ப
துறையும்
ஆலமும் தொல் வலிமரா அமும
முறையுளி
பராஅய் பாய்ந்தனர் தொழூஉல” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ), 2015)
என்று
கூறுகின்றது.
தன்னுடைய
வேண்டுதல்கள் நிறைவேறிய மகிழ்ச்சியின் காரண மாகவோ தெய்வத்தின் கோபத்தைத்
தணிவிக்கும் பொருட்டோகடவுளுக்குப் படைக்கும் படையல் பலி எனப்படும். பருவம் பொய்க்காது
மழை பொழிந்து அதன் பயனாகச் செழித்து வளர்ந்த தானியங்களைக் கடவுளுக்குப் படைத்து
வழிபடும் வழக்கத்தினை மக்கள் கொண்டிருந்தனர். பலியை ஏற்ற கடவுள் மகிழ்ந்து
தங்களைச் செழிப்புடன் வாழத்துணை நிற்பார் என நம்பினர். இதனைக் கலித்தொகையும்,
“புனவன் நுடவைப் பொன்போல் சிறுதினைக்
கடிஉண்
கடவுட்கு இட்ட சில்குரல்” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ), 2015)
என்று
காட்டுகிறது.
கனவு
குறித்த நம்பிக்கைகள்
கனவுகள்
மக்களுடைய வாழ்வில் பின்னர் நிகழப்போகும் நன்மை தீமைகளை முன்னரே உணர்த்துகின்றன
என்னும் நம்பிக்கை சமுதாயத்தில் காணப்படுகின்றது. எல்லா மக்களிடமும் கனவு பற்றிய
நம்பிக்கையுண்டு. அவை எப்போது பலிக்கும் அது எப்போது நிகழும் என்பதைக் கூறினார்கள்.
இரவு முதல் சாமத்தில் காணும் கனவு ஓராண்டில் பலிக்கும் என்று எதிர் பார்த் தனர்.
இரண்டாம் சாமத்துக் கனவு மூன்று மாதத்திலும், நான்காம்
சாமத்துக் கனவு பத்து நாளிலும் பலிக்கும். எனவேதான், கண்ணகியின்
கனவு இரவில் இடைசாமத்தாதலின் அது விரைவிலேயே பலித்துவிட்டது. வழக்குரை காதை யில்
கூறப்பட்டுள்ள கோப்பெருந்தேவி கண்ட கனவும் கடை சாமத்தாகவே இருந்திருக்க வேண்டும்.
எனவேதான், விரைவிலேயே பலித்தது.
கனவு
நம்பிக்கை எல்லா மக்களிடமும் காணப்படுகிறது. தான் கண்ட கனவுகளின் மூலம் அச்சம்
மக்களிடையே ஏற்படுகின்றது. அவை நன்மையாக அமையுமா ? தீமையாக அமையுமா? என்று ஆராய்கின்றனர். கனவுகளை
இரண்டு வகையாகக் குறிப்பிடுகின்றனர். பின் நிகழ்வனவற்றை மற்றொரு நிகழ்ச்சியால்
குறிப்பாகக் காட்டல், சிலருக்கு உண்மையான நிகழ்ச்சியை
உள்ளவாறே அறிவித்தல் என இரு வகையாக நம்பிக்கை கொள்ளுதலாகும். இதனைக் கலித்தொகையும்,
“கனவில் வந்த கானல் அம் சேர்ப்பன்
நளவில்
வருதலும் உண்டு”
(புலியூர்க் கேசிகன் (உ.ஆ), 2015)
என்று
கூறுகின்றன. கனவில் காண்பது நினைவில் நடக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
தீய சக்திகள் கனவில் வந்தால் தீங்கு நடக்கும் என்று எண்ணி,
கடவுள் குற்றமாகக் கருதி நேர்த்திக் கடன்கள் நிகழ்த்துவதை இயல்
பாகச் செய்கிறது இன்றைய சமூகம்.
சங்க
காலத்தில் கனவுகள் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். இதனைக் கலித்தொகை,
நனவில்தான்
செய்தது மனத்தது ஆகலின்
களவில்
கண்டு கதுமென வெருஇப் (புலியூர்க் கேசிகன் (உ.ஆ),
2015)
என்று
கூறுகின்றது.
வள்ளைப்பாட்டு
பற்றிய நம்பிக்கை
நாட்டுப்புறப்
பாடல்கள் நாட்டுப்புற மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளன. மனிதனின் பிறப்பு
முதல் இறப்பு வரையுள்ள நிகழ்வுகள் நாட்டுப்புறப் பாடலின் பொருளாகின்றன. மண்ணின்
மைந்தர் தம் மனக் கருவறையில் கருக்கொண்டு உருப்பெற்று உயிர்பெற்று உலா வரும்
உள்ளத் தின் உண்மையான வெளிப்பாடுகளே நாட்டுப்புறப் பாடல்கள்.
மனித
உள்ளத்தின் ஆழத்தையும் அங்கே தோன்றி எதிரொலிக்கும் பல்வேறு இதய ஒலிகளையும் இன்ப
துன்பங்களையும் ஆசாபாசங்களையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் நாட்டுப்புறப்
பாடல்களில் காணலாம். எனவே, ஒரு நாட்டு
மக்களின் நாகரிகத்தை, பண்பாட்டை, பழக்க
வழக்கங் களை, வரலாற்றை, நாட்டு நடப்பை,
நம்பிக்கைகளை, உண்மையான முறை யில் படம்
பிடித்துக் காட்டுவன நாட்டுப்புறப் பாடல்கள்.
தலைவனை
வாழ்த்திப் பாடும் வள்ளைப்பாட்டு கலித்தொகையில் காணப்படுகிறது. இதனை,
“அகவினம் பாடுவாம் தோழி அமர்க்கண்
நகைமொழி
நல்லவர் நாணும் நிலைபோல்” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ),
2015)
என்று கூறுகின்றது.
மணம்
புரிந்துகொள்ள தலைவனுக்கு வள்ளைப்பாட்டுப் பாடுவது தோழியின் நம்பிக்கையாகக்
கூறப்படுகிறது.
இதனை மேலும்,
“பாடுகம் வாவாழி தோழி வயக்களிற்றுக்
கோடு
உலக்கை யாகறல் சேம்பின் இலைசுளகார்” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ), 2015)
என்றும்,
“ஐயனை ஏத்துவாம் போல அணிபெற்ற
மைபடு
சென்னிப் பயமலை நாடனைத்
தையலாய்
பாடுவோம் நாம்” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ),
2015)
என்றும்,
“வள்ளை அகவுவம் வா இகுவளை நாம்
வள்ளை
அகவுவம் வா
“ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ ?
ஓர்வுற்று
ஒருதிறம் ஒல்காத நேர்கோல்
அறம்புரி
நெஞ்சத் தவன் ” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ), 2015)
என்றும்
கூறுகின்றது.
தலைவன்,
தலைவியை விட்டுப் பிரிந்து சென்றதால் அவன் பிரிவைத் தாளாத தலைவியின்
நிலையைக் குறித்தும், தலைவனைக் குறித்தும் தோழி
வள்ளைப்பாட்டைப் பாடுவது. இதற்குப் பதிலாக, நம் தலைவர் கைவிட
மாட்டார் என்ற நம்பிக்கையில் தலைவி பதில் கூறுவதும் வள்ளைப்பாட்டாகும். இது
சங்ககால தமிழர்களிடம் இந்த பாட்டும் பெரும் மதிப்பைப் பெற்று வந்தது என்பதை
அறியலாம். இது தலைவி தோழி ஆகிய இருவரின் உள்ளப் புலம்பல்களை எடுத்துக்காட்டுவது
ஆகும். வள்ளைப் பாட்டுப் பாடுதல் என்னும் வழக்காறு கலித்தொகையில் இடம்பெறுகிறது.
கூடலிழைத்தல்
பற்றிய நம்பிக்கை
தலைவனைப்
பிரிந்த தலைவி அவன் வருகையை நினைத்து உடல் மெலிகிறாள். அவனை நினைத்து
புலம்பிக்கொண்டே இருக்கும் நிலையில் காதலன் வருகையை நினைத்துக் காதலி கண்மூடி
மணலில் விரலால் வட்ட மிடுவாள். வட்டத்தின் இரு முனைகளும் நேராகச் சந்தித்தால் நல்ல
அறிகுறி என்றும் அப்படியில்லாவிட்டால் நல்ல அறிகுறி இல்லையென்றும் சங்ககால மக்கள்
நம்பினர். இதனைக்
கலித்தொகையும்,
“கோடுவாய் கூடாப் பிறையை பிறிது ஒன்று
நாடுவேன்
கண்டென் சிற்றிலுள்” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ), 2015)
என்று கூறுகின்றது.
இந்த நம்பிக்கை சங்க கால தலைவியிடம் மட்டுமல்ல இன்றைய மக்களிடமும் காணப்படுகிறது.
பிறை
தொழுதல் பற்றிய நம்பிக்கை
பண்டைய
ய காலம் முதல் மனிதன் இயற்கையோடியைந்து வாழும் மனிதன் பொதுவாகத் திங்களைப் போற்றி
வழிபடுவது பண்டைய நாகரிக நாடுகளிலும் சிற்சில வேறுபாடுகளுடன் இருந்ததைக்
காண்கிறோம். இதனைக்
கலித்தொகையும்,
பயங்கெழு
பல்கதிர் பால்போலும் பொழுதொடு (புலியூர்க் கேசிகன் (உ.ஆ), 2015)
என்று
கூறுகின்றது.
விரிச்சி
கேட்டல் பற்றிய நம்பிக்கை
விரிச்சி
என்றால் நற்சொல் கேட்டல் என்று பொருள். நல்ல சகுனங் களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
விரிச்சி என்பது நற்சொல் அல்லது வாய்ச் சொல் என்பார்கள். வீட்டிலுள்ள வயது
முதிர்ந்த முதுமைப் பெண்கள் விரிச்சி கேட்பர். மாலைப்பொழுதில் ஊரின் குறிப்பிட்ட
ஒரு பக்கத்தில் சென்று கேட்பர். தன் வீட்டில் உள்ள மணற் பரப்பிய பந்தலில் சென்று
விருச்சி கேட்பர். மணிகள் ஒலிக்க நாழியில் நெல்லை வைத்துக்கொண்டு நெல்லையும்
முல்லைப்பூவையும் நீருடன் சொரிந்து விரிச்சி கேட்பர். அப்போது அவர்கள் காதில்
விழுகின்ற நல்ல சொற்களைக் கேட்டு நன்மையும் தீமையும் அறிவர். இதனைக் கலித்தொகையும்,
“நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
செம்முதுபெண்டிர்
சொல்லும் நிரம்பா” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ),
2015)
என்று
கூறுகின்றது.
பாவை
நோன்பு பற்றிய நம்பிக்கை
பாவை
என்பது சிறு பெண்கள் விளையாடுவதற்குரிய பொம்மையைக் குறிக்கும். இல்லத்தில் மகளிர்
வணங்கிவந்த தெய்வத்துள் ஒன்று பாவை யாகும். பண்டைய காலத்தில் தைத்திங்கள்
நாட்காலையில் மகளிர் நீராடி பாவையை நீர்த்துறைக்குக் கொண்டுவந்து வழிபட்டனர். இதனை,
பாவை நோன்பு என்று அழைத்தனர். இதனைக் கலித்தொகையும்,
“வல்லவன் தைஇய பாவைகொல் நல்லார்
உறுப்பெலாங்
கொண்டியற்றியாள் கொல்” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ), 2015)
என்று
கூறுகின்றது. நல்ல கணவன் வேண்டும் என்றும் மழை வளம் பெருக வேண்டும் என்றும்,
பாவை நோன்பு மேற்கொள்ளப்பட்டது.
மக்களுடைய
வாழ்க்கையில் பின்பற்றிய நோன்புகளையும் பல்வேறு சடங்குகளையும்,
சடங்குகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையும் அறியலாம். நோன்புகள்
பற்றிய நம்பிக்கைகள் வழக்காறுகளாக அமைந்துள்ளன.
வெறியாட்டு
பற்றிய நம்பிக்கை
தலைவனும்
தலைவியும் கொண்டுள்ள உறவு பற்றி அறியாத தாய் தலைவியின் பொலிவுக்குக் காரணம் என்ன
என்பதை அறிய முதுவாய்ப் பெண்ணைக் கேட்கிறாள். வேலும்,
கட்டுவிச்சியும் கோலைத் தலைவியின் கையில் வைத்துப் பார்த்துக் குறி
சொல்கிறாள். குறிகாரி நெடுவேளாகிய முருகனைப் பேணி விழாக் கொண்டாடினால் இவள் ஏக்கம்
தணியும் என்கிறார். அதன்படி விழா கொண்டாடினர். இதனைக் கலித்தொகையும்,
“கூடுகொள் இன் இயம் கறங்க களன் இழைத்து
ஆடு
அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர்” (புலியூர்க் கேசிகன் (உ.ஆ),
2015)
என்று
கூறுகின்றது. இதேபோல் உருகெழு சிறப்பின் முருகுமனைத் தரீஇ, கடம்பும்
களிறும் பாடி நுடங்குபு”, (புலியூர்க் கேசிகன்
(உ.ஆ), 2010) மேலும், உருவச் செந்தினை குருதியொடு தூஉய், முருகு ஆற்றுப்படுத்த உருகெழு நடுநாள்” (புலியூர்க் கேசிகன்
(உ.ஆ), 2010) அகநானூற்றில் வெறியாட்டு
நம்பிக்கைகள் காணப்படுகின்றன.
முருகக் கடவுளைக் கையால் தொழுது அவனுடைய
பெயரினைச் சொல்லி வீட்டிற்குள் வரவழைத்தனர். அவன் கடம்பமரத்தையும் களிற்றினையும் புகழ்ந்து
பாடி பனந்தொட்டினையும் கடம்ப மாலையினையும் கையில் கொண்டு ஆடினர். முருகனைப் பாடி பலிகொடுத்து
சிவந்த தினையினைக் குருதியுடன் கலந்து தூவி முருகனை வழிபட்டனர். வேலன் வெறியாட மகளைத்
தன் விருப்பப்படி ஆட்டுவிப்பான். இதனை குறுந்தொகையும், “மறிக்குர லறுத்துத் தினைப்பிரப் பரீஇ” (புலியூர்க் கேசிகன்
(உ.ஆ), 2017) என்று வெளியாட்டத்தின் பொழுது ஆட்டுக்கிடாவைப் பலிகொடுக்கும் நிகழ்சியைக்
குறுந்தொகை பாடல் முலம் அறியப்படுகிறது.
வெறியாட்டு
சங்க கால வீட்டுவிழா வாகக் கருதப்பட்டது. தலைவியைத் துய்த்த தலைவன் தலைவியைச்
சேராமல் தனித்து நிற்பதும், தலைவி தலைவனை எண்ணி
உடல் மெலிவதும் இந்த இளைப்புக்கான காரணத்தை அவளது தாய் வேலனையோ குறி சொல்லும்
முதுவாய்ப் பெண்டிரையோ கேட்டறிவது. அவர்களை முருகன் அணங்கினான் என்பதும், வெறியாட்டு நிகழ்ந்த முருகன் சினம் தணிந்து மகள் நலம் பெறு வாள் என்பதும்
தாய் நம்பிக்கை. எனவே, தாய் மகளின் நலனுக்காக ஏற்பாடு செய்து
நிகழ்த்தப் பெறும் நிகழ்ச்சியே வெறியாட்டு ஆகும்.
முடிவுரை
மனிதன்
பிறப்பு முதல் இறப்பு வரை நம்பிக்கை என்னும் வழக்காறு நடைமுறையில் வாழ்வியலோடு
பின்னிப் பிணைந்துள்ளது. நம்பிக்கை என்னும் கட்டமைப்புக்குள் தன் வாழ்க்கையை
நடத்திச் செல்கிறான். எனவே, நம்பிக்கை என்னும்
வழக்காறு கலித்தொகையில் இடம் பெற்றுள்ளது. அச்ச உணர்வின்
காரணமாக தீமைகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் காலந்தோறும்
நம்பிக்கைகளைக் கடைபிடித்தனர். சங்க காலத் தமிழரின் நம்பிக்கைகள்
கடைபிடிக்கப்பட்டு மரபு வழிப் பண்பாடாக இன்றும் அதன் எச்சங்கள் தொடர்ந்து கொண்டே
தான் இருக்கின்றன. எனவே, இவை வழக்காறுகளாகக்
கருதப்படுகின்றன. மனிதனின்
தன்னல உணர்வும் சமுதாய உணர்வுமே நம்பிக்கைகளை வளர்த்து வருகின்றன. பண்டைய தமிழர்களின்
நம்பிக்கைகள் வரலாற்றுக் கருவூலமாகும். அறிவியல் வளர்ச்சியடைந்த இன்றைய
காலகட்டத்திலும் சில நம்பிக்கை கள் வழக்கத்திலுள்ளன. தொடக்கக்கால தமிழ்ச்
சமுதாயத்திலிருந்து வந்தவைதான் வழக்காறுகள் என அழைக்கப்படுகின்றன. பல்லி
சொல்லுக்குப் பலன் கேட்டல், சொர்க்கம், நரகம், மரங்கள், வானியல்,
கண்ணிமை துடித்தல், மழை பற்றிய நம்பிக்கைகள்,
கடவுள் பற்றிய நம்பிக்கைகள், கனவு குறித்த
நம்பிக்கைகள், பேய் பற்றிய நம்பிக்கைகள், வள்ளைப்பாட்டு, பிறை தொழுதல், கண்
துடித்தல், விரிச்சி கேட்டல், பாவை
நோன்பு, வெறியாட்டு, சிலம்புகழி நோன்பு
போன்ற நம்பிக்கைகள் வழக்காறுகளாகக் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
1.
புலியூர் கேசிகன்
(உ.ஆ), 2010, அகநானூறு, இரண்டாம் பதிப்பு, கௌரா பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை -600 005.
2.
புலியூர் கேசிகன்
(உ.ஆ), 1980, நற்றிணை, இரண்டாம் பதிப்பு, பாரிநிலையம், சென்னை - 600
005.
3.
புலியூர் கேசிகன்
(உ.ஆ), 2010, புறநானூறு, இரண்டாம் பதிப்பு, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், டி.நகர், சென்னை.
4.
புலியூர் கேசிகன்
(உ.ஆ), 2017, குறுந்தொகை, மூன்றாம் பதிப்பு, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், டி.நகர், சென்னை.
5.
புலியூர்க்
கேசிகன் (உ.ஆ), 2015, கலித்தொகை, இரண்டாம் பதிப்பு, சாரதா பதிப்பகம், ஸ்ரீ கிருஷ்ணா
புரம், இராப்பேட்டை, சென்னை.14.
6.
ஔவை துரைசாமிப்
பிள்ளை (உ.ஆ), 2010, நற்றிணை, இரண்டாம் பதிப்பு, சாரதா பதிப்பகம், ஸ்ரீ கிருஷ்ணா புரம்,
இராப்பேட்டை, சென்னை.14.
7.
சக்திவேல்.சு, 1983, நாட்டுப்புறவியல்
ஆய்வு, முதல் பதிப்பு, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை.
8.
இராமநாதன். ஆறு, 1982, நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல், முதல்
வகுப்பு, மணிவாசகர் பதிப்பகம், 31,
சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை.
9.
புலியூர்க்
கேசிகன் (உ.ஆ), 2010, ஐங்குறுநூறு, இரண்டாம்
பதிப்பு, சாரதா பதிப்பகம், ஸ்ரீ கிருஷ்ணா புரம், இராப்பேட்டை, சென்னை.14.
10.
ஔவை துரைசாமிப்
பிள்ளை (உ.ஆ), 2010, கலித்தொகை, இரண்டாம் பதிப்பு, சாரதா பதிப்பகம், ஸ்ரீ கிருஷ்ணா
புரம், இராப்பேட்டை, சென்னை.14.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக