திங்கள், 11 மார்ச், 2024

நாலடியார் உணர்த்தும் அறக்கோட்பாட்டுச் சிந்தனைகள்

 

நாலடியார் உணர்த்தும் அறக்கோட்பாட்டுச் சிந்தனைகள்

                                                                                                      முனைவர் தி.சி.ராமச்சந்திரன்                                       

முன்னுரை

மனிதனின் நலத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் ஏற்படுத்திய வாழ்க்கை நெறியே அறம் எனப்படும். மனித வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் சுட்டுகின்ற வகையில் தமிழில் இலக்கியங்கள் தோன்றியுள்ளன. மனிதனின் குற்றங்களைப் போக்கிச் செம்மை நெறியில் வாழ்ந்து இம்மை மறுமை பயன்களை அடைவதற்குச் சான்றோர்கள் அருளிய நல்லுரைகளே அறக்கருத்துக்கள் ஆகும். அத்தகைய அறக்கருத்துக்களை உணர்த்தும் நூல்களாக நாலடியார் அமைந்துள்ளது. இந்நூல்களில் அன்பு, அழகு, இரக்கம், அறிவு, ஈகை, உண்மை, ஒழுக்கம், தீமை, துன்பம், நட்பு, நன்றி, பொறுமை, சினம், பொறாமை, விருந்தோம்பல், துன்பம் முதலானவற்றின் அறக்கருத்துக்களை விளக்கும் வகையில் அறக் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன.

அறம் - விளக்கம்

அறம் என்பது “பொருள் அறுத்துக் கொள்வது, வழியை உண்டாக்குவது என்பதாகும். மனித இனத்தின் நலத்திற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் மனித சமுதாயம் வகுத்துக்கொண்ட ஒழுக்க நெறி அறமாகும். கூடி வாழும் மக்களிடம் காணப்படும் முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட நெறி முறைகளே அறமாகும்.'1 என்று இரா.வரலட்சிமியும், “அறம் என்னும் சொல் ஆழ்பொருளும் அகல்பொருளும் கொண்ட ஒரு நுட்பமான சொல்”2 என்று அ.அறிவுநம்பியும், “அறம்  என்பதை வாழும் முறை என்றும் அதையொட்டிச் செயல்படுத்தும் விதிகள் அல்லது நெறிமுறைகள் என்றும் கூறலாம் ”3 என்று செந்தீநடராஜனும் குறிப்பிட்டுள்ளனர்.

அறச்செயல்கள்

எப்பொழுதும் அறவழியை அறிந்து ஒழுகுங்கள், எமனுக்குப் பயப்படுங்கள், அயலார் சொல்லும் வன்சொற்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள், வஞ்சனை குணம் வராதபடி பாதுகாத்துக் கொள்ளுங்கள் தீச் செயல் செய்பவரது நட்பை வெறுத்து விடுங்கள், பெரியோருடைய வாய்மொழிகளைக் கேளுங்கள் என்று நல்லறிவு உடையவராகி மறுமையின் பத்துக்குக் காரணமாகிய அறத்தை மயக்கமில்லாமல் துணிந்து செய்து துன்பப்படாமல் வாழ வேண்டும் என்பதை,

"அறிமின் அறநெறி அஞ்சுமின் கூற்றம்

பொறுமின் பிறர் கடுஞ்சொல் போற்றுமின்வஞ்சம்

வெறுமின் வினைதீயார் கேண்மை யெஞ்ஞான்றும்

பெறுமின் பெரியார் வாய்ச்சொல்”                       (நாலடி.172,183)

மேலும்,

“நின்றுழிநின்றே நிறம் வேறாம் காரணம்

இன்றிய பலவும் உள ”                            (நாலடி.183)

என்று நாலடியார் சுட்டிக்காட்டுகிறது.

அறம் செய்யும் முறை

வாழ்நாள்கள் கழிவதற்குமுன்னே பிறர்க்கு உபகாரம் செய்ய வேண்டும் என்றும், மிகுதியான அறங்களைச் செய்து அருளுடையவர் ஆக வேண்டும் என்றும், புல்லினது நுனியிலுள்ள நீரைப்போல உடம்பு நிலையில்லாமையையுடையது என்று நினைத்து உடலோடு கூடியிருக்கின்ற பொழுதே ஒவ்வொருவரும் அறத்தொழிலைச் செய்ய வேண்டும் என்பதை,

“வாழ்நாள் உலவாமுன் ஒப்புரவு ஆற்றுமின்”          ( நாலடி.22)

மேலும்,

“புல் நுனி மேல் நீர்போல் நிலையாமை டியன்றெண்ணி

இன்னினையே செய்க அறவினை "                       (நாலடி.29)

இப்பாடல் வரிகள் விளக்குகிறது.

கரும்பு தன்னைப் பக்குவமாக ஆலையில் வைத்து ஆட்டினவர்களுக்குத் தன்னிடத்தில் பொருந்தியச் சாற்றைக் கொடுப்பது போல, மக்கள் உடம்பை அடைந்த பயனால் பெரிய பயனாகிய அறத்தை மிகுதியாகச் செய்ய வேண்டும். ஒருவன் நமக்கு உள்ள பொருள் மிகச் சிறியது என்று எண்ணாமலும், இல்லையென்று சொல்லாமலும், எப்பொழுதும் அறமாகிய பயனை ஏற்போர் எல்லாரிடத்தும் எந்நாளும் அறஞ்செய்து வரக்கடவன் என்பதை,

“கரும்பூர்ந்த சாறு போல் சாலவும் பின்னுதவி மற்றதன்

கோது போல் போரும் உடம்பு”                (நாலடி.34)

மேலும்,

இறப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும்

அறப்பயன் யார் மாட்டம் செய்க ”                        (நாலடி.99)

இப்பாடல் தெளிவுப்படுத்துகின்றது.

எமன் வருதல் இளமையிலோ, முதுமையிலோ இடைநின்ற காலத்திலோ என்று எண்ணாமல் உயிரைக் கொண்டு போக அவன் பின்னே வந்து மறைந்து நிற்கின்றான் என்று நினைத்து பாவச் செய்கைகளைச் செய்யாமல் மேன்மையான அறிவுடையவர் கூறிய அறத்தைச் செய்ய வேண்டும் என்பதை,

"இன்று கொல் அன்றுகொல் என்று கொல் என்னாது

பின்றையே நின்றது கூற்றமென்றெண்ணி

ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையான்

மருவுமின் மாண்டார் அறம் "                    (நாலடி.36)

என்று நாலடியார் உணர்த்துகிறது.

அறப்பயன் பெறுதல்

உடம்பை உறுதியுடையதாகப் பெற்றவர்கள் தாம்பெற்ற உடம்பினால் தக்க அறப்பயனைத் தேடிக்கொள்வர்.

"யாக்கையை யாப்புடைத்தாப்பெற்றவர் தாம் பெற்ற

யாக்கையால் ஆய பயன்கொள்க ”                        (நாலடி.28)

அறம் செய்பவர் தகுதி உடையவர்க்குச் செய்வதனால் அறத்தின் பயனைப் பெறுவர். “அறம் செய்ய அல்லவை நீங்கிவிடும்”4. அறம் செய்யத் தொடங்கிய பின்பு அறத்தைப் பாதியில் நிறுத்தல் கூடாது. செய்யும் போது அறப்பயன் உண்டாகும்.  “இடைதவிர்ந்து வீழ்தலின் நட்டறான் ஆதலே நன்று"5.

இளமையில் அறம்

ஏதோ ஒரு பொருள் தமது கையில் கிடைத்தால் அப்பொருள் மூப்புக்காலத்தில் பயன்படும் என்று ஒதுக்கி வைக்காமலும், இளமையிலேயே இல்லை என்று கூறாமலும் தம்மிடம் வந்தோர்க்குக் கொடுப்பவரே சிறந்தவராவார்.

"என்னானும் ஒன்று தம் கையுறைப்பெற்றக்கால்

பின்னாவ தென்று படித்திரா - முன்னே "

கொடுத்தார் உயப்போவார் கோடில் தீ கூற்றம் ” (நாலடி. 5)

என்று நாலடியார் உணர்த்துகிறது. மேலும், தருமத்தை இளமையிலே செய்க பின்னர் பார்த்துக் கொள்ளலாமென்றால் அது முடியாமல் போகலாம் என்பதை,

"தோற்றம் அரிதாயமக்கட் பிறப்பினால்

ஆற்றும் துணையும் அறஞ்செய்க ”                        (ப.நா. 6)

ஆகவே இளமையில் அறம் செய்ய வேண்டும் என்பதை நாலடியார் குறிப்பிடுகின்றன.

அறிவுடையோர் செயல்கள்

ஒருவன் நல்லொழுக்கத்தின் வகையை அறிந்து அயலாரது இரகசியங்களைக்கேட்பதில் செவிடனாகியும், அயலாரது மனைவியைக் காதலோடு காண்பதில் குருடனாகியும், ஒருவர்மேல் தீயச் சொற்களை அவர்களைக் காணாத இடத்துச்சொல்லுவதில் ஊமையாகியும் நிற்பானானால் அவனுக்கு எத்தன்மையதாகிய அறத்தையும் அறிவுடையோர் சொல்ல வேண்டுவதில்லை.

“பிறர் மறையின் கண் செவிடாய்த்திறனறிந்து

ஏதிலார் இல்கண் குருடனாய்த்தீய

புறங்கூற்றில் மூங்கையாய் நிற்பானேல் யாதும்

ஆறம் கூறவேண்டா அவற்கு ”                  (நாலடி. 158)

என்று நாலடியார் உணர்த்துகிறது.

ஈகை

ஈகை என்பது “ பொருள் உள்ளவன் பொருள் இல்லாதவனுக்குக் கொடுக்கும் செயல் ஆகும்”6 உயர் குடியில் பிறந்தவர்கள் வறுமைவந்தாலும் பிறர்க்கு உபகாரம் செய்வதற்குத் தளரார். மேன்மக்கள் தமக்கு எளிதில் முடியுமாயினும், முடியாததாயினும் குற்றம் இல்லாதபடி பெருங்காரியங்களையேச் செய்ய நினைப்பர்.

“செல்லாமை செல்வன் நேர் நிற்பினும் ஒப்புரவிற்கு

ஒல்கார் குடிப்பிறந்தார்”                          (நாலடி.148)

மேலும்,

 “இசையும் எனிறும் இசையாது என்னும்

வசைதீர எண்ணுவார் சான்றோர் ”                       (நாலடி.152)

என்று நாலடியார் பாடல் வலியுறுத்துகின்றது.

உணவு கொடுத்தல்

கைப்பொருள் உண்டாகியிருக்குங் காலத்தில் வீணாக மேலும் பொருள் தேடி அலையாமலும் உள்ள பொருளை இறுகப் பிடிக்காமல் சோறு முதலியவற்றை யாவர்க்கும் பகுத்துக் கொடுத்து மிகுதியை உண்ணுங்கள் என்பதை,

“பரவன்மின் பற்ற பின் பாத்துண்மின் யாதும்

கரவன் மின் கைத்துண்டாம் போழ்து ”      ( நாலடி. 92 )

என்ற பாடல் வரியும், பலரோடு பகிர்ந்து உண்டு பழகியவனைப் பசி என்று சொல்லப்படும் கொடியநோய் தாக்குவதில்லை என்பதை,

“பாத்து ஊன் மெரீ இயவனைப் பசி என்னும்

தீப்பிணி தீண்டார் அரிது ”                                  ( ப.நா.26 )

என்ற பழமொழி நானூறு பாடல் வரியும் விளக்குகிறது.

 

ஈயாதார் தன்மை

பலரும் விரும்பும்படி வாழ்பவர் பயன்கொடுக்கும் பெண்பனைமரங்களை யொப்பர். தம்முடைய குடும்பம் செல்வத்தால் மிக்க விடத்தும் பிறர்க்குக் கொடுத்துத்தாமும் உண்ணாத மக்கள் சுடுகாட்டில் உள்ள ஆண் பனைமரங்களையொப்பர். மேலும் இருப்பது பிறருக்கு உதவியாகட்டும் என்று ஒரு பொருளையேனும் மனதாரக் கொடுத்து மகிழாதவனுடையச் செல்வமானது அழகும்  வடிவமும் உடையவளான ஒரு பெண் கண்ணிழந்த குருடியாக விளங்குவதைப் போன்றது.

“நடுவூருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க

படுபனை அன்னர் பலர் நச்ச வாழ்வார்

குடி கொழுத்தக் கண்ணும் கொடுத்துண்ணாமாக்கள்

இடுகாட்டுள் ஒற்றைப்பன்ன ”                  (நாலடி. 97)

என்று நாலடியார் பாடல் வலியுறுத்துகின்றது.

தீமை செய்யாதிருத்தல்

பனையளவு பெரியவர்கள் நாள்தோறும் தமது பெருமை கெட்டு தினையளவு சிறியவர்களாய் தமது ஒளியை உள்ளே அடக்கிக் கொண்டு வாழ்வார்கள். இதற்கு காரணம் முன் செய்த தீவினையின் பயனே அல்லாமல் வேறு எதுவும் இல்லை என்பதை,

              “தினைத் துணையர் ஆகித் தம் தேகள் அடக்கிப்

பனைத் துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்

நினைப்பக் கிடந்தது எவனுண்டாம் மேலை

வினைப்பயன் அல்லால் பிற ”                  (நாலடி.105)

என்று நாலடியார் பாடல் வலியுறுத்துகின்றது.

துன்பப்படாதவர் தன்மை

குற்றமற்ற அறிவையுடைய மேன்மக்கள் பிறர் பொருளைக் களவு செய்யமாட்டார். கள்குடிக்க மாட்டார். நூல்களால் விலக்கப்பட்ட தீச் செயல்களை வெறுத்துச் செய்யாதொழிந்து அயலாரை அவமதித்து நிந்தித்துப் பேசார். மறந்தும் தம் வாயினால் பொய் சொல்லார் வறுமையினால் தளர்ச்சி நேர்ந்த காலத்தும் துன்பப்படமாட்டார்.

“கள்ளார் கள்ளுண்ணார் கடிவ கடிந்தொரீ இ

எள்ளிப் பிறரை யிகழ்ந்துரையா - தள்ளியும்

வாயிற் பொய் கூறார் வடுவறு காட்சியார்

சாயின் பரிவது இவர் ”                           (நாலடி.157)

என்று நாலடியார் பாடல் வலியுறுத்துகின்றது.

 

 

உண்மையான நட்பு

உண்மையான நட்பு “ மனிதன் இன்னொரு மனிதனைப் பற்றி யோசிக்கும் நிலையிலிருந்தே நட்பு தோற்றம் பெறுகின்றது. இதற்கு விதியோ கட்டளையோ அன்றி மனித உணர்வில் கலந்த உணர்ச்சியே பொருளாகும். சிரிப்பும், அழுகையும், கோபமும், ஆதங்கமும் நம் இரத்தத்தில் கலப்பது போலவே நட்பு என்னும் பண்பும் இரத்தத்தில் கலந்த உண்மைப் பொருளாகும்”.7 உண்மையான நட்பினர் என்று சொல்லப்படுபவர் உலையாணிக்கோல் போலத் தம் நண்பர் தீப்புகுவாராயின் தாமும் அவரோடு தீயினும் புகுவர். நீரை விரும்பி வாழும் உழவர் கட்டுந்தோறும் அக்கட்டை உடைத்துச் செல்லினும் நன்மையைத் தரும் நீரோடு சண்டை போடாமல் மீண்டும் அந்நீரைக் கட்டுவர். அது போல தாமாக விரும்பிக் கொள்ளப்பட்டவர் தாம் மிகுதியும் வெறுக்கும்படி குற்றங்களைச் செய்வாராயினும் அவருடைய நட்பாகிய பாரத்தை ஒருவர் தாங்கி நிற்பர்.

“சூட்டுக்கோல் போல எரியும் புகுவரே

நட்டார் எனப்படுவார்”                            (நாலடி.208)

மேலும்,

“செறுத்தோறு உடைப்பினும் செம்புனலோடு ஊடார்

மறுத்தும் சிறை செய்வர் நீர் நசைஇ வாழ்நர்

வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே

தாம் வேண்டிக் கொண்டார் தொடர்பு”      (நாலடி.222)

என்று தம்மை நட்புச் செய்தவர்களைச் சேர்ந்த பொழுதிலே அவரைவிட்டு அவ்விடத்தே கொஞ்ச மேனும் அகலாமல் முழு உடம்பும் பொருந்தக் கலந்து விடுபவர்கள் சிறந்த நண்பர்கள் ஆவார்.

சுற்றத்தார் நட்பு

வெயிலினது வெப்பம் மிகுந்த காலத்தில் தன்னை விரும்பி அடைந்தவர்களுக்கெல்லாம் நிழலைத் தருகின்ற ஆலமரத்தைப் போல துன்பம் நேர்ந்த காலத்துத் தன்னிடம் வந்த சுற்றத்தார் யாவரையும் ஒரே சமமாக அத்துன்பத்திலிருந்து காத்துக்கொள்ள வேண்டும். அனைவரும் தான் பெற்ற செல்வத்தை அனுபவிக்கும் தன் கனிகளைப் பல பறவைகளும் உண்ணும் பழுத்த ஆலமரம் போல மனிதனுக்குக் கடமைசெய்ய வேண்டும்.

“அழல் மண்டு போழ்தின் அடைந்தவர்க்கு எல்லாம்

நிழல் மரம் போல் நேரொப்பத் தாங்கி பழுமரம் போல்

பல்லார் பயன் துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே

நல்லாண் மகற்குக் கடன் ”                                   ( நாலடி. 202 )

என்று நாலடியார் உணர்த்துகிறது.

நட்பில் பிழை பொறுத்தல்

தம்மால் நட்புச் செய்துக் கொள்ளப்பட்டவர்களை தமது நண்பர் என்று கொள்ளுதற்கு ஏற்ற குணமுடையார் அல்லாதவராக ஒருவர் பின்பு அறிந்தாரானால் அவர்களைத் தமது உண்மையான நண்பரிலும் மேலாகக் கொண்டு மதித்து நண்பர் அல்லாமையைப்பிறர்க்குத் தெரிவிக்காமல் நமக்குள் அடக்கிக் கொள்வர். அதோடு ஒருவர் மற்றவர் பிழையைப் பொறுத்திடுதலே இரண்டு பேரது நட்புக்கும் காரணமாகும்.

 

“தமரென்று தாம் கொள்ளப்பட்டவர் தம்மைத்

தமரன்மை தாமறிந்தார் ஆயின் அவரைத்

தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை

தம்முள் அடக்கிக் கொளல்”                                  (நாலடி.229)

மேலும்,

“உருவ்வண்டு ஆர்க்கும் உயர்வரை நாட

ஒருவரை பொறை அருவர் நட்பு ”                         (நாலடி.223)

என்று நாலடியார் உணர்த்துகிறது.

குற்றங்களை நீக்கும் விருந்தோம்பல்

பெரியோர்கள உணவை நாள்தோறும் விருந்தினர்முதலானவர்களுக்குக் கொடுத்த பின்பு உண்ணுதற்குரிய உணவை உண்பர். அவ்வாறு உண்ணும் உணவெல்லாம் காமம், வெகுளி, மயக்கம் போன்ற குற்றங்களை நீக்கும்.

முன் துற்றும் துற்றினை நாளும் அறம் செய்து

பின் துற்றுத் தூற்றுவர் சான்றவர் அத்தூற்று

முக்கூற்றம் நீக்கி முடியும் அறவெல்லாம்

துக்கத்துள் நீக்கி விடும் ”                         (நாலடி.190)

என்று நாலடியார் உணர்த்துகிறது.

தொகுப்புரை

மனித வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் சுட்டுகின்ற வகையில் தமிழில் இலக்கியங்கள் தோன்றியுள்ளன. மனிதனின் குற்றங்களைப் போக்கிச் செம்மைநெறியில் வாழ்ந்து இம்மை மறுமை பயன்களை அடைவதற்குச் சான்றோர்கள் அருளிய நல்லுரைகளே அறக்கருத்துக்கள் ஆகும். அறம் என்பதற்கு பொருள் அறுத்துக் கொள்வது, வழியை உண்டாக்குவது என்று பொருள். கூடி வாழும் மக்களிடம் காணப்படும் முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட நெறிமுறைகளே அறமாகும்.

எல்லோரும் மதிக்கத்தக்க புகழ், செல்வம், ஈகை இவை மனிதருக்கு அழகு தரும் குணங்களாகும். பிறிதோர் உயிர்க்கு வந்த துன்பத்தைத் தமக்கு வந்தது போலக் கருதி காப்பாற்றாவிட்டால் தாம் பெற்ற அறிவினால் பயன் இல்லை. அறத்திற்கு மட்டும் அன்பு துணையாகாது. தீமையைக் களைவதற்கும் துணையாகும்.

ஆசையைக் கைவிட்டால் அழிவில்லாத மாறாத இன்பத்தைப் பெறலாம். ஏழைகளுக்கு வேண்டிய ஒன்றைக் கொடுப்பதே ஈகை. கற்புள்ள பெண்ணைப் போலத் தன்னிடம் ஒழுக்கத்தைக் காத்துக் கொள்பவன் சிறந்த பெருமை அடைவான். ஒருவர்க்கு நன்மை செய்யும்போது அவரவர் இயல்பறிந்து பொருத்தமாகச் செய்யவேண்டும். இயல்பு அறியாமல் செய்தால் குற்றம் உண்டாகும்.

ஒருவொருக்கொருவர் புரிந்து கொண்ட உண்மையான நட்பை உடையவரே நண்பர் ஆவார். ஆகவே நண்பர் செய்யும் தவறை சினந்து சொன்னாலும் அஞ்சக் கூடிய தீயச் செயல்களைச் செய்யமாட்டார். ஒருவன் பிறனுக்குக் கேடுதரும் செயலை மறந்தும் கூட எண்ணக்கூடாது. எண்ணினால் எண்ணியவனுக்குக் கேடுவரும். எனவே பிறனுக்கு நன்மை செய்து நல்லவர்களாக வாழவேண்டும்.

நட்புச் செய்வதற்கு முன்னர் தகுதி உடையவரை நாடியே நட்புச் செய்தல் வேண்டும். நண்பர் தவறு செய்வாராயின் கண்டித்து அறிவுரை கூறித் திருத்துவதே உண்மையான அன்பாகும். தீயகுணம் உடையவரின் நட்பை விட்டு விடவேண்டும். நன்றி என்பது ஆபத்துக்காலத்தில் ஒருவர் பிறருக்குச் செய்த நன்மையைக் குறிக்கும். நெருக்கடியான நேரத்தில் ஒருவன் செய்த உதவி சிறியதாயிருந்தாலும் உலகத்தை விடமிகப்பெரியதாக எண்ணுவர்.

அடிக்குறிப்புக்கள்

1.      இரா.வரலட்சுமீ, திரிகடுகமும் திருக்குறளும் ஒப்பீடு,பிரியா பதிப்பகம், சண்முகா நிலையம், வெங்கடேஷ் நகர், விருகை, சென்னை. பதிப்பு-2013,  ப.95.

2.      அ.அறிவுநம்பி, செம்மொழி இலக்கியச்சிந்தனைகள்,சித்திரம், 15, கலைவாணிகர், இலாசுப்பேட்டை,  புதுச்சேரி. பதிப்பு-2009, ப.70.

3.      செந்தீநடராஜன்.க.ஆ, ஜெயசீலி.வ, "யாயும் ஞாயும் யாராகியரும் எம்மனோர் செம்மல்களும்" புற அகமண அறங்கள், செவ்வியல் இலக்கியங்களில் அறக்கோட்பாடுகள் ஒன்றுபடும் புள்ளிகளும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், திருச்சிலுவை கல்லூரி, நாகர்கோவில், குமரிமாவட்டம். பதிப்பு-2014, ப.23.

4.      புலியூர் கேசிகன், பழமொழி நானூறு, சாரதா பதிப்பகம், கி.4, சாந்தி அடுக்ககம், 3ஸ்ரீ, கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை, சென்னை. பதிப்பு-2010, ப.23

5.      புலியூர் கேசிகன், பழமொழி நானூறு, சாரதா பதிப்பகம், கி.4, சாந்தி அடுக்ககம், 3ஸ்ரீ, கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை, சென்னை. பதிப்பு-2010, ப.42

6.      கு.சிவப்பிரகாசம், புறநானூற்றில் வாழ்வியல் விழுமியங்கள், அன்னை கிராபிக்ஸ், எண்.68, 100 அடிசாலை, எம்.ஜி.ஆர். நகர், சென்னை. பதிப்பு-2013, ப.43.

7.      கு.சிவப்பிரகாசம், புறநானூற்றில் வாழ்வியல் விழுமியங்கள், அன்னை கிராபிக்ஸ், எண்.68, 100 அடிசாலை, எம்.ஜி.ஆர். நகர், சென்னை. பதிப்பு-2013, ப.139.

 

கருத்துகள் இல்லை: