திங்கள், 11 மார்ச், 2024

பிற்கால அற இலக்கியங்களில் இல்லற வாழ்வியல்

 பிற்கால அற இலக்கியங்களில் இல்லற வாழ்வியல்

முனைவர் வீ.உதயகுமார்

முன்னுரை

        உலகம் என்பது பல சமுதாயங்களை உள்ளடக்கியது. சமுதாயம் என்பது பல குடும்பங்களை உள்ளடக்கியது. குடும்பம் என்பது பல தனிமனிதர்களை உள்ளடக்கியது. ஆகவே, உலக வாழ்வு சிறக்க வேண்டுமெனில் உயரிய கொள்கைகளை உள்ளடக்கிய சீர்மிகு சமுதாயம் உருவாக வேண்டும். அச்சமுதாயம் சிறப்புற வேண்டுமானால் நல்ல குடும்பங்கள் வேண்டும்.

சமுதாய அமைப்பில் குடும்பம்

    இந்திய தமிழ்ப் பண்பாடுகளில் குடும்பம் என்பது அச்சாணியாகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கை உந்துதலால் ஏற்படும் பாலுணர்வு குடும்ப அமைப்பில் நெறிப்படுத்தப்பெறுகின்றது. இல்லையெனில் விலங்குத்தனமே ஆதிக்கம் செய்யும். குழந்தைகளைப் பெறுதல், பேணுதல், நெறிப்படுத்தல், வளர்த்தல், கல்வி புகட்டுதல், வாழ்க்கை அமைத்தல் ஆகிய அனைத்துமே குடும்பத்தில் தலைமக்களாக விளங்கும் தாயினாலும் தந்தையினாலுமே நிகழ்த்தப்பெறுகின்றன. அவர்களிடையே பாசம் என்ற நட்பிற்கு மேற்பட்ட அன்பு, உறவு இழையோடுவதற்கும் கட்டிப்போட்டிருப்பதற்கும் காரணம் குடும்ப அமைப்பே ஆகும்,

    தனிமனிதன் தன்னை மட்டும் கருதாமல் தான் பிறந்த, தன்னைச் சார்ந்த தன் குடும்பம் என்னும் விளக்கின் ஒளி குன்றாமல் பாதுகாக்க வேண்டும் என்பதை,

“குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்

மாசூர மாய்ந்து கெடும்" (குறள். 601)

என்னும் குறட்பாவில் வள்ளுவர் உணர்த்துவார்.

    “பிறப்பாலும் வடிவத்தாலும் மட்டும் ஒன்றை விலங்கென்றும் மனிதரென்றும் கூறலாகாது. அதுவோ அல்லது அவனோ கடைப்பிடித்து ஒழுகும் நெறிமுறைகளைக் கொண்டே மனிதனென்றும் விலங்கென்றும் கூற வேண்டும். குறிப்பாக நெறிமுறை இல்லாது வாழும் மனிதனை மனிதனென்று கூறலாகாது"1 என்பார் ஆர்.எ.சுப்பிரமணியன்.

        உயிர் வாழ்வில் முதுமை என்பது மிகப்பெரிய அறைகூவல் ஆகும். இளமையைப் போல இயங்க முடியாமல் கைகளும் கால்களும் உடலும் சோர்வுறுகின்றன. கண்களின் பார்வை குறைகின்றது. குனிந்து நிமிர்தல் இயலாதது ஆகிவிடுகிறது. இளமையைப்போல உழைக்கவோ உற்பத்தியில் ஈடுபடவோ இயலுவதில்லை, இவற்றுடன் நோய்களும் எளிதாக முதியோரைத் தாக்குகின்றன, சில நோய்கள் நாட்கணக்கு, மாதக்கணக்ககு என மரணம் வரைத் தொடர்கின்றன. கால்களும் கைகளும் முற்றுமாகச் செயலிழந்து மாந்தரையே முடக்கிவிடுதல் உண்டு, இம்முதுமைத் துன்பத்திலிருந்து மனிதனைக் காக்கக்கூடிய ஒரே வழி குடும்ப அமைப்பில் மட்டுமே அடங்கியுள்ளது. குடும்பத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களும் உறவினர்களும் முதுமையில் உடல்நலம் காத்தற்கு உதவுவதுடன் உள்ளப் பண்புகளுக்கு ஆறுதல் மருந்தாகவும் விளங்குகின்றனர்.

    மகனுக்கு ஆசானாய் இருக்கும் தந்தையையும் அவனுக்கு ஏற்றம் தரும் வகையில் அவனை அரவணைத்துச் செல்கின்ற தாயையும் பெற்றிருப்பதே சிறந்த குடும்பமாகும். இச்சிந்தனையைப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான நான்மணிக்கடிகை,

“தந்தை எனப்படுவான் தன் உவாத்தி தாய் என்பாள் 

முத்து தான் செய்த வினை" (நான். 42 : 3-4)

என்ற பாடலடிகளின் வழி உணர்த்துகிறது.

    இக்குடும்பம் என்ற அமைப்புக்குள் ஒருவன் தன் வாழ்நாளை அமைத்துக் கொள்ளும் தன்மையே வாழ்க்கையாகிறது.

வாழ்க்கை

    ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் செயல்களையெல்லாம் இணைத்து வாழ்க்கை என்கிறோம். அவ்வாழ்க்கையானது நிறைவுடையதாகவும் இன்பமானதாகவும் அமைய விழையும் அற நூலாசிரியர்கள் அதற்குரிய நெறிகளை வகுத்துத் தருகின்றனர். அவை மனிதனை உள்ளும் புறமும் பண்படுத்தி உயர்ந்த வாழ்க்கையைத் தருகின்றன.

    வாழ வேண்டிய நெறிமுறைகளின்படி வாழ்ந்து, தனக்கும் பிறருக்கும் பயனுள்ளவனாக வாழ்பவனையே உலகம் மறவாமல் போற்றும். இவ்வாறு வாழ்தலே வாழ்க்கை என்பதை,

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்" (குறள். 50)

என்பார் வள்ளுவர்,

    வாழ்க்கையை இல்லறம், துறவறம் என்று இருவகைப்படுத்தலாம். இல்லறம் எனப்படுவது மனைவி மக்கள் சுற்றத்தாருடன் இருந்து ஒழுகும் ஒழுக்கமாகும்.

    “இன்பம், துன்பம், போராட்டம், அமைதி, உழைப்பு, ஓய்வு, வெற்றி, தோல்வி, அன்பு, ஆசை, பசி, காதல், உள நிறைவு, நிறைவின்மை இவற்றால் ஆனதுதான் வாழ்க்கை, வாழும் இலக்கியங்கள் எல்லாமே வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. வாழ்க்கையின் பிரதிபலிப்பே கலை என்றார் அரிஸ்டாட்டில்"2 என்று தம் நூலில் எடுத்தாள்வார் அ. கி. பரந்தாமன்.

    மனிதன் வாழ்கிறான் என்கிற அடையாளம் தான் செய்து கொண்டிருக்கிற செயல்களை முன்நிறுத்தியே,

    “மனித வாழ்க்கை என்பது மனிதனின் செயல் திறளைச் சார்ந்து நடைபெறும் உலகியல் சார்ந்த இயக்கமாகும். செயலற்ற நிலையில் வாழ்க்கை| என்ற சொல் பொருளற்றதாகின்றது"3 என்பார் என். இ. இராமலிங்கம்.

    “அறம், அன்பு, அறிவு, இம்மூன்றும் வாழ்க்கைக்கு வேண்டு வனவாகும். இம்மூன்றுமே வாழ்க்கை என்னும் தேர்க்கு அச்சாணி"4 என்பார் அ. கி. பரந்தாமனார்.

    அன்பு பொருந்திய சுற்றத்தார் சூழ நல்ல மனைவியுடன் கூடிச் சிறப்புடன் வாழ்வதே சிறந்த இல்லற வாழ்க்கை என்பதனை,

“உற்ற பெருஞ் சுற்ற முறநன் மனைவியுடன் 

பற்றிமிக வாழ்க பசுவின்வால் - பற்றி 

நதி கடத்த லன்றியே நாயின்வால் பற்றி

நதி கடத்த லுண்டோ நவில்" (நீதி வெண்பா. 11)

என்னும் பாடலடிகள் குறிப்பிடுகின்றன. மேலும், தாய் இறந்தால் மகனுக்கு நாவால் சுவைத்துண்ணும் நல்ல சுவையுள்ள உணவு இல்லையாகும். தந்தை இறந்தால் படிப்புக் கெடும். உடன்பிறந்தான் இறந்தால் தோள் வலி போய்விடும். மனைவி இறந்தால் மேற்சொன்ன அனைத்துமே போய்விடும் என்பதை,

“மாதா மரிக்கின் மகனாவின் நற்கவைபோம் 

தாதா வெனிற்கல்வி தானகலும் - ஓதினுடன் 

வந்தோன் மரித்துவிடில் வாகுவலி போமனையேல் 

அந்தோ இவையாவும் போம்" (நீதி வெண்பா. 61)

என்று மனைவியில்லாதவன் வாழ்க்கை இன்ப வாழ்க்கை ஆகாது என்பதை உணர்த்துகிறது. இதனையொத்ததாகவே.

'மெல்லினல்லா டோள்சேர் (ஆத்தி, 93)

என்னும் தொடரும் ஈண்டு நினையத்தக்கது.

வாழ்க்கைத் துணை நலம்

    இல்வாழ்க்கையில்| மனைவி| சிறப்பிடம் பெறுகிறாள். இல்லாள். இரு நிலைகளிலும் செயல்படுகிறவள். அவை கற்பு நெறி, தாய்மை நிலை என்பதாகும்.

    “சங்க இலக்கியங்களில் பயிலப்படாத| வாழ்க்கைத்துணை| என்கிற கலையியல் சொற்றொடரை திருவள்ளுவரே முதன்முதலில் உருவாக்கினார். பெண்மையின் அனைத்து மாட்சிமையையும் பேசுகிற குடும்ப குமுகாயத் தகுநிலையை விளக்குவதற்காக அத்தொடரைப் பயின்றுள்ளார்.| துணை| என்பதற்கு சமத்துவ அடிப்படையான அணுக்கத் தோழமை"5 என்று கா. அப்பாதுரையார் பொருள் தருவதாக கு.ச.ஆனந்தன் தம் நூலுள் எடுத்தாண்டுள்ளார்.

    இல்லறம் நல்லறமாகச் சிறக்க வேண்டுமானால் அதற்குத்தக்க நல்ல பண்புடைய வாழ்க்கைத்துணை அமைய வேண்டும். அவ்வகையிலே நல்ல மனைவிக்குத் தக்க கணவனும் வாய்க்க வேண்டும்.

    “இல்வாழ்வான் என்றால் இல்லாளோடு கூடி வாழ்க்கைக்குரிய கடமைகளை வழுவாமல் செய்து கொண்டு சிறந்த மகனாய் வாழ்வான் என்று பொருள், திருமணம் புரிந்து கொள்ளாதவர், பொதுப்பணிகள் செய்துகொண்டு உயிர் வாழ்ந்து வந்தாலும் உண்மையில் அவர்கள் வாழாதவர்களே"6 என்பார் அ, இளவழகன்,

நல்ல தக்க பண்புடைய வாழ்க்கைத்துணை பற்றிச் சமண முனிவர்,

“கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள் 

உட்குஉடையாள் ஊராண் இயல்பினாள் - உட்கி 

இடன் அறிந்து ஊடி இனிதின் உணரும் 

மடமொழி மாதராள் பென்" (நாலடி.384)

என்ற பாடலடிகள் இனிய சொல்லைப் பேசக்கூடியவளே மனைவியாவாள் என்பதைப் புலப்படுத்துகின்றன,

    கணவனும் மனைவியும் அன்பால் ஒன்றுபட்டவர்கள். உடம்பால் இருவராய் இருந்தாலும் உள்ளத்தால் ஒருவராவார்கள். அதனால் ஒருவருடைய இன்ப துன்பங்கள் மற்றவருடைய இன்ப, துன்பங்களாகவே இருக்கின்றன. கணவனுக்கு நோய் என்றால் மனைவி வருந்துவாள். மனைவிக்கு நோய் என்றால் கணவன் வருந்துவான். இவ்வாறன்றிக் கணவனோடு மாறுபட்டு அவனிடம் அன்பு இல்லாத மனைவி இருப்பதும் உண்டு. அவள் கணவனுக்கு என்ன துன்பம் நேர்ந்தாலும் வருந்தமாட்டாள். அத்தகையவள் கணவனுக்குத் தீங்கு செய்யவும் அஞ்சாதவளாய் கொடியவளாய் இருப்பாள். இவ்வகையில் உள்ள இல்லாளை ஒளவை,

“துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு" ( கொன்றை, 4)

என்ற தொடரில் கணவனுக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கண்டு மனம் துடிக்காத பெண்டிர், மடியில் கட்டிக்கொண்டுள்ள நெருப்புக்கு ஒப்பாவர் என்று கடிகிறார்.

    மண்ணுலகையும் விண்ணுலகையும் ஒருவர் பெற்றிருந்தாலும் நல்ல மனைவி இல்லாதர் எனின் அவர் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவரே என்பதை,

“நல்ல ஞாலமும் வானமும் பெறினும் 

எல்லாம் இல்லை இல் இல்லோர்க்கே" (வெற்றி, 69)

என்னும் அடிகளில் அதிவீரராம பாண்டிதர் உணர்த்துவார்.

 “வாழ்க்கைத்துணை அமையாத ஆடவனும் அல்லது இடையே வாழ்க்கைத்துணையை இழந்தவனும் அப்படியே திருமணம் நேராத மாதும் அல்லது கணவனை இழந்த பெண்ணும் இல்லறக் கடமைகள் செய்யத் தகுதியற்றவர்கள்"7 என்று அ.இளவழகன் கூறும் கருத்தும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

இன்ப வாழ்க்கை

    அன்புடன் வாழ்வதே இல்வாழ்க்கை. அதுவே இன்பவாழ்க்கையுமாகும். அவ்வின்பப் பெருக்கின் வழியான இல்வாழ்க்கையில் அறத்தைப் போற்றி வாழ்வதே அதன் பயனாகும்.

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

பண்பும் பயனும் அது" (குறள். 45)

என்பார் வள்ளுவப் பெருந்தகை.

    கணவனும் மனைவியும் ஒத்த அன்புடையவராய் நேர்மையான வழியில் வாழ்வதே இன்ப வாழ்க்கையாகும். அவ்வாறின்றிக் கணவனும் மனைவியும் ஒற்றுமையின்றி தனித்து வாழ்க்கை நடத்தினால் இல்வாழ்க்கை இனிது நடைபெறாது. அறநெறிச்சாரம் என்னும் அறநூல்,

“இருவரும் பூண்டுய்ப்பி னல்லால் - ஒருவரால் 

இல்வாழ்க்கை யென்னு மியல்புடைய வான்சகடம் 

செல்லாது தெற்றிற்று நின்று" (அறநெறி, 163)

என்று கணவனும் மனைவியும் எக்காலத்தும் அன்பு மாறாது இருத்தல் வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

    விருந்தோம்பி, சுற்றத்தாரை ஓம்பி, பெரியோர்களைப் போற்றி, மனைவியைப் பிரிந்து வெளியிடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று அவ்விடங்களில் வாழும் மக்களின் நாகரிகம், தொழில் முதலியவற்றை அறிந்து வருதல் பண்டைய வழக்கம். அவ்வாறு தன் வீட்டுக்கு வந்த விருந்தினரை ஓம்பாமலும் பிறருக்கு உதவியொன்றும் செய்யாமலும் தகுதிமிக்க பெரியோர்களைப் போற்றாமலும் மனைவியைப் பிரிந்து வெளியிடங்கட்கும் வெளிநாடுகட்கும் சென்று அங்குள்ள மக்களின் பழக்கவழக்கம் தொழில் முதலியவற்றைக் கல்லாமலும் தீச்செயல்களை மேற்கொண்டு ஒழுகுவாளாயின் அவனது இல்வாழ்க்கை என்பது இருளுக்கொப்பாகும் என்பதனை,

விருந்து புறத்தரான் வேளாண்மை செய்யான் 

பெருந்தக் கவரையும் பேணான் - பிரிந்துபோய்க் 

கல்லான் கடுவினை மேற்கொண் டொழுகுமேல் 

இல்வாழ்க்கை யென்ப திருள்" (அறநெறி.165)

என்னும் பாடலடிகள் புலப்படுத்துகின்றன.

இல்வாழ்க்கையின் இயல்பு

    இயல்பு என்றால் இலக்கணம் ஆகும். ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் இலக்கணம் உண்டு, அவ்வகையில் இல்வாழ்க்கை என்பதற்கும் ஓர் இயல்பு அமைந்திருத்தல் அதன் இயல்பே ஆகும். காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுடன் வாழ்வதே இல்வாழ்க்கையின் இயல்பாகும். இத்தகைய இல்வாழ்க்கையை நகை, ஈகை, இன்சொல், இகழாமை, பொறுமை, பொறாமையின்மை, பிறன்மனை நயவாமை, சிக்கனம், சினமின்மை, சாந்தம், சந்தேகமின்மை, தியாகம், தொண்டு. விருந்தோம்பல் ஆகிய நற்குணங்கள் பெருமைப்படுத்தும். இதனை முனைப்பாடியார்,

“பிச்சையும் ஐயமும் இட்டுப் பிறன்தாரம் 

நிச்சலும் நோக்காது பொய்ஒரீஇ நிச்சலும் 

கொல்லாமை காத்துக் கொடுத்து உண்டு வாழ்வதே 

இல்வாழ்க்கை என்னும் இயல்பு" (அறநெறி.164) 

என்று கூறியுள்ளார். இவ்வறத்தை இவர் மொழிந்ததற்கான முறைமையை நோக்கும்போது இவையெல்லாம் இல்வாழ்க்கையின் இன்றியமையாப் பண்புகளாக மேலோங்கி இருப்பதைக் காணமுடிகிறது.

இல்லற வாழ்வின் இனிமை

    இல்லற வாழ்வின் இணையற்ற தலைமைப் பண்பாகக் கருதப்படுவது அன்புடைமை ஆகும். பயிலியது கெழீஇய நட்பாகவும் செம்புலப் பெயல்நீர் போல் அன்பு கலந்தததாகவும் பூவிடைப் படினும் யாண்டு கழிந்தது போலக் கருதும் அன்றிலின் மனநிலைக்கு ஒத்ததாகவும் அமையும் அன்பு. இம்மை மாறி மறுமையிலும் தொடர வேண்டுமென விழைந்தனர் சங்க காலத் தலைமக்கள்.| பிறப்பு வேறாகித் தலைவனை மறக்க நேருமே என்ற ஒரே காரணத்திற்காகச் சாதலுக்கு அஞ்சாத யானும் அஞ்சுகிறேன்| என்று ஒரு தலைவி குறிப்பிடுகிறாள். அடிப்படையான மாறாத இத்தகு அன்பு வறுமையிலும் செம்மையை வழங்கவல்லது என்பதனை,

“ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை"  (கலி.முல். கலி, 18:10-1)

என்ற கலித்தொகைப் பாடலில் அன்பில் மலர்ந்த இல்லறத்திற்கு ஒன்றுபட்ட மன உணர்வே முதன்மையானது என்ற அறச்சிந்தனையின் பிழிவைக் காணலாம்.

    சிறந்த அறமென்ற பாராட்டுக்குரியது இல்லறமாகும். அவ்வில்லறமும் பிறரால் குற்றம் கண்டு பழிப்புக்கு ஆளாகாமல் இருத்தலே சிறப்பானதாகும் என்பதை,

“அறம் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் 

பிறன் பழிப்பது இல்ஆயின் நன்று" (குறள், 45)

என்பார் வள்ளுவர்.

    தீய வழிகளில் செல்லாமல் தன்னைத் தற்காத்துக் கொள்ளுதல் ஒவ்வொருவருக்கும் அவசியமாகும். கணவனும் மனைவியும் வீட்டுக்கு வருகிற விருந்தினர்களை உபசரித்தலால் இல்லற வாழ்க்கை மேன்மையுறும். அவ்வகையில் விருந்தினரைப் போற்றி வாழ்வதை,

“வினைகாத்து வந்தவிருந்து ஓம்பிநின்றான் 

மனைவாழ்க்கை நன்று தவத்தின் புனைகோதை 

மெல்லியல் நல்லாளும் நல்லள் விருந்துஓம்பிச் 

சொல் எதிர்சொல்லாள் எனில்" (அறநெறி.157)

என்னும் பாடலடிகள் புலப்படுத்துகின்றன.

இல்லறம் போற்று

இல்லற வாழ்வில் இருந்து வருபவர்கள் மாதவம் செய்த தேவர்களுக்கு ஒப்பானவர்கள். இவர்களுக்கு எளிதில் இறையருள் கைகூடும் என்பதை,

“மனைஉள் இருந்தவர் மாதவர் ஒப்பர்" (திரு. 47)

என்ற திருமூலரின் சிந்தனையை அடியொற்றியதாக,

“இல்லறமல்லது நல்லறமன்று" (கொன்றை.3)

என்பதை அறியமுடிகிறது. இல்லறம் என்பது இல்லாளும் இல்வாழ்வானும் வாழ்க்கைத்துணை நலத்துடன் நடத்திவரும் இல்வாழ்க்கை ஆகும். வாழ்வைப் பெரிதென மதியாது துறந்த துறவிகளுக்கும் வாழ வழியின்றி அவதிப்படுபவருக்கும் உயிர் நீத்தவருக்கும் துணையாக இருந்து அவர்களின் மனிதச் சிறப்பினைக் காப்பதே வளமான இல்லறமாகும். அந்த இல்லறத்திலே ஒப்பற்ற தாய்க்கு அடுத்த நிலையில் வாழ்க்கையை வழிநடத்திச் செல்பவள் மனைவி ஆவாள். மனைவியைப் பொறுத்துத்தான் குடும்பத்தின் வளர்ச்சிநிலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, மனைவி சிறந்தவளாக விளங்க வேண்டும்,

    மனையாள்மீது பழிசுமத்துதல், தன் மனைவியைப் பற்றி மற்றவரிடத்துப் புறங்கூறுதல் போன்ற செயல்கள் எல்லாம் பிற்காலத்தில் தமக்கே தீமை விளைவித்துக் கொள்ளுதலாகும். இதைனை உலகநாதர்,

“மனையாளைக் குற்றமொன்றும் சொல்ல வேண்டாம்

வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்" ( உலக. 5)

என்று கூறி, குடும்பம் சீராக இயங்க வேண்டுமெனின் கணவன், மனைவி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் மாறிமாறிக் குறைகளைக் கூறிக்கொண்டிராமல், குற்றம்பார்க்காமல் விட்டுக்கொடுத்தல் வேண்டும் என்கிற அறத்தை உணர்த்துகிறார்.

இல்லாளுக்கான குணங்கள்

    குடும்பத்தை இன்பமாக விளங்குமாறு செய்ய வல்லவர்கள் பெண்களே. மனைவியே மனைக்குத் தலைவியாவாள். இல்லாள் என்பது மனைவியை மட்டுமே குறிக்கும். இல்லாளுக்கு ஆண்பால் இல்லை. இல்லான் என்பது வறியவன் என்றே பொருள்படும். தன்னையும் காத்துக்கொண்டு தன்னைத் துணையாகக் கொண்ட கணவனையும் காத்து இருவரும் ஒருமனத்தோடு நடத்தும் இல்வாழ்க்கையின் நன்மைமிக்க புகழையும் காத்துச் சோர்வில்லாமல் வாழ்கின்றவளே இல்லத்தரசி என்னும் சிறப்புடையவளாவாள். இவற்றால் இல்லற வாழ்க்கைக்கு முக்கியவிசை ( முiபெ Pin ) போன்றவள் பெண்ணே என்பது தெளிவாகின்றது.

    நற்குணம், நற்செய்கை ஆகியவை இயற்கையாகவே அமையப்பெற்றுக் கணவனது வருவாய்க்கேற்ப வாழ்க்கை நடத்துபவளே நல்ல துணைவியாவாள் என்பதை,

“மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் 

வனத்தக்காள் வாழ்க்கைத் துணை" (குறள், 51)

என்பார் வள்ளுவர்,

    கணவனின் கருத்தறிந்து நடத்தல், நாணம் கொள்ளுதல், எப்பொருளைப் பார்த்தாலும் அப்பொருளைப் பார்த்த மாத்திரத்திலேயே அடைய வேண்டுமென எண்ணாதிருத்தல், கணவனின் விருப்பத்திற்கேற்ப நடத்தல் போன்ற இவை அனைத்தும் இல்லாளுக்கான குணங்கள் என்பதை,

“கொண்டான் குறிப்பு ஒழுகல் கூறிய நாண் உடைமை 

கண்டது கண்டு விழையாமை விண்டு 

வெறுப்பன செய்யாமை வெஃகாமை நீக்கி 

உறுப்போடு உணர்வுடையாள் பெண்" (அறநெறி.158) 

என்று குறிப்பிடுகிறது அறநெறிச்சாரம். இதன்வழி பெண்கள் தங்களுக்கான விருப்பங்களைக் கணவனோடு கலந்தாய்ந்து ஏற்புடையதாகவோ மனம் ஒத்ததாகவோ தாம் எண்ணியது இருக்கும் எனில் அதனைச் செய்தல் வேண்டும் என்கிற அறம் உணர்த்தப்படுகிறது.

கணவன் மனைவி அறம் செய்யும் முறைமை

    கணவனும் மனைவியும் ஆற்றும் இல்லறம் அறம் மிகுந்த நல்லறமாக விளங்க வேண்டும். இருவரும் ஒரு மனமுடையவராய் உலக நன்மை கருதி வாழும் சிறப்பை இல்லறம் காட்டுகின்றது. கோவலனும் கண்ணகியும் புகார் நகரில் வாழ்ந்த இல்லற வாழ்க்கையை இளங்கோவடிகள்,

“வார் ஒலி கூந்தலைப் பேர்இயல் கிழத்தி 

மறப்பு அரும் கேண்மையொடு அறப்பரி சாரமும் 

விருந்து புறந்தரூஉம் பெரும்தண் வாழ்க்கையும் 

வேறுபடு திருவின் வீறுபெறக் காண 

உரிமைச் சுற்றமொடு ஒருதனிப் புணர்க்க" (சிலம்பு.மனையறம்.காதை, 84-88)

என்று விளக்குவர்.

    இரண்டு கண்களும் பார்ப்பது ஒரு பொருளைத்தான். அதுபோல இல்லறத்தில் அன்புமிக்க கணவனும் மனைவியும் தங்களுக்குள் வேற்றுமை தோன்றாமல் தீமை இல்லாத நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்பதை,

“காதல் மனையாளுங் காதலனும் மாறின்றித் 

தீதி லொருகருமஞ் செய்பவே - ஓதுகலை 

எண்ணிரண்டு மொன்றுமதி என்முகத்தாய் நோக்கல்தான் 

கண்ணிரண்டு மொன்றையே காண்" (நன். 6)

எனும் பாடலடிகள் மூலம் அறியலாம்.

முடிவுரை

    வாழ்க்கை குறித்த விளக்கங்களும் அதற்கான நெறிகளும் வாழ்க்கைத்துணை நலம் குறித்தும் அவை இன்ப வாழ்க்கையாக அமைப்பதற்கான வழிகளையும் கூறி இல்வாழ்க்கையின் இயல்பும் இல்லற வாழ்வின் இனிமையையும் தலைமக்கள் இல்லறம் போற்றுகிற முறைமையும் அவர்களுக்கான குணங்களையும் முன்வைக்கிறது.


அடிக்குறிப்புகள்

1.வாழும் நெறி, ஆர், எ. சுப்பிரமணியன், ப.16, பதிப்பு - 2008, சாரதா பதிப்பகம், சென்னை.

2.வாழ்க்கைக் கலை, அ, கி. பரந்தாமன், ப. 11, பதிப்பு - 2013, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

3.திருவள்ளுவரின் செயல்நெறிக் கோட்பாடுகள், என், இ. இராமலிங்கம், ப. 33, பதிப்பு - 2008, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.

4.வாழ்க்கைக் கலை, அ, கி. பரந்தாமன், ப. 14, பதிப்பு - 2013, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

5.வளரும் வள்ளுவம் ஆய்வுக் கோவை, கு. ச. ஆனந்தன், ப. 62, பதிப்பு - 2007, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

6.தவத்திரு அழகரடிகளின் திருக்குறள் அறம் ஓர் ஆய்வு, அ. இளவழகன், ப.164, பதிப்பு - 2010, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை. 

7.தவத்திரு அழகரடிகளின் திருக்குறள் அறம் ஓர் ஆய்வு, அ. இளவழகன், ப.154, பதிப்பு - 2010, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை.


கருத்துகள் இல்லை: