திங்கள், 11 மார்ச், 2024

கொங்கு வட்டார மக்களின் நாட்டுப்புற சடங்கு முறைகள்

 

கொங்கு வட்டார  மக்களின் நாட்டுப்புற சடங்கு முறைகள்

                                                                                                               முனைவர் ரா.ரவி         

முன்னுரை

              வரலாறு, பண்பாடு, பொருளாதாரம், சமுதாயம் ஆகிய பல கூறுகளை உள்ளடக்கிய நிலப்பகுதியை வட்டாரம் என்கிறோம். அந்நிலப்பகுதியில் வாழ்பவர்களை வட்டார மக்கள் என்கின்றனர். வட்டாரத்தில் குடும்பமென்பது ஒரு கட்டுக்கோப்பான நிறுவனமாகச் செயல்படுகிறது. குடும்பமானது கணவன், மனைவி, பிள்ளைகள் மற்றும் பிற உறவு நிலைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. குடும்பத்தின் சமூக மதிப்பினையும், பெருமையினையும் கட்டிக் காக்கின்ற பொறுப்புணர்வு ஒவ்வொரு அங்கத்தினருக்கும் உண்டு. எனவே குடும்பத்தில் தனிப்பட்ட ஒவ்வொருவரின் பண்பும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

கொங்கு நாடு

நாடு என்பது மாநிலங்களையும், மாவட்டங்களையும், வட்டாரங்களையும், வட்டாரத்தின் பேரூர், சிற்றூர் பகுதிகளையும் உள்ளடக்கியது ஆகும். பண்டைத் தமிழகம் சேரர், சோழர், பாண்டியர் என்ற மூவேந்தர்களால் ஆட்சி செய்யப்பட்டது. ஆதலால் தமிழகம் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு மூன்று பிரிவுகளாக இருந்தது. இம்மூன்று பிரிவுகளுடன் கொங்குநாடு, தொண்டைநாடு ஆகிய பகுதிகளும் இருந்தன. கொங்கு நாடு குறித்து மயிலை சீனி. வேங்கடசாமி,

“பாரத நாடு என்னும் வதனத்தில் திலகம் போல் அழகொளிரும் திருநாடு தமிழ்நாடு. அதில் ஒரு பகுதியே கொங்குநாடு. தமிழகத்தின் வரலாறு சங்க காலத்திலிருந்து தொடங்குகிறது (மயிலை சீனி வேங்கடசாமி,1978)

எனவும்,

“துளுநாடு, சேரநாடு, பாண்டியநாடு, சோழநாடு, தொண்டைநாடு, கொங்குநாடு என்றவாறு கூறப் பெறும் ஆறு நாடுகளில் ஒன்றே கொங்கு நாடு” (மயிலை சீனி வேங்கடசாமி,1978) எனவும் கொங்கு நாடு பற்றிக் குறிப்பிடுகிறார்.

கொங்குப் பெயர்க்காரணம்

கொங்கு என்னும் சொல்லிற்குப் பூந்தாது, மணம், தேன், மலர், பொன், மரம், நாடு எனப் பொருள் குறித்து வழங்கப்படுகிறது. கொங்கு என்னும் இச்சொல்லிற்கானப் பொருள் பற்றிச் சங்க கால இலக்கியத் தொடர்கள் குறிப்பிடுகின்றன. அவை,

இயலெறி பொன்னிற் கொங்கு சேர்புறைப்ப

உனிக்களப் பொற்றுகள் போல்   (ந.மு.வேங்கடசாமி நாட்டார்,(உ.ஆ) 2019)

என்னும் அடிகளும்,

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி   (புலியூர் கேசிகன் (உ.ஆ), 1996)

என்னும் அடிகளும் குறிப்பிடுகின்றன. இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள ‘கொங்கு’ என்னும் சொல்லுக்கான பொருள் பொன், பூந்தாது, தேன் எனக் கொள்ளலாம்.

'கொங்குநாடு’ என்ற பெயர் கொங்கு என்னும் சொல்லிலிருந்து உண்டானதாகும். அதனைப் புலவர் குழந்தை,

கொங்கு நாடு என்னும் பெயர் கொங்கு

என்னும் சொல்லிலிருந்து உண்டானது’ (புலவர் குழந்தை, 2010) என்று குறிப்பிடுகிறார்.

கொங்கு நாட்டில் பொன் ( தங்கம் ) மிகுதியாகக் கிடைக்கப் பெற்றது. ஆதலால் கொங்கு நாடு எனப் பெயர் பெற்றது. அது குறித்துப் புலவர் டாக்டர் இரா.வடிவேலன் குறிப்பிடுகையில்,

கொங்கு நாட்டில் பொள் மிகுதியாகக் கிடைத்ததால்

கொங்கு ( பொன் ) நாடு " (புலவர் இரா.வடிவேலன்,2001)

என்கிறார்.

மேற்சுட்டப்பட்ட அறிஞர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பூநாடு, மணநாடு, தேன்நாடு மூன்றும் இணைந்து கொங்கு நாடு எனப் பெயர் பெற்றது என்பதை அறியலாம்.

கொங்கு நாட்டின் எல்லைகள்

ஒரு நாட்டிற்கு எல்லைகள் முக்கியமானதொன்றாகும். அதுபோன்று கொங்கு நாட்டின் எல்லைகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகின்றது. அதன்படி கொங்கு நாட்டின் எல்லைகளைக் காணும்போது தெற்கில் பழனி, மேற்கில் வெள்ளிமலை, வடக்கில் தலைமலை, கிழக்கில் குளித்தலை என்பதை அறியலாம். கொங்கு நாட்டின் எல்லைகளைக் கொங்கு மண்டல சதக வெண்பாக்கள் மூலம் அறியலாம். அவை,

“வடக்குத் தலைமலையம் வைகாவூர் தெற்கு

குடக்கு வெள்ளிப் பொருப்புக் குன்று - கிழக்கு

கழித்தண்டலை தழும் காவிரிகழ் நாடா

குழித்தண் டலையளவே கொங்கு’’      (புலவர் குழந்தை, 2010)

என்ற பாடலடிகளும்,

“வடக்குப் பெரும் பாலை வைகாவூர் தெற்கு

குடக்குப் பொருப்பு வெள்ளிக்குன்று - கிடக்கும்

களித்தண் டலைமேவும் காவிரிசூழ் நாட்டுக்

குளித்தண் டலையளவு கொங்கு’’ (புலவர் குழந்தை, 2010)

என்ற பாடலடியும் குறிப்பிடுகின்றன. இவ்விரு பாடல்களின் துணைகொண்டு கொங்கு நாட்டின் எல்லைகளை

தெற்கெல்லை      -             பழனி அல்லது பொதினிமலை

மேற்கெல்லை       -             வெள்ளிமலை (வெள்ளியங்கிரி)

வடக்கெல்லை      -             தலைமலை பெரும்பாலை மலை

கிழக்கெல்லை      -             குளித்தலை (மதுக்கரை) என வரையறை செய்யலாம்.

கொங்கு நாட்டு மக்களின் வாழ்வியல் நிலை

கொங்கு நாட்டில் வாழும் மக்கள் கொங்கு மக்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இடம்பெயர்ந்துக் கொங்கு நாட்டில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு கொங்கு நாட்டுப் பகுதியில் வாழும் மக்களைக் கொங்கு மக்கள் என்று அழைக்கின்றனர். கொங்கு நாட்டின் சமூக நிலையினைப் பின்வரும் காரணிகளைக் கொண்டு ஆராய முற்படலாம்.

1. தொழில்கள்

2. பொருளாதார நிலை

3. கல்வி

4. திருவிழாக்கள்

5. கோயில்கள்

6. சடங்குகள்

தொழில்கள்

கொங்கு நாடு பெரும்பாலும் மலைகள் நிறைந்த குறிஞ்சி நிலப்பகுதியும், காடுகள் நிறைந்த முல்லை நிலப்பகுதியும் கொண்டதாக விளங்குகிறது. ஆதலால் இங்குள்ள மக்கள் காவல் தொழில், உழவுத்தொழில், கைத்தொழில் போன்ற தொழில்களை முதன்மையாகக் கொண்டு வாழ்ந்தனர் எனலாம்.

காவல் தொழில்

கொங்கு நாட்டில் வாழும் மக்கள் தங்களைக் காத்துக் கொள்வதற்குக் காவல் தொழில் மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் கால்நடைகள், கைத்தொழில், விவசாயம் போன்ற உயிர்நாடியாக விளங்கும் தொழில்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புணர்வும் அப்பகுதி மக்களுக்கு இருந்து வந்தது. ஆதலால் காவல் தொழிலை மேற்கொண்டனர். கொங்கு பகுதியில் வாழ்ந்த மக்கள் வலிமை உடையவர்களாகவும், காவல் தொழில் செய்வதில் சிறப்புப் பெற்றவர்களாகவும் விளங்கினர். இது குறித்துக் குறிப்பிடுகையில்,

“காமிண்டர் என்ற சொல்லே கவுண்டர் என்று ஆகியது என்றும், காமிண்டர் என்பதை’ கா’ என்றும்’ மிண்டர்’ என்றும் பிரித்து’ கா’ என்றால் காவல் தொழிலைச் செய்தல்’ மிண்டர்’ என்றால் வலிமை உடையவர் என்று பொருள் கொண்டு கவுண்டர் என்பதற்குக் காவல் தொழிலைச் செய்வதில் வலிமை உடையவர்” (நா. வையாபுரிப்பிள்ளை, அ.பசுபதி, 2012) என்று குறிப்பிடுகிறார்.

கொங்கு நாட்டு மக்கள் கால்நடைகளை மேய்ப்பதை ஒரு தொழிலாகக் கொண்டிருந்தனர். தமிழகக் கால்நடைகளில் காங்கேயம் காளைகள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. இங்கு வளர்க்கப்படும் காளைகள் அழகாகவும், நீண்ட ஆயுள் கொண்டதாகவும் இருக்கும். இந்தியாவில் மிகப்பெரிய மாட்டுச் சந்தைக் கொங்கு நாட்டில் கூடுகின்றன. இச்சந்தையில் குதிரை மற்றும் வண்டிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. அது குறித்து,

“சித்திரை மாதத்தில் அவிநாசி, கண்ணபுரம் ஆகிய ஊர்களிலும் வைகாசியில் திருப்பூர், அந்தியூர், திருச்செங்கோடு, அத்திக்கோம்பை ஆகிய ஊர்களிலும் ஆடியில் காரையூரிலும் தையில் காரமடை, நங்கவல்லி, கானிப்பட்டி ஆகிய ஊர்களிலும், பங்குனி மாதத்தில் தெள்ளிலையிலும் மாட்டுச் சந்தைகள் நடைபெறும். மேலும் தாராபுரம், பொள்ளாச்சி, உப்பிடமங்கலம், ஒட்டன்சத்திரம் ஆகிய மாட்டுச் சந்தைகளும் புகழ்பெற்றவை" (கு.சேதுராமன், 1988) எனக் குறிப்பிடுகிறது.

உழவுத்தொழில்

கொங்கு நாட்டு மக்கள் பயிர்த்தொழிலை உயிர்த்தொழிலாகக் கருதினர். அதற்குக் காரணம் கொங்கு நாடு குறிஞ்சி நிலப்பகுதிகளும், முல்லை நிலப்பகுதிகளும், மருத நிலப்பகுதிகளும் கொண்டு அமையப் பெற்றிருந்ததேயாகும். ஆதலால் உயிர்வாழத் தேவையான உணவுப் பொருட்களை விளைவித்தனர். அவ்வாறு அவர்கள் விளைவித்த உணவுப்பொருட்கள் திணை அரிசி, வரகு, கம்பு, சோளம் போன்ற உணவு தானியங்கள் ஆகும். இதன் மூலம் கொங்கு நாட்டில் உழவுத் தொழில் சிறப்புற்று விளங்கியிருந்ததை அறியமுடிகிறது. இது குறித்து,

கொங்கு நாட்டில் பெரும்பாலும் மலைகள் உள்ள குறிஞ்சி நிலங்களும் காடுகள் உள்ள முல்லை நிலங்களும் இருந்தன. நீர்வளமும், நிலவளமும் பொருந்திய மருதநிலமும் இருந்தது. குறிஞ்சி நிலங்களில் வாழ்ந்த மக்கள் மலைகளிலும், மலைச்சாரல்களிலும் திணை அரிசியையும் ஐவன நெல் என்னும் மலை நெல்லையும் பயிரிட்டனர். மலைகளில் வளர்ந்த மூங்கில் அரிசியும் சிறிதளவு கிடைத்தது. மூங்கிலரிசியைச் சமைத்து உண்டனர். மலைகளில் மலைத்தேன் கிடைத்தது. மலைச்சாரல்களில் பலா மரங்கள் இருந்தன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைத்தொழில்

கொங்கு மக்கள் காவல், உழவு ஆகிய தொழில்களோடு கைத்தொழிலையும் கொண்டிருந்தனர். கைத்தொழில்களான, நகை செய்தல், ஆடைநெய்தல், அலங்கரித்தல், ஆயுதம் செய்தல் போன்றவற்றைச் செய்துவந்தனர். கொங்குப் பகுதி காடுகள் நிறைந்தப் பகுதியாகும். ஆதலால் காடுகளிலுள்ள யானைகளைத் தந்திரமாகப் பிடித்துப் பழக்குவர். அவற்றின் தந்தங்களை அரசர்களின் சேனைகளுக்கும், வேலைப்பாடுகள் செய்வதற்கும் பயன்படுத்தினர். மேலும் கொங்கு நாட்டுப் பகுதியில் இரும்பு, எஃகு போன்ற தாதுக்கள் கிடைக்கக்கூடிய நிலப்பகுதியும் அமைந்திருந்தது. அந் நிலப்பகுதியிலிருந்து எடுக்கப்படும் இரும்பு, எஃகு போன்று உலோகங்களில் ஆயுதங்கள், சமையற் பாத்திரங்கள் ஆகியவற்றைச் செய்து வந்தனர். இது குறித்துக் கோவைக்கிழார்,

கஞ்சமலை, சேந்தமங்கலம் முதலிய இடங்களில் இரும்புத்தொழில் பழங்காலத்திலிருந்தே நடந்து வந்துள்ளன. பொன்னும் வெள்ளியும் கூடக் கொங்கு நாட்டில் அகப்பட்டதால்’ கொங்குப் பொன்’ என்ற சொல் வழக்கும் பண்டைத் தமிழ் நூல்களில் உண்டு’ (மயிலை சீனி வேங்கடசாமி,1978) என்கிறார்.

பொருளாதார நிலை

கொங்கு வட்டாரம் வறட்சி மிகுந்த பகுதி ஆகும். வானம் பார்த்த பூமியாகவும், மழை பெய்தால் மட்டுமே வேளாண்மைத் தொழில்கள் செய்வதற்கேற்ற நிலப்பகுதியாகவும் விளங்குகின்றன. வேளாண்மைத் தொழில் போன்று இப்பகுதி மக்களுக்கு வருவாயை வழங்கக் கூடியத் தொழில் கால்நடைத் தொழிலாகும். ஆதலால் இங்குச் செய்யப்படும் வேளாண்மைப் பயிர் கால் நடைகளுக்குப் பயன்படக்கூடியவையாகவும் பயிரிடப்படுகின்றன. கொங்கு நாட்டின் பொருளாதார நிலையைக் குறித்து,

கொங்கு நாட்டின் மத்தியில் ஓடுவது வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி. அதற்கு இருபுறங்களிலும் ஓடும் துணைநதிகளில் இன்றியமையாதள பவானி, நொய்யல், அமராவதி. இவற்றின் மூலமாக நீர்ப்பாய்ச்சல் வசதிகளைக் கொங்கு நாட்டு மக்கள் ஏற்படுத்தியிருந்தனர் (கோவைக்கிழார், கோ.ம. இராமச்சந்திரஞ் செட்டியார்,1954) எனக் கூறுகிறார்.

கல்வி நிலை

கொங்கு நாடு கல்வி நிலையில் சிறப்புப் பெற்றதாக விளங்குகிறது. இப்பகுதியில் வாழ்ந்து மடிந்த ஆன்றோர், சான்றோர் மூலம் கல்வியின் சிறப்புக் குறித்து அறிய முடிகின்றது. கல்வியோடு சமயப் பணிகளையும் மக்கட் பணிகளையும் செய்து வந்திருக்கின்றனர். இவர்களது கல்விப் பணிக்குச் சான்றாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த கொங்கு நாட்டுப் புலவர் நா.வையாபுரிப்பிள்ளையைக் குறிப்பிடலாம். இவரது கல்விப் பணி குறித்து,

கோவைப் பேரூருக்குப் போகும் வழியில் உள்ள இன்றைய செல்வபுரம் அன்றைய பள்ளபாளையம் எனும் ஊரில் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் காண விரும்பி அங்கிருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாகவே வாழ்ந்து அங்கே அவர்களுக்குக் கல்விக் தந்து அவர்களை உயர்த்தியதோடு அவர்களுக்காக 1918 இல்’ சன்மார்க்கச் சங்கம்’ ஒன்றை நிறுவியவர் நா.வையாபுரியார்’’ (கோவைக்கிழார், கோ.ம. இராமச்சந்திரஞ் செட்டியார்,1954) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கொங்கு நாட்டுப் பகுதியின் கல்வி நிலை குறித்து, இங்கு வாழ்ந்த சித்தர், சமயாச்சாரியார், மூவேந்தர், குறுநில மள்ளர், வள்ளல், புலவர் மற்றும் பலவகையாள மக்களின் நீதி, வீரம், கொடை, கல்வி, நட்பு, நன்றி மறவாமை, அடக்கமுடைமை, புலவர்களை ஆதரித்த அருமை" (புலவர் நா. வையாபுரிப்பிள்ளை, அ.பசுபதி) பற்றி கருத்து இப்பகுதி மக்களின் கல்விநிலைக்குச் சான்றாகச் சுட்டப்படுகிறது.

திருவிழாக்கள்

கொங்கு நாடு பழம்பெரும் நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இந்தாடு மலைகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் நீர்வளம் அற்ற நிலப்பரப்பைக் கொண்டிருக்கிறது. வானம் பார்த்த பூமியாக இருக்கிறது. இந்நாட்டில் வாழ்பவர்கள் கடுமையான உழைப்பாளிகளாக இருக்கின்றனர். பல்வேறு இனமக்கள் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். ஆதலால் இந்நாட்டில் அவரவர்களுக்குரிய திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றன. இவற்றைத் தவிர அனைத்து இனமக்களுக்கும் உரிய பொது விழாக்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லும் விழாவாகப் பொங்கல் விழா ஆகும். ஏனெனில் உழவர்களில் பெரும்பான்மையினர் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இவ்விழா தவிர கொங்கு வேளாளர்களின் அப்பரமேயர் கோவில், அய்யன்கோவில், மாரியம்மன் கோவில் ஆகிய திருவிழாக்களும் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

கோவில்கள்

‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று முதுமொழி குறிப்பிடும். ஆனால் கொங்கு நாட்டில் எல்லா ஊர்களிலும் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளன. கொங்கு நாட்டில் மிகுதியாக உள்ள மற்றொரு கோவில் ஐயனார் கோவிலாகும்.

கொங்கு நாட்டில் அரிசனங்களின் குடியிருப்புகளில் வீரமாத்தி கோவில் காணப்படுகிறது. மேலும் அண்ணன்மார் கோவில்களும், வேட்டைக்காரன் கோவில்களும் காணப்படுகின்றன. கொங்கு நாட்டில் சிறு தெய்வங்களில் பெண் தெய்வங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. அவ்வாறு வணக்கப்படும் பெண் தெய்வங்களாக மாரியம்மன், காளியம்மன், சக்கம்மாள், ஆலம்மன், பகவதியம்மன், கூத்தனாச்சி, செல்லியம்மன், முத்தாளம்மன், ஓங்காளியம்மன், அங்காளம்மன், செங்கையம்மன், கண்ணாத்தாள், ஆயிரம் கண்ணுடையாள், பிடாரியம்மன், பேச்சியம்மன், கொங்காளம்மன், கன்னிமார், மாகாளி, கங்கம்மா ஆகிய தெய்வங்களின் கோவில்கள் அமைந்துள்ளன.

சடங்குகள்

கொங்கு நாட்டில் வாழும் மக்களின் சடங்குகள் சிறப்புப் பெற்றதாகும். அவற்றில் திருமணம், இறப்பு இவை இரண்டும் செறிவுடைய சடங்குகளாக விளங்குகின்றன. திருமணச் சடங்கில் அருமைச்சீர், திருமணம், மங்கல வாழ்த்து, எழு திங்கள் ஆகிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருக்கும். இறப்புச் சடங்கில் ஈமக்கடன் என்னும் நிகழ்ச்சி இடம்பெறும்.

திருமணச்சடங்கு

'திரு’ என்னும் சொல் அழகு, செல்வம், செம்மை, சிறப்பு முதலிய பொருள்களைக் குறித்து நிற்கின்றன. இச்சொல்லின் பொருள்கள் அனைத்தும் மணமக்களிடையே ஒருசேர அமைந்திருத்தல் வேண்டும். அப்பண்புடைய ஆணும், பெண்ணும் இணையும் விழாவினைத்’ திருமணம்’ என அழைக்கின்றோம். இச்சொல் பண்டை நாளிலிருந்து இன்றுவரை கையாளப்பட்டு வருகிறது. அவ்வாறு நடைபெறும் திருமணத்தில் அருமைச்சீர், திருமணம், மங்கல வாழ்த்து, எழுதிங்கள் ஆகியன இடம்பெறும்.

அருமைச்சீர்

‘அருமைச்சீர்’ என்பதுக் கொங்கு வட்டார மக்களிடையே திருமண நிகழ்ச்சியின்போது இடம் பெறும் சிறப்புக் கூறாக விளங்குகிறது. அருமை என்பது’ மகத்தானது’ அல்லது ஒருயிர்க்கிழமை எனப் பொருள்படும். திருமணத்தை நடத்தி வைப்பவர் சமூகத்தில் பெருமையும், உயர்வும், மேன்மையும், பதினாறு செல்வங்களையும் பெற்றவரே’ அருமைச் சீர் செய்ய தகுதி பெற்றவராகக் கருதப்படுகிறார். அத்தகைய குணப்பண்புகளைப் பெற்றவர் திருமண நிகழ்ச்சியில் முதன்மை பெற்று திருமணத்தை நடத்தி வைப்பார். அந்நிகழ்ச்சி’ அருமைச் சீர்’ என வழங்கப்படுகிறது. இது குறித்து,

திருமணங்கனை நடத்தி வைப்பவர் அருமைக்காரனும், அருமைக்காரியும் ஆவர். அருமை என்பது மகத்தானது அல்லது ஓருயிர்க்கிழமை என வழங்கப்படுகிறது. இந்த அருமை செய்யும் அருமைக்காரர் சமூகத்தில் உயர்ந்த தகுதியைப் பெற்றிருப்பா’’ (கலைக்களஞ்சியம்,1988) எனக் குறிப்பிடுகிறது.

திருமணம்

கொங்கு வட்டார மக்களின் திருமண விழா குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குகிறது. இப்பகுதி மக்கள் திருமணத்தின்போது ஆண், பெண் இருவரின் பிறந்த நேரக் குறிப்பைக் கொண்டு பொருத்தம் பார்த்தல், நிச்சய தாம்பூலம், திருமணத் தாலிக்குப் பொன் எடுத்தல், நெல்போட்டு வைத்தல், விறகு வெட்டல், உப்பு வாங்குதல், திருமண அழைப்பிதழ் வைத்தல், பட்டினிச் சாப்பாடு என்னும் ஒரு சாந்தி இருத்தல், முகூர்த்தக்கால் நடுதல் ஆகியவை நிகழ்த்தப்பெறும். அதன் பின்னர் திருமணம் நடைபெறும்.

பொருத்தம் பார்த்தல்

திருமணம் செய்யப்படவிருக்கின்ற ஆண், பெண் இருவரது குலம், வழிபடும் தெய்வம் ஆகியவை ஒன்றுபட்டிருத்தல் கூடாது. இருவரது பிறந்த தேரக் குறிப்பைக் கொண்டு ஆண் பெண்ணிற்கான பொருத்தம் பார்ப்பர். திருமணப் பொருத்தங்களான ஆயுள் வம்சவிருத்தி, குணம், நேரம், கருத்தொற்றுமை ஆகியன பொருந்தி வருதல் வேண்டும். இவை திருமணத்திற்குக் கடைபிடிக்கப் படுகின்ற முக்கியமான, முதன்மையான பொருத்தங்களாக இருக்கிறது. இவற்றில் பொருத்தம் ஏற்படாவிடில் திருமணம் செய்வதில்லை. இது திருமணத்திற்கான முதல் நிகழ்வாகும்.

 

 

நிச்சயதாம்பூலம்

ஆண், பெண் இருவரது பொருத்த நிமித்தம் பார்த்த பின்னர் அடுத்து நடைபெறுகின்ற நிகழ்வாகும். ஆண் வீட்டாருக்குப் பெண்ணையும், பெண் வீட்டாருக்கு ஆணையும் பிடித்துப்போன பின்னர் நடைபெறுவதாகும். இந்நிகழ்வில் ஆண், பெண் இருவீட்டாரின் சுற்றமும், நட்பும் ஒரு நல்ல நாளில் ஒன்று கூடுவர். இந்நிகழ்வு பெண் வீட்டிலோ அல்லது திருமணம் நடைபெறுகின்ற இடத்திலோ நடைபெறும். இப் பொருத்தம் பார்த்தப் பின்னரும் அல்லது திருமணத்திற்கு முந்தைய நாளிலும் நடைபெறலாம். இந்நிகழ்வில் திருமணத்திற்கான செலவுத் தொகை ஏற்றல், பெண் வீட்டார், ஆணுக்குச் செய்ய வேண்டிய சீர்வரிசை, ஆண்வீட்டார், பெண்வீட்டாருக்குச் செய்ய வேண்டிய சீர்வரிசை, திருமண அழைப்பிதழ் அடித்தல், திருமண நாள் குறித்தல் ஆகியவைக் குறித்துப் பேசி முடிவு செய்யப்படும். அதன் பின்னர் திருமணத்தை உறுதிப்படுத்தும் விதமாக ஆண் பெண்ணிற்கு கைதாண் அணிவிப்பான் அல்லது ஏதாவது ஒரு அணிகலன் அணிவித்தல் நடைபெறும்.

திருமணத் தாலிக்குப் பொன் எடுத்தல்

திருமணத் தாலிக்குப் பொன் எடுத்தல் அவரவர் வசதிகளுக்கேற்பச் செய்யப்படும். இது சாதிக்குச் சாதி, மதத்திற்கு மதம் மாறுபாடு கொண்டிருக்கும். பொதுவாக மணமகன் வீட்டார் பெண்ணிற்கு மங்கலநாணான மாங்கல நாணும், தாலியும் செய்தல் வேண்டும். அதுதான் முறையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மணமகன் வீட்டாரைச் சார்ந்த மூத்தோர்கள் நற்பண்பும் நற்குணமும் கொண்டு நல்வாழ்வு வாழ்வோரை பொன் தாலி செய்வதற்கு அழைத்துச் செல்வர். தற்காலத்தில் வசதி படைத்தோர் தாலி செய்வதற்கு பொற்கொல்லரை மணமகன் வீட்டிற்கு வரவழைத்து செயல்படுவதும் உண்டு. அச்சமயத்தில் பெண் வீட்டாரும் உடன் இருப்பர் அல்லது உடனழைத்துச் செல்வர்.

நெல்போட்டு வைத்தல்

ஆண், பெண் இரு வீட்டாரும் திருமணம் நாள் முடிவான பின்னர் திருமண விருந்திற்குத் தேவையான நெல்லைத் தனியாக எடுத்து வைத்து விடுவர். அந்நெல்லை வேறு உபயோகத்திற்குப் பயன்படுத்தமாட்டார். அந்நெல்லை வேகவைத்து, காயவைத்து உணவிற்குத் தகுந்த பக்குவ நிலையை அடையச் செய்வ ஆனால் இன்றைய காலங்களில் இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. முப்போகம் விளைந்த காலங்களில் இது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. இது எல்லாச் சமூக மக்களிடத்தும் நடைபெறுமா? என்றால் இல்லை. நிலக்கிழார்களாக இருந்து விவசாயத் தொழில் செய்கின்ற சமூக மக்களால் மட்டுமே இம்முறை பின்பற்றப்படுகின்றன.

விறகு வெட்டல்

திருமணத் தேதி முடிவான பின்னர் இருவீட்டாரும் திருமண விருந்திற்குத் தேவையான விறகுகளை வெட்டி எடுத்துக் காய வைப்பர். விறகு வெட்டலுக்கும், திருமணத்திற்கும் தொடர்புண்டா? என்ற வினா எழலாம். ன்றைய நவீன, நாகரீகக்காலங்களில் இது போன்ற செயல்கள் நடைமுறையில் இல்லை. எரிவாயு இணைப்பு இல்லாக் காலங்களில் அனைத்துச் சமூக மக்களும் விறகைச் சமையலுக்காகப் பயன்படுத்தி வந்தனர். திருமணத்திற்கு விறகு வெட்டல் ஒரு நிகழ்வாகச் செய்யப்பட்டன.

உப்பு வாங்குதல்

கொங்கு வட்டார மக்களிடையே திருமணத்திற்கென்று வாங்கப்படும் பொருட்களில் முதலாவதாகவும், முதன்மையானதாகவும் கருதப்படுவது உப்பு வாங்குதல் ஆகும். இதை உப்புச் சர்க்கரை வாங்கப் போதல் எனப் பெயரிட்டு அழைப்பர். காலை நேரத்தில் நல்ல நேரமாகப் பார்த்துப் பெண், ஆண் இருவீட்டாரும் நெருங்கிய உறவினர்களை அழைத்துச் செல்வர். அதிலும் சிறப்பாக மாமன் உறவுமுறையினரை அழைத்து வந்து உப்பு வாங்குதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகின்றனர். இந்நிகழ்வால் மணமக்களின் இல்வாழ்க்கை மங்களமாகவும், செழிப்பாகவும் அமையும் எனக் கருதுகின்றனர். ஆதலால் திருமண நிகழ்வில் இருவீட்டாரும் மணப்பொருட்களில் உப்பை வாங்கிவிட்டு பிற செலவினங்களைச் செய்வதை வழக்கமாய்க் கொண்டுள்ளனர்.

 

திருமண அழைப்பிதழ் வைத்தல்

திருமண அழைப்பிதழ் இருவீட்டார் அழைப்பாக அச்சிடப்படும். முதற் திருமண அழைப்பிதழை அவரவர் குல தெய்வக் கோயிலில் வைத்துச் சிறப்பு ஆராதனைச் செய்வர். அதன் பின்னர் ஆண் வீட்டார், பெண் வீட்டாரிடமும், பெண் வீட்டார் ஆண் வீட்டாரிடமும் திருமண அழைப்பிதழ் வைப்பர். அதன் பின்னர் தாய்மாமன் முறையில் இருப்பவர்களுக்கு முதலில் வெற்றிலை, பாக்கு, பணம் இவற்றுடன் அழைப்பிதழ் வைப்பர். அதன் பிறகு மற்ற உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வைப்பது வழக்கமாகும்.

பட்டினிச்சாப்பாடு

திருமணம் நடைபெறுகின்ற இரண்டு நாட்களுக்கு முன்னர் பட்டினிச் சாப்பாடு என்ற சடங்குமுறை நடைபெறும். மங்கலப் பெண்கள் திருமணம் ஆகவிருக்கிற ஆண், பெண் இவர்களுக்கு எச்சில் படாமல் உணவு சமைத்து வழங்குவர். இச்சடங்கு மணமக்கள் இருசாரார் வீட்டிலும் நடைபெறும். பட்டினிச் சாப்பாட்டை மணமக்கள், சமையல் செய்தவள், அவள் கணவன் ஆகியோர் உண்பர். இந்நிகழ்ச்சி தாலிப் படையல் செய்யும் வரை மேற்குறிப்பிட்டோர் விரதம் இருந்து பட்டினிச்சாப்பாட்டை உண்பர்.

முகூர்த்தக்கால் நடுதல்

பந்தல் போடும் போதும், மணமேடைக்கு அருகிலும் திருமணம் நடைபெறும் வீட்டின் அடையாளமாக முகூர்த்தக்கால் நடுகின்றனர். முகூர்த்தக் காலானது ஓங்கி வளர்ந்த மூங்கில் கம்பு நடப்பட்டு பாலமரக்குச்சியை இணைத்துக் கட்டப்படும். அவ்வாறு நடப்படும் குச்சி முக்கொம்பு இருக்கும்படியானதை வெட்டியெடுத்து வந்து சுத்தம் செய்வர். அதன் பின்னர் ஒரு வெள்ளைத் துணியில் நவதானியம், ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை முடிந்து அக்குச்சியில் கட்டுவர். பின்னர் அது ஈசானிய மூளையில் குழி தோண்டி நடப்படும். அதனை நட்டதிற்குப் பின்னர் நவதானியங்கள் தூவப்படும். முகூர்த்தக்கால் நட்ட பின்னர் மணமகன், மணமகள் ஆகியோர் வீட்டை விட்டு வெளியே செல்லுதல் கூடாது.

மங்கல வாழ்த்து

மங்கல வாழ்த்து என்பது மணமகன் மணமக்களுக்குத் தாலி கட்டும் பொழுதுப் பாடப்படுவதாகும். அதனைத்’ திருப்பூட்டுதல்’ என்று அழைக்கின்றனர். திருமணத்தின்போது அருமைக்காரன் ஒரு வெற்றிலையில் மஞ்சள் தூள் கலந்த அரிசியையும் பூவிதழ்களையும் கலந்து அவருடன் சடங்குகளில் ஈடுபட்டிருக்கும் குடிமகன் என்னும் சவரத்தொழிலாளியிடம் கொடுப்பார். அவர் அதை வாங்கி விநாயகனையும் அருமைக்காரரையும் வணங்கி மங்கல வாழ்த்தினைப் பாடுவார்.

“நல்ல கணபதியை நாம் காலமே தொழுதால்

அல்லல் வினையெல்லாம் அகலுமே சொல்லரிய

தும்பிக்கையோளைத் தொழுதால் வினைதீரும்

நம்பிக்கையுண்டே நமக்கு"  (கு. சேதுராமன், 1988)

என்பதே அப்பாடலாகும்.

எழுதிங்கள்

பெண் திருமணத்திற்கு முன்னர் பூப்பெய்துவாள். அப்பெண்ணிற்கு நிகழ்த்தப்பெறும் சடங்கு நிகழ்ச்சியை எழுதிங்கள் என அழைக்கின்றனர். ஒரு குடும்பத்தலைவி தான் பெற்ற பெண் பருவமடைந்துவிட்டால் அப்பெண்ணின் தாய்மாமன் முறையில் உள்ளவர் சடங்கு செய்வார். அது அவள் பருவமடைந்த அன்றோ அல்லது திருமண நாளிற்கு முன்னரோ செய்ய வேண்டிய சடங்காகும். இச்சடங்கின் மூலமாக அக்குடும்பத்தலைவியின் களங்கமற்ற வாழ்க்கை உறுதிப்படுத்தப்படுகிறது. மாறாக அப்பெண்ணிடம் தவறுகள் இருந்தால் அருமை செய்வோர் அச்சடங்கில் பங்கேற்க மாட்டார்கள். எழுதிங்கள் நிகழ்ச்சியில் பருவமடைந்தப் பெண்ணைப் புளியாக்கைப் போட்டு நீர்வார்ப்பார்கள். இந்தச் சீர் பெற்றவள் இதர எல்லாச் சீர்களிலும் அருமைக்காரிகளுடன் கலந்துக் கொள்ள தகுதிப் பெற்று விளங்குவாள். இவ்வாறு எழுதிங்கள் சீர் நிகழ்த்தப் பெறுகிறது. இந்நிகழ்வு சாதிக்குச் சாதி மாறுபாடு உள்ளது.

ஈமக்கடன்

கொங்கு வட்டாரத்தில் இறந்தோரின் சடங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இறப்பு வீட்டில் பிறந்தகம், புகுந்தகம் என்ற இரு நிலைகளிலும் சடங்குகள் நிகழ்த்தப் பெறுகின்றன. இறப்புச் செய்தியைத் தொலைத்தூரங்களிலுள்ள உறவினர்களுக்குச் சொல்லி விடுகின்றனர். இறப்பு வீட்டில் அவ்வூரிலுள்ள குடிமகன் என்னும் சவரத் தொழிலாளி சடங்கு நிகழ்த்துபவனாக இருக்கிறான். இறப்புச் சடங்காகப் பிணத்திற்கு வாய்க்கட்டு, கைகால் கட்டுக் கட்டுதல், நெருங்கிய உறவினர் மாரடித்துக் கொண்டு அழுதல், வாய்க்கரிசி போடுதல், கோடியெடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்வாறு இறந்தோருக்கு ஈமக்கடன் நிறைவேற்றப்படுகிறது.

முடிவுரை

கொங்கு மக்களைப் பற்றிய தேடல் வரலாறு, பண்பாடு இவற்றின் வாயிலாகக் கிடைக்கின்றன. இவற்றை அறிந்து கொள்வதன் மூலம் எதிர்காலச் சந்ததியினர் தங்கள் வாழ்க்கை முறையை நல்வழியில் அமைத்துக் கொள்வதற்கு ஒரு தூண்டுகோலாய் அமையலாம். கொங்கு வட்டாரத்தில் பல்வேறு இனமக்கள் வசித்தபோதும் அவர்கள் ஒவ்வொரு செயலிலும் சிறப்புப் பெற்றவர்களாக விளங்கினர். அவர்கள் ஆற்றியுள்ள பணிகள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாய் அமைகின்றது. ஆதிகால மனிதன் தன்னைப் பற்றி அறிந்து கொள்ளாதவனாக இருந்திருக்கிறான். அவனிடம் எப்போது தன்னைப் பற்றிய அறிவு வெளிப்பட்டதோ அப்போது நாகரீகம் தோன்றியிருக்கலாம். அதன் வெளிப்பாடாகக் குடும்பம் என்ற நிறுவனம் உருவாகியுள்ளதை அறியமுடிகிறது.

 

மேற்கோள்கள்

1.      மயிலை சீனி வேங்கடசாமி,1978,  கொங்குநாட்டு வரலாறு, இரண்டாம் பதிப்பு, முன்னுரை, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை.

2.      ந.மு.வேங்கடசாமி நாட்டார்,(உ.ஆ) 2019, அகநானூறு, முதல் பதிப்பு, சாரதா பதிப்பகம், இராப்பேட்டை, சென்னை.

3.      புலியூர் கேசிகன் (உ.ஆ), 1996, குறுந்தொகை, முதல் பதிப்பு, சாரதா பதிப்பகம், இராப்பேட்டை, சென்னை.

4.      புலவர் குழந்தை , 2010, கொங்கு நாடு, பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, சென்னை.

5.      புலவர் இரா.வடிவேலன், 2001, சங்ககாலக் கொங்கு நாடு,5/3, கௌடியா மடம் சாலை, இராயப்பேட்டை, சென்னை.

6.      கு. சேதுராமன், 1988, கொங்குச்சீமை காணியாளர்கள், முதல் பதிப்பு, குருகுல பிரிண்டர்ஸ் வேதாரண்யம்.

7.      கோவைக்கிழார், கோ.ம. இராமச்சந்திரஞ் செட்டியார்,1954, கொங்கு நாட்டு வரலாறு, முதல் பதிப்பு, அண்ணாமலை நகர், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.

8.      கோவைக்கிழார், கோ.ம. இராமச்சந்திரஞ் செட்டியார்,1954, கொங்கு நாட்டு வரலாறு, அண்ணாமலை நகர், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம், ப. 125.

9.      அழகப்பன்.ஆறு.1952, நாட்டுப்புறப்பாடல்கள் திறனாய்வு, முதல் பதிப்பு, பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை.

10.   சண்முகசுந்தரம்.சு,1975, நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம், முதல் பதிப்பு, மணிவாசகர் பதிப்பகம், 31,சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை -8.

கருத்துகள் இல்லை: