திருக்குறள் உணர்த்தும் அறக்கோட்பாட்டுச்
சிந்தனைகள்
முனைவர் வீ.உதயகுமார்
முன்னுரை
மனிதனின்
நலத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் ஏற்படுத்திய வாழ்க்கை நெறியே அறம்
எனப்படும். மனித வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் சுட்டுகின்ற வகையில் தமிழில்
இலக்கியங்கள் தோன்றியுள்ளன. மனிதனின் குற்றங்களைப் போக்கிச் செம்மை நெறியில்
வாழ்ந்து இம்மை மறுமை பயன்களை அடைவதற்குச் சான்றோர்கள் அருளிய நல்லுரைகளே
அறக்கருத்துக்கள் ஆகும். அத்தகைய அறக்கருத்துக்களை உணர்த்தும் நூல்களாக
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அமைந்துள்ளன. இந்நூல்களில் அன்பு, அழகு, இரக்கம், அறிவு, ஈகை, உண்மை, ஒழுக்கம், தீமை, துன்பம், நட்பு, நன்றி, பொறுமை, சினம், பொறாமை, விருந்தோம்பல், துன்பம்
முதலானவற்றின் அறக்கருத்துக்களை விளக்கும் வகையில் அறக் கோட்பாடுகள் இடம்
பெற்றுள்ளன.
அறம்
- விளக்கம்
அறம்
என்பது “பொருள் அறுத்துக் கொள்வது, வழியை உண்டாக்குவது என்பதாகும்.
மனித இனத்தின் நலத்திற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் மனித
சமுதாயம் வகுத்துக்கொண்ட ஒழுக்க நெறி அறமாகும். கூடி வாழும் மக்களிடம் காணப்படும்
முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட நெறி முறைகளே அறமாகும்.'1
என்று இர.வரலட்சிமியும், “அறம் என்னும் சொல்
ஆழ்பொருளும் அகல்பொருளும் கொண்ட ஒரு நுட்பமான சொல்”2 என்று அ.அறிவுநம்பியும், “ அறம் என்பதை வாழும் முறை என்றும் அதையொட்டிச்
செயல்படுத்தும் விதிகள் அல்லது நெறிமுறைகள் என்றும் கூறலாம் ”3 என்று செந்தீநடராஜனும் குறிப்பிட்டுள்ளனர்.
ஒருவன்தன்
மனத்தில் குற்றமில்லாதவனாகவும், பொறாமை, ஆசை,
சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கையும் விலக்கி
நல்வழியில் நடப்பதே சிறந்த அறமாகும்
“மனத்துக் கண்மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல
நீர பிற” (குறள்.34)
“அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல்
நான்கும்
இழுக்கா
இயன்றது அறம்” (குறள்.35)
என்று குறட்பா உணர்த்துகிறது.
அறமும்
இன்பமும்
சேர்க்கும்
திறம் அறிந்து தீமையொன்றும் இல்லாமல் சேர்க்கப்பட்ட பொருள் ஒருவனுக்கு
அறத்தையும் இன்பத்தையும் கொடுக்கும்.
“அறம் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
தீது
இன்றி வந்த பொருள் ”. (குறள்.754)
என்று குறட்பா உணர்த்துகிறது.
இளமையில்
அறம்
இளைஞராக
உள்ளவர் பிற்காலத்தில் செய்வோம் என்று கடத்தாமல் இளமை தொட்டு அறம் செய்யவேண்டும்.
அந்த அறம் அவர் இறக்கும் போது இறவாத் துணையாகும்.
"அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது
பொன்றுங்கால்
பொன்றாத்துணை (குறள்.36)
என்று குறட்பா உணர்த்துகிறது.
நேர்மையாளரின்
அறம்
பகை, நட்பு, அயல் என்னும் மூன்றிடத்தும் முறைதவறாது
நடப்பதே நேர்மையாளரின் நல்லறமாகும்.
"தகுதி என ஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு
ஒழுகப்பெறின் ”
(குறள்.111)
என்று குறட்பா உணர்த்துகிறது.
அறிவு
உணர்த்தும் அறம்
அறிவு
என்பது சிந்தித்துச் செயல்படுவதற்குப் பயன்படுகிறது. “எல்லாரிடமும் இருப்பதும் இருக்க வேண்டியதும் அறிவாகும். வாழ்வுக்கு
வேண்டிய அடிப்படைத் தேவைகளில் அறிவு முதன்மையானது”4. பிறிதோர் உயிர்க்கு வந்த துன்பத்தைத் தமக்கு வந்தது போலக் கருதி காப்பாற்றாவிட்டால்
தாம் பெற்ற அறிவினால் பயன் இல்லை.
“அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்
நோய் போல் போற்றாக்கடை ” (குறள்.315)
ஆகவே
அறிவைப்பயன்படுத்தி பிறருக்கு உதவ வேண்டும் என்பதை இக்குறள் வலியுறுத்துகிறது.
அன்பு
செலுத்துதல்
அன்பு
என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியது. கடன் கொடுத்து வாங்க முடியாதது. அன்பு
எல்லாவற்றையும் விடமேலானது.
“மேலோட்டமான உணர்வுகளைவிட உள்ளார்ந்த உணர்வுகளுடன் உறவுகளுடையது
அன்பு"5.
அன்பில்லாதவர்
எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன்படுத்துவர். அன்புடையவரோ தம் உடம்பையும்
பிறர்க்குப் பயன்படுத்துவர்.
"அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் அன்புடையார்
என்பும்
உரியர் பிறர்க்கு ” (குறள்.72)
என்று குறட்பா உணர்த்துகிறது.
உண்மையான
அன்பு
ஒருவரையொருவர்
புரிந்து கொண்ட அன்பே உண்மையான அன்பாகும். அன்புடனே பழையதாய் வந்த நட்பை உடையவர்
நண்பர் தமக்கு அழிவு தரும் செயல்களைச் செய்தாலும் தம் அன்பு நீங்காமல் இருப்பர்.
“அழி வந்தசெய்யிறும் அன்பு அறார் அன்பின்
வழி
வந்த கேண்மை யவர் ” (குறள்.807)
என்று குறட்பா உணர்த்துகிறது.
துணை
நிற்கும் அன்பு
“அன்பு நிரந்தரமானது. அது இருந்தால் மேலும் மேலும் அது வளர்ந்து
கொண்டேபோகும். அன்பிற்கு ஆரம்பம் மட்டுமே உண்டு ஆனால் முடிவு கிடையாது ”.6
அறத்திற்கு மட்டும் அன்பு துணையாகும் என்று சிலர் சொல்வர் ஆனால்
அறியார் தீமையைக்களையவும் அவ்வன்பே துணையாகும்
"அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
மறத்திற்கும்
அஃதே துணை (குறள்.76)
என்று
வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்பும்
நட்பும்
அன்பு
பிறரிடம் விருப்பத்தை உண்டாக்கும் அவ்விருப்பம் எல்லாரிடத்தும் நட்பு என்று
சொல்லப்படும் பெருஞ்சிறப்பைத் தரும்.
“அன்பு ஈனும் ஆர்வம் உடைமை ஆது ஈனும்
நண்பு
என்னும் நாடாச் சிறப்பு " (குறள்.74)
என்று குறட்பா உணர்த்துகிறது.
இன்பம்
ஆசையைக்
கைவிட்டால் அழிவில்லாத மாறாத இன்பத்தைப் பெறலாம் என்று
“ஆரா இயற்கை அவா நீப்பின் அந்நிலையே
பேரா
இயற்கை தரும்,
" (குறள்.370)
வள்ளுவர்
இன்பம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஈகையின்
கடமை
ஏழைகளுக்கு
அவர் வேண்டிய ஒன்றைக் கொடுப்பதே ஈகை என்னும் அறச் செயலாம். மற்றவர்க்குக்
கொடுப்பதெல்லாம் கடன் கொடுக்கும் தன்மை உடையதை
“வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம
குறியெதிர்ப்பை
நீரது உடைத்து ”
(குறள்.221)
என்று இக்குறள் விளக்குகிறது.
உண்மை
பேசுதல்
உண்மை
என்பது " உள்ளது உள்ளபடி, மறைக்காமல் வெளிப்படையாகச் சொல்வது,
செய்வது மற்றும் நடந்து காட்டுவதாகும்.” வாய்மை
என்று சொல்லப்படுவது எவ்வுயிர்க்கும் எவ்வகைத்தீங்கும் இல்லாச் சொற்களைச்
சொல்வதாகும். ஒருவன் தன் நெஞ்சு அறிந்த தொன்றைப் பிறர் அறியவில்லை என்று கருதிப்
பொய் சொல்லக்கூடாது பொய் சொன்னால் அதனை அறிந்த தன் நெஞ்சே தான் செய்த தீவினைக்கு
சான்றாய் நின்று தன்னைக் குற்றஞ்சாட்டித் துன்புறுத்தும்
"வாய்மை எனப்படுவது யாது எனின் யாதொன்றும்
தமை
இலாத சொலல் (குறள்.291)
தன்
நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்
நெஞ்சே தன்னைச்சுடும் ” (குறள்.293)
என்று குறட்பா உணர்த்துகிறது.
ஒருவன்
நெஞ்சாரப் பொய் சொல்லாது நடப்பானானால் அவன் உயர்ந்தோர் உள்ளத்திலெல்லாம்
உள்ளவனாவான். ஒருவன் உள்ளத்தோடும் பொருந்த உண்மையைச் சொல்வானானால் அவன் தவமும்
தானமும் ஒருங்கே செய்பவவரைவிடச் சிறந்தவனாவான்.
“உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள்
எல்லாம் உளன் (குறள்.294)
மனத்தொடு
வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்
செய்வாரின் தலை ”
(குறள்.295)
என்று குறட்பா உணர்த்துகிறது. மேலும், அறிவு
நிறைந்தவர்கள் பிறர் கைப்பொருளை உண்டவரானாலும் கூட எப்பொழுதும் உண்மையையேப்
பேசுவார்கள். “சான்றவர் கையுண்டும் கூறுவர் மெய் " பழமொழி நானூறு குறிப்பிடுகிறது.
ஒழுக்கம்
உலகில்
மனிதன் வாழ்வதற்குத் தேவைப்படும் அறப்பண்புகளில் முதன்மையானது ஒழுக்கமாகும். “ஒழுக்கம் என்கிற சொல் சீலம், நன்னடத்தை, வழி, ஆசாரம், உயர்ச்சி,
முறை, தன்மை, உலகம்
ஓம்பிய நெறி போன்ற பல பொருள்களைத் தருகிறது.”7
அத்தகைய " ஒழுக்கம் ஒருவனை நிச்சயமாக மேன்மை அடையச் செய்யும் ”8.
ஒழுங்கு தான் வலித்தல் விகாரத்தையும் அம் விகுதியையும் பெற்று
ஒழுக்கம் ஆகிறது. ஒழுக்கம் தான் வாழ்க்கைக்கு அழகைத்தருகிறது”9 ஒழுக்கம் குன்றினால் அவனைச் சேர்ந்த எல்லாம் குன்றிவிடும் ஒழுக்கம்
இல்லாதவனிடத்தில் உயர்வு இல்லை ” என்று ஒழுக்கம் பற்றி
பல்வேறு அறிஞர்கள் கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளனர்.
ஒழுக்கத்தின்
சிறப்பு
ஒழுக்கம்
எல்லார்க்கும் சிறப்பைத் தருவதால் அவ்வொழுக்கம் உயிரை விட மேலானதாகப் பேணிக்
காக்கப்படும் என்பதை
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும்
ஓம்பப்படும் ”
(குறள்.131)
என்று
வள்ளுவரும் உயிர்க்கு உறுதுணையாய் அமைவது ஒழுக்கம் ஒன்றே என்று மா. இராசமாணிக்கனாரும்
குறிப்பிட்டுள்ளனர். கற்றலைப் பார்க்கிலும் ஒழுக்கமுடைமை சிறந்தது. "ஓதலில் சிறந்ததன்று ஒழுக்க
முடைமை”
(மு.மொ.கா. 1) என்று முதுமொழிக்காஞ்சி
குறிப்பிடுகிறது.
குற்றம்
பழிச்சொல்லுக்கு
நாணுகிற பெருமக்கள் திணை அளவான சிறு குற்றம் தம்மிடம் வந்தாலும் அதைப்பனையளவு
பெரிதாகக் கருதி குற்றம் செய்யாமல் காத்துக் கொள்வார்கள். செய்யத் தொடங்கும்
எச்செயலையும் நன்கு ஆராய்ந்தே தொடங்கவேண்டும். செய்யத் தொடங்கிய பிறகு ஆராய்ந்து
கொள்வோம் என்று நினைப்பது குற்றம். ஒருவர்க்கு நன்மை செய்யும் போதும் அவரவர்
இயல்பறிந்து பொருத்தமாகச் செய்ய வேண்டும். இயல்பு அறியாமல் செய்தால் குற்றம் உண்டாகும்.
“தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாகக்
கொள்வர்
பழி நாணுபவர் (குறள்.433)
பற்று
உள்ளம் என்னும் இவறு அன்மை ஏற்று உள்ளும்
எண்ணப்படுவது
ஒன்று அன்று (குறள்.438)
எண்ணித்துணிகக்
கருமம் துணிந்தபின்
எண்ணுவம்
என்பது இழுக்கு ”
(குறள்.467)
என்று
திருக்குறள் குற்றம் பற்றியக் கருத்துக்களை வலியுறுத்துகிறது. எப்போதும் தன்னை
உயர்த்திப் புகழ்ந்து பேசுதல் முதலில் தன் குற்றத்தைக் கண்டுநீக்கி, பிறகு பிறருடைய குற்றத்தை ஆராய்கின்றவர்களுக்கு ஒரு குற்றமும் ஏற்படாது.
சினம்
-
விளக்கம்
சினம்
என்பதற்கு கோபம் என்று பொருள். என்பதற்கு “ சினம் ”10
என்று பொருள். “கோபம் தீமைகள் பயப்பது.
துன்பங்கள் பல விளையக் காரணமாய் அமைவது. தன்னைச் சார்ந்த உறவுகளையும் நட்புகளையும்
பிரித்துவிடும் இயல்புடையது '11 என்று
கதிர்முருகு குறிப்பிட்டுள்ளார்.
சினத்தின்
தன்மை
சினத்தை
ஒரு பொருளாக மதித்துக் கைக்கொண்டவன் கெடுவது நிலத்தில் அறைந்தவனுடைய கை தப்பாது
நோவுறுதல் போன்றது. எனவே ஒருவன் தன் மனத்தால் சினத்தை ஒரு போதுங்கருதானாயின் அவன்
நினைத்ததை எல்லாம் ஒருங்கே பெறுவான்.
“சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்து
அறைந்தான் கை பிழையாதற்று (குறள்.310)
உள்ளிய
எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால்
உள்ளான்
வெகுளி எனின் ” (குறள்.309)
என்று சினத்தின் தன்மையை இக்குறட்பா உணர்த்துகிறது.
சினத்தில்
அளவு கடந்தவரை உயிரோடெழுப்பினும் செத்தவரை ஒப்பர். சினத்தை அடியோடு விட்டவர் துறவியரை
ஒப்பர். ஒருவன் சினம் நீங்காதவனாயும், நெஞ்சத்தை
நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாயும் இருந்தால் அவனை வெற்றிக்கொள்ளுதல்
எக்காலத்தவர்க்கும் எவர்க்கும் எளியதாகும்.
“இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார்
துறந்தார் துணை (குறள்.310)
நீங்கான்
வெகுறி நிறை இலன் எஞ்ஞான்றும்
யாங்கணும்
யார்க்கும் எளிது ”
(குறள்.864)
சினத்தால்
வரும் துன்பம்
பலிக்காத
இடத்தில் சினங்கொள்வது தனக்குத்தீங்காகும். பலிக்கும் இடத்திலும் சினத்தைவிடத்
தீயவை வேறு இல்லை. எத்தகையோரிடத்தும் சினங் கொள்ளாமல் அதை மறந்து விடவேண்டும்.
அந்தச் சினத்தால் தீய விளைவுகள் உண்டாகும். முகமலர்ச்சியையும் மன மகிழ்ச்சியையும்
கெடுக்கின்ற சினத்தை விட ஒருவனுக்கு வேறு பகைகள் இல்லை என்பதை
"செல்லா இடத்துச்சினம் தீது செல்விடத்தும்
இல்
இதனின் தீய பிற ”
(குறள்.302)
மறத்தல்
வெகுளியை யார் மாட்டும் தீய
பிறத்
தல் அதனான் வரும் ”
(குறள்.303)
என்று திருக்குறள் விளக்குகிறது. மேலும், பிறர் மேல் கோபப்படுதல் தீமைதரும்
" தீது கதம் தீது”
(சிறு.ப.மூ.51) என்று சிறுபஞ்சமூலமும்
உணர்த்துகிறது.
சினம்
அடக்குதல்
சினத்தை
அடக்கும் தன்மை இன்றியமையாதது. " வெகுளி நுணுக்கும் விறலும் ” (திரி.40 ) ஆகவே அறிவுடைய அரசர் பகைவர் குற்றம்
செய்தவுடன் வெளிப்படையாகக் கோபம் கொள்ளமாட்டார். அவரை வெல்லும் தக்க காலம் வரும்
வரை மனத்துக்குள்ளேயே சினத்தை அடக்குவர்.
“பொன் என அங்கே புறம் வேரார் காலம் பார்த்து
ஊன்
வேர்ப்பார் ஒள்ளியவர் ” (குறள்.487)
எனவே “ நியாயம் வழங்குவதற்கான ஒர் ஆயுதமாகக் கோபத்தைப் பயன்படுத்தினால் அது மேலான
மனித குணம்"12 என்று பழனியப்பன் குறிப்பிட்டுள்ளார்.
சினம்
வராமல் தடுத்தல்
ஒருவன்
தன்னைத் தான் காத்துக் கொள்ள விரும்பினால் தன் மனத்தில் சினம் வராமல் காக்க வேண்டும்.
காக்காவிட்டால் அச்சினம் தன்னையே அழித்துவிடும்.
"தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே
கொல்லும் சினம் ” (குறள்.305)
மதிப்பில்லாத
இடத்தில் மேற்கொள்ளும். கோபம் வறுமையையும், மிகுதியான
செல்வமுடையவன் தன்னிடத்தில் கோபம் வராமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று
" உட்கில் வழிச்சினம் நல்கூர்ந்தன்று ” பெருஞ்சீர்
ஒன்றன் வெகுளியின்மை பொய்" ( மு.மொ.கா.89,62 ) முதுமொழிக் காஞ்சியும் ' எடுத்துரைக்கின்றது.
தீமை
செய்யாதிருத்தல்
ஒருவன்
பிறனுக்குக் கேடு தரும் செயலை மறந்தும் கூட எண்ணக்கூடாது. எண்ணினால்
எண்ணியவனுக்குக் கேடுவரும்.தீ வினைகளைத் தம் நெஞ்சால் நினைப்பதும் குற்றமாகும்.
ஆகையால் பிறன் பொருளை அவனறியாமல் கவர்ந்து கொள்வோம் என்று கருதக் கூடாது.
சிறப்பைத் தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறக்கூடுமாயினும் பிறர்க்குத் தீங்குச்
செய்யாதிருத்தலே குற்றமற்ற பெரியோர் கொள்கையாகும் என்பதை
“
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்
சூழும் சூழ்ந்தல் கேடு (குறள்.205)
உள்ளத்தால்
உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால்
கள்வேம் எனல் (குறள்.282)
சிறப்பு
ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
செய்யாமை
மாசற்றார் கோள் ”
(குறள்.311)
என்று குறட்பா உணர்த்துகிறது.
தியச்
செயல்கள்
பிறருக்குத்
தீங்கானவற்றை முற்பகலில் செய்தால் அதன் விளைவாக அவ்வாறு செய்தவருக்குத் தீயவை
பிற்பகலில் அவர் செய்யாமல் தாமாகவே வந்து சேரும். பிறருக்குக் கேடானவற்றைச்
செய்தால் தனக்கும் கேடு வந்து சம்பவிக்கும்
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல்
தாமே வரும் ” (குறள்.319)
மேலும், மனத்தோடு கூடிய தீயச்செயல்களை
எக்காலத்தவர்க்கும் எவர்க்கும் சிறிதளவு செய்யாதிருத்தல் சிறந்தது.
“எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்
மாணா
செய்யாமை தலை ” (குறள்.317)
என்று குறட்பா உணர்த்துகிறது.
தீயோரைத்
தண்டித்தல்
தமக்குத்
தீமை செய்தவரைத் தண்டித்தல் அவர் நாணுமாறு அவர்க்குப் பெரு நன்மைகளைச் செய்து
அவ்விரண்டையும் மறந்து விட வேண்டும். அதுபோல குழந்தையின் நலங்கருதிய தாய் அதனை
வருத்தியும் அதற்கு பாலூட்டுவது போல நல்லோரும் தீயோரை வருத்தியேனும் நன்னெறிப் படுத்த
வேண்டும்.
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம்
செய்து விடல் ”
(குறள்.314)
என்று குறட்பா உணர்த்துகிறது.
துன்பம்
தருவன
ஒருவனை
அன்புப் பற்றி விரும்பாமல் பொருள் பற்றி விரும்பும் மகளிர் பேசுகின்ற இனியசொல்
அவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும். அதுபோல சூது உள்ள பொருளை அழித்து பொய்யை
மேற்கொள்ளச் செய்து,
இருளையும் கொடுத்து இருமையிலும் துன்பத்தைத்தரும்.
“அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய் தொடியார்
இன்சொல்
இழுக்குத் தரும் ’’ (குறள்.911)
“பொருள் கொடுத்துப் பொய் மேல் கொளீ அருள் கொடுத்தல்
அல்லப்
உழப்பிக்கும் சூது ”
(குறள்.938)
என்று குறட்பா உணர்த்துகிறது.
நட்பு
ஆராய்தல்
நட்புச்
செய்வதற்கு முன்னர் தகுதி உடையவரை நாடியே நட்புச் செய்தல் வேண்டும். “ இன்னாதே பேயோட்டானும் பிரிவு ” ( ப.நா.68 ) ஒரு வனுடைய குணம் குடிப்பிறப்பு, குற்றம் குறைவற்றச்
சுற்றம் ஆகியவற்றை ஆராய்ந்து நட்புச் செய்ய வேண்டும்.
"குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும்
அறிந்து யாக்க நட்பு ” (குறள்.793)
என்று குறட்பா உணர்த்துகிறது.
உண்மையான
நட்பு
உண்மையான
நட்பு “
மனிதன் இன்னொரு மனிதனைப் பற்றி யோசிக்கும் நிலையிலிருந்தே நட்பு தோற்றம்
பெறுகின்றது. இதற்கு விதியோ கட்டளையோ அன்றி மனித உணர்வில் கலந்த உணர்ச்சியே
பொருளாகும். சிரிப்பும், அழுகையும், கோபமும்,
ஆதங்கமும் நம் இரத்தத்தில் கலப்பது போலவே நட்பு என்னும் பண்பும்
இரத்தத்தில் கலந்த உண்மைப் பொருளாகும்”.13 உண்மையான
நட்பினர் என்று சொல்லப்படுபவர் உலையாணிக்கோல் போலத் தம் நண்பர் தீப்புகுவாராயின்
தாமும் அவரோடு தீயினும் புகுவர்.
ஒருவரோடொருவர்
நட்புச்செய்வது தம்முள் கூடிப்பேசி சிரித்து மகிழ்வதற்கு அன்று. நண்பர் வரம்பு
கடந்து ஒழுகுவாராயின் கண்டித்து அறிவுரை கூறித் திருத்துவதற்காகும். பார்த்த போது
முகம் மட்டும் மலர நட்புச் செய்வது சிறந்த நட்பாகாது. அன்பினால் அகமும் மலர
நட்புச் செய்வதே நட்பாகும். அழிவைத் தீமைகளிலிருந்து விலக்க நல்ல வழியில் நடக்கச்
செய்து அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பம் அனுபவிப்பதே நட்பாகும்.
ஒருவனுக்குக்கேடு வந்த போதும் அதன் மூலம் அவன் பெறக் கூடிய நல்லறிவு உண்டு.
அக்கேடு தன் நண்பர்களைத் துல்லியமாய் அளத்தற்குரிய ஓர் அளவு கோலாய் பயன்படுவதை,
"நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேல்
சென்று இடித்தல் பொருட்டு (குறள்.784)
முகம்
நகநட்பது நட்பன்று,
நெஞ்சத்து
அகம்
நக நடபது நட்பு (குறள்.786)
அழிவின்
அவை நீக்கி ஆறு உய்த்து அழிவின் கள்
அல்லல்
உழப்பதாம் நட்பு (குறள்.787)
கேட்டினும்
உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி
அளப்பது ஓர் கோல் ”
(குறள்.796 )
என்று குறட்பா உணர்த்துகிறது.
நன்றி
நன்றி
என்பது ஆபத்துக்காலத்தில் ஒருவர் பிறருக்குச் செய்த நன்மையைக்குறிக்கும். ஒருவன் தினையளவாகிய
சிறிய உதவியையே செய்தானாயினும் அதன் பயனை அறிந்தவர் அதனை பனையளவான பேருதவியாகக்
கருதுவர். ஏனெனில் நெருக்கடியான நேரத்தில் ஒருவன் செய்த உதவி சிறிய தாயிருந்தாலும்
உலகத்தை விட மிகப் பெரியதாக எண்ணுவர். அவ்வாறு எண்ணும் போது ஒருவர் செய்த நன்மையை
மறப்பது அறமாகாது. அவர் செய்த தீமையை அப்பொழுதே மறப்பது அறமாகும்.
“தினைத் துணை நன்றி செயினும் பனைத் துணையாக்
கொள்வர்
பயன் தெரிவர் (குறள்.104)
காலத்தினால்
செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்
தின் மாணப் பெரிது (குறள்.102)
நன்றி
மறப்பது நன்றன்று நன்று அல்லது
அன்றே
மறப்பது நன்று ”
(குறள்.108)
என்று குறட்பா உணர்த்துகிறது.
பகுத்துண்டு
வாழ்தல்
கணவனும்
மனைவியும் வீட்டில் இருந்து தம்மையும் தம்மக்களையும், பொருள்களையும் பேணிக்காத்து வாழ்வதெல்லாம் விருந்தினரைப்பேணி அவருக்குப் பல
வகையிலும் உதவி செய்வதற்காகும். அந்த இல்வாழ்க்கையானது நாள் தோறும் தன்னை நோக்கி
வருகின்ற விருந்தினரை உபசரிக்கும் பொழுது வறுமையால் துன்புற்றுக் கெடுவதில்லை.
விருந்தினரை முதலில் உண்ணச் செய்து பின்பு மிகுந்ததை தான் உண்ணும் இயல்புள்ளவன்
தான் நிலத்தில் விதைக்க வைத்திருந்த விதை நெல்லினை விதைக்கவும் விரும்புவானோ அதையும்
விருந்தினர்க்கு ஆக்குவான்.
"இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி
வேளாண்மை
செய்தற் பொருட்டு (குறள்.81)
விருவிருந்து
வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து
பாழ்படுதல் இன்று (குறள்.83)
வித்தும்
இடல் வேண்டும் கொல்லோ விருந்து ஓம்பி
மிச்சில்
மிசைவான் புலம் ”
(குறள்.85)
என்று குறட்பா உணர்த்துகிறது.
தொகுப்புரை
மனித
வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் சுட்டுகின்ற வகையில் தமிழில் இலக்கியங்கள்
தோன்றியுள்ளன. மனிதனின் குற்றங்களைப் போக்கிச் செம்மைநெறியில் வாழ்ந்து இம்மை
மறுமை பயன்களை அடைவதற்குச் சான்றோர்கள் அருளிய நல்லுரைகளே அறக்கருத்துக்கள் ஆகும்.
பொன்னையேப்
பெறுவதாக இருந்தாலும் பொய்சொல்லாமை, பிறர் பொருளைக்கவராமை,
பெண்களை இழிவாகப் பேசாமை புலால் உண்ணாமை, போன்றவை
அறச்செயல்களாகும். வாழ்நாள்கள் கழிவதற்குமுன்னே பிறர்க்கு உபகாரம் செய்யவேண்டும்.
மிகுதியான அறங்களைச் செய்து அருளுடையவர் ஆக வேண்டும்.
கற்க
வேண்டியவற்றைக் கற்றலும் இல்லறத்தை இனிது நடத்தலும் ஊக்கத்தோடு அருஞ்செயல்கள்
ஆற்றுவதும் நல்லறமாகும். ஆகவே இளைமையிலே அறம் செய்ய வேண்டும்.
சினம்
என்பதற்கு கோபம் என்று பொருள். எத்தகையோரிடத்தும் சினங்கொள்ளாமல் அதைமறந்துவிட
வேண்டும். அந்தச் சினத்தால் தீயவிளைவுகள் உண்டாகும். ஒருவொருக்கொருவர் புரிந்து
கொண்ட உண்மையான நட்பை உடையவரே நண்பர் ஆவார். ஆகவே நண்பர் செய்யும் தவறை சினந்து
சொன்னாலும் அஞ்சக் கூடிய தீயச் செயல்களைச் செய்யமாட்டார். ஒருவன் பிறனுக்குக்
கேடுதரும் செயலை மறந்தும் கூட எண்ணக்கூடாது. எண்ணினால் எண்ணியவனுக்குக் கேடுவரும்.
எனவே பிறனுக்கு நன்மை செய்து நல்லவர்களாக வாழவேண்டும்.
நட்புச்
செய்வதற்கு முன்னர் தகுதி உடையவரை நாடியே நட்புச் செய்தல் வேண்டும். நண்பர் தவறு
செய்வாராயின் கண்டித்து அறிவுரை கூறித் திருத்துவதே உண்மையான அன்பாகும். தீயகுணம்
உடையவரின் நட்பை விட்டு விடவேண்டும். நன்றி என்பது ஆபத்துக்காலத்தில் ஒருவர்
பிறருக்குச் செய்த நன்மையைக் குறிக்கும். நெருக்கடியான நேரத்தில் ஒருவன் செய்த
உதவி சிறியதாயிருந்தாலும் உலகத்தை விடமிகப்பெரியதாக எண்ணுவர்.
அடிக்குறிப்புக்கள்
1.
இரா.வரலட்சுமீ, திரிகடுகமும் திருக்குறளும் ஒப்பீடு,பிரியா பதிப்பகம், சண்முகா நிலையம், வெங்கடேஷ் நகர், விருகை, சென்னை. பதிப்பு-2013,
ப.95.
2.
அ.அறிவுநம்பி, செம்மொழி
இலக்கியச்சிந்தனைகள்,சித்திரம்,
15, கலைவாணிகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி.
பதிப்பு-2009, ப.70.
3.
செந்தீநடராஜன்.க.ஆ, ஜெயசீலி.வ, "யாயும் ஞாயும் யாராகியரும் எம்மனோர்
செம்மல்களும்" புற அகமண அறங்கள், செவ்வியல் இலக்கியங்களில் அறக்கோட்பாடுகள் ஒன்றுபடும் புள்ளிகளும், செம்மொழி
தமிழாய்வு மத்திய நிறுவனம், திருச்சிலுவை கல்லூரி, நாகர்கோவில், குமரிமாவட்டம். பதிப்பு-2014,
ப.23.
4.
நா.ஜெயப்பிராகாஷ், நற்றமிழ்ச்சிந்தனைகளும்
நடைமுறைச்சிந்தனைகளும், நடைமுறை சிந்தனைகளும், கங்காராணி பதிப்பகம், பதிப்பு-2013, ப. 302.
5.
நா.ஜெயப்பிராகாஷ், நற்றமிழ்ச்சிந்தனைகளும்
நடைமுறைச்சிந்தனைகளும், நடைமுறை சிந்தனைகளும், கங்காராணி பதிப்பகம், பதிப்பு-2013, ப.299.
6.
பாரதிகுமார், பெண்ணின் பெருமை, சாரதா பதிப்பகம், கி.4, சாந்தி அடுக்ககம், 3ஸ்ரீ, கிருஷ்ணாபுரம்
தெரு, ராயப்பேட்டை, சென்னை. ப.122.
7.
ஞா. சந்திரன், முன்னேற்றத்தின்
முகவரி, வைகறை பதிப்பகம், திண்டுக்கல், பதிப்பகம்-2013,
ப.48.
8.
பட்டத்தி மைந்தன், இலக்கியத்
திறனாய்வுகள், பாகம் இரண்டு, ஸ்ரீ அலமேலு பதிப்பகம், 3/39, பாரதிதாசன் பதிப்பகம், இராமாபுரம் அஞ்சல், மதுராந்தகம்
தாலுக, காஞ்சிபுரம் மாவட்டம், பதிப்பகம்-2012, ப.48
9.
மா.இராசமாணிக்கனார், தமிழ்க்கலையும் பண்பாடும், சாரதா பதிப்பகம், கி.4, சாந்தி அடுக்ககம், 3ஸ்ரீ, கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை,
சென்னை. பதிப்பு-2013, ப.16.
10.
க்ரியாவின் தற்காலத்தமிழ் அகராதி, விரிவாக்கிய திருத்திய புதிய பதிப்பு, கிரியா, காமராசர் நகர்,
திருவான்மியூர், சென்னை, பதிப்பு-1999, ப.190.
11.
கதிர்முருகு, பிற்கால நீதி
இலக்கிய வரலாறு, நாம் தமிழர் பதிப்பகம்,10/14, தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை, பதிப்பகம்-2010,
ப.152.
12.
எம்.ஏ. பழனியப்பன், வாழ்க்கை அது சுலபம் தான், ஸ்ரீ பெண்பகா பதிப்பகம், சென்னை, பதிப்பு-2009,
ப.127
13.
கு.சிவப்பிரகாசம், புறநானூற்றில்
வாழ்வியல் விழுமியங்கள், அன்னை கிராபிக்ஸ், எண்.68, 100 அடிசாலை, எம்.ஜி.ஆர். நகர், சென்னை. பதிப்பு-2013,
ப.139.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக