திங்கள், 11 மார்ச், 2024

தமிழ் இலக்கியத்தில் மனத்தின் செயல்பாடுகள்

தமிழ் இலக்கியத்தில் மனத்தின் செயல்பாடுகள்

முனைவர் வீ.உதயகுமார்

முன்னுரை

    உடலை எவ்வாறு நலமாக வைத்திருக்க வேண்டுமோ அது போலவே மனத்தையும் நலம் குறையாமல் வைத்திருப்பது வாழ்க்கையின் இன்பத்திற்கும் வெற்றிக்கும் அடிப்படையாகும். மனிதன் தோன்றிய நாள் முதற்கொண்டே இன்பத்தைத் தேடி அலையும் மனப்போக்கு இருந்து வந்திருக்கிறது. ஐம்பொறிகளுக்கும், ஐம்புலன்களுக்கும் ஆதாரமாய் நின்று, உயிரையும் உடலையும் இணைக்கும் கருவியே மனம். நம் செயல்கள் யாவற்றிற்கும் மூலகாரணம் மனமே, இம்மனம் இல்லையென்றால் உலகின்கண் அடையும் எந்த இன்பமும் நாம் பெறுவது அரிது. ஆக இன்பத்திற்கும் துன்பத்திற்கு இருப்பிடமாக மனம் அமைகிறது.

எனவேதான் நமது பெரியார்கள் மனதின் முக்கியம் கருதி நம் வாழ்வின் ஆதாரம் அதுதான் என்பதை வலியுறுத்த, மனம், வாக்கு, காயம் என்று மனதை முதன்மைப்படுத்திச் சொல்லி வைத்தார்கள். மனதின் ஆற்றல் அளவிடற்கரியது, அது அணுசக்தி போன்றது. எப்படி நாம் அதைப் பயன்படுத்துகிறோம் எனபதைப் பொருத்தே நன்மை, தீமை உண்டாகின்றன. ஆகவிஏதான் மாபெரும் கவிஞர் மில்டன் ‘நரகத்தைச் சொர்க்கமாகவும் சொர்க்கத்தை நரகமாகவும் மாற்றுவது மனமே|1 என்று சொன்னார். மனதின் நலத்தைப் பொருத்துத்தான் நமக்கு இன்பமும், துன்பமும் ஏற்படுகின்றன என்பதை இது வலியுறுத்துகிறது.

மனவளம்

மனித வாழ்வின் விளை நிலம் மனம். மனத்தை இதமாக நடத்தக்கூடிய ஆற்றல் பொற்றவனே மனிதன். “மனத்திலிருந்துதான் எண்ணம், சொல், செயல் என்ற முத்தொழிலும் பிறக்கின்றன"4.

மனவளம் என்பது அதிகமான நல்ல எண்ணங்களையே எண்ணுவது. இனிய சொற்களையே பேசுவது. நல்ல செயல்களையே செய்வது அதாவது பிறருக்குத் துன்பம் தராத செயல்களையே செய்வதை,

        “நிறைவு, சொழுமை, மேம்பட்டநிலை

        வளர்ச்சி அல்லது சிறந்த பயனைத் தரக்கூடிய 

        அம்சங்களைத் தன்னுள்ளே கொண்டுள்ள தன்மை"5 

என்று வரியின் மூலம் அறியமுடிகிறது.

மனம் செயல்பாட்டின் பல்வேறு படிநிலைகள்

    ‘பூமியில் காணப்படும் பொருள்கள் எல்லாவற்றிலும் சிறந்தது மனிதப்பிறவியே ஆகும். இப்பிறவியினால் ஆகாத காரியம் ஒன்றுமே இல்லை. “அரிது அரிது மானிடராதலரிது"15 என்று அவ்வை குறிப்பிடுகிறார். இப்பிறவியை எடுத்துள்ள மனிதர்கள் ஒவ்வொருவரிடத்திலும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்று கரணங்கள் அவற்றுள் மனம் சரியாக இயங்காவிட்டால் மற்றவை இரண்டும் பயனைத்தராது. மனத்தினாலேயே மக்கள் பிற உயிர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். என்பதை,

        “மாவும் மாக்களும் ஐயறிவினவே

        மக்கள் தாமே ஆறறிவுயிரே"  (தொல் -1526)

என்று தொல்காப்பியத்திலும் ‘சிறப்பின் பாலார் மக்கள் மருளுடை மாக்கள்|16என்று மணிமேகலையும்‘நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந் தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று..|17 என்று குறுந்தொகையும் அவற்றிக்கு எழுதிய உரையாசிரியர் குறிப்பாலும் அறியமுடிகிறது. 

மனத்தினால் தான் மக்கள் உயர்நிலையையும் தாழ்நிலையையும் அடைகின்றனர். இதனை “மனத்தனையர் மக்கள் என்பார்"18 என்று நாலடியார் குறிப்பிடுகிறது. 

உட்கருவி

மக்கள், தொழில் செய்வதற்கு உதவி புரியும் கருவிகள் இரண்டு வகையாகும். அவை கை, கால் முதலிய புறக்கருவியும் நினைத்தல், அறிதல் முதலியவற்றைச் செய்யும் அகக்கருவியும் ஆகும்.

அகக்கருவி நான்கு வகைப்படும் எண்ணல், அறிதல், மீட்டும் எண்ணல், வன்மை அடைதல் என்பனவாகும். இவற்றை வடநூலார் முறையே “மனம், புத்தி, சித்தம், அகங்காரம்"19 எனக் குறிப்பிடுகிறார்.

மனம் ஒன்றே செய் தொழிலின் சிறிது வேறுபாட்டால் நான்கு பெயர்களையும் பெற்றுள்ளது. இவ்வாறு சிறிது வேறுபடும் மன நிலையை உணர்ந்து நம் முன்னோர்கள் தனித்தனி பெயர்கள் வைத்துள்ளனர். இதனால் மனம் ஒன்றே என்பதும் சிறிது வேறுபடும் உண்மையால் வேறு பெயர்களைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மனப் பண்பு

“மனம் செயல்படுகின்ற விதத்தில் குணம் பலவாகத் தோன்றுகின்றன. அவை தெளிவாக இருத்தல், வேகமாக இருத்தல், அறியாதிருத்தல்"24 என மனத்தின் பண்புகளை மூன்று வகையாகப் பாகுபடுத்துகிறார்.

தெளிவாக இருத்தல்

எடுத்துக்கொண்ட பொருளை மனம் நன்றாக அறிதலோடு இன்பத்தை உண்டாக்கும்  அமைதியுடன் இருக்கும் நிலையாகும். இந்நிலையை வட நூலார் சாந்தம் என வழங்குவர்.

வேகமாக இருத்தல்

மனம் எடுத்துக்கொண்ட செயலில் வேகமாக செயல்படும் நிலையாகும். இதனை வட நூலார் இராசதம் என அழைப்பர்.

அறியாதிருத்தல்

பொருளை நன்றாக அறியாமல் மெதுவாக மனம் செயல்படும் நிலையாகும். இதனை வடநூலார் தாமதம் என குறிப்பிடுவர்.

மேலே குறிப்பிட்ட மூன்று குணங்களும் மக்களுக்கு மாறிக்கொண்டே இருக்கும் என்ற நிலையை ‘முக்குண வசத்தான் முறை மறந்து உரைக்கும்|25என இலக்கணக்கொத்து குறிப்பிடுகிறது. குணம், பண்பு, தன்மை என்பன ஒரு பொருட் கிளவி ஆகும்.

குணங்களின் பயன்

சாந்த குணத்தினால் வாய்மை, மேன்மை, தவம் முதலியன உண்டாகும். இராஜத குணத்தினால் கல்வி, கேள்வி, ஊக்கம் முதலியன தோன்றும். தாமத குணத்தினால் நெடுந்துயில், தீயநடை  முதலியன உண்டாகும். 

ஒவ்வொருவரிடத்திலும் முக் குணங்களும் மாறிக் கொண்டே இருந்த போதிலும் பழக்கத்தால் பெரும்பாலும் நன்மை உண்டாக்கக் கூடிய குணங்களைப் பெற முயற்சி செய்ய வேண்டும். இற்கையிலேயே நற்குணங்கள் பொருந்தி இருந்த போதிலும் செயற்கையால் மாறுபாடு எய்துவதுண்டு. பழக்கத்தால் தீய குணமுடையாரும் நற்குணம் அடைவதும் உண்டு என்று சித்தாந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை,‘குன்றன்னாரைச் சாரின் குன்றிய சீர்மையராயினும் மாண்புடையராக இலங்குவர்|26 என நாலடியார் தெரிவிப்பதோடு கல்வி கேள்வி முதலிய அதிகாரங்களோடு நிறுத்தாமல் நல்லினஞ்சார்தல், பெரியாரைத் துணைக்கோடல் என்னும் அதிகாரங்களைச் சேர வைத்திருத்தலினால் நற் குணங்களைப் பெறமுடியும் என்று எடுத்துரைக்கிறது.

மழைத் தண்ணீர் ஒரே விதமாக எங்கும் பெய்த போதிலும் செம்மண் பூமியில் அம் மண்ணிறத்தையும் ஆற்றினிடத்து ஆற்றுநீர்த்தன்மையையும் கடல் நீரிடத்து கடல் நீர்த்தன்மையையும் அடைந்து அவற்றோடு ஒன்று பட்டு விளங்குவதைப்போல் மனிதர்களும் சேர்ந்தாருடைய குணங்களைப் பெற்று விளங்குவர் என்பதை,

        “கடல்சார்ந்தும் இன்னீர்ப் பிறக்கும் மலைசார்ந்தும் 

        உப்புண்டு உவரி பிறத்தலால் தத்தம் 

        இனத்தனையர் அல்லர் எறி கடல்தண் சேர்ப்ப

        மனத்தனையர் மக்கள்என் பார்" (நாளடி-245)

என்ற நாளடியார் பாடல் வரி உணர்த்துகிறது. செயற்கையால் மனம் மாறுபடாத தன்மை கற்றுத் தேர்ந்த பேரறிவையுடைய சிலர்க்கு மாத்திரம் பொருந்துவதாலும் அறிவுடையவர்களிலும் பலர் சார்ந்தவர்களுடைய குணத்தையே அடைவதாலும் இவை அனைவருக்கும் பொருந்துவதாக்க் கருதப்படுகிறது.

பெண்களின் மனம்

பெண் மனம் ஒன்றில் நிலைபெறாமல் வேறுபட்டுக் கொண்டே இருக்கும். என்பதை,

“மறங்கிளரு மதர்நெடுங் கண்ணியர்தம் மனமொன்றிற்

    செறிந்துமுடன் பிரியுமெனத் தெளிவுடையோர் செப்புகலால்"27 என அதிவீரராம பாண்டியரும்

        “தெரிவையர் மனமெனக் கறங்கெனத் திரிந்தான்"28 எனக் கம்பரும்

“மகளிர் மனம்போல வேறுபடம்"29 எனத் திருவள்ளுவரும்

“கள்ளுற்ற கடந்தற் கனங்குழையார் கருத்து"30 என்று கச்சியப்பரும்

    “மனமொழி மெய்யொருங்கு மங்கையா ரியர்"31 எனச் சிவப்பிரகாச சுவாமிகளும் குறிப்பிடுகின்றனர்.

    பெண்பால் புலவரின் ஒருவரான ஒளவைப் பிராட்டியாரும்  ‘தையல் சொற்கேளேல் 32 எனக் குறிப்பிட்டுள்ளார்.

பெண் மக்கள் கணவனுடன் வாழவேண்டிய முறை கூறுமிடத்து, மந்திரிபோலத் தன் கணவனுக்குப் புத்தி சொல்லும் ஆற்றல் அமைந்திருக்கவேண்டும். தொல்காப்பியம் முதலிய அரும் பெரும் நூல்களில் குணம், நலன், கல்வி தலைவிக்கும் ஒத்து இருக்க வேண்டும் என்று இலக்கணம் கூறுகிறது. ‘உருவோடு அறிவுடையாள் இல்வாழ்க்கைப் பெண்ணென்பாள் 33என நான்மணிக்கடிகை இயற்றிய விளம்பிநாகனார் மொழிகிறார்.  ‘பெருந் தடங்கட் பிறைநுத லார்க் கெலாம், பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் 34 என கம்பர் உரைக்கிறார். எனவே,பெண்பாலரும் ஆடவர்களைப் போலச் சிறந்த மனத்துடன் விளங்குவர் என்பதை மேற்கண்ட புலவர்களின் வாயிலாக அறியலாம். 

    ஆடவர்களைப் போலப் பெண்களும் அறிவுடையார், அறிவு இலர் என்று இரு பிரிவாகப் பிரித்துக் கொள்ளுதலே சாலச்சிறந்தது. ‘பெண்ணின் மனம் ஒருவழி நில்லாது| என்றது சிறு இன்பம் காரணமாகக் கற்பைத் துறந்த பெண்மக்களை மட்டும் குறிக்கும். இதனால், பெண்கள் நிலைத்த மனமுடையவர், நிலையில்லா மனமுடையவர் என இரு வகைப்படுவர் என்பதும், பொது மகளிரையே இலக்கியங்களில் இழிவாகக் கூறப்பட்டது என்பதும் ஆடவர்களைப்போலப் பெண்களிலும் சிறந்த பெண்கள் உண்டு என்பது அறியமுடிகிறது.

மனப் பயிற்சி

உடல் நூல் வல்லுநர், உடல் பயிற்சிபெறுவதனால் உறுதியுறும் என்று உரைப்பதைப் போலவே, உள நூல் வல்லுநர் உளம் பயிற்சிசெய்வதனால் உரமடையும் என்று குறிப்பிடுகின்றனர்.

உடல்பயிற்சி செய்து உடல் வலிமை பெற்ற ஒருவன் பல மக்கள் கூடி அசைக்கமுடியாத பார முள்ள கருங்கல் அல்லது யானையை எளிதாகத் தன் உடலில் ஏற்றி விளையாட்டாக வேடிக்கை காட்டுகின்றான். இதைப் பார்த்த பலரும் வியப்புற்றனர். ஆனால், அவன் உடல் பயிற்சி பெறும் போது முதன் முதலில் யானையையோ, கருங்கல்லையோ தூக்கி இருக்க முடியாது. முறையாகச் சிறிது சிறிது கனமுள்ள பொருள்களைத் தூக்கிப் பின்னர் தான் யானையை எளிதில் உடலில் ஏற்ற ஆற்றல் பெறுகிறான். இதே போல சிறிது சிறிதாக ஒவ்வொரு பொருளின் தன்மையையும் எண்ணி எண்ணி மனமும் உரம் எய்துதல் வேண்டும். 

ஆகாரங் கொண்டு உடல் வளர்ச்சி அடைவது போல, ஆராயும் விஷயங்களைக் கொண்டு தான் மனம் வளர்ச்சி அடைய முடியும். உடல், உணவு குறைந்தாலோ, கூடினாலோ துன்புறுதல்போல, மனமும் ஆராய்தல் கூடினாலும் குறைந்தாலும் வருந்தும் என்பதை ‘மிகினுங் குறையினும் நோய் செய்யும்| என்ற திருக்குறளுக்கு ‘மன மொழி மெய்களால் செய்யுந் தொழில்களை அவை வருந்துதற்கு முன்னே யொழிதல் இவை இங்ஙனமன்றி செய்யின் அவை தத்தம் நிலையினில்லாவாய் வருத்தும்| என்பதை விசேட உரையில் பரிமேலழகர் விளக்குகிறார்.

மனத்தின் வேகம்

‘வேகமாகச் செல்லும் தன்மையுடையது காற்று. ஆனால் அதைவிட மிக வேகமாக செல்லும் அற்றல் உடையது மனம். ‘செலவு மிகுந்த சிந்தையினில்|35 எனச் சேக்கிழார் குறிப்பிடுகிறார். 

மிகவும் வேகமாக வருதலுக்கு மனத்தினையே பல நூலாசிரியரும் உவமித்திருக்கின்றனர். அவற்றுள் சில

மனத்தினுங் கடிதுவந்து மருந்துகள் பிசைந்து ஆர்த்தார் - பெரியபுராணம்

மனத்தினும் மூடுகும் - ஞானவசிட்டம்

மனக்குல மிடைந்து பின்காட்ட விசைகொண்டாடும் - அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்

மனத்தினுங் கடிது செல்வேன் - இராமாயணம்

திக்கொடு திகாந்தமும் மனவேக மென்னவே சென்றோடி யாடி வருவீர் - தாயுமானார்

கடல், மலை முதலிய இடங்கள் இடையிட்டு இருந்தாலும் பல காலத்திற்கு அப்பால் இருந்தாலும் பல ஆண்டுகள் கடந்தாலும் நாம் பார்த்து பழகிய பொருளினிடத்து மிகவும் விரைவாகச் சென்று காணும் தன்மை மனத்திற்கே உண்டு.

நாம் நடந்து செல்வதுபோலாச் செல்லுந் தன்மை கிடையாது. முன் கண்டு, கேட்டறிந்துள்ள பாவனைகள் மனத்தில் தங்கியிருக்கின்றன. அவற்றை நினைத்த மாத்திரத்தில் மனம் கண்முன் தோன்றுகிறது. நினைக்கும்போது எதிரில் இருக்கும் பொருள்கள் தெரிவதில்லை. முன்பு பார்த்த பொருள்தான் மனக்கண்முன் தெரிகின்றன. ஆனால் மனம் வேறிடத்திற்குச் சென்றதாக எண்ணுகிறோம். 

கற்பனை

கற்பனை என்பது மனம் உணர்வால் ஒன்றனைப் பொருந்துமாறு அமைத்து மகிழச் செய்யும் தன்மையாகும். கற்பனையும் கல்வி அறிவும் இவ்விரண்டும் முடையாராலே மக்கள் ஏற்று மகிழ அழகு படுத்துகின்றவை எவையோ அவையே சிறப்பானவாகக் கொள்ளப்படும். இத்திறனால் மக்கள் வளர வளர உலகில் முன்னேற்றத்தினையும் நன்மையையும் அடைந்து வருகின்றார்கள்.  இத்திறன் மனத்திற்கு இல்லையானால் புதிய மாறுதலை உலகில் காண முடியாது.

தூக்கணங் குறிவியால் கட்டப்படும் கூடு பார்வைக்கு வெகு அழகாகக் காணப்படுகின்றது. பல ஆண்டிற்கு முன் அமைத்தபடிதான் தூக்கணங் குருவி இன்றும் கூடு கட்டுகின்றது. மனிதனால் சென்ற ஆண்டில் கட்டின வீட்டைவிட இந்த ஆண்டு கட்டும் வீடு பல நன்மைகளுடன் மாறுதலாகக் காணப்படுகின்றது. ஆகையால் கற்பனை என்ற ஆற்றல் மனிதனின் மனத்தில் இயல்பாக உள்ள ஒரு தன்மையாகும்.

மனங் கலங்காமை

மனங் கலங்காமை என்பது மனம் துன்பங்களால் வருந்தாதிருத்தல் என்று பொருள்படும். இதனை வள்ளுவர் இடுக்கண் அழியாமை என்று புகழ்வர்.

இவ்வுலகின் கண் உள்ள உழவனாயினும் உயர் அரசனாயினும் ஆணாயினும் பெண்ணாயினும் சில நேரங்களில் மனங் கலங்குவதுண்டு. அவ்வாறு கலக்கங்கொண்டால் காரியங்கெடுவதுடன் பகையும் உண்டாகும். தடுமாற்றத்தால் வாழ்க்கையே தாழ்நிலையடையும் ஆகையால் மனங் கலங்கா திருத்தல் ஆனைவருக்கும் நன்மையுடையதாகும். 

எடுத்த காரியம் அழிவு பெறுதலாலே பலர் தாமே இறந்துபட்டோர் ஆவர். இவர்கள் மனம் ஆற்றலற்று மனங்கலங்கியவர் என்பது உண்மை. இவற்றையெல்லாம் ஆய்ந்துணர்ந்த ‘வள்ளுவர்|  முடிவும் இடையூறும் பயனும் பாரத்துச் செய்ய வேண்டும் என்றும் 

        “வெள்ளத்தனைய இடும்பை அறிவுடையான் 

        உள்ளத்தின் உள்ளக் கெடும்" (குறள்.622)

என்று வள்ளுவர் கூறுகிறார். ஆகவே, ஒவ்வொருவரும் மனங்கலங்காதிருத்தல் வேண்டும். பெரும்பாலும் வறுமை, மெய்வருத்தம், ஊழ்வினை ஆகிய இவை மனத்தைத் கலக்குந் தன்மையுடையன இவற்றாலும் மனத் தளர்ச்சி அடையாதிருத்தல் மேன்மைதரும். மேலே கூறியவற்றுள் கலங்கச் செய்யுமிடத்து மனங்கலங்காதிருத்தல் எவ்வாறு இயலும் என்ற ஐயம் எழும். அதற்கு ‘வள்ளுவர்| மனங்கலங்காதிருத்தலோடு எடுத்த காரியத்தை இடையூறு இன்றி இனிது முடிக்கலாம் என்பதை விளக்கியுள்ளார். துன்பம் உண்டான இடத்தில் மனங்கலங்காமல் மகிழ்ச்சியடைய வேண்டும். அவ்வாறு மகிழ்ச்சியாகிய மன எழுச்சியால் உண்டான துன்பம் நீங்குவதோடு எடுத்துக்கொண்ட காரியமும் முடியும். இதனை,

        “இடுக்கண் வருங்கால் நகுக அதனை 

        அடுத்தூர்வது அஃதொப்ப தில்| (குறள்.621)

என்ற குறட்பாவில் விளக்குகிறார்.

இன்னுல் இன்னாமை (துன்பம்) வருதல் இயல்பு எனினும் துன்பத்தையே இன்பமாக மாற்றி மனத்தின் எண்ணினால் எடுத்த காரியம் இனிது முடிவதுடன் பகைவரும் விரும்பக் கூடிய சிறப்புண்டாகும் என்னும் உயரிய வழியைக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, ஒவ்வொருவரும் மனங்கலங்காதிருப்பதோடு துன்பத்தையே இன்பமாகக் கருதி வாழக் கற்றுக் கொள்ளின் வாழ்விலே முடியாத காரியம் எதுவும் இல்லை என்றார் வள்ளுவர்.

மன அடக்கம்

அடக்கமும் அமைதியும் உற்று நோக்கின் வேறு வேறாகும் என்பது தெரியவரும். மனம் வெகு வேகமாகச் செல்லும் தன்மையுடையது. இத் தன்மையுடைய மனத்தை அடக்கியாளுதலே சிறப்புடையது. நீராவியின் ஆற்றலை அடக்கிக் குறித்த இடத்தில் செலுத்துவதால் பெரும் பயனடைதல் போல, மனாற்றலைச் சிதறவிடாமல் பெரும்பயன் விளைக்கும் நல்வழியில் செலுத்தவும் பிறர் குற்றம் கண்டு சீற்றமின்றி இருக்கவும் பழக்கஞ் செய்தலே மன அடக்கம் ஆகும். முதலில் மனத்தைச் சிறிது சிறிதாகப் பழக்கிக்கொண்டுவரின் பின்னர் அமைதியின் தன்மை அடைதலும் கூடும். வள்ளுவர் அடக்கமுடைமை என்ற அதிகாரத்தில் முன்னர் பொதுவாக அடக்கத்தின் பெருமையையும் முதலில் மெய்யடக்கத்தையும் இரண்டாவதாக மொழியடக்கத்தையும் கூறி இறுதியில் மனவடக்கத்தையும் கூறினார்.

“கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி 

அறம்பார்க்கும் மாற்றி நுழைந்து" (குறள்.130)

என்ற குறளில் வள்ளுவர், மனத்தின்கண் கோபம் வராமல் பாதுகாக்கும் மனவடக்கம் உள்ளவனை அறந்தானே சென்றடையும் என்ற மேன்மையினையும் வெளிப்படுத்தினார். இதனை,

        “நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்

        வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்ததனை

        உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்

        துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்" (நாளடி.64)

என்ற பாடல் எடுத்தியம்புகிறது. மன அடக்கம் உடையானை அறம் தானே அடையும் என்பதும் மன வடக்கத்தின் ஆற்றல் வேண்டிய இடத்துச் சிறக்கச் செய்தலை விளைக்கும் என்பதும் தெரியவருகின்றன.

அமைதியின் மேன்மை

மன அமைதி யாவர்க்கும் வருவதன்று. பொருள்களின் தன்மையை உள்ளவாறு அறிந்து உண்மையாய் நடப்பவருக்கே வரும் குணமாகும்.

சொற்களின் தன்மையை ஆராயாமல் வாய்க்கு வந்தபடி பேசுவோர், சத்தமாகப் பேசுவதையும் மிகுந்த நுட்பமுடையவர் மெல்ல அமைதியாகச் சில சொற்களால் தெளிவாக விளக்குவதையும் இயல்பாகக் காணமுடிகிறது.

அமைதி என்ற பெயரால் தூங்குவதையோ, மன ஆற்றல் இன்மையையோ குறிக்காது. எண்ணாற்றல்  இருந்தாலும் தெளிவுடன் ஆறுதலாய் மனம் இருத்தலை மன அமைதி என்று கூறப்படும். இவ் அமைதியினைத் தான்,

‘போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து

என்ற பொன்மொழியாகிய நன் மொழியால் வரைந்துள்ளார்கள். உள்ளத்தால் உழைத்து உழைப்பின் மிகுதியால் மனங்கலங்கினால் பயனே மாறிவிடும். ஆகையால் முழு முயற்சி செய்து கலங்காமல் அமைதியாய்ப் பழகவேண்டும் என்பதே அமையின் இலக்கணமாகும். நினைப்பின் முயற்சியின்றி இம் மொழியை உபயோகிப்போர் சோம்பித்திரிவோராவர். இவ் அமைதியினைத் தான்,


“யாண்டு பலவாக, நரையில ஆகுதல்

யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்

மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்

யான் கண்ட அனையர், இளையரும், வேந்தனும்

அல்லவை செய்யான், காக்க அதன்தலை

ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர் யான் வாழும் ஊரே" (புறம்.191)

என்ற புறநானூற்றுச் செய்யுள் மூலம் அறியமுடிகிறது.

இவ் அமைதியின் மேன்மையாலேயே அரிய பொருளின் இயல்பைக் காண வழியுண்டாகும், இவ் வழியை விரும்பியார்க்கு உலகில் இன்பம் இடையறாது சுரக்கும் என்பர்.

மன அழுக்கு

மன அழுக்கு என்பது ஒருவரின் செல்வம், பெருமை, செல்வாக்கு ஆகியவை தனக்கு இல்லை என்ற பொறாமையாகும். பொறாமையால் மனம் தவறான வழியில் செல்லுதலால் அழுக்காறு என்றும் மனம் குற்றம் எய்துதலால் மன அழுக்கு என்றும் கூறப்படுகிறது.

இவ் அழுக்காறு உடையான் தன் முற்போக்கையும் முயற்சியையும் வீணாக்கி வாழ்நாளைக் கெடுத்தலோடு மட்டுமின்றி சுற்றத்தாரையும் உண்பதும் உடுப்பதும் இன்றி கெடுக்கும் என்பதை வள்ளுவர்,

        “கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

        உண்பதூஉ மின்றிக் கெடும்" (குறள்.166)

ஒருவன் தன் முயற்சியால் தன் குடும்பத்தாரைக் காக்க வல்லவனாய் இருப்பதோடு, உலகியலில் பிறரும் உவகையுடன் எதிர் கொண்டு அழைக்கும் ஏற்றத்துடன் இயைந்து வாழ வேண்டிய இயல்பும் இணைந்திருக்க வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும். இதனைப் பெறப் பொருமை, விடாமுயற்சி ஆகியவை வேண்டப்படுகின்றன.

இவ் அழுக்காறுடையான் ஒரு நாளும் முன்னேற்றம் அடைவதில்லை என்பதனை வள்ளுவர்,

“அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

ஒழுக்கம் இலான்கண் உயர்வு" (குறள்.135)

என்ற குறல் மூலம், பொறாமை உடையவனிடம் வளர்ச்சி இருக்காது அதுபோல், ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இருக்காது எனபதை வள்ளுவர் வெளிப்படுத்துகிறார்.

பிறர் செல்வத்தைக் கண்டு பொறாமைப்படாதே பிறர் கற்றுள்ள கல்வியைப் பார்த்துப் பொறாமைப்படு என்று கூறியுள்ளாரே எனின், அவ்விடத்தும் கல்வியைப் பார்த்துப் பொறாமை அடைவதுடன் இருக்கச் சொல்லவில்லை பொறாமை காரணமாகக் கல்வியில் ஊக்கஞ் செலுத்த வேண்டும் என்றுரைக்கிறார். 

“அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் 

தீயுழி உய்த்து விடும்" (குறள்.168)

பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய விழியில் அவனைச் செலுத்திவிடும். ஆகையால், அழுக்காறு என்னும் மன அழுக்கினை இளமை முதல் கொண்டே அணுகாமல் பார்த்துக் கொள்வதே அன்றி, அழுக்கா என்னும் தீய குற்றத்திற்கு எதிராக முயற்சி செய்து நலம் பெறுதலே ஏற்ற வழியாகும். 

“தம்மின் மெலியாரை நோக்கித் தனதுடைமை

அம்மா பெரிதென் றாகமகிழ்க தம்மினுங்

கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்

என்றே இவர்க்குநாம் என்று” (நீதி.விள.14)

என்ற பாடலில் பெருமையின் காரணமாகப் பொறாமையும் அதனால் ஊக்கமும் ஊக்கத்தினால் கல்வியும் கல்வியினால் பெருமையும் எய்தப்படும் என்பதை குமரகுருபரர் விளக்குகிறார்.

மனக்குற்றம்

மனிதர்களிடத்துத் தோன்றும் குற்றங்கள் பல. இவற்றைச் சங்க இலக்கியங்களும் ஐம்பெருங்காப்பியங்களும் பிற்காலத்திய நூல்களும் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்துக் கூறியுள்ளன. அவை மனத்தில் தோன்றுவன, வாக்கில் உதிப்பன, உடம்பில் தோன்றுவன என்பனவாகும். மனத்தில் தோன்றுங் குற்றமே மற்றைய இரண்டிற்கும் காரணமாக அமைகின்றன. என்பதை,

“கொலையே களவே காமத் தீவிழை

உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்

பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்

சொல்எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்

வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சிஎன்று

உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும்எனப்

பத்து வகையால் பயன்தெரி புலவர்

……………………………………………" (மணி.66-72)

என முக்குற்றத்தையும் கூற வந்த சீத்தலைசாத்தனார் முதலில் உடம்பில் தோன்றுவனவற்றையும் அதன் பின் வாக்கில் தோன்றுவனவற்றையும்  கூறி இறுதியில் மனத்தினால் தோன்றும் குற்றங்கள் மூன்றையும் குறிப்பிட்டுள்ளார். 

மனக்குற்றம் நீங்கினால் மற்றவை தானே வழியும் என்று கூடக் கூறாமல் மற்றைய குற்றங்கள் உண்டாகவே மாட்டாது என்பர் மேலோர். வள்ளுவர் ஒருவன் தன் மனக் குற்றமற்றவனாக இருக்க வேண்டும். அதுவே அறம்  என்பதை,

        “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற" (குறள்.34)

என்று உணர்த்துகின்றார். இக் கருத்தை மற்றோரிடத்தில் வெளிப்படையாக,

“காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய்" (குறள்.360)

என்ற குறட்பா மூலம் அறியலாம்.

மறப்பும் அதனை அகற்றும் வழியும்

மனம் பல பொருள்களின் குணங்களையும் வடிவங்களையும் பதிவு செய்திருக்கிறது. எல்லாப் பொருளும் ஒன்று கூடி எப்போதும் நினைவிலேயே இருக்க முடியாது.

மனத்தில் பதிந்தனவற்றில் சில மறதியாக இருக்கும், மறப்பு என்பது முன்பு நினைவிலிருந்த செய்தி மனத்தை விட்டு அகன்றதாகக் கருதுகின்றோம். மனம் ஒரே நிலையிலிருந்து எண்ணிய பின் வெளிப்படும் பொருளாக இருக்கின்றது. மனத்தை விட்டு அகல்வதாக இருப்பின் பின்னர் வெளிப்பட இடமுண்டு. ஆகவே, முன்னர் நினைத்த செய்தி மறப்பாக இருக்கின்றது என்றால் மனத்தை விட்டு அகலவில்லை. ஞாபகம் உரிய காலத்தில் வெளிவரவில்லை என்பதே ஆகும். ஆகவே, மறப்பு இல்லையானால் நினைவு இல்லை. நினைவு எப்போதும் இருக்குமானால் மறப்பு இல்லை.  கணவன் மனைவியைப் பார்த்து உன்னை நினைத்தேன் என்று சொன்னவுடன் தலைவி, இது வரையில் என்னை மறந்து பின் இப்போது தான் நினைத்திருக்கின்றீர் என்று சொல்லிப் புலம்புவாள். இதனை,

“உள்ளினேன் என்னேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்

புல்லாள் புலத்தக் கனள்" (குறள்.1316)

என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். இம் மறப்பை உயிர்க் குணங்களுள் ஒன்று என்று நன்னூலார் கூறுகின்றார்.

“அறிவு  அருள் ஆசை அச்சம் மானம்

நிறை பொறை ஓர்ப்பு கடைப்பிடி மையல்

நினைவு வெறுப்பு உவப்பு இரக்கம் நாண் வெகுளி 

துணிவு அழுக்காறு அன்பு எளிமை எய்த்தல்

வென்றி பொச்சாப்பு ஊக்கம் மறம் மதம்

மறவி இனைய உடல் கொள் உயிர்க்குணம்" (நன். 452)

என்று நன்னூல் மூலம், மனிதனுக்கு மறப்பு இல்லையானால் மனத்தில் எப்போதும் எல்லாச் செய்தியும் நினைவிற்கு வந்து குழப்பம் உண்டவதோடு புதிய பொருளில் மனம் ஊக்கத்துடன் செல்லத்தடைப்படும் ஆகையால், மறப்பும் நமக்குத் தெரியாமலே ஒரு நன்மையை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறது.

1. குறிப்பு எழுதி நினைவிற்குக் கொண்டு வருதல்

2. மன நிலையை ஒழுங்காக வைத்துக் கொள்ளுதல்

3. உடல் நிலையைச் சரியாகப் பார்த்துக் கொள்ளுதல்

4. அடிக்கடி எண்ணி எண்ணி நினைவிற்குக் கொண்டு வருதல்

5. திறமை உள்ளாரோடு பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளல் 

ஆகிய இவைகளை மேற்கொண்டு நடப்பின் நாளடைவில் மறதி குறைந்து நன்மை உண்டாக்கும் என்பதில் ஐயம் இல்லை.

உளமும் உடலும்

மனிதனின் உடல் நிலை சரியாக இருக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும்.  ‘சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும்| என்ற பழமொழியும் இக் கருத்துப் பற்றிச் சொல்வதுண்டு. உடலில் ஏதாவது கெடுதல் (நோய்) இருந்தால் உளநிலை எவ்வளவு திறனுடையதாக இருந்தாலும் குறித்த வேலையைக் கவனிக்க மனத்திற்கு இயலாத நிலை ஏற்படுகின்றது.

மன நிலை மகிழ்ச்சியோடு இருப்பார்க்குப் பாலும் பழமும் இன்றி வெறும் கஞ்சியே குடித்த போதிலும் (உள் நோய் இன்றி இருந்தால்) உடல் மிகவும் வலுவுள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். மன வேலை அதிக இன்றி உடல் வேலை செய்பவர்க்கு நோய் மிகவும் வருத்துவதில்லை. வருத்தினாலும் விரைவில் குணமாகிவிடும். மனத்தை நன் முறையிலே செலுத்தி அதன் பயனை அடைந்த மிகச் சிலரின் மேனி பொன் போல நேயின்றி விளங்குவதும் உண்டு. மனநல ஆற்றலினால் ஒருவர் பிறர் உடலையும் உயர்வாகச் செய்யலாம் என்பர். ஆகவே, உடலைக் கவனிப்பதைவிட உளத்தை உயர்வாகக் கவனித்தல் வேண்டும்.

உளத்திற்கும் உடலிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டென்றும் உடலைக் கவனிப்பதுடன் உளத்தை அதிகமாகக் கவனித்தல் அவசியம் என்பதும் மனத்தை உயர் முறையில் பழக்கினால் உயர்ந்த பல நன்மை உளத்திற்கேயன்றி உடலுக்கும் ஏற்படும். என்பதை,

“இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி

அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்

அருக்கனும் சோமனும் ஆரழல் வீச

உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே" (திரு.93)

என்ற திருமந்திர பாடல் மூலம் அறியமுடிகிறது.

மனக்கவலை நீக்கும் வழி

மனிதன் எப்பொழுதும் இன்பத்தையே விருப்புபவனாக இருக்கின்றான். இதற்கு மாறாகவுள்ள துன்பத்தை யாரும் விரும்ப மாட்டார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.

மன விருப்பம் படிப்புக்காக, நல் உடைக்காக, தொழிலுக்காக, ஊதிய உயர்வுக்காக, மணம் செய்வதற்காக, தம் குழந்தைகளுக்காக, தங்கள் உடல்நிலை சரிவர இருப்பதற்காக இது போன்ற ஏதாவதொரு கவலையால் மக்கள் வாட்டமுறுவது உண்டு. கவலையில்லா மனிதன்  உலகில் இல்லை என்றே சொல்லலாம்.

கவலையின்றி வாழ்ந்துவரும் முறையை நம் முன்னோர் தெரிந்திருந்த காரணத்தால் தான், நீடித்த நாள் நோயின்றி மகிழ்ச்சியுடன்  வாழ்ந்து வந்தார் என்பது மிகையாகாது. கல்வியின் மேன்மையாலும் உயர்ந்த எண்ணங்களாலும் ஒரோவழி கவலை நீங்கி  இருந்தனர். இயற்கைப் பொருளோடு இயைந்து வஞ்சனையின்றி உண்மை, அன்பு முதலிய நற்குணமுடையாராய் உடல் நலமும் பெற்று வாழ்ந்து வந்தார் பலர் தமக்கும் பிறர்க்கும் உதவும் ஆற்றல் பெற்றிருந்தவர் மனக்கவலைக்குப் பெரும்பாலும் இடந்தருவதில்லை.

தற்கால நாகரிக வாழ்க்கையில் ஈடுபடுபவர் அன்பின்மை, ஒற்றுமையின்மை, கவலை முதலிய தொத்து நோய்களுக்கு இடங்கொடுத்து நாளும் அல்லல்படுகின்றனர்.  நோயாளரும் கவலைகள் அற்று இன்புற தல யாத்திரை, தீர்த்த யாத்திரை என்ற நம்பிக்கையின் மூலமாகப் பல இயற்கை வளம், பல பெரியோரைக் காணல், பல வகையில் நல்ல காற்று, நல்ல நீர் முதலியனவற்றால் கவலை நீங்கி உளநலத்தோடு உடல் நலமும் பெற நல்வழியைக் காட்டியுள்ளார்கள்.

மனத்தை விளிப்ப தேன்?

புலவர்கள் பெரும்பாலும் ஆடவரையோ, பெண்டிரேயோ, விளித்துப் பொருளைக் கூறுவதுபோல செய்யுள் இயற்றியிருத்தலை யாவரும் அறிவர் ஆணை விளித்தால் ஆடூஉ முன்னிலை என்றும் பெண்ணை விளித்தால் மகடூஉ முன்னிலை என்றும் பெயர். மேற்கூறிய இரண்டு முன்னிலைகளிலும் அடங்காமல்,

1. மற்றுனக்கு மயக்கமென் வன்னெஞ்சே

2. நன்றென்றிரு மனமே

3. நெஞ்சம் வாழி

4. நிலையான நெஞ்சே

எனத் தாயுமானார், பட்டினத்தார், அப்பர், உமாபதி சிவாசாரியர் முதலிய பெரியோர்கள் மனத்தை விளிப்பதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தால், உலகின் கண், “விரிந்த பொருட்கெலாம் வித்தாவ துள்ளம்" என்ற திருமூலர் திருமந்திர உண்மை மொழியின் நுட்ப உணர்வையும் வெளிப்பதுத்துகிறது.

குழந்தைகளின் மனம்

குழந்தைகள் இயற்கையில் வேறுபட்டிருக்கின்றன. ஒரு குழந்தை மனம்போல் மற்றொரு குழந்தையின் மனம் இல்லை என்பது உற்று நோக்கும்போது புலப்படுகிறது. ஆனால், இளங்குழந்தைகளின் மனம் வெண்மையான ஆடைபோலக் குற்ற(களங்க)மற்றதாகும். குழந்தைகளிடம் நெருங்கிப் பழகுவோரின் செயலை ஒட்டியோ குழந்தையின் மனம் அமைகின்றன.

நற்குணமுள்ள பெரியோரைச் சார்ந்து பழகிய குழந்தைகளிடம் அன்பு, தூய்மை, குற்றமற்ற செயல், இனிமையாக (மரியாதை) பேசுதல் இவை யாவும்  குழந்தைகளிடம் காணப்படுகின்றன. குற்றமான பேச்சோ, செயலோ இவை குழந்தைகளின் எதிரில் நடக்கின்றபோது அவ்வாறே குழந்தைகளும் பின்பற்றி நடக்கத் தொடங்குகின்றன.

பொதுவாக நல்ல நிறமுடைய பொருள்களையும் தின் பண்டங்களையும் விரும்பும் தன்மை குழந்தைகளுக்கு உண்டு. அதேபோல விளையாட்டிலும் நல்லன கொண்டு மகிழ்வர், இவ் விளையாட்டுத் தன்மைகளை அறிந்து குழந்தைகளைக் குற்றமற்ற விளையாட்டுக்களை விளையாடச் செய்தல் வேண்டும். இளங் குழந்தைகள் இல்லாத இடத்தில் பெரியோர்களும் இளங் குழந்தை உள்ளத்திற்கு ஏற்ப தன் மனத்தை மாற்றி குழந்தைகளுடன் விளையாட வேண்டும்.

உணவு, தின்பண்டம் வழங்கள், விளையாடுதல் முதலியவற்றைப் பெற்றோர்கள் குழந்தையின் நன்மையை நினைத்து குறித்த நேரத்தில் பழக்கி வருவதோடு தாமும் நெருங்கிப் பழகின் குழந்தையின் மனப்போக்கு நன்கு தெளிவதோடு நோயின்றிச் செழுமையாய் வளரும் என்பதில் ஐயமில்லை.

ஒரு குழந்தையை உட்காரும் போதெல்லாம் பலகை அல்லது இருக்கைகளில் உக்காரவைத்துச் சிலநாள் பழக்கம் செய்துவிட்டால் பலகை முதலிய இருக்கை இன்றி அக்குழந்தை கீழே உக்கார மறுத்துவிடும்.

பேசுவதிலும் ஐயா வாருங்கள், வணக்கம் என்னும் சொற்களைச் சொல்லும் பொழுது அவ் வார்த்தைகளையே குழந்தைகள் சொல்வதைப் பார்க்கமுடிகிறது.

இவ்வாறு பார்ப்பதையும் கேட்பதையும் பழகிக்கொள்ளும் தன்மை குழந்தைகளுக்கு உண்டு. பெற்றோர்கள் பிற மக்களையோ குழந்தைகளையோ குழந்தையின் உள இயல்பை மறந்து எதிரில் கொடுஞ் சொற்கள் அல்லது குற்றமுடைய சொற்களைப் பயன்படுத்தினால் அதைக் கேட்டுக்கொண்டிருந்த குழந்தை திருப்பிச் சொல்லத் தொடங்கும். ஆகையால், குழந்தைகள் இருக்கும் இடங்களில் தீயவை நிகழா வண்ணம் பார்த்துக் கொள்வதில் மிகவும் கவனம் செலுத்துதல் அவசியமாகும்.

உவமை அல்லது உருவகம்

திருவள்ளுவர், மாணிக்கவாசகர், தாயுமானவர் முதலிய பல பெரியோர்கள், மனத்தை,

1. செருக்குற்றிருத்தலால் யானை எனவும்

2. கடவுள் ஈடுபாட்டில் கரையாததால் மரம், இரும்பு, கல் எனவும்

3. ஈரிடங்களிற் சென்று சென்று பற்றுவதால் குழல் எனவும்

4. பல இடங்களிலும் தாவுதலால் குரங்கு எனவும், பல இடங்களுக்கும் விரைந்து செல்வதால் பறவை எனவும்

5. உருகுகின்ற தன்மையால் அனலிடைப்பட்ட மெழுகு நிணந் தீயிலிட்டன்ன எனவும்

6. போய்ப்போய்த் திரும்புவதால் இருதலைக் கொள்ளி எறும்புபோல் எனவும்

7. பல எண்ணங்களால் சுற்றுவதால், காற்றாடி எனவும்

8. பல பொருள்களையும் தன்னுட்டருதலைப் பார்த்து மகிழுவதால் கண்ணாடி எனவும்

9. பல பொருள்களையும் சுமந்து செல்வதால் தோணி எனவும்

10. என மனதை உவமையாகவும் அல்லது உருவகமாகவும் காரணம் கருதி கூறியுள்ளனர். 

மனச்சாட்சி

இவ்வுலகின்கண் நிகழ்வனவற்றில் நன்மை பயக்கும் செயல் இவை, தீமையுடைய செயல் இவை என்று மனக் கண்ணால் கண்டு பகுத்துணரும் ஆற்றலையே மனச்சாட்சி என்று மேலோர் கருதுவர்.

இவ்வாற்றல் எல்லா மக்களுக்கு இருப்பினும் அன்பு, அருள், உண்மை, நடுவுநிலைமை ஆகியவற்றை கடைபிடித்து வாழும் மனிதர்களுக்குத் தம் செய்கின்ற செயல்கள் குற்றமுடையவனா? இல்லையா? என ஆய்ந்து நடக்கும் இயல்பு உண்டாகும். மற்றவர்களுக்கு இருளில் நிறைந்த பொருள் விளங்காதிருத்தல் போலத் தெரியாது.

பிற உயிரின் துன்பங் கண்டு இரக்கமும் நடுநிலைமையும் நன்மை, தீமைகளைப் பகுத்துணரும் ஆற்றலும் பெற்றுழி மன விளக்கு மாசறத் தெரிவதோடு அவ் வொளியினால் அறியாமையாகிய இருள் தானே சென்று மறையும். இந்நிலை பெற்றவன் எக்காரியத்தையும் ஆராய்ந்தே செய்ய முற்படுவான். இதனை,

        “தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்

        தன்நெஞ்சே தன்னைச் சுடும்" (குறள்.293)

        “கேடும் பெருக்கமும் இல்லல்ல செஞ்சத்துக்

        கோடாமை சான்றோர்க்கு அணி" (குறள்.115)

என வள்ளுவர் வகுத்துரைத்துள்ளார். நல்லந்துவனார் “மனம் சரியாக நிற்றல் மட்டுமில்லை, செஞ்சு அறிந்த தீயவை மறைக்கவும் மறையா?" என்றும், வள்ளுவர் “மன மறிந்தவை மறைத்தால் மனமே சுடும்" என்றும் உணர்த்துவர். இக்கருத்தினை கலித்தொகையும்

        “கண்டவர் இல் என உலகத்துள் உணராதார்

        தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்

        நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர்

        நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்" (கலி.125)

 என்று குறிப்பிடுகிறது. ஆகவே, மனக் காட்சி உற்றவன் மனச் சாட்சியின் படி  நடக்கக் கடமைப்பட்டவன் ஆவான். அவ்வாறு நடப்பின் ஆராய்தல் ஏற்பட்டு அறியாமை அகன்று நடுவுநிலைமை முதலிய நற் குணங்களினால் மனம் விளக்குப் போல ஒளி விடும் என்று வள்ளுவர் வகுத்துள்ளார்.

நாம் ஒவ்வொருவரும் நம் மனச்சாட்சியின் படி நடந்தால், தன் குற்றங்களைத் தானேகளைவதுடன், பிறர் குற்றம் மறந்து நன்மையைக் காணும் ஆற்றல் பெற்று, நம் வாழ்வையும் நம்மைச் சார்ந்தோரின் வாழ்வையும் இன்பமுற விளங்கச் செய்யலாம் என்றால் அது மிகையாகாது. 

முடிவுரை

    உடலை எவ்வாறு நலமாக வைத்திருக்க வேண்டுமோ அது போலவே மனத்தையும் நலம் குறையாமல் வைத்திருப்பது வாழ்க்கையின் இன்பத்திற்கும், வெற்றிக்கும் அடிப்படையாகும். 

    மனநலத்தை வளர்ப்பதற்குப் பல வழிகளைக் கூறலாம். சமூகச் சூழ்நிலையோடு இணைந்து நடப்பது, துன்பத்தின் காரணம் அறிய முயற்சி செய்தல், மனக்கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல், வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகளையும், ஏமாற்றங்களையும் நகைச்சுவை உணர்ச்சியோடு களைய முயலுதல், சோம்பலைத் தவிர்த்தல், நாள்தோறும் செய்யும் செயல்களை ஒழுங்காகத் திட்டமிடுதல், கடமைகளையும் பணிகளையும் செய்வதில் பற்றுக் கொள்ளுதல், அவ்வாறு பற்றுக் கொள்வதால் துன்பங்களை மறத்தல், பகற்கனவாலும் பயனற்ற எண்ணங்களாலும் மனநிறைவை அடைய முயலாதிருத்தல், செய்வதைத் திருந்தச் செய்வதில் இன்பம் காணுதல் முதலானவைகள் எல்லாம் நல்ல மனநலத்திற்குச் சிறந்த அடிப்படைகளாகும். மனநலம் சிறந்திருப்பதே ஒருவனுடைய வாழ்க்கையின் வெற்றிக்கு நல்ல அறிகுறியாகும்.

    வீட்டிலும், தொழில் செய்யும் இடங்களிலும் சமூகத்திலும் நாம் விரும்பியவாறே எல்லாம் நடைபெறும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமாகும். அவ்வாறு நடைபெறுவதற்கு வேண்டிய நேர்மையான முயற்சிகளை ஒருவன் கைக்கொள்ளலாம், ஆனால், அவற்றை விட்டுவிட்டு மனத்தை அலட்டிக்கொள்வதிலும் பகற்கனவின் மூலம் மனநிறைவு காண்பதில் ஒருவன் தன் ஆற்றலை விரயம் செய்வாயானால் அது தனக்குத்தானே கேடு விளைவித்து கொள்வதாகமுடியும். இறுதியில் மனநலம் குலைவதற்கும் அவைகளே வழிகளாக ஏற்பட்டுவிடும். மன உறுதியோடு தன் வாழ்க்கை விவகாரங்களை எண்ணிப் பார்த்து திடமான முடிவு கண்டு அம் முடிவின்படி செயலாற்ற அவன் முற்பட வேண்டும். அப்படி முற்படும் போதும் பல இடையூறுகளும், இடையிடையே சிறு தோல்விகளும் ஏற்படலாம். இவற்றை எதிர்பார்த்தே ஒருவன் செயலில் இறங்க வேண்டும். இந்த முயற்சியில் தான் நகைச்சுவை ஒருவனுக்குப் பெரிதும் உதவுகின்றது. அத்துடன் அவன் சில நாட்களுக்கு வேறு இடங்களுக்குச் சென்று ஓய்வு பெறுவதும் மனநலத்திற்கு உகந்ததாகும். நண்பர்கள், அக்கம்பக்கத்தார்கள் முதலியவர்களுடைய வாழ்க்கையில் ஒருவனுக்கு அக்கறை இருக்குமானால் அவர்கள் வாழ்விலும் மன நிறைவு தராத தொல்லைகள் இருப்பதை உணருவான். அந்த உணர்ச்சியும் அவனுக்கு வாழ்க்கையைப்பற்றிய சரியான மனப்பாங்கை உண்டாக்கும்.

    மனித குலம் தம்மைத்தானே ஆராய்ந்து அந்த ஆராயச்சியின் பயனாக வாழ்க்கையை நடத்தத் தொடங்கினால் மனநலம் சிறக்கும். இதுவே வாழ்க்கை வெற்றிப் பாதையில் செலுத்துவதற்கும், இன்னல்களை இன்முகத் தோடு ஏற்பதற்கும் வழிவகை செய்யும்.

அடிக்குறிப்புகள்

1.மனநோயும் இன்றைய மருத்துவமும், சோமசுந்தரம்.ஓ,ஜெயராமகிருஷ்ணன்.தி, ப.1. பனிரெண்டாம் பதிப்பு – 2017, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்இ அம்பத்தூர், சென்னை - 98

2.மனம், திருநாவுக்கரசு, ப.15, முதல் பதிப்பு- 1999, மனநலம் படைப்புகள் மனநலம் கிளினிக், சென்னை.

3.உளநூல், குஞ்சிதபாத தேசிகர்.ஆ, ப.5, முதல் பதிப்பு- 1952, கூட்டுறவுப் பதிப்பகம், கரந்தை, தஞ்சாவூர்.

4.உளநூல், குஞ்சிதபாத தேசிகர்.ஆ, ப.5, முதல் பதிப்பு- 1952, கூட்டுறவுப் பதிப்பகம், கரந்தை, தஞ்சாவூர்.

5.  www.prosperspiritually.com

6.திருக்குறள், பரிமேலழகர் (உ.ஆ), குறள்.457. முதல் பதிப்பு – 1976, திருத்திய பதிப்பு – 2018, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

7.கற்றல் - மனித வளர்ச்சி - உளவியல், குமரிச்செழியன், ப.393. ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை, சென்னை – 14.

8.கற்றல் - மனித வளர்ச்சி - உளவியல், குமரிச்செழியன், ப.393. ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை, சென்னை – 14.

9.கற்றல் - மனித வளர்ச்சி - உளவியல், குமரிச்செழியன், ப.394. ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை, சென்னை – 14.

10.பாலியல் கல்வியும் போதை மருந்து விழிப்புணர்வும், சிவராமன்.பி.கி, ப.188, மூன்றாம் பதிப்பு – 2005, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், அம்பத்தூர், சென்னை - 98 

11.கற்றல் - மனித வளர்ச்சி - உளவியல், குமரிச்செழியன், ப.394. ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை, சென்னை – 14.

12.சிக்மண்ட் பிராய்டு உளப்பகுப்பாய்வு, இரவிச்சந்திரன்.தி.கு, ப.67, முதல் பதிப்பு – 2005, அலைகள் வெளியீட்டகம், சென்னை – 24. 

13.கற்றல் - மனித வளர்ச்சி - உளவியல், குமரிச்செழியன், ப.396. ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை, சென்னை – 14.

14.மனமும் அதன் விளக்கமும், தூரன்.பெ, ப.82, பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை.

15.பாலியல் கல்வியும் போதை மருந்து விழிப்புணர்வும், சிவராமன்.பி.கி, ப.188, மூன்றாம் பதிப்பு – 2005, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்இ அம்பத்தூர், சென்னை - 98

16.தனிப்பாடல் திரட்டு, பி.நா.சிதம்பர முதலியார்(ப.ஆ), ப.55, பதிப்பு – 1940, வித்தியா ரத்நாகரம் பிரஸில், சென்னை.

17.நா.மு.வேங்கடசாமி நாட்டார், மணிமேகலை, (உ.ஆ), பா.31-32, 

18.குறுந்தொகை, வி.நாகராசன் (உ.ஆ), பா.22, முதல் பதிப்பு – 2004, பாவை பிரிண்டர்ஸ், 142, ஜானிஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை.14.

19.நாளடியார், வீ.சிவஞானம் (உ.ஆ), பா.245, பதிப்பு – 2017, விஜயா பதிப்பகம், சென்னை.

20.சைவசித்தாந்தம் - ஒர் அறிமுகம், ந.சுப்புரெட்டியார், ப.128, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை – 14.

21.உளநூல், குஞ்சிதபாத தேசிகர்.ஆ, ப.7, முதல் பதிப்பு- 1952, கூட்டுறவுப் பதிப்பகம், கரந்தை, தஞ்சாவூர்.

22.உளநூல், குஞ்சிதபாத தேசிகர்.ஆ, ப.7, முதல் பதிப்பு- 1952, கூட்டுறவுப் பதிப்பகம், கரந்தை, தஞ்சாவூர்.

23.உளநூல், குஞ்சிதபாத தேசிகர்.ஆ, ப.7, முதல் பதிப்பு- 1952, கூட்டுறவுப் பதிப்பகம், கரந்தை, தஞ்சாவூர்.

24.உளநூல், குஞ்சிதபாத தேசிகர்.ஆ, ப.7, முதல் பதிப்பு- 1952, கூட்டுறவுப் பதிப்பகம், கரந்தை, தஞ்சாவூர்.

25.உளநூல், குஞ்சிதபாத தேசிகர்.ஆ, ப.8, முதல் பதிப்பு- 1952, கூட்டுறவுப் பதிப்பகம், கரந்தை, தஞ்சாவூர்.

26.இலக்கணக் கொத்து, சுவாமிநாத தேசிகர், ப.54, மூன்றாம் பதிப்பு, வித்தியா நாபாலனயந்திர சாலையில், சென்னை.

27.நாளடியார், வீ.சிவஞானம் (உ.ஆ), பா.38, பதிப்பு – 2017, விஜயா பதிப்பகம், சென்னை.

28.உளநூல், குஞ்சிதபாத தேசிகர்.ஆ, ப.12, முதல் பதிப்பு- 1952, கூட்டுறவுப் பதிப்பகம், கரந்தை, தஞ்சாவூர்.

29.உளநூல், குஞ்சிதபாத தேசிகர்.ஆ, ப.5, முதல் பதிப்பு- 1952, கூட்டுறவுப் பதிப்பகம், கரந்தை, தஞ்சாவூர்.

30.திருக்குறள், பரிமேலழகர் (உ.ஆ), குறள்.822, முதல் பதிப்பு – 1976, திருத்திய பதிப்பு – 2018, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

31.உளநூல், குஞ்சிதபாத தேசிகர்.ஆ, ப.12, முதல் பதிப்பு- 1952, கூட்டுறவுப் பதிப்பகம், கரந்தை, தஞ்சாவூர்.

32.உளநூல், குஞ்சிதபாத தேசிகர்.ஆ, ப.12, முதல் பதிப்பு- 1952, கூட்டுறவுப் பதிப்பகம், கரந்தை, தஞ்சாவூர்.

33.அறி நூல்கள், வே.இரா.கோவிந்தராசன் (உ.ஆ), ப.8, பதிப்பு – 2016, ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை.

34.நான்மணிக்கடிகை, வே.இரா.மாதவன் (ப.ஆ), ப.22, பதிப்பு – 2001, தஞ்சைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

35.கம்பன் கவித்திரட்டு, சக்திதாசன் சுப்பிரமணியன்,  ப.38, நித்தியானந்த ஜோதி நிலையம், சென்னை-28.

36.பெரியபுராணம், அ.ப.பாலையன் (உ.ஆ), பா.10, முதல் பதிப்பு – 2016, கௌரா பதிப்பகம், சென்னை.


கருத்துகள் இல்லை: