எட்டுத்தொகை நூல்களில் விண்மீன்கள்
முனைவர் வீ.உதயகுமார்
முன்னுரை
விண்வெளிப் பொருட்களைப் பற்றி ஆராய்ந்தறியும் அறிவியல்துறை வானியல் (யுளவசழழெஅல) எனப்படுகிறது. வானியல் அறிவு மிகவும் தொன்மை வாய்ந்தாகும். மனிதன் ஆதிவாசியாக வாழ்ந்த காலத்தில் சூரியனையும், சந்திரனையும் அறிய முற்பட்டதின் விளைவே வானியல் நுட்பம் தோன்ற காரணமாயிற்று. ஆதிவாசியாக இருந்த மனிதன் விண்ணுக்குச் சென்று கால்தடம் பதிக்கும் அளவிற்கு முன்னேறி இருப்பது இன்றைய அறிவியலின் வளர்ச்சியாகும். அதில் தமிழ்ச் சமுதாயத்தின் பங்குமிக முக்கியமானது. தமிழர்கள் பழங்காலத்திலே தனக்கென உயர்ந்த நாகரிகத்தையும், பண்பாட்டையும் பெற்றிருந்ததோடு அறிவு சார்ந்த நுட்பத்தினையும் பெற்றிருந்தனர். பரந்துவிரிந்த வான்வெளியில் பேரண்டங்கள், பால்வழிப்பகுதிகள், விண்மீன்கள், ஞாயிறு, திங்கள் மற்றும் அறிவுக்குப் புலப்படாத பல புதுமைகள் காணப்படுகிறன்றன.
வான் இயக்கம், கோள்களின் இயக்கம், கோள்களின் பெயர்கள், மழை கணிக்கும் முறை, நிலம் தோன்றியமுறை, ஐம்பூதங்களின் இயக்கத்தால் உலகம் இயங்குதல் போன்றவற்றைத் தமிழர் அறிந்திருந்தனர். சங்க இலக்கியங்கள் விண்மீன்களை நாள்மீன், கோள்மீன் என்று பகுத்தது குறிப்பிடத்தக்கது. தாமே ஒளிவீசக் கூடியன நாள்மீன் என்றும், சூரியனின் ஒளியால் ஒளிவீசக்கூடியன கோள்மீன் என்றும் அதில் வகுத்துக் கூறப்பட்டுள்ளது.
இன்று தமிழில் கிடைக்கும் முதல் நூலான தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களான எட்டுத்தொகையும், பத்துப்பாட்டில் காணப்படும் வானியல் பற்றிய செய்திகள் வியக்க வைக்கின்றன. அவற்றில் இவை இடம்பெற நிச்சயம் பல ஆண்டுகள் பட்டறிவு வேண்டும். புறநானூற்றின் முதல் பாடலே ~நிலவின் இளம்பிறை| என வான்பொருளின் பெயரால் துவங்குகிறது. முடிவுப் பாடலும் வானியல் பற்றிய செய்திகளிலேயே முடிகிறது. பழங்காலத் தமிழர்க்கு வானமே காலங்காட்டும் கடிகாரமாக இருந்தது.
விண்மீன் கூட்டமைப்பின் இயல்புகளை இன்றைய அறிவியல் துணைக் கருவிகளின் உதவியுடன் ஆராய்ந்துக் கூறியவைகள் அனைத்தும் சங்ககாலத் தமிழர்கள் தமது அறிவுக்கண்ணால் உற்றுநோக்கி அறிந்துள்ளனர். இவற்றின் சிறப்புகளை இக்கட்டுரையில் காணலாம்
விண்மீன்
தொடக்ககாலத்தில் தமிழர்களுக்கு நிமித்தங்களின் மேல் மிகுந்த நம்பிக்கை இருந்தது. மனித இடர்பாடுகளுக்குக் கோள்களே அடிப்படைக்காரணம் என்ற சிந்தனை கோள்களை வணங்கும் நிலைக்கு மனிதனை அழைத்துச் சென்றது. வானில் உள்ள கோள்களுக்கும், பூமியில் உள்ள மக்களுக்கும் இடையே உள்ள தொடர்பை அறிவிக்கும் முதல் அறிவியல் சோதிடம். நாளும், கோளும் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன.
தமிழர்கள் தமது வாழ்க்கையைச் செம்மைப்படுத்த, நெறிப்படுத்த அவனது தேவைகளை எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய இயல்புகளைத் தனது வாழ்க்கையோடு இணைத்துப் பார்த்து அதன் அடிப்படையில் சோதிடத்துறை என்ற தனித்துறையை மக்கள் வாழ்ந்து கலந்து நிற்கின்ற வகையில் சங்க இலக்கியங்களில் படைத்தனர். அதில் அறிவு சார்ந்த நுட்பமான செய்திகள் விரவி காணப்படுகின்றன.
“ஒருவர் பிறக்கும் நேரத்தில், விண்ணில் நட்சத்திரங்கள் அல்லது கோள்கள் இருக்கும் நிலையினை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் ஆயுள்,இயல்புகள், வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கணிப்பது சோதிடமாகும்”1.
சங்ககாலத்தில் கோள்கள் வானில் இருக்கும் நிலைக்கு ஏற்ற அவற்றிற்கு இராசி என்னும் அமைப்பு வகுக்கப்பட்டிருந்தது.இதனைப் பரிபாடல்,
“விரிகதிர் மதியமொடு வியல் விசும்புபுணர்ப்ப;
எரிசடை எழில்வேழம் தலையெனக் கீழிருந்து
தெருவிடைப் படுத்தமூன்று ஒன்பதிற் றிருக்கையுள்
உருகெழு வெள்ளிவந் தேற்றியல் சேர;
வருடையைப் படிமகன் வாய்ப்பப் பொருள்தெரி
புந்திமிதுனம் பொருந்தபப் புலர்விடியல்
அங்கி உயர்நிற்ப அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்குப் பாலெய்த இறையமன்
வில்லிற் கடைமகரம் மேவப் பாம்பொல்லை
மதியம் மறைய வருநாளில், வாய்ந்த” ( பரி. 11 : 1-10 )
மேற்கண்ட பாடலில் மொத்தமாக 27 விண்மீன்களையும் 12 இராசிக்குள் அடங்கின என்பதாகும். அப்போது ஒவ்வொரு கோளுக்கும் உரிய இராசி என்னவென்பது விளக்கப்பட்டுள்ளது.
ஆடிப்பதினெட்டாம் பெருக்கு என்னும் உத்திராட நட்சத்திரத்திற்குரிய நாளில் வெள்ளி இடபராசி (ரிஷபராசி) யையும், செவ்வாய் மேஷத்தோடும், புதன் மிதுனத்தோடும், சூரியன் கடகராசியிலும், குருமீன் ராசியிலும், சனி மகரத்திலும் பொருந்தியிருந்ததாய் விளக்கப்பட்டுள்ளது. மேலும் திங்களாகிய சந்திரனைப் பாம்பாகியஇராகு மறைத்து மகர இராசியில் பொருந்தியிருப்பதையும் பரிபாடல் காட்டுகிறது.
இதனை ஆராய்கையில் நம் முன்னோர் விண்மீன்களைக் கோள்களுக்குள் அடக்கி அதாவது அசுவினி, பரணி என வரும் 27 விண்மீன்களையும் செவ்வாய், வெள்ளி என்னும் கோள்களோடு பொருத்திப் பன்னிரு இராசிகளோடு இணைத்துப் பார்த்தது தெரியவருகிறது. இன்றும் ரிஷபம், மேஷம், மிதுனம் முதலான இராசிகள் மக்களின் ஜாதகக் கணிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஞாயிறு, திங்கள், செம்மீன், வெண்மீன், வெள்ளி, நாள்மீன், கோள்மீன், உரோகிணி முதலிய பலசொற்கள் சங்க இலக்கியத்தில் வந்துள்ளன. போருக்குச் செல்லும் முன்பு தம் மக்களுக்கு இடையூறு வரக்கூடாது என்று எண்ணிக் குடையையும், வாளையும் நல்ல நிலை ஆட்சியின் போது எடுத்துச் செல்வர்.
தலைவன் தீய இராசிகளின் ஆட்சியின் போது அதாவது ஓரை, நாள் இவற்றை பார்த்து தலைவியைப் பார்ப்பதை தலைவன் தவிர்த்து விடுகிறான் என்ற செய்தி தொல்காப்பியருக்கு இருந்த வானியல் அறிவை வெளிப்படுத்துகிறது. இதனை,
“மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை” (தொல். 1081)
என்ற நூற்பா உணர்த்துகிறது.
இன்றைய உலகில் செயற்கைக் கோள்கள் பல விண்ணில் ஏவப்பட்டு அதன் மூலம் பல புதிய தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி அடையாத சங்ககாலத்தில் வாழ்ந்த மதுரை மருதனிள நாகனார் வானமண்டலத்தில் உள்ள ஞாயிறு வெம்மை தரும் என்றும் திங்கள் குளிர்ச்சியைத் தரும் என்றும், வானமண்டலத்தில் இருந்து மழை பொழியும் என்றும் கூறுகிறார்.
“ஞாயிற்றன்ன வெந்நிற லாண்மையும்
திங்கள் என்ன தண்பெருஞ் சாயலும்
வானத் தன்ன வன்மையும் மூன்றும்” (புறம்.55:13-15)
“தமிழ்க் கணியர்கள், வானத்து மீன்களை, நாள்மீனாகவும், கோள்மீனாகவும் வகைப்படுத்தினர். நாள்மீன்கள் தன்னொளி கொண்டும், கோள்மீன்கள் எதிரொளி கொண்டும் மின்னின. பரந்த வெளியில் காணப்பெறும் விண்மீன்களைப் பன்னிரு ஓரைகளாகவும் சேர்க்கப்படாத பிற விண்மீன்களையும் கண்டறிந்து, அவைகளுக்குப் பெயரும் சூட்டியிருந்தனர். விண்மீன்கள், கோள்களின் இயக்கங்கள் பற்றிய அறிவு பண்டையத் தமிழரிடம் மிகுந்திருந்தது”2.
வானத்தில் மின்னிய ஒளிப்பொருளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை,
1. நாள்மீன்
2. கோள்மீன்
நாள்மீன்
ஒருவன் பிறந்தநாளில் திங்களை அடுத்து எந்தமீன் நிற்கிறதோ அதுவே அவரது நாள்மீன் ஆகும். நாள்மீன் இயற்கை ஒளியையுடையது. இதனை மக்கள் அறிவு வளர்ச்சி அடைந்த நிலையில் நட்சத்திரம் என வழங்கி வருகிறோம்.
நட்சத்திரம் என ஒரு நாளைக் குறிப்பது வானில் சந்திரன் இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் விண்மீனைக் குறிப்பதாகும். இந்த நாள்மீன்கள் இயற்கையாகவே ஒளிவிடும் தன்மையைக் கொண்டு காணப்படும்.
“பகலில் விண்மீன் தெரிவதில்லை அதற்குக் காரணம் கதிவனின் ஒளியாகும். பகலில் தெரியும் சூரியன் ஒளியானது அதற்கு அப்பால் உள்ள நட்சத்திரத்தின் ஒளியை மறைத்துவிடும். ஆகையால் பகலில் நட்சத்திரங்கள் தெரிவதில்லை”3.
“மாயிரு லிகம்பிள் பன்மீன் ஒளிகெட
ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றார்” (பதி.64:12-13)
ஞாயிறு தோன்றியதால் விண்மீன்களின் ஒளி கெட்டுப் போயிற்று. அது ஒரே நொடியில் மறையாமல் சிறிது, சிறிதாக மயங்கி பின் ஒட்டுமொத்தம் மங்கிப்போயிற்று.
உலகத்தில் கோள்கள் இருப்பதைப் போலவே நட்சத்திரங்களும் இருக்கின்றன. அவை வானில் கணக்கிட்டு அறிய முடியாதவாறு கோடானகோடியாக உள்ளன.” கோள்கள் பயனளிக்கும் நிலையில் 27 நட்சத்திரத் தொகுதிகளைக் கடப்பதால் இவ்விருப்பத்தோடு நட்சத்திரங்களே சோதிடத்தில் எடுக்கப் பெறுகின்றன. இந்நட்சத்திரங்கள் அடங்கியத் தொகுதிக்கு நட்சத்திர மண்டலம் என்று பெயர்.
நட்சத்திரங்கள் 27 வகைப்படும். அவை, “1. அசுவினி, 2. பரணி, 3.கார்த்திகை, 4. உரோகிணி, 5. மிருகசீரிடம், 6. திருவாதிரை, 7. புனர்பூசம், 8. பூசம், 9.ஆயில்யம், 10. மகம், 11. பூரம், 12. உத்திரம், 13. அஸ்தம், 14. சித்திரை, 15. சுவாதி, 16. விசாகம், 17. அனுஷம், 18. கேட்டை, 19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம், 22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம், 25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி”4 என்பன ஆகும்.
நட்சத்திரங்களைப் பற்றிய பல அரிய செய்திகளை அறிவியல் வளர்ச்சியடையாத சங்ககாலத்திலேயே தமிழ்க் கவிஞர்கள் அறிந்திருந்தனர். அவர்களின் நட்சத்திரம் சார்ந்த அறிவுநுட்பம் அவர்கள் படைத்த இலக்கியங்களில் பரவலாகக் காணமுடிகிறது.
“நாளும் கோள்மீன் தகைத்தலும் தகைமே” (கலி. 4-9)
“நாளுறை மத்தொலி கேளா தோனே” (புறம்.257:13)
“நாள் நாள் உரையும் நறுஞ்சாந்தும் கோதையும்” (பரி.16:52)
வானத்தில் நாள்மீன்கள் எனப்படும் நட்சத்திரங்களும் அவற்றோடு இணைந்து நிற்கும் கோள்களையும் போன்று தோற்றமளிக்கும் என்பதை ஆட்டுக்கிடாய்களும், கௌதாரிப் பறைவைகளும் சண்டையிடும் காட்சியை ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது.
பரணி
பரணி நட்சத்திரத்தில் குழந்தை பிறத்தல் சிறப்பு என்பதை பழங்காலந் தொட்டு மக்கள் நம்பி வந்துள்ளனர். இதன் அடிப்படையிலேயே ~ பரணியில் பிறந்தால் தரணி ஆள்வான்’ என்ற பழமொழி தோன்றியுள்ளது. ~ பரணி’ என்ற சிற்றிலக்கியம் தோன்றிய வகையும், மக்கள் அந்நட்சத்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதை வலுப்படுத்துகிறது.
“எரிசடை எழில் வேழம் தலையெனக் கீழிலிருந்து” (பரி.11:2 )
மேற்கண்ட பரிபாடல் வரியில் வேழம் என்பது வேழத்திற்கு யோனியாகிய பரணியைக் குறிப்பது நோக்கத்தக்கதாகும்.
உரோகிணி
27 நட்சத்திரங்களைச் சந்திரனின் மனைவிகள் என்றும் உரோகிணியிடம் மிக விருப்பத்துடன் விளங்குவான் என்றும் புராணச் செய்திகள் கூறுகின்றன. அதனால் தான் சந்திரன் உரோகிணியைக் கூடும் நாட்கள் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. வெண்மதியைச் சூழ்ந்து அகவாமல் பிரிவின்றிச் செல்கிறது உரோகிணி என்பதை,
“விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனோடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கு நெடிதுயிரா” (நெடு.161-163)
என்ற நெடுநல்வாடைப் பாடலடிகள் சந்திரனோடு உரோகிணியைச் சேர்ந்து ஒளிர்ந்தது என்பதை எடுத்துக் கூறுகிறது.
திருவாதிரை
திருவாதிரை நட்சத்திரம் தீஞ்சுடர் போன்ற செம்மீன் ஆகத்தோன்றும். தமிழர்கள் திருவாதிரை நட்சத்திரத்தைச் சிவனுக்குரிய நட்சத்திரமாகவே கருதிக் கொண்டிருந்ததைச் சங்க மற்றும் சங்கம் மருவிய கால இலக்கியங்கள் குறிக்கின்றன.
மதி நிறைந்த திருவாதிரை நாளில் அந்தணர் சிவனுக்குரிய விழாவைத் தொடங்கினர் என்பதைப் பின்வரும் பாடல் குறிப்பிடுகிறது.
“மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்” (பரி.11:77-78)
மேற்கண்ட பாடலடி சிவபெருமானுக்குத் திருவாதிரையும், திருமாலுக்குத் திருவோணமும் விருப்ப நட்சத்திரங்கள் என்பதைக் குறிக்கின்றன.
மகம்
குரு, சிம்ம,இராசியில் மகம் நட்சத்திரத்தோடு கூடுகின்றக் காலம் ~மகாமகம்| என மக்கள் கொண்டாடுவர். மகம் என்ற நட்சத்திரம் சந்திரனுக்கு அருகிலேயே வரும் என்பதனை,
“மழைநீங்கி மா விசும்பின்
மதிசேர்ந்த மகவெண் மீன்” (பட்.34-35)
மேற்கண்ட வரிகள் விளக்குகின்றன. மகத்தில் சனி வருங்காலம் உலகிற்குத் தீமை பயக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்திரம்
உத்திரம் நட்சத்திர வகைகளில் ஒன்று. உத்திரம் எனும் நட்சத்திரத்தின் பெயரே மாளிகையிலுள்ள உத்திரத்திற்கு வழங்கி வருகின்றனர்.
“நாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப்” (நெடு.82)
என நெடுநல்வாடை குறிப்பிடுகிறது.
கார்த்திகை
இருபத்தேழு நட்சத்திரங்களில் ஒன்றாக கார்த்திகை நட்சத்திரம் விளங்குகிறது.
“கண்டிசின் வாழியோ குறுமகள் ! நுந்தை
அறுமீன் கெழீஇய அறம்செய் திங்கட்” (நற்.202:8-9)
கரிய மலைப்பிளவுகள் சூழ்ந்து காணப்படும். காட்டின் வழியே கார்த்திகை நாளில் தலைவன், தலைவியை அழைத்து திங்களின் ஒளிப் பெற்று சென்றதை குறிப்பிடுகிறது.
“ஆடிய லழற்குட்டத்” (புறம்.229)
மேடவிராசி பொருந்திய கார்த்திகை நாளில் முதற்காலின் கண் என்று கார்த்திகை நட்சத்திரத்தை கூறுகிறது.
கோள்மீன்
கோள்கள் பற்றியும் அவற்றின் நிலவுகள் மற்றும் கோள் கூட்டம் பற்றிய கற்பதே கோள் அறிவியலாகும் (Pடயநெவயசல ளுஉநைnஉந) எனப்படும். பொதுவாகஇது சூரியக்குடும்பத்தின் கோள்களையே குறித்தாலும் ஏனைய கிரகங்களும் இதில் அடங்கும்.
கோள் என்னும் சொல் சூரியனைச் சுற்றிவருகின்ற திண்மப்பொருள்களைக் குறிக்கும். கோள்மீன் ஞாயிற்றிடமிருந்து ஒளியை பெற்றுக் கொள்ளும் இயல்புடையது. இதனை இப்போது கிரகம் என வழங்கி வருகிறோம்.
“கோண்மீ னன்ன பொலங்கலத் தளைஇ” (புறம்.392:17)
கோளாகிய மீன் போன்ற பொன்வள்ளத்திற் பெய்து உண்ணும் முறைப்படி அளிப்பதனால் கொள்வர் கொள்ளும் முறையில் அமையும். நாள் மீன்களின் ஒளியைக் கொண்ட கோள்மீன்கள் எனப்பட்டன.இதனை,
“நின்று நிலைஇயர் நின்னாண்மீ னில்லாது
படாஅச் செலீஇயர் நின்பகைவர் மீனே” (புறம்.24:24-25)
மேற்கண்ட புறப்பாடல் வரிகள் மூலம் அறியமுடிகிறது.
காற்று நுழைந்து செல்ல முடியாத காற்றற்ற வெளியாக இயங்குவது வானம். அவ்வானத்தின் தன்மையை அதன்கண் அமைந்துள்ள சூரியன், சந்திரன் போன்ற வானம் சார்ந்த அறிவு நுட்பத்தைச் சங்ககால மக்கள் அறிந்திருந்தனர். இதனை,
“மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக
இயங்கிய விருசுடர் கண்ணெனப், பெயரிய
வளியிடைய வழங்கா வழக்கரு நீத்தம்” (புறம்.365:1-3)
இதிலிருந்து அண்டவெளியிலே சூரியனும், சூரியக்குடும்பமும் அமைந்துள்ளன என்பது தெரியவருகிறது. வானில் நட்சத்திரக் கூட்டங்களும் இவற்றுக்கெல்லாம் அப்பால் அழகிய மண்டலங்கள் (கோள்கள்) காணப்படுகின்றன என்பதைப் பற்றியும் அறியலாம்.
சூரியனையும் அதனைச் சுற்றி உள்ள கோள்களையும் அறிவியல் அறிஞர்கள் (ளுழடயச ளுலளவநஅ) சூரியவட்டம் என்றும் அதனைச் சுற்றியுள்ள பாதை என்றும் மொழிகின்றனர். இவ்வாறு வானவெளியில் காணப்படும் இக்காட்சியைக் புறநானூற்றுக் கவிஞர்,
“செஞ்ஞாயிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்” (புறம்.30:1-2)
என்று பாடியுள்ளார்.
வானில் சூரியனைச் சுற்றி இயங்கக் கூடியவையாகப் பூமி, சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலான ஒன்பது கோள்கள் உள்ளன. இவையே கோள்மீன்கள் என்கின்றனர்.
கண்ணுக்குப் புலனாகும் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்களும் சந்திரனும் வானில் விண்மீன்களிடையே இருந்தமையைப் புறநானூற்றுப் பாடல்வரிகள் மூலம் அறியலாம்.
“மாகவிசும்பின் வெண்டிங்கள்
மூவைந்தான் முறை முறை
கடன்டுவட் கண்டன்னவெஙன” (புறம்.400:1-3)
கோள்மீன் என்பது செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஐந்தினையும் குறிப்பதாகப் பரிபாடல் கூறுகிறது.
கோள்களின் நிறம், வடிவம் பற்றிய நுட்பத்தினையும் அறிந்திருந்தனர். வெண்மைநிறம் உடையதை வெள்ளி என்றும், செந்நிறம் உடையதைச் செவ்வாய் என்றும் குறிப்பிட்டனர். இக்கோள்மீன்கள் பற்றியச்
செய்தியை நம் முன்னோர்கள் அறிந்து தங்களின் அறிவுநுட்பத்தால் தாங்கள் படைத்த இலக்கியங்களில் சீரிய முறையில் பதிவு செய்துள்ளனர்.
வெள்ளிக்கோள்
வெள்ளை நிறமுடைய கோள் வெள்ளிக்கோள் எனப்படும். மாலை அல்லது காலையில் தான் வெள்ளி வானில் தோன்றும். சூரியக்குடும்பத்தில் அதிக ஒளி உள்ள கோள் வெள்ளிக்கோள் ஆகும். இதனை,
“பயங்கெழு வெள்ளி யாநிய நிற்ப” (பதி.ப.69:14)
மேற்கண்ட பாடல்வரி வெள்ளிக்கோள் பற்றிகூறும்.
சூரியக்குடும்பத்தில் புதனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள கோள் வெள்ளியாகும். கோள்களின் மாற்றம், இயக்கம், விளங்கும் திசை ஆகியவற்றைக் கொண்டு மழைமொழிதல், வாழ்க்கை மாறுதல்கள் போன்றவற்றை முன்னதாகவே அறியும் அறிவுநுட்பத் திறனுடையவர்களாக வாழ்ந்துள்ளனர்.
வெள்ளிக்கோள் வடதிசையில் தோன்றினால் மழைபெய்து நாடுவளம் பெறும் என்ற செய்தியை,
“வெள்ளி தோன்றப் புள்ளுக்குர லியம்பப்
புலரி விடியற பகடுபல வாழ்த்தித்” (புறம்.385:1-2)
என்னும் புறநானூற்றுப் பாடலால் அறியலாம்.
மழைபெய்யும் என்ற கருத்தை, வெள்ளிகோள் வடதிசை நில்லாது தென்திசையின்கண் நின்றால்
“மைம்மீன் புகையினும், தூமம் தோன்றினும்
தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்
வயலக நிறையப், புதற்பூ மலர
மனைத்தலை மகவையீன்ற வமர்க்கண்
ஆமா நெடு நிரைநன்பு லாரக்
கோஓல் செம்மையிற் சான்றோர் பல்கிப்
பெயல்பிழைப் பறியாப் புன்புலத்ததுவே” (புறம்.117:1-7)
என்ற பாடலால் அறியலாம்.
“வெள்ளி தென்புலத் துறைய விளைவயற்
பள்ளி வாடிய பயனில் காலை” (புறம்.388:1-2)
“இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தண் காவிரி வந்து கவர்பூட்டத்” (புறம்.35:7-8)
மேற்கண்ட புறநானூற்றுப் பாடல் வரிகளில் வெள்ளிக்கோளின் இயக்கம் புலப்படுகிறது.
சனிக்கோள்
சனிக்கோள் கரிய நிறமுடையது. சனிக்கோள் புகைந்து எல்லா திசையிலும் பரவும், இவ்வாறு பரவுதலால் புகை தோன்றிப் பெருந்தீங்கு விளையும் என்பதை,
என்னும் பாடல் மூலம் அறியலாம்.
“மைம்மீன் புகையினுந், தூமம் தோன்றினும்” (புறம்.117:1)
செம்மீன்
செம்மீன் சிவந்த நிறமுடையது. வான்நடுவே செம்மீன் தோன்றும். அப்போது உச்சியிலே முழுநிலவானது அழகுடன் காட்சியளிக்கும்.
“செம்மீ னிமைக்கும் மாகவிசும்பின்
உச்சிநின்ற வுவவு மதிகண்டு” (புறம்.60:2-3)
“செவ்வா யுவணத் துயர்கொடி யோயே” (பரி.2:60)
இவ்வரிகள் சிவந்த வாயையுடைய கருடச்சேவலைப் பொறித்துள்ள உயர்ந்த வெற்றிக் கொடியினை உடையவனே என திருமாலைச் செம்மீனுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது.
வடமீன் (அருந்ததி)
வானத்து வடவயின் விளங்கும் ஏழுமுனிவருள் வசிட்ட முனிவரின் பத்தினி அருந்ததி, சாலினி என்று குறிப்பிடப்படுகின்ற இவ்வடமீனானது, பெண்களின் கற்போடு தொடர்புபடுத்தப்பட்டு மக்களால் வழிபடும்
தன்மையுடையதாகக் காணப்படுகிறது. அருந்ததி கற்புக்கரசி நட்சத்திரமாக விளங்குவதாகக் கருதப்படுகிறது.
தமிழர்கள் திருமணமான புதுமணமக்களை அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கச் செய்கின்றனர். ~ அம்மி மிதித்து அருந்ததி பார்த்து’ என்ற வழக்கு இன்றும் நம்நாட்டில் நிலவி வருகிறது. இதனைக் குறித்த இலக்கியச் செய்திகள் பல உள்ளன.
“வடவயின் விளங்கால் உறையெழு மகளிருள்
கடவுள் ஒருமீன் சாலினி ஒழிப” (பரி.5:43-44)
இரண்டு தோன்று விசும்பின் உயர்நிலை உலகத்து
“அருந்ததி யனைய கற்பின்” (ஐங். 442:3-4)
“வடமீன்புரையும் கற்பின் மடமொழி” (புறம்.1228)
“வடமீன்போல் தொழுது ஏத்தவயங்கிய கற்பினாள்” (கலி.1:21)
முடிவுரை
வானியல் பற்றிய அறிவு நுட்பம் சங்ககால மக்களிடத்தில் காணப்பட்டது. அண்டகத்திலுள்ள ஒன்பது கோள்களையும், இருபத்தி ஏழு நட்சத்திரங்களையும் சூரிய, சந்திரனுக்கு ஏற்ப அவற்றின் கண்நிகழும் நிகழ்ச்சிகளையும் எண்ணிப் பார்த்து இலக்கிய உவமைகளைத் தந்துள்ள பாங்கு போற்றத்தக்கதாக காணப்படுகின்றது. இலக்கியங்களில் காணப்படும் நட்சத்திரங்கள் சமயச்சார்போடு தொடர்புபடுத்தப்பட்டு பேசப்பட்டதையும் காணமுடிகிறது.
விண்மீன்கள் வானத்தில் மின்னிய ஒளிப்பொருளை நாள்மீன், கோள்மீன் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றுள், பரணி, உரோகிணி, திருவாதிரை, மகம், உத்திரம், கார்த்திகை, போன்ற நாள்மீன்களும் வெள்ளிக்கோள், சனிக்கோள், செம்மீன், வடமீன் (அருந்ததி) போன்ற கோள்மீன்களும் இக்கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
அடிக்குறிப்புகள்
1. சங்கப்பேழை, அனுராதா, ப., ப.111, பதிப்பு - 2008, சாரதா பதிப்பகம், சென்னை.
2. தமிழும் சமஸ்கிருதமும், (மொழி ஆய்வு நூல்), விக்டர், ம.சோ., பகுதி-, ப.5, பதிப்பு - 2007, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
3. இலக்கியங்களும் விண்மீன்களும் (கட்டுரை,) மாசிலாமணி.த, ப.243, பதிப்பு - 2013, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
4. வானியலும் தமிழரும், விக்டர், ம.சோ., பக்.12-13, பதிப்பு - 2010, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக