பரமத்தி
வேலூர் வட்டார மக்களின் வாழ்வியல் சடங்கு
முறைகள்
முனைவர் தி.சி.ராமச்சந்திரன்
முன்னுரை
நாட்டுப்புறப் பாடல்கள் சமுதாயத்தோடு மிக நெருங்கிய தொடர்புடையதாகும்.
நாட்டுப்புற மக்களின் வாழ்வோடும், தாழ்வோடும் நாட்டுப்புறப் பாடல்கள் பின்னிப் பிணைந்திருக்கின்றன.
தங்களின் இன்ப துன்பங்களை வெளிப்படுத்துவதற்கு நாட்டுப்பறப் பாடல்களைக் கிராமப்புற
மக்கள் ஒரு கருவியாகக் கைக்கொண்டனர்.
பண்டைக்
காலந்தொட்டே மனிதனிடம் சடங்கு முறைகள் இருந்து வருகின்றன. சமயம் வளர, வளரச் சடங்கும் வளர ஆரம்பித்தன. காலப்போக்கில் சமய வாழ்வில் மட்டுமின்றி
தனிமனித வாழ்விலும் சடங்குகள் இடம்பெறலாயின. இன்றைய காலக்கட்டத்தில் சமய வாழ்விலும்,
தனிமனித வாழ்விலும் சடங்குகளே மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன.
உலகில் எல்லா நாடுகளிலும் சடங்கு முறைகள் காணப்படுகின்றன.
பரமத்தி
வேலூர் வட்டார நாட்டுப்புற மக்களிடம் காணப்படும் சடங்கு முறைகளை நாட்டுப்புறப்
பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.
சடங்குகள்
தனி
மனிதனுக்கு உண்டாகும் நெருக்கடியான காலத்தில் செய்யப்படுவது சடங்காகும். சடங்குகள்
‘Ritual’
என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.
‘Ritual’
என்ற சொல்லுக்குச் சடங்குகள் சம்பந்தமான பிரார்த்தனை. சடங்கு,
சடங்குகளைக் குறிக்கும் புத்தகம் என்னும் பொருள்களை ஆங்கில அகராதி
தருகிறது. பிறந்த விநாடி முதல் இறக்கும் விநாடி வரை அவர்களுடைய வாழ்க்கை முழுவதும்
ஏதாவது ஒரு சடங்கைச் செய்து மனநிறைவு அடைகிறார்கள்.
“வேதத்தின் முற்பகுதிகள் முறைமைகளுள்
ஒன்றாகிய பூர்வ மீமாம்சை உருவாக்குகிறது.
இம்முறை கருமத்தை அல்லது சடங்குகளைச் செய்வதையே வேதத்தின் ஒரே விளக்கமாகக்
கொள்கிறது. ஒரு தெய்வத்தை மகிழ்விப்பதற்காக ஒரு பொருளைப் படைப்பதே வேள்விச் சடங்கு
அல்லது யக்ஞம் என்பதாகும்" என்று டி.எம்.பி. மகாதேவன் குறிப்பிடுகிறார்” (ஞா.ராஜாபகதூர்,1964) ஒரு செயல்
நன்மை விளைவிக்கின்றது என்று மக்கள் உணரும் நிலையில் அது பழக்கமாக மாறுகிறது.
காலப்போக்கில் அறிவியல். கல்வி ஆகியவை காரணமாக சமுதாயத்தில் முன்னேற்றம்
ஏற்படும்போது அது சடங்காக நிற்கிறது.
சடங்குகளின்
பிறப்பு
“சடங்குகள் எப்படி முதன் முதல் ஆரம்பமாயின என்று ஆராயும் போது வேட்டையாடும்
தொழிலை மேற்கொண்ட மக்கள் அவர்களால் கொல்லப்பட்ட விலங்குகளுக்கு ஆவி உண்டென்றும்
அதை மகிழ்விக்க அதன் உருவத்தைச் சமூகச் சின்னமாகக் கொண்டு அவர்களுக்குத் தோன்றிய
முறையில் அதற்குச் சடங்குகள் நிர்மாணித்துப் பூசையிட்டு வந்தார்கள்” (கோ.கேசவன், 2001) என்று கோ.கேசவன் கூறுகிறார்.
இயற்கையைக்
கட்டுப்படுத்தி வெற்றி கொள்ளவே மனிதன் சடங்குகளைத் தோற்றுவித்தான் என்னும் கருத்தை,
"இயற்கையுடன் போராடிய மனிதன் அவற்றை வெற்றி கொள்ள மந்திரச் சடங்குகளை
ஏற்படுத்தினான். இச்சடங்குகள் முதலில் கூட்டாகவே நடைபெற்றன. பின்னர் குழுக்களின்
தலைவன் இச்சடங்குகளை முன்னின்று நடத்தினான், நாளடைவில் இவன்
மந்திரவாதி என அழைக்கப்பட்டான். இவ்வாறு இயற்கையைக் கட்டுப்படுத்தி அவற்றிடம்
நன்மை பெற ஏற்படுத்தப்பட்ட சடங்குகள் சமயத்தைத் தோற்றுவித்தன” (தே.ஞானசேகரன், 2010) என்ற வரிகளில் தே.ஞானசேகரன்
சுட்டிக் காட்டுகிறார்.
சடங்குகள்
மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளன. சடங்கு என்பது
நிர்ணயிக்கப்பட்ட விரிவான நடவடிக்கைகளின் வடிவமாகும்.
சடங்குகளின்
பிரிவுகள்
ஒரு
தனிமனிதனுடைய வாழ்க்கையின் பல நிலைகளுக்கு ஏற்பச் சடங்குகள் உண்டாயிருப்பது போலவே
ஒரு சமூகத்தின்,
வாழ்க்கையின் பல நிலைகளுக்கு ஏற்பச் சடங்குகளும் உள்ளன.
"இனக்குழு மந்திரச் சடங்குகள் எதற்காகச் செய்யப்படுகின்றன என்பதைப்
பொறுத்து இரு வகைப்படும். பிறப்பு, தகுதிபெறல், திருமணம், இறப்பு ஆகிய பொதுவானவையும், வாழ்க்கை முழுமைக்குரியவையுமாகிய மனித வாழ்க்கையின் நிலை மாறுபாடுகளைக்
குறிப்பவை முதல் வகையாகும். சில விளைவுகளை எதிர் நோக்கி வழக்கமாகப் புதுப்பித்துக்
கொள்ளும் சடங்குகளான மழை வேட்டைவளம், விதைப்பு, அறுவடை ஆகியவை இரண்டாவது வகையாகும்" (கா. சுப்பிரமணியன், 2010) என்று சடங்குகளின் வகைகளைப் பற்றி கா.சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.
பரமத்தி
வேலூர் வட்டாரத்தில் சடங்குகளின் வகைகளைப் பின்வருமாறு பிரிக்கின்றனர்.
1.
சமயச் சடங்குகள்
2.
வளமைச் சடங்குகள்
3.
வசியச் சடங்குகள்
4.
வாழ்வுச் சடங்குகள்
5.
இறப்புச் சடங்குகள்
1. சமயச் சடங்குகள்
சடங்குகள்
இல்லாத சமயங்கள் இல்லை என்று கூறலாம். உலகில் உள்ள ஒவ்வொரு மதமும் தனக்கென்று
குறிப்பிட்டுள்ள சில சடங்குகளைக் கொண்டுள்ளது. ஆதிகாலத்திலிருந்து இன்றைய காலம்
வரைச் சடங்குகள் சமயத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகத் திகழ்கின்றன. பரமத்தி
வேலூர் வட்டாரத்தில் சமயச் சடங்குகள் படையல்,
பிரசாதம்,
காவடி எடுத்தல், கரகம் எடுத்தல் போன்ற
முறைகளில் காணப்படுகிறது.
படையல்
சமயச்
சடங்கான இவ்வட்டார வழிபாட்டுச் சடங்கில் முக்கியமாகத் திகழ்வது படையலாகும்.
தெய்வங்களுக்கு முன்பு கனிகள், தேங்காய், உணவு போன்ற பொருள்களைப் படையலாகப் படைப்பர்.
“வடக்கே மழை பொழியும்
காவிரியாத்து
தண்ணியிலே
வாழைக்கனி
மிதந்து வரும்
வாழைக்கனி
தார் எடுத்து
வகையுடனே
பூசை செய்தோம் ”
( வி.எஸ்.
மணி, 2021)
என்று
இவ்வட்டார மக்கள் பூசை செய்யும் முறையினைப் பற்றி இப்பாடல் குறிப்பிடுகிறது.
பிரசாதம்
இறைவனுக்குப்
படைக்கப்பட்ட பொருள்களைப் பிரசாதம் என்று கூறுவர். இப்பிரசாதத்தை அனைவரும்
விரும்பி உண்பர். இவ்வாறு உண்பதால் இறைவனின் சக்தி, அருள் ஆகியன
தங்களுக்குக் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். பண்டைக்காலத்தில் தாங்கள்
பாதுகாத்து வந்த மூதாதையர்களின் மண்டையோடுகளையும், எலும்புகளையும்
சுரண்டி எடுத்து தண்ணீரில் கலந்து குடிப்பர். இவ்வாறு குடிப்பதன் மூலம் தங்கள்
மூதாதையர்களின் வீரம் தங்களுக்கும் வரும் என்று நம்பினர். இதன் எச்சமாகவே கடவுள்
பிரசாதங்களைப் பூசிக்கும் பழக்கம் இன்றைக்கும் காணப்படுகிறது,
வேண்டுதல்
தான்
நினைத்த காரியம் நிறைவேறினால் இன்னது தருவேன் என்று தெய்வத்தை வேண்டிக் கொள்ளும்
வழக்கம் இவ்வட்டார மக்களிடம் அதிகம் உள்ளது. இதனைப் ' பிரார்த்தனை’, 'வேண்டுதல்', 'நேர்த்திக் கடன்’ என்றும் கூறுவர்.
காவடி
எடுத்தல்
“காவடி என்பது இருபுறமும் சுமைகளை ஒரு கழியில் கட்டித் தூக்கிச் செல்வது
போன்ற அமைப்பில் உள்ள மயிலிறகுகளால் அமைந்த வில் போன்ற வடிவத்தைக் காவடி என்பர்"
(க, இந்திரசித்து, 2000) என்று க. இந்திரசித்து காவடியின் சிறப்புப் பற்றி கூறுகிறார்.
தை
மாதத்தில் பூச நட்சத்திரம் என்று வரக்கூடிய நாளில் பரமத்தி வேலூரில் உள்ள கபிலர்
மலையில் தைப்பூச காவடித் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
"
பச்சைமலை பவளமலை எங்களது நாடு
பரமசிவன்
வாழுவது எங்களது நாடு
குச்சிமலை
குடகுமலை எங்களது நாடு
குமரேசன்
வாழுவது எங்களது நாடு " ( வி.எஸ். மணி, 2021)
என்ற
நாட்டுப்புறப்பாடல் கபிலர்மலை தைப்பூச காவடித் திருவிழாவின் போது மக்கள்
பாடுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
கரகம்
எடுத்தல்
பூக்களால்
அலங்கரிக்கப்பட்ட குடங்களைத் தலையில் வைத்துக் கொண்டு கைகளில் வேப்பிலை எடுத்துக்
கொண்டு ஆடிப்பாடியபடியே கோவிலுக்கு வருவர். இதனைக் 'கரகம்
எடுத்தல்' என்று அழைப்பர்.
கரகம்
எடுத்தல் நிகழ்ச்சி இவ்வட்டாரத்தில் உள்ள கோவில் திருவிழாக்காலங்களில்
நடைபெறுகிறது. இவ்வழிபாட்டுச் சடங்கு மாரியம்மன் கோவிலில் மிகுதியாகக் காணப்படும்.
“ஒண்ணாம் கரகமம்மா எங்கள் முத்துமாரி
ஓடிவந்து
கரகம் எடுப்பாள் எங்கள் முத்துமாரி
கரகம்
பறந்துவர எங்கள் முத்துமாரி
கரகத்தின்
உள்ளிருந்து எங்கள் முத்துமாரி” (சந்தானம், 2021)
என்ற பாடல்
கரகமெடுத்தாடும் சடங்கைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.
2. வளமைச் சடங்குகள்
வாழ்க்கை
மகிழ்ச்சியாகவும்,
செழிப்பாகவும் இருப்பதற்குச் செய்யும் சடங்குகள் வளமைச்
சடங்குகளாகும் என்றும், இயற்கை நமக்கு உதவ வேண்டுமாயின்
தாமும் இயற்கையைப் போல நடக்க வேண்டும் என்றும். தாம் செய்வதைப் பார்த்து
இயற்கையும் அதே போலச் செய்யும் என்றும் மக்கள் நம்பினர். இந்த நம்பிக்கையை வளம்
செழிப்புப் பற்றிய நம்பிக்கை என்றழைப்பர். இந்நம்பிக்கையின் காரணமாகச்
செய்யப்படும் சடங்குகள் வளமைச் சடங்குகள் எனப்படும்.
பரமத்தி
வேலூர் வட்டாரத்தில் வேளாண்மை, மக்கள் உயிர் வாழ்வதற்கும் மழை
அவசியமாகிறது. அத்தகைய சிறப்புடைய மழை பொய்த்து விட்டால் மாவைக் கரைத்து வாசலில்
அல்லது ஊரிலுள்ள பொது இடங்களில் கோலமிடும் வழக்கம் காணப்படுகிறது. இவ்வாறு
செய்தால்தான் மழை பெய்து அக்கோலத்தை அழிக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.
'சட்டியிலே மா கரைச்சி
வாசலிலே
கோலம் போட்டு
கோலம்
அழையலியே கொல்ல
மழை
பேயலியே”
(கணேசன்,
2021)
என்ற பாடல்
சுட்டிக் காட்டுகிறது.
3. வசியச் சடங்குகள்
கூட்டுக்
குடும்பங்களுக்கிடையே ஏற்படும் பிளவுகளைச் சரிசெய்ய வசியம் வைக்கும் வழக்கம்
இருந்து வருகிறது. இதனால் மன வேறுபாடுகளை மறந்து ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த
முடியும் என்று நம்புகின்றனர்.
செய்வினைச்
சடங்குகளின் ஒரு பிரிவாக வசியச் சடங்குகள் கருதப்படுகின்றன. வசியச் சடங்குகள் வசிய
மருந்து கொடுத்தல்,
மந்திரச் சடங்கால் வயப்படுத்துதல் என இருவகைப்படும்.
"நாட்டுப்புறங்களில் மருந்து வைத்தல் என்பது ஆண் பெண் இருவர் தம் மனநிலைகளை
ஒன்று சேர்ப்பதற்காக மறைமுகமாகத் தரப்படும் வசிய மருந்தைக் குறிப்பிடுகின்றது.
வசியத்திற்கும் ஆட்படுவோரின் காலடி மண், நகம். முடி. அழுக்கு
இவற்றில் ஒன்று பச்சிலை மூலிகைகளுடன் சேர்த்து அரைத்து உணவில் கலந்து தருவதை
மருந்து வைத்தல் என்று குறிக்கின்றனர்” (க.கிருட்டிணசாமி,
2016) என்ற வரிகளில் க.கிருட்டிணசாமி மருந்து வைத்தலைப் பற்றி
விளக்கிக் கூறுகிறார்.
“வேசி வச்ச பொடி
அவள்
முந்தானையை சுத்தி சுத்தி
மனைவியை
மறக்க வைத்த பொடிமருந்து "
(அழகம்மாள், 2021)
என்ற
இவ்வட்டார நாட்டுப்புறப் பாடல், வேசி ஒருத்தி ஓர் ஆண் மகனுக்கு
மருந்து வைத்து வசியப்படுத்திக் கொண்டதைக் குறிப்பிடுகிறது.
4. வாழ்வியல் சடங்குகள்
வாழ்வியல்
சடங்கு என்பது மனிதர்கள் தமக்கு வளமும், நலமும் வேண்டி
பிறப்பு முதல் இறப்பு வரைப் பல சடங்குகளைச் செய்கின்றனர். இவைகளை வாழ்வியல்
சடங்குகள் எனலாம். வாழ்வியல் சடங்குகள் அனைத்தும் வளம் வேண்டியும்.நலம் வேண்டியும்
செய்யப்படுவதாக இருந்தாலும் ஒவ்வொரு சடங்கும் ஏதாவது ஒரு வாழ்வியல் நலனை
வேண்டுவதாக அமைந்துள்ளது.
வாழ்வியல்
சடங்குகளாகப் பிறப்பு,
பூப்பு, திருமணம் என்று ஒவ்வொரு நிலையிலும்
செய்யப்படும் சடங்குகள் பற்றிப் பரமத்தி வேலூர் வட்டாரத்தில் ஆய்வு
செய்யப்படுகின்றது.
பிறப்புச்
சடங்கு
குழந்தை
பிறப்பதற்காகத் தாய்மார்களும், குழந்தை பிறந்த பிறகு, குழந்தைக்கு மற்றவர்களும் செய்யும் சடங்கை பிறப்புச் சடங்கு என்று
அழைக்கலாம்” (க. இந்திரசித்து, 2000) என்று
க. இந்திரசித்து குறிப்பிடுகிறார்.
பிறப்புச்
சடங்குகளால் குழந்தையைத் தொட்டிவிடுதல். காதுகுத்தும் சடங்கு, பூப்புச் சடங்கு, திருமணம், வளைகாப்பு
என்ற முறைகளில் பகுத்து ஆராயலாம்.
குழந்தையைத்
தொட்டிலிடுதல்
முந்தித்
தவமிருந்து முந்நூறு நாள் சுமந்து அந்திபகலாய் ஆண்டவனை வழிபட்டுத் தொந்தி சரியா
சுமந்து பெற்ற தாய்,
தன் குழந்தையைத் தன் கை மீதும், தோள் மீதும்,
மார்மீதும், மடிமீதும் போட்டுத் தாலாட்டி
உறங்க வைக்கின்றாள். இவ்வாறு குழந்தை பிறந்தவுடன் தொட்டில், பூமியில்
கிடத்தும் சடங்கு பல இடங்களிலும் சாதிக்கு ஏற்றாற்போல் பல் வகைகளில்
இவ்வட்டாரத்தில் நடத்தப்படுகின்றது.
குழந்தை
பிறந்த பதினாறாம் நாள் தீட்டுக் கழிவதாக நம்பி அன்று வீட்டைத் தூய்மைப்படுத்தி
வீட்டிற்கு வெள்ளையடித்து,
தாயையும், குழந்தையையும் நீராட்டி வீட்டிற்கு
அழைப்பர். அன்று மாலை குழந்தையைப் தொட்டிலிடும் சடங்கு நடைபெறும்.
தெருவிலுள்ளோர்க்கும், தாய்மாமனுக்கும் சொல்வி அனுப்புவர்.
தாய்மாமனுக்கே இச்சடங்கில் முதலிடம் தரப்படுகிறது. சிலர் மரத்தொட்டில் கட்டுவதும்,
சிலர் துணியால் தொட்டில் கட்டுவதும் வழக்கம்.
மாமன்
கொண்டுவரும் அணிகலன்களையும் புது ஆடைகளையும் அணியச் செய்து குழந்தையைத்
தொட்டிலிட்டுப் பாடி மகிழ்வர்.
"
காஞ்சியிலே பட்டெடுத்துக்
கப்பல்
போல் தொட்டி கட்டி
தொட்டி
வரிந்து கட்டித்
துரைமகனைப்
போட்டு ஆட்டுங்கடி”
(செல்லாயி, 2021)
என்ற பாடல்
மூலம் இவ்வட்டாரத்தில் குழந்தையைத் தொட்டில் இடும் சடங்கு சிறப்பாக நடைபெறுகிறது
என்பதை அறியலாம்.
காது
குத்தும் சடங்கு
மரபாக
உள்ளது. ஆண்,
பெண் குழந்தைகளாகிய இருபாலருக்கும் இச்சடங்கை நிகழ்த்துகின்றனர்.
பரமத்தி
வேலூர் வட்டாரத்தில் குழந்தைக்குக் காது குத்துவதை ஒரு விழாவாகக் கொண்டாடும்
பழக்கம் காணப்படுகிறது. அழகான குழந்தைகளைக் கண்டு எமன் ஆசை கொள்வான் என்றும்
குழந்தையின் உடலில் சிறுகாயம் ஏற்படுத்தி விட்டால் எமன் குழந்தைகளுக்குத் தீங்கு
செய்யமாட்டான் என்றும் நம்பி காது குத்து விழாவைக் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
காது
குத்தும் சடங்கு பெரும்பாலும் குல தெய்வக் கோயிலில் தான் நடைபெறுகிறது, முதலில் குழந்தைக்கு முடி எடுத்த பிறகு நீராடித் தாய்மாமன் குழந்தையைக்
காது குத்தும் சடங்கு நிகழ்த்துவதும் தமிழ்ச் சமுதாயத்தின் எடுத்துவரும்
புத்தாடையை அணிந்து மாமன் மடியில் அமரச் செய்து காது குத்தும் சடங்கு
நடைபெறுகிறது.
“கண்ணான கண்ணனுக்குக்
காது
குத்தப் போகுதென்று
இருநூறு
கோட்டையிலே
இரும்புக்
கோட்டை நெல் எடுத்துக்
குத்து
மென்பார் பச்சரிசி " (செல்லாயி,
2021)
என்ற
நாட்டுப்புறப் பாடல் காது குத்தும் சடங்கைக் குறிப்பிடுகிறது.
பூப்புச்
சடங்கு
பெண்
பூப்படைதலை பூத்தல்,
புஷ்பவதியாதல், சமைதல், திரளுதல்,
ஆளாதல், மஞ்சள் சடங்காதல் என்றெல்லாம் குறிப்பிடுவர். பெண் குடும்ப வாழ்க்கைத்
தொடங்குவதற்குப் பக்குவமாகி விட்டாள் என்பதை முதல் ஐந்து சொற்களும், அது தொடர்பானச் சடங்கினை அடுத்தச்
சொல்லும் சுட்டுகின்றன. தங்கள் வீட்டில் பருவமடைந்த ஒரு பெண் மணத்திற்குத் தயாராக
இருக்கிறாள் என்பதை உலகோர்க்கு அறிவித்தலே இச்சடங்கின் நோக்கமாகும். பெண்கள்
பருவத்தில் பூப்படைவது சிறப்பாகக் கருதப்படுகிறது. அவ்வாறு பூப்படையாத பெண் உடல்
நலமில்லாதவளாகக் கருதப்பட்டு சமுதாயத்தினரின் ஏளனத்திற்கு ஆளாவாள்.
உழைக்கும்
சமுதாயத்தில் உடல்நலனுக்கு முதன்மை தருவதே இதற்குக் காரணம். பூப்படைந்த பெண்
தனியிடத்தில் அமர்த்தப்படுவாள். நீராட்டிய பின் வீட்டினுள் அழைக்கப்படுவாள்.
ஒன்பதாம் நாளுக்குமேல் ஒரு நல்லநாளில் மாலை வேளையில் பூப்புச் சடங்கு நடைபெறும்.
வேப்பிலையைப் பூப்படைந்த பெண்ணின்
அருகில்
வைப்பர். காரணம் பேய் பிசாசு அவளை அணுகாது என்ற நம்பிக்கை. வண்ணான் எனப்படுபவர்
இச்சடங்கில் சிறப்புப் பெறுகிறார். உறவினர்களுக்குச் செய்தி கூறச்
செல்லுமிடங்களில் அவன் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். பெண் பூப்படைந்து
விட்டால் பார்ப்பனரைக் கூப்பிட்டு நேரம் குறித்து வைப்பர். தாய்மாமனுக்கு முதல்
செய்தி கூறப்பட வேண்டும். இச்சடங்கு பெரும்பாலும் தாய்மாமன் செலவில் தான்
நடைபெறும்,
'புட்டு சுற்றுதல்' என்பது பூப்புச் சடங்கில்
சிறப்பிடம் பெறும் நிகழ்ச்சியாகும். இது ‘ திரட்டி சுற்றுதல்
’ என்றும் கூறப்படும். பெண்களே இதில் பங்கு பெறுவர்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்வோர்க்கும் புட்டு வழங்கப்படும்.
பூப்படைந்த
உடனே திருமணத்தை முடித்து வைக்கின்ற நிலையில் சில வீடுகளில் காணப்படுகின்றது.
பூப்புச் சடங்கு என்பது திருமணம் போன்று மிகவும் சிறப்பாக நடைபெறும் ஒரு சடங்காக
விளங்குகின்றது,
"
பச்சக் குடிசையிலே
பாரிமகளை
விட்டுவந்த
முறைமாமன்
பூப்புச்சடங்கு
செய்யலையோ"
(நாகலட்சுமி, 2021)
என்று
பூப்புச் சடங்கு பற்றி பாடல் குறிப்பிடுகிறது.
திருமணச்
சடங்கு
பரமத்தி
வேலூர் வட்டாரத்தில் நடைபெறும் திருமணங்களில் பல்வேறு வகையானச் சடங்கு முறைகள்
காணப்படுகின்றன. ஒவ்வொரு சாதிக்கும் தத்தமக்கே உரிய தனித்தனியான சடங்கு முறைகள்
உள்ளன.
“திருமணத்தில் அம்மி மிதிப்பதும் அக்னியைச் சாட்சியாக வைப்பதும் வேதகால
வழக்கமாகும். ஆனால் இவ்விரு வழக்கமும் வடநாட்டு வழக்கமென்றும் மணமகன், மணமகள் இருவரையும் ஒருங்கே நிறுத்தி அவர்கள் கழுத்திலே ஒரு நுகத்தடியை
வைப்பதே பழங்காலத் தமிழர் வழக்கம்" (ச.கு. கணபதி,
1993) என்றும் ச.கு. கணபதி குறிப்பிடுகின்றார்.
"மணமக்கள் கைகளின் சுட்டு விரல்கள் இரண்டிலும் ஓரங்குலம் கத்தியால் செதுக்கி,
செதுக்கிய இடத்தில் இரண்டையும் சேர்த்துப் பிணைத்து இருவர்
குருதியும் கலந்து ஒழுகச் செய்வர். தமிழ் நாட்டின் திருமணத்தில் செதுக்குதல்
அகற்றப்பட்டு விரல்கள் பிணைத்து வைக்கப்படுகின்றன. மேற்கூறிய திருமணச் சடங்கு முறை
பண்டைத் தமிழர்களிடம் காணப்பட்டது” (கா.அப்பாத்துரை,
2008) என்று கா.
அப்பாத்துரை கூறுவர்.
பெண்
பார்க்கும் சடங்கில் மாப்பிள்ளையின் பெற்றோர் உறவினர் முதலியோரே செல்வர், சில இடங்களில் மட்டுமே மாப்பிள்ளையும் செல்கிறார்.
இரு
வீட்டாரும் பெண்ணுக்குப் போடப்படும் நகைகள் பற்றியும், கொடுக்க வேண்டிய பொருட்கள் பற்றியும் பேசுவர், மணமகளின்
பொருத்தங்களைப் பார்க்கிற வழக்கமும் காணப்படுகிறது. பொருத்தம் சரியில்லை என்று
கூறி நின்று போன திருமணங்களும் காணப்படுகின்றன. பெண் முடிவானதும் பெண் வீட்டில்
இருவரும் தாம்பூலம் மாற்றிக் கொள்வர். இந்நிகழ்ச்சிக்கு 'பாக்கு
மாற்றுதல்` எனப்படும், இந்நிகழ்ச்சிக்கு
ஊரிலுள்ள நெருங்கிய உறவினர்கள் அழைக்கப்படுவர். பெண் முடிவு செய்தாயிற்று
என்பதற்கான முதல் விழா இது. இதைத் தொடர்ந்து ஒரு நல்ல நாளில் உற்றார், உறவினர் முன்னிலையில், பரிசம் போடுதல்' என்னும் நிகழ்ச்சி நடைபெறும்.
இவ்விழா
'நிச்சயதார்த்தம்’ என்றும் அழைக்கப்படும். உற்றார்
உறவினர்க்கு வெற்றிலை பாக்கு வைத்துத் திருமணச் செய்தியை அறிவிப்பர். முதல்
அழைப்பு தாய்மாமனுக்கு உரியதாகும். முறைகாரர்களுக்கு வெற்றிலை பாக்குடன் பணமும்
வைத்து அழைப்பர். பெண்ணுக்கு வளையலிடும் நிகழ்ச்சி மிக இன்றியமையாத நிகழ்ச்சியாக
இருக்கிறது. மணமகன் வீட்டிலிருந்து மூவரோ அல்லது ஐவரோ பெண் வீட்டிற்கு வந்து
பெண்ணழைத்து வருவர். மணமக்களை அலங்கரிக்கப்பட்ட பலகையில் அமரச் செய்வர். அப்பலகை 'மணப்பலகை' எனப்படும். மாலை மாற்றுதல், மணமகன், மணமகளுக்குத் தாலிகட்டும் சடங்கு நடைபெறும்.
திருமணம் பொதுவாக மணமகன் வீட்டில்தான் நடைபெறும். இருதரப்பு உறவினர்களும்
தங்களுக்குள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்வர். இவ்வகையில் திருமணம் நடைபெறும்
என்று பாடல்கள் தெரிவிக்கின்றன.
"பட்டுப் புடவையிலே
சொட்டுண்ணு
விழுந்ததாம்
பாப்பானை
அழைங்கடி
மேளத்தைக்
கொட்டுங்கள்
தாலியைக்
கட்டுங்கள்" (வள்ளியம்மாள், 2021)
என்ற பாடல்
காட்டுகிறது. பரமத்தி வேலூர் வட்டார மக்களின் வாழ்வில் திருமணச் சடங்கு மிகவும்
சிறப்பானதாகும்.
வளைகாப்பு
சடங்கு
குழந்தை
பிறப்பதற்கு முன்பு தாயின் வயிற்றில் இருக்கும் போதே சில சடங்குகளைச் செய்யும்
வழக்கம் இவ்வட்டார மக்களிடையே உண்டு. இச்சடங்கை சீமந்தம், வளைகாப்பு, கட்டிச் சோறு கட்டிப் போடுதல் என்ற பல
பெயர்களில் அழைக்கின்றனர். கணவன் வீட்டில் முதல் முறையாகக் கருவுற்றிருக்கும்
பெண்ணுக்குக் கருவுற்ற ஏழாவது, ஒன்பதாவது மாதத்தில்
இச்சடங்கைச் செய்வர்.
பரமத்தி
வேலூர் வட்டாரத்தில் உள்ள சில கிராமங்களில் மக்கள் இச்சடங்கை கட்டுச் சோறு கட்டிப்
போடும் சடங்கு'
என்கின்றனர். கருவுற்ற ஏழாம் மாதத்திலோ, ஒன்பதாம்
மாதத்திலோ தாய் வீட்டார் தம் மகளுக்கு இச்சடங்கு செய்யப் போவதாக நாள் குறித்து
உறவினர்களுக்குச் சொல்லி அனுப்பி, சித்தப்பா, பெரியப்பா, சின்னம்மா, பெரியம்மா,
முறையுடையவர்கள் ஆகியோர் அந்நாளில் புளிச்சாதம், தயிர்ச்சாதம், தக்காளி சாதம், தேங்காய்
சாதம், எலுமிச்சை சாதம் ஆகிய ஐந்து வகையான சாதங்களைத்
துணிகளில் இலை போட்டு முடிந்து ஓலைப் பெட்டிகளில் வைத்துக் கொண்டு கர்ப்பவதியின்
வீட்டிற்குச் செல்வர். பெண்ணை அலங்காரம் செய்து உட்கார வைத்து அவரவர் கொண்டு வந்த
சோற்றை ஊட்டுவர். வந்தவர்கள் அவளுக்கு வளையல் அணிவிப்பர். தாமும் வளையல்கள்
அணிந்து கொள்வர். பின்பு அவளைத் தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்வர்.
"
சீமந்தம் பண்ணப் போறேன்.
செல்வி
அம்மா நம்ம பிள்ளை
பார்த்திருந்த
பெண்கள் எல்லாம்
பாங்குடனே
பூப்போட”
(குபேந்திரன், 2021)
என்று
இவ்வட்டார வளைகாப்புப் பாடல் சுட்டிக் காட்டுகிறது.
5. இறப்புச் சடங்குகள்
மக்களது
வாழ்க்கையில் ப்பு என்பது தவிர்க்க முடியாமல் நடந்தே தீரும் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும்.
“பண்டைக் கால தமிழினமும் அவர்களின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படும்
திராவிட இனமும் பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல் ஊழியில் வாழ்ந்திருக்கும் போதே
பிணங்களைக் குளிப்பாட்டி நல்லாடை புனைந்து, நறுமணமூட்டி,
அழுது தொழுது, நெய்பந்தம் காட்டி, ஒப்பாரி பாடி, மாரடித்து, மலர்
மாலைகள் சூட்டி, மலர் மாலைகள் தொங்கும் சப்பரத்தில் வைத்து
தூக்கிச் சென்று புதைத்தும், தாழிகளில் வைத்து புதைத்தும்
கல்லறை கட்டி அவற்றில் வைத்து மூடியும் வாழ்ந்தனர்” (அ.
இராகவன், 2009) என்று சாவுச் சடங்கு பற்றி அ.
இராகவன் குறிப்பிடுகிறார்.
இறப்புச்
சடங்குகளில் இறந்தவரின் வாயை வெள்ளைத் துணியால் இறுகக் கட்டுவர். கைகளை மார்பின்
மேல் வைத்து,
கைப்பெருவிரல்களைப் பிணைத்துக் கட்டுவதைப்போல் கால் பெருவிரல்களையும்
இணைத்துக் கட்டுவர். இறந்தவரின் தலைமாட்டில் ஒற்றை விளக்கு ஏற்றப்படும்.
கற்பூரம்.
ஊதுவத்தி ஏற்றி முறையான பங்காளியால் தேங்காய் உடைக்கப்படுகிறது. உடைப்பட்ட
தேங்காய் நன்றாக இருந்தால் விதி முடிந்தது என்றும், தாறுமாறுமாக
உடைந்தால் நல்லவனை எமன் அழைத்துச் சென்று விட்டான் என்றும் இவ்வட்டார மக்கள்
கருதுகின்றனர்.
மாரடித்தல்
சடங்கு
பரமத்தி
வேலூர் வட்டார மக்களிடம் இறந்தவர்கள் வீட்டில் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுகிற
வழக்கம் காணப்படுகிறது. மாரடித்தல் சடங்கு பண்டைக் காலத்திலிருந்தே இருந்து
வருகிறது. பெண்கள் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தும் செய்கையாக மாரடித்தல்
காணப்படுகிறது. மார்மீதும்,
முகத்தின் மீதும் தங்கள் கைகளால் ஓங்கி ஓங்கி அடித்துக் கொள்வர்.
இறந்தவர் இழப்பின் வேதனையை இதயம் தாங்கவில்லை என்பதைக் குறிப்பால் உணர்த்தும்
சடங்கும் மாரடித்தலாகும்.
“உச்சி எண்ணெய் அறிவேன்
உள்ளத்
தவா நானறிவேன்
உரிமையுள்ள
அம்மாவுக்கு நான்
ஓடிவந்து
மார் கொடுப்பேன்”
(அஞ்சலை, 2021)
என்ற
நாட்டுப்புறப் பாடல் மூலம் இவ்வட்டார மாரடித்தல் சடங்கு நடைபெறுகிறது என்பதை
அறியலாம்.
குளிப்பாட்டும்
சடங்கு
பிணத்தைப்
பாடையில் கொண்டு செல்லும்முன் குளிப்பாட்டுகின்றனர். இறந்தவரின் தலையில்
நல்லெண்ணையும் சீகைக்காயும் வைத்து கோயிலுக்கு அருகிலுள்ள கிணற்றிலோ அல்லது
ஆற்றிலோ நீர் எடுத்துப் பிணத்தைக் குளிப்பாட்டுவர். மக்கள்
உடம்பைப் புனித நீரால் குளிப்பாட்டித் தூய்மைப்படுத்துகிற வழக்கம் இவ்வட்டார
மக்களிடத்தில் காணப்படுகிறது.
பரமத்தி
வேலூர் வட்டாரத்தில் காவிரி ஆறு அருகில் இருப்பதால் அங்கிருந்து தண்ணீர் கொண்டு
வருவர். மாமன்,
மைத்துனர், பேரன், பேத்தி,
மகன், மருமகள் ஆகிய அனைவரும் குடங்கள்
எடுத்துச் சென்று நீர் சுமந்து வந்து பிணத்தின் மீது ஊற்றிக் குளிப்பாட்டுவர்.
"
பொன்னு குடமெடுத்து நான்
காவிரி
நதி தீர்த்தங் கொண்டு
பொணத்தையே
குளிப்பாட்டி ”
(கல்யாணி, 2021)
என்ற
பாடலின் மூலம் பிணத்தைக் குளிப்பாட்டுகிற சடங்கு அறியப்படுகிறது.
கோடி
போடுதல்
இறந்தவர்
வீட்டிற்கு வருகிற இரத்தத் தொடர்புடைய உறவினர் கோடித்துணி போடுகிற வழக்கம்
இவ்வட்டார மக்களிடம் அதிகம் காணப்படுகிறது. கோடித்துணி என்பது புது ஆடை வாங்கிப்
போடுவதாகும். ஆண்கள் இறந்தால் வெள்ளை வேட்டியும். பெண்கள் இறந்தால் சேலையும்
வாங்கி பிணத்தின் மீது போடுவார்கள்.
“எங்களுக்கு ஓடி வந்து
கோடி
போட நீங்க
வாழ்ந்த
கோட்டையிலே
ஒத்த
பிறப்புமில்லே”
(சரோசா,
2021)
என்ற
பாடலின் மூலம் கோடி போடுதல் சடங்கை அறியலாம்.
பாடை
கட்டுதல்
இறந்தவரை
இடுகாட்டிற்குக் கொண்டு செல்வதற்குப் பாடை பயன்படுகிறது. கட்டும் வழக்கம் சங்க
காலத்திலிருந்தே காணப்படுகிறது. பாடையை அவரவர் வசதிக்கேற்பக் கட்டுவர். பரமத்தி
வேலூர் வட்டாரத்தில் பச்சை மூங்கில் வெட்டிப் பாடை கட்டும் சடங்கு இன்று வரை
நடைபெறுகிறது.
"தச்சானை அழையுமுன் பார்
தலை
நிறைந்த பாடை கட்டுமும் பார்
பாங்கான
பாடை கட்டிப்
பட்டுக்
குஞ்சம் சுத்திக் கட்டி” (சரோசா, 2021)
என்ற
நாட்டுப்புறப் பாடல் மூலம் பாடை கட்டும் சடங்கு காணப்படுகிறது.
மரண
ஊர்வலம்
பிண
ஊர்வலத்தில் தாரை. தப்பட்டை,
கொம்பு. சங்கு முதலிய வாத்தியங்கள் அமங்கலமாக முழங்கும். பிணத்தைத்
தூக்கிச் செல்பவர்கள் முச்சந்திகளில் மும்முறை சுற்றிப் பிறகு தொடர்ந்து
செல்லுவார்கள். இவ்வட்டாரத்தில் உள்ள மக்கள் பிண ஊர்வலத்தில் பொரி இரைத்தும்.
பூக்களைத் தூவியும், வேட்டு வைத்தும் செல்வார்கள்.
சுடுகாட்டில் பிணத்தை எரிப்பவனை ' வெட்டியான் ' என்ற பெயரால் அழைக்கின்றனர். இவ்வூர்வலத்திற்குப் பெண்கள் வருவது
தடுக்கப்படுகிறது.
"மல்லிகை பொடி நுணுக்கி
தெருவோரம்
வேட்டு எழுப்பி
சுடுகாடு
போகு மட்டும்
வழி
நிறைய வாரி வாரி
பணத்தை
செலவழிப்பர்” (சரோசா, 2021)
என்ற
இப்பாடலின் வாயிலாக பிண ஊர்வலத்தின் போது வெடி வைக்கிற சடங்கு இவ்வட்டார மக்களிடம்
இருப்பதைக் காணலாம்.
புதைக்கும்
வழக்கம்
பிணத்தைப்
புதைக்கும் வழக்கம் பண்டை காலந்தொட்டே தமிழகத்தில் காணப்படுகின்றது. புதைக்கும்
போது பிணத்தின் தலை தெற்கே இருக்குமாறு மல்லாக்கப் படுக்க வைப்பார்கள்,
குழந்தை
பிறந்த சில நாட்களில் இறந்து விட்டால் இடுகாடு கொண்டு செல்லாது வீட்டின்
பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் புதைத்து விடுகின்றனர்.
“பிச்சி வைக்கும் தோட்டமெல்லாம் உன்னை
பிள்ளை
வைத்தே மண்ணணைத்தார் இங்கு
உன்னை
வைத்தே மணல் போட்டார் "
(ருக்மணி, 2021)
என்னும்
பாடல் மூலம் புதைக்கும் வழக்கத்தை உணரலாம்.
கொள்ளி
வைத்தல்
தாய்க்குத்
தலைப்பிள்ளையும்,
தந்தைக்குக் கடைசிப் பிள்ளையும் கொள்ளியிடுதல் வழக்கமாக உள்ளது.
ஒருவர் பிள்ளை இன்றி இறந்து விட்டால் அவருக்கு யார் கொள்ளி வைப்பது எனும்
பிரச்சினை எழும்போது பொதுக் கொள்ளி வைக்க முடிவு செய்கின்றனர்.
வசதியானவர்கள்
சந்தனக் கட்டைகளாலும்,
வசதியற்றோர் விறகினாலும் பிணத்தை எளிப்பர் சிலர் சந்தனக் கட்டை
வைப்பது விசேஷம் என்று ஒரு சிறு சந்தனக் குச்சியாவது விறகுடன் வைப்பது சில இனத்தவரின்
மரபாக உள்ளது.
“எட்டுக்கட்டு விறகடுக்கி
எல்லையெல்லாம்
தீமூட்டி
இனத்தார்
கொள்ளி வைக்க
எழுதினாரோ
பரமசிவன்
பத்துக்கட்டு
விறகடுக்கி
பக்கமெல்லாம்
தீமூட்டி
பக்கத்தார்
கொள்ளி வைக்க
படைச்சானோ
பரமசிவன்" (வீராயி,
2021)
என்ற பாடல்
மூலம் கொள்ளி வைத்தல் சடங்கு நடைபெறுகிறது. மக்களில் ஒருவருக்கொருவர் இழந்து
தவிப்பதை இறப்புச் சடங்கானது காட்டுகிறது. இவ்வகையில் பல் சடங்கு முறைகள் பரமத்தி
வேலூர் வட்டார மக்களால் கடைபிடிக்கபட்டு வருகின்றன.
முடிவுரை
பரமத்தி
வேலூர் வட்டார நாட்டுப்புற மக்களிடம் காணப்படும் சடங்கு முறைகள் மனிதனின் நெடுநாள்
பண்பாட்டு வளர்சியைப் பிரதிபலிக்கும் தன்மை நிறைந்தவைகளாகும். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனியான சடங்குமுறைகள் உண்டு.
சடங்கு முறைகள் நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் வாழ்வியல், எண்ணங்கள், சிந்தனைகள் போன்றவைகளைப் பதிவு செய்து வைத்திருக்கும்
கருவூலங்களாகத் திகழ்கின்றன. இவ்வாறு நாட்டுப்புறப் பாடல்கள் சுட்டிக் காட்டும்
சடங்கு முறைகள், பழக்கவழக்கங்கள் இன்றைய மனிதனையும் அன்றைய மனிதனையும் அறிந்து கொள்வதற்குப்
பெரிதும் துணைபுரிகின்றன. ஒரு தனிமனிதனுடைய வாழ்க்கையின் பல நிலைகளுக்கு ஏற்பச் சடங்குகள்
உண்டாயிருப்பது போலவே ஒரு சமூகத்தின் வாழ்க்கையின் பல நிலைகளுக்கு ஏற்பச் சடங்குகளும்
உள்ளன. சடங்குகள் மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வோடு பின்னிப்
பிணைந்துள்ளன. பொதுவாகச்
சொல்வதென்றால் மனிதனை மனிதனாக உருவாக்குகின்றன.
சான்றெண் விளக்கம்
1.
டி.எம்.பி. மகாதேவன், (தமிழாக்கம்-ஞா.ராஜாபகதூர்),1964,
இந்து சமய தத்துவம், முதல் பதிப்பு, தமிழ்நாட்டுப்
பாடநூல் நிறுவனம், சென்னை ப.39.
2.
கோ.கேசவன், 2001 சடங்குகளின்
நோக்கம், முதல் பதிப்பு, புதுமலர் பதிப்பகம், கோவை.
3.
தே.ஞானசேகரன், 2010, சடங்குகளின்
தோற்றம், முதல் பதிப்பு, அழகு பதிப்பகம், சென்னை.
4.
கா. சுப்பிரமணியன், 2011, சடங்குகளின் வகைகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)
லிட், இராயப்பேட்டை, சென்னை.
5.
வி.எஸ். மணி, வயது 58, வேலூர்
வட்டார மக்களின் சடங்குகள், 2021, வேலூர், கரூர் மாவட்டம்.
6.
சந்தானம், வயது 68, வேலூர்
வட்டார மக்களின் சடங்குகள், 2021, பரமத்தி, கரூர் மாவட்டம்.
7.
கணேசன், வயது 58, வேலூர்
வட்டார மக்களின் சடங்குகள், 2021, ஜேடர் பாளையம், கரூர் மாவட்டம்.
8.
க. கிருட்டிணசாமி, 2016, வளமைச்
சடங்குகளும் நம்பிக்கையும், முதல் பதிப்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், இராயப்பேட்டை, சென்னை.
9.
அழகம்மாள், வயது 50, வேலூர்
வட்டார மக்களின் சடங்குகள், 2021, கூடச்சேரி, கரூர் மாவட்டம்.
10.
க. இந்திரசித்து, 2000, சேலம்
மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள், முதல் பதிப்பு, தமிழரசி பதிப்பகம்,
சென்னை.
11.
செல்லாயி, வயது 65, வேலூர்
வட்டார மக்களின் சடங்குகள், 2021, நல்லூர், கரூர் மாவட்டம்.
12.
நாகலட்சுமி, வயது 45, வேலூர்
வட்டார மக்களின் சடங்குகள், 2021, வீரணாம்பாளையம், கரூர்
மாவட்டம்.
13.
ச.கு. கணபதி, 1993, பழங்காலத் தமிழர் வழக்கம், பூம்புகார் பதிப்பகம், சென்னை-11.
14.
கா.அப்பாத்துரை, 2008, கடல் கொண்ட தென்னாடு, முதல்
பதிப்பு, சாரதா பதிப்பகம், இராப்பேட்டை,
சென்னை.
15.
வள்ளியம்மாள், வயது 55,
வேலூர் வட்டார மக்களின் சடங்குகள், 2021, ஓலப்பாளையம், கரூர் மாவட்டம்.
16.
குபேந்திரன், வயது 58, வேலூர்
வட்டார மக்களின் சடங்குகள், 2021, வேலூர், கரூர் மாவட்டம்.
17.
அ. இராகவன், 2009, ஆதித்தநல்லூரும்
பொருநைவெளி நாகரிகமும், முதல் பதிப்பு, கௌரா பதிப்பகம்,
சென்னை.
18.
அஞ்சலை, வயது 60, வேலூர்
வட்டார மக்களின் சடங்குகள், 2021, ஓலப்பாளையம், கரூர் மாவட்டம்.
19.
கல்யாணி, வயது 54, வேலூர்
வட்டார மக்களின் சடங்குகள், 2021, ஓலப்பாளையம், கரூர் மாவட்டம்.
20.
சரோசா, வயது 62, வேலூர்
வட்டார மக்களின் சடங்குகள், 2021, பொத்தனூர், கரூர் மாவட்டம்.
21.
ருக்மணி, வயது 52, வேலூர்
வட்டார மக்களின் சடங்குகள், 2021, பொத்தனூர், கரூர் மாவட்டம்.
22.
வீராயி, வயது 55, வேலூர்
வட்டார மக்களின் சடங்குகள், 2021, பாண்டமங்கலம், கரூர் மாவட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக