திங்கள், 11 மார்ச், 2024

சுஜாதாவின் பூக்குட்டி நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள்

 

சுஜாதாவின் பூக்குட்டி நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள்

                                                                                                    முனைவர் தி.சி.ராமச்சந்திரன்

முன்னுரை

தனிமனித உணர்வுகளும், சமூக மாற்றங்களும் காரணங்களாக அமைய சமுதாயத்தின் அடிப்படைக் கூறான குடும்பங்களின் சிக்கல்கள் எழுகின்றன. முரணும் மோதலும் சிக்கல் விளைவிக்கின்றன. பொருளாதா ஏற்றத்தாழ்வு மனப்பான்மையில் உணர்வுச் சிக்கலுக்கு ஆளாகும் மனிதர்கள் சமுதாயச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தனிப்பட்ட குடும்பத்தில் நிகழும் சிக்கல் தானே என்று ஒதுக்கித் தள்ளிவிட இயலாது. அதுவே சமூகச்சிக்கலாக வளர்ந்து விடுகிறது. குடும்ப வீழ்ச்சிக்கு வாழ்க்கையின் சீரழிவிற்கும் ஒழுக்கக்கேடு முக்கிய காரணமாக அமைகிறது.

ஒருவருடைய உணர்வுகளை இன்னொருவர் புரிந்துகொண்டு வாழ்வின் உறவு தொடரும், இல்லையேல் முறியும். சமூக உறவுக்கு அடிப்படை குடும்ப உறவாகும். குடும்ப உறுப்பினர் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உணர்வுகளைப் புரிந்து வாழ்ந்தால் சிக்கல் எழாது. உணர்வுக்கும் உரிமைக்கும் மதிப்பளித்து வாழ்ந்தால் குடும்ப மேன்மையுறும். அதனால் சமுதாயம் ஒற்றுமை ஓங்கும்.

சமுதாயத்தில் இருந்துதான் இலக்கியம் எழுகிறது. சமூகத்தை பிரதிபலிக்கிறது. சமுதாய உணர்வுகளை விளக்குகிறது. சமுதாயத்தில் காணப்படும் சிக்கல்களை படைப்பாளர்கள் தங்களது அனுபவங்களுக்கு ஏற்ப படைப்புகளில் பதிவு செய்வர். அந்தவகையில், சுஜாதா தமது பூக்குட்டி நாவலில் எடுத்தாளும் சமுதாயச் சிக்கல்களை இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.

சமுதாயம்

சமுதாயம் என்பது மக்கள் கூட்டாக வாழ்கின்ற சமூகத்தைக் குறிக்கின்றது. மனிதன் ஒரு கட்டுக்கோப்பான வாழ்வு நடத்துவதற்குச் சமுதாயம் உதவுகின்றது.

“ஒரு சிறிய நிலப்பரப்பில் ஒரு பொது வாழ்க்கை வழியைப் பின்பற்றிக் கூட்டாக வாழும் மக்கள் தொகுதி சமுதாயம் எனப்படும். இது மக்கள் ஒன்றுகூடி ஒன்றுபட்ட எண்ணத்துடன் ஓர் இடத்தில வாழும் அமைப்பைக் குறிக்கும். சமுதாயத்தில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற புறநானூற்றுக் கொள்கைக்கேற்ப மக்கள் ஒன்று கூடி ஒன்றுபட்ட எண்ணத்துடன் வாழ்கிறார்கள்.

சமுதாயத்தின் ஒரு கூறு குடும்பம் ஆகும். குடும்ப வாழ்வில் அங்கமாக மனிதன் திகழ்கின்றான். அவனது வாழ்வில் நடைமுறையில் உணர்வுநிலைகளை இலக்கிய படைப்பாளி தமது படைப்புகளில் அனுபவச் சூழலுக்கு ஏற்பப் படைப்பார். “இலக்கியம் என்பது சமுதாயத்தின் புலப்பாடு” என்று தே. ஃபெர்னால்ட் என்ற பிரெஞ்சு அறிஞர் குறிப்பிடுவதாக முனைவர் தி.சு. நடராஜன் குறிப்பிட்டுள்ளார். மார்க்சிய அறிஞர் இலக்கியத்திற்கும், சமுதாயத்திற்கும் உள்ள உறவுகளை ஆழமாகவும் விரிவாகவும் ஆராய்ந்து இலக்கிய உருவாக்கத்திற்கு சமுதாயம் முக்கிய இடமும் பங்கும் வழங்கியதாக விளக்கி உள்ளார்.

சமுதாயம் என்பது பல்வேறு நிலைகளின் கட்டமைப்பே ஆகும். சமூகம் என்பது பல குடும்பங்களின் கூட்டுறவே “காலங்களின் மாறுதலுக்கு ஏற்ப சமுதாய மதிப்புகள் மாறுகின்றன” என்று டி.எஸ்.எலியட் கூறுகிறார். சமுதாய இலக்கிய உலகில் பல பிரச்சனைகள் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்தச் சமுதாயப்பிரச்சனைகளுக்கு இலக்கியம் தீர்வு காண்கிறது.

ஓர் இலக்கியமானது அதன் தோற்றம் அதன் பொருள் அதன் பயன்பாடு ஆகிய மூன்று நிலைகளிலும் மனித குலத் தொடர்புடையதாக விளங்குவதே இலக்கியத்தின் அடிப்படைப் பண்பாகும். (தி.சு. நடராஜன்,2009)

ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நீண்ட காலமாக ஒன்று சேர்ந்து வாழ்வதற்காக மக்கள் கூட்டம் ஏற்படுத்திக்கொள்ளும் அமைப்பே சமூகம்.

“ஒரு குழுவாக கூடிவாழும் மக்கள் கூட்டமே சமூகம் என்பது இதனால் பெறப்படுகிறது. ஒவ்வொரு மனிதனும் ஏனைய மனிதர்களுடன் கொண்டிருக்கிற சிக்கலான சமூக உறவுமுறைத் தொடர்புகளைத்தான் சமூகம் என்கிறோம். மனிதன் கொள்கிற தொடர்புகளுக்கெல்லாம் சமூகத் தொடர்புகள் ஆகிவிடா. சமூகம் என்பது புலனாகா உளச் சார்புடைய கருத்தியல் பொருள் ஆகும்” (கனகசுந்தரம்.வெ, 1985)

“சமூக உறவுமுறைகள் தாம் சமூகத்தை உருவாக்குகின்றன. ஒத்த தன்மைகளும் பொதுவான தன்மைகளும் கூட்டுறவும் தான் சமூகத்தின் அடித்தளங்கள் ஆகும். ஆகவே சமூகம் என்பது ஒரு குழுவாகச் சேர்ந்து வாழும் மக்கள் அமைப்பே என்பது தெளிவு. . (தி.சு. நடராஜன்,2009)

சமுதாயம் என்ற சொல் ஆறறிவு படைத்த மக்களினத்தோடு பிணைந்து நிற்கும் ஒன்று.” ஆறறிவு படைத்த மக்கள் இனத்துள்ளும் உணர்வற்ற அடிப்படை உணர்விலாத மக்கள் கூட்டம் சமுதாயம் என்னும் சொல்லுக்கு இலக்காகாது” என்பார் அ.மு.பரமாசிவானந்தம். ஆகவே மக்களே வாழ்ந்த போதிலும் சமுதாயம் தேர்ந்த ஒரு சூழ்நிலையில் அதாவது பண்பு அடிப்படையில் உருவாவது என்பது தெளிவு.

"தமிழறிந்த தால் வேந்தன் எனை அழைத்தான்

தமிழ்கவி யென்றெனை யவளும் காதலித்தாள்

அமுதென்று சொல்லுமிந்தத் தமிழ் என்னால்

அழிவதற்குக் காரணமாயிருந்த தென்று

சமுதாயம் நினைத்திடுமோ”  (பாரதிதாசன், 2000)

என்று பாரதிதாசனின் கூறுகிறார். இங்கு சமுதாயம் என்று இவர் குறிப்பிடுவது எண்ணும் மனம் படைத்த மக்களையேயாகும்.

மனிதனைச் சமூகவியலுடைய விலங்கு என்பர். மனிதனை விலங்கிலிருந்து தோன்றியவன் என்பர். மனிதனை மாவினின்றும் பிரித்துக்காட்டவே சமூகவியல்புடைய விலங்கு என்னும் சொற்றொடர் வழங்குகிறது. எனவே மனிதனை விலங்கிலிருந்து பிரிப்பதே இந்தச் சொல்தான் என்பதை உணரவேண்டும்.

கூடி வாழ்வதே சமூகம். ஒருவன் மற்றவனை உணர்தலே சமுதாயம். சமுதாயம் போன்ற விளக்கங்கள் பொருளாகும். நிறைந்த பொருளுரைகளாகும். ஒருவன் மற்றவனை உணருகின்ற ஒரு நிலை பண்பட்ட பெருநிலையாகும். மனித வாழ்வோடு பண்பாடு இணைந்த நாளே சமுதாயம் உருவான பெருநாள் என்பர். தம்மை ஒருமித்து மற்றவரை வாழ வைக்கும் நிலையான பண்பாடே உலகை வாழ்வித்தல் கண்கூடு. குடும்ப வாழ்வில் அந்தப் பண்பாடு ஓரளவு உருவாகின்றது என்பது உண்மை.

சமுதாயம் - விளக்கம்

“சமுதாயம் என்னும் சொல்லிற்கு மக்களின் திரள்” என்று தமிழ்ப்பேரகராதி விளக்கம் தருகிறது. மனிதன் தனித்து வாழ்தல் இயலாது. ஒன்றுபட்டு வாழும் நிலையில்தான் படைக்கப்பட்டுள்ளான். பிறர் துணையின்றி எவரும் வாழ இயலாது. அன்றாட வாழ்வில் மனிதன் உணவுக்கும், உடைக்கும், உற்ற பிற தேவைகளுக்கும் மற்றவரை நாட வேண்டியுள்ளது. உழவன் ஒருவன் இல்லையெனில் உல எதுவுமே நடைபெற இயலாது. எனவே, மனத்தாலும் செயலாலும் ஒன்றுபட்டு வாழும் மக்கள் கூட்டமே சமுதாயம் என்று தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.

"சமுதாயம் என்பது கல், மண், சுண்ணாம்பு முதலியவற்றால் உருவாக்கப்பட்ட ஒரு இல்லம் போலப் பலதரப்பட்ட மக்களால் உருவாக்கப்பட்டது” (தமிழியல் ஆய்வு, 2011) என்பர் சமூகவியலாளர்கள்.” சமுதாயம் என்பது மக்களின் தொகுப்பு. தனிமரம் தோப்பாகாது என்பது போலத் தனி மனிதன் சமுதாயம் ஆகான். சமுதாயம் சிறந்து விளங்க வேண்டுமானால் அச்சமுதாயத்தின் உறுப்பாயுள்ள ஆணும் பெண்ணும் சிறந்து விளங்க வேண்டும்.”(சென்னை பல்கலைக்கழகம், 1920) நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்' என்பது பாவேந்தர் பாரதிதாசனின் கருத்து. சமுதாய உயர்வுக்கு இல்லறமே இனிமை சேர்க்கும். துறவறம் துணை செய்யாது மட்டுமல்ல.” ஒரு சமுதாயம் சிறந்த விளங்க வேண்டுமானால் அச்சமுதாயத்தில் உறுப்புகளாய் விளங்குகின்ற ஒவ்வொருவரும் தன்னலம் மறந்து பொதுநலம் பேணும் பெற்றியராயிருத்தல் வேண்டும் என்பது பாவேந்தர் பாரதிதாசனின் கருத்து.

இலக்கியமும் சமுதாயமும்

இலக்கியம் ஒரு சமுதாய நிறுவனம் என்பர். அந்த இலக்கியத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கின்ற மொழியும் மனித சமுதாயம் படைத்துக் கொடுத்த ஒன்றேயாம். மேலும் இலக்கியத்தில் தொடர்ந்து மரபுபோலப் பயன்படுத்துகின்ற குறியீடுகள், யாப்பு முறைகள் ஆகியவையும் சமுதாயம் உருவாக்கித் தந்தவையாகும். சமுதாயம் என்ற அமைப்பில்தான் இலக்கியத்திற்கு வேண்டிய மரபுகளும், தேவையான முன்மாதிரிகளும் அமைய இயலும்.

“ஒரு சமுதாயம் வாழ்ந்த வாழ்வினைக் காணவும் மேற்கொண்ட இலட்சியத்தை அறியவும், பழகி வந்த பண்பாட்டையும் நாகரிகத்தையும் தெளியவும் அவர்களிடையே நெடுங்காலமாக வளர்ந்துள்ள இலக்கியமும் கலைகளுமே பெரிதும் துணையாவன” என்ற க.அன்பழகன் அவர்களின் கருத்தினை வெ.கனகசுந்தரம் தமது நூலில் பயன்படுத்தியுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சமுதாயம் எவ்வாறு இருந்தது என்பதை அறிவதற்குச் சிறந்த இலக்கியப் படைப்பாளர்கள் படைத்த நூல்கள் பெரும் பயன் தருகின்றன. இலக்கியம் என்பது காலந்தோறும் மாறிவரும் மக்கள் உணர்ச்சிகளையும் பயன் மதிப்புகளையம் எடுத்துக்காட்டுவது” முற்கால இலக்கியம் தற்கால இலக்கியம் இடைக்கால இலக்கியம் எனப் பேசுவதெல்லாம் ஒரு வகையில் இலக்கியம் பெற்ற மாற்றங்களைச் சுட்டும் குறியீடுகள் ஆகும்” (வீராசாமி.தா.வே, 2010) என்று தா.வே.வீராசாமி குறிப்பிட்டுள்ளார்.

"காலத்துக்கு காலம் சமுதாயத்திலே தோன்றும் அரசியல் பொருளியல், சமூக, கலாச்சார, ஆன்மீக இயக்கங்கள், இலக்கிய ஆதிக்கத்தைப் பாதிக்கின்றன.” (கனகசுந்தரம்.வெ, 1985) என்ற கைலாசபதி அவர்களின் கருத்தினை வெ.கனகசுந்தரம் பயன்படுத்தியுள்ளார்.

‘பூக்குட்டி' நாவலில் சமுதாயச் சிக்கல்கள்

'பூக்குட்டி' சிறுமியரிடையே நட்புக்கு ஏழை பணக்கார சாதி வித்தியாசங்கள் கிடையாது என்பதை உணர்த்தும் கதை. இந்நாவலில், பணக்காரர்களின் ஆதிக்கம், சமூக ஏற்றத்தாழ்வு, பணியாட்களை அடிமைப்படுத்தல், சமூகக் குற்றங்கள் ஆகியன சமுதாயச் சிக்கல்களாக பதிவுசெய்யப்பட்டுள்ளன.

சமூக ஏற்றத்தாழ்வு

சமூகத்தில் பணக்காரர்கள், ஏழைகள் என்ற பாகுபாடு அதிகளவில் காணப்படுகிறது. பணம் உள்ளவர் பணம் இல்லாதவர்களைத் தங்களுக்குத் தாழ்வாகவும் அவர்களிடம் பழகினால் தங்களுக்குக் கவுரவம் குறைந்துவிடும் எனவும் கருதுகின்றனர். அத்தகையதொரு ஏற்றத்தாழ்வை இந்நாவலில் பதிவுசெய்துள்ளார் ஆசிரியர். இதனை,

"இந்தப் பொம்மை என்ன விலை தெரியுமா ? முந்நூறு ரூபாய். இதைக் கொடுத்துவிட்டு புழுக்கை பென்சில் வாங்கிக் கொண்டாயே, உன்னைப்போல் அசடு இருப்பார்களா ? என்று ஜம்புவைத் திரும்ப வாங்கி வந்துவிட்டாள். ஜம்பு அவளைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தது. அதை மூலையில் எடுத்துப்போட்டுவிட்டாள்.” (சுஜாதா, 2009) என்ற வரிகள் மூலம் அறியலாம்.

வசதிபடைத்தவர்கள் ஏழைக் குழந்தைகளை ஏளனமாகப் பார்ப்பதும் அவர்களைப் பற்றித் தாழ்வாக விமர்சிப்பதும் இன்றையச் சூழலில் நடைபெறுகின்றன. அவர்கள் குழந்தையுடன் தங்கள் குழந்தைகளைப் பழகவிடாமல் தடுக்கின்றனர். இந்நாவலில், பணக்காரவீட்டுக் குழந்தையான விம்மு, ஏழைக் குழந்தையான வேலாயிடம் நட்பு வைக்க விரும்புகிறாள். அதனைத் தடுக்கிறார்கள் அவளது பெற்றோர். தடுப்பதோடு மட்டுமல்லாமல் அக்குழந்தையைப் பற்றி மிகவும் தாழ்வாக விமர்சிக்கின்றனர்.இத்தகையதொரு சமூக அவலத்தைக் கூறியுள்ளார் சுஜாதா. இதனை,

"தே ஹேவ் டிஸ்ஸீஸ். தலைபார்த்தே இல்லே. எத்தனை டர்ட்டி. இனி இந்த மாதிரி டர்ட்டி கூடப் பேசினா நீயும் டர்ட்டியாய்டுவே. அம்மா கிட்ட சொல்லுவேன்.” (பூக்.ப.8) என்ற வரிகளும்,

"அப்பறம் சுகவனம் ! இனிமே கண்ட அநாதைகள் எல்லாம் வீட்டுக்குள்ள அனுமதிச்சே.. சீட்டுக் கிழிச்சிருவேன். இதான் லாஸ்ட் தெரியுமா ?”

"யு மை டியர் யங் லேடி.. இனிமே அந்தப் பொண்ணுகிட்ட போகவே போகக்கூடாது சரியா” (சுஜாதா, 2009)

"அதான் சேரிப் பொண்ணு.. அழுக்குப் பொண்ணு.. ஸ்லம் கேர்ள்.. புதுசா உங்க பொண்ணு சிநேகிதம் !” (பூக்.ப.35)

"இப்ப எண்ண பண்றது ? குப்பை பொறுக்கறவங்களையெல்லாம் தேடிண்டு போகணுமா ?” (சுஜாதா, 2009) என்ற வரிகளும் புலப்படுத்துகின்றன.மேலும் விம்முவின் பெற்றோர் வேலாயின் நட்பைத் துண்டிக்க அவளை மிகவும் மிரட்டுகின்றனர். இதனை,

"இனிமே மட்டும்.. நீ மட்டும் அந்தப் பொண்ணை மட்டும் உள்ளே சேர்த்தே, உன்னைக் கோடி ரூமுக்குள்ள போட்டுருவேன், ஜாக்கிரதை... எப்பவும் ! என்றாள்” (பூக்.ப.37) என்ற வரிகள் மூலம் அறியலாம்.

விம்மு வீட்டு வேலையாட்களும் பணக்காரவீட்டுக் குழந்தையான விம்மு, ஏழைக் குழந்தையான வேலாயிடம் நட்பு வைப்பதைத் தடுக்கின்றனர். தடுப்பதோடு மட்டுமல்லாமல் குழந்தை என்று கூட பார்க்காமல் அடிக்கவும் செய்கின்றனர். இதனை,

"மை காட் ! லுக் அட் ஹர் ! லுக் அட் ஹர் ட்ரஸ் ! ஐயோ.. நான் எப்படி உன் அப்பா அம்மாவுக்குப் பதில் சொல்வேன் ? என்று அவளைப் பள்ளியின் பாத்ரூமுக்கு அழைத்துச் சென்று, எல்லாச் சட்டையையும் கழற்றி, அலம்பித் துடைத்து ஒரு மாதிரி பண்ண வாட்ச்மேன் வேலாயியை விரட்டினான்.” (சுஜாதா, 2009) என்ற வரிகள் வாயிலாவும்,

“திருட்டுக் களுதை.. எப்படி உள்ளார வந்தே ? உன்னை அம்மா பார்த்தாங்கன்னா என் வேலை போயிடும் ! ஓடு ஓடு' என்று அவளை உதைத்தான். அவ்வளவுதான்.. ஒரே ஓட்டத்தில் கேட்டைத் திறந்து தள்ளிவிட்டான்” (சுஜாதா, 2009) என்ற வரிகளின் வாயிலாகவும் அறியலாம்.

விம்மு வேலாயியின் நட்பைப் பிரிக்க விம்முவின் பள்ளியையே மாற்றும் நோக்கில் அவளது பெற்றோர் செயல்படுகின்றனர். குழந்தைகளின் வாழ்க்கையில் ஏழை பணக்காரன் வித்தியாசமே இல்லை, ஆனால் பெற்றோர்களிடம் இத்தகையதொரு தாழ்வான எண்ணம் காணப்படுகிறது. இதனையும் பதிவுசெய்துள்ளார் ஆசிரியர். இதனை,

"டார்லிங்க்.. ஸம்திங் ராங்.. முதல்ல விசாரி... லெட்ஸ் சேஞ் திஸ் ஸில்லி ஸ்கூல்.. முதல்ல மாத்திரலாம்.” (சுஜாதா, 2009)

 

பணக்காரர்களின் ஆதிக்கம்

பணக்காரர்கள் தங்கள் வீட்டில் ஏதேனும் காணாமல் போனால் அதனைத் தேடுவதற்குள் தங்களின் வேலையாட்களைச் சந்தேகப்படுகின்றனர். அதோடு நிறுத்தாமல் அவர்களின் சம்பளத்தைக் குறைப்பதும், வேலையை விட்டு நீக்குவதும் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோலத்தான் இந்நாவலிலும் விம்முவின் வீட்டில் ஐநூறு ரூபாய் காணாமல் போகிறது. அதற்கு அவளின் பெற்றோர் வேலையாட்களையே சந்தேகப்படுகின்றனர். இதனை,

"அப்பா வந்ததும் அம்மா புகார் சொன்னாள். காலையிலிலிருந்து கேட்கிறேன். ஒப்புக்கவே மாட்டேன் என்கிறாள். ஒண்ணு இவள் எடுத்திருக்கணும். இல்லை பாலம்மாள் எடுத்திருக்கணும். எனக்கென்னவோ சுகவனத்தின் மேலதான் சந்தேகம் !”

அப்பா சுகவனத்தை அடிக்கப்போய், அம்மாதான் தடுத்தாள். ‘ என் வீட்டில வேலைக்காரங்க திருடறாங்களா ? உடனே.. உடனே.. டிஸ்மிஸ் ' என்றார் அப்பா. போலீஸுக்குச் சொல்ல டெலிபோனை எடுத்தார்.” (சுஜாதா, 2009) என்ற வரிகள் உணர்த்துகின்றன.

பணியாட்களை அடிமைப்படுத்தல்

முதலாளித்துவ ஆதிக்கம் என்பது பல நூற்றாண்டுகளாக நம் சமூகத்தில் வேரூன்றிக் காணப்படுகிறது. இந்நாவலிலும் அவ்வாதிக்கம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்நாவலில் விம்முவின் வீட்டில் காணமல் போன ரூபாய்க்கு வேலையாட்களைச் சந்தேகப்படும் பெற்றோர் அவர்களை வேலையைவிட்டு நீக்குவதாகக் கூறியதும், வேலையாளான சுகவனம் தான் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்கிறாள். தான் பணம் எடுத்ததாகக் கூறுகிறாள். காரணம் வேலை போய்விடும் என்ற பயத்தில்தான், ஆனால் உண்மையில் பணத்தை எடுத்தது விம்மு. விம்மு எடுத்து தன் தோழி வேலாயிடம் கொடுக்க, அவளது தந்தை வீடுதேடி வந்து அப்பணத்தை விம்முவின் பெற்றோரிடம் ஒப்படைக்கிறான். அப்போதுதான் விம்முவின் பெற்றோருக்கு வேலையாட்கள் தவறு ஏதும் செய்யவில்லை என்பது புரிகிறது. இதனை,

“ஐயா நான்தான்யா எடுத்தேன். போலீஸுக்குச் சொல்லாதீங்கய்யா.. சம்பளத்தில் கழிச்சுக்கங்கய்யா” என்றான். (சுஜாதா, 2009)

"இந்தாங்க நோட்டு.. அநாவசியமான பொல்லாப்பு வரும். சின்னப்பொண்ணுங்கிட்ட பெரிய பெரிய நோட்டைக் கொடுக்காதீங்க. அப்புறம் என் மாதிரி ஏழைங்க கிட்ட பழிவரும்.”

"பாத்தீங்களா ! எதுக்குங்க இத்தனை பெரிய நோட்டை சின்னப்புள்ளைக்குக் கொடுக்கறீங்க ?

“அதை விட ஆச்சரியம் இந்தம்மா தான்தான் எடுத்தேன்னு ஒப்புத்துக்கிட்டதுதான்.. ஏம்மா சுகவனம் ?”

"ஐயா, வேலை போயிடும்னு பயம்யா ! இந்த மாதிரி வேலை எங்கய்யா கிடைக்கும் ?”

"அதுக்குன்னு பொய்க்குற்றத்தை ஒப்புத்துக்கறதா ?” (சுஜாதா, 2009) என்ற வரிகள் படம்பிடிக்கின்றன.

சமூகக் குற்றங்கள்

சமூகத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. பணத்திற்காக குழந்தைகளைக் கடத்துதல், கொலை செய்தல் போன்ற செயல்கள் நடக்கின்றன. இதுபோன்ற குற்றங்களையும் நாவலில் சுட்டிக்காட்டத் தவறவில்லை சுஜாதா. இதனை,

"தூங்கிண்டு இருந்தாலும் பணம் எடுக்கறதா இருந்தா எழுப்பிக் கேக்கணும். அதுவே நீ எடுத்தது நிறைய காசு. அது என் கைல இருந்தா என்ன ஆகும் ? திருடன் யாராவது பார்த்தா உன்னைத் தூக்கிண்டு போய்டுவர். எல்லா ஆபத்தும் இருக்கு !” (சுஜாதா, 2009) என்ற வரிகள் மூலம் அறியலாம்.

முடிவுரை

சமூகத்தில் காணப்படும் சிக்கல்களைப் படைப்பாளி அவற்றிற்குத் தகுந்தவாறு கதைக்களத்தை அமைப்பதும், அதைக் கதைமாந்தர்களின் வழியாக வெளிக்கொணரும் திறமையையும் அறியமுடிகிறது. இதன் மூலம் படைப்பாளியின் சமூகச்சிந்தனை வெளிப்படுகிறது. ‘பூக்குட்டி' நாவலில், ஏழைகள் பணக்காரர்களுக்கிடையேயான சமூக ஏற்றத்தாழ்வு, பணியாட்களை அடிமைப்படுத்தல் ஆகியன சமுதாயச் சிக்கல்களாகக் கூறப்பட்டுள்ளன. சமுதாயத்தில் கண்ணெதிரே காணப்படும் சீர்கேடுகள் நாவலாசிரியரின் உள்ளத்தை வருத்திக் கொந்தளிப்பினை ஏற்படுத்துகிறது. எனவே, அதனைக் களையும் வகையில் பல சிக்கல்களை அலசி ஆராய்கிறார். சீர்கேடுகளைக் களைந்து சமுதாயம் மலர் வழிகாட்டுகிறார். நோயின் தன்மையை அறிந்தால்தான் அதனைத் தீர்க்கும் மருந்தினைக் கொடுக்க முடியும். அதுபோல, சமுதாயத்தின் சிக்கல்கள் மற்றும் சூழ்நிலையை அறிந்திருந்தால் மட்டுமே அதற்கான தீர்வைக் கண்டறிய முடியும். அந்தவகையில் சமூகத்தில் நடக்கும் எந்தவொரு சிக்கல்களையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை படைப்பாளி சுஜாதா.

மேற்கோள்கள்

1.      சுஜாதா, 2009, பூக்குட்டி, ஐந்தாம் பதிப்பு, விஷா பதிப்பகம், தி.நகர், சென்னை.

2.      சுஜாதா, 2009, வாய்மையே சில சமயம்  வெல்லும், கிழக்கு பதிப்பகம், ராயப்பேட்டை, சென்னை.

3.      சுஜாதா, 2010, மண்மகன், கிழக்குப் பதிப்பகம், ஆழ்வார் பேட்டை, சென்னை.

4.      நடராசன்.தி.சு, 2009, திறனாய்வுக்கலை, ஏழாம் பதிப்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர், சென்னை.

5.      கனகசுந்தரம்.வெ, 1985, ஜெக சிற்பியின் சமூகப்புதினங்கள், முதல் பதிப்பு, செவ்வேளகம் வெளியீடு-2, சென்னை.

6.      பாரதிதாசன், 2000, பாரதிதாசன் கவிதைகள், மூன்றாம் பதிப்பு, மணிவாசகர் பதிப்பகம், பாரி முனை, சென்னை.

7.      சென்னை பல்கலைக்க்கழகம், 1920, தமிழ்ப்பேரகராதி, முதல் பதிப்பு, சென்னை பல்கலைக்கழகம், சென்னை.

8.      வீராசாமி.தா.வே, 2010, தமிழ் நாவல் இயல், முதல் பதிப்பு, தமிழ் புத்தகாலயம்,  திருவல்லிக்கேணி, சென்னை.

9.      பாக்கிய மேரி, 2011, வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, நான்காம் பதிப்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர், சென்னை.

 

கருத்துகள் இல்லை: