மருதத்திணைப் பாடல்களில்
நாட்டுப்புறக் கூறுகள்
முனைவர் வீ.உதயகுமார்
முன்னுரை
செம்மையான
இலக்கியங்கள் ஒரு மொழியின் பெருமையென்றால் அவற்றிற்க்கு வித்திட்ட பெருமை வாய்மொழி
இலக்கியங்களையே சாரும். உலகப் பெருங் கவிஞர்கள் பலரும் வாய்மொழி இலக்கியத் தாக்கம்
பெற்றவர்களாக உள்ளனர்.
மருதநில
மக்களின் பல்வேறு காலகட்டங்களின் பிரதிபலிப்பாக புலவர்கள் தாம் வடித்த பாடல்களில்
எண்ணற்ற சடங்குகளையும்,
நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் பதிவு
செய்து வைத்துள்ளதை அறிய முடிகிறது. பண்டைய தமிழர்கள் மரபு வழிவழியாகப் பின்பற்றி
வரும் பண்பாட்டினையும், நாகரிகத்தினையும் ஓரளவேனும்
மருதப்பாடல்கள் மூலம் உணர்ந்துகொள்ள முடிகிறது. மருதத்திணையின்கண் பொதிந்து
கிடக்கும் நாட்டுப்புறக்கூறுகளை வெளிக்கொணர்வது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
நாட்டுப்
புறப்பாடல்கள் பற்றிய கருத்துக்கள்
ஒரு
நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்ளவும், மக்களின் மனக்
கோலங்களைத் தெரிந்து கொள்ளவும், பழக்க வழக்கங்களைத் தெரிந்து
கொள்ளவும், பண்பாட்டுச் சிறப்பை ஆராய்ந்தறியவும்
நாட்டுப்புறப் பாடல்கள் துணைபுரிகின்றன.
பாட்டோடு
பரிணமித்த வாழ்வு தமிழர் வாழ்வு. இயற்கையோடு தங்கள் வாழ்வை இணைத்துக் கொண்ட இம்
மக்கள்,
தாம் வாழ்ந்த நானிலங்களுக்கு ஏற்ப பண் அமைத்துப் பாடி
மகிழ்ந்துள்ளனர். இவர்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் பாடல் இடம் பெறுவதை
அறியலாம். குழந்தை பிறந்தால் தாலாட்டு, இறந்தால் ஒப்பாரி,
உழுதால் உழவுப் பாட்டு, உலக்கை குத்தினால்
உலக்கைப் பாட்டு, நாற்று நட்டால் நடவுப் பாட்டு, ஏற்றம் இறைத்தால் ஏற்றப் பாட்டு என தமிழர் வாழ்வு முழுதும் பாட்டாகவே
உள்ளது.
“இப்பாடல்கள் நாட்டுப்பாடல்கள், நாட்டார் பாடல்கள்,
மக்கள் இலக்கியம், பாமரர் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், கிராமியப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், சமுதாய இலக்கியம் எனப்
பலவாறாக வழங்கப்படுவதைக் காணலாம்”. (அவினாசிலிங்கம்,1968) “பண்டைக் காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள்
சூழ்நிலையில் காண்பவற்றையெல்லாம் விளக்க முயன்றார்கள். அதன் பயனாகவே நாட்டுப்
பாடல் பெரும்பாலும் எழுந்தது”. (அவினாசிலிங்கம்,1968)
“புலவர்களால் உருவாக்கப்பட்டு கற்றவர்களால் காப்பாற்றப்படுபவை இலக்கியங்கள்.
பாமர மக்களால் உருவாக்கப்பட்டு அவர்களாலேயே காப்பாற்றப்படுபவை நாட்டுபுறப்
பாடல்கள். இலக்கிய வரலாறு என்னும் கடலில் சங்கமம் ஆகும் ஆறுகளில் நாட்டுப் பாடல்
என்னும் ஆறும் ஒன்றாகும்” (அழகப்பன்.ஆறு.1952)
என்பர் அழகப்பன்.
மானிடவியலார் இப்பாடல்களை மனித சுயசரிதையாகவும், இனவியலாளர்
இவற்றை பண்பாட்டு வளர்ச்சி நெறியின் சின்னங்களாகவும் கொண்டு ஆய்வு நடத்தியுள்ளனர்.
“நாட்டுப்புறப்பாடல்கள் எளியவை - பகட்டில்லாதவை- பரிசுத்தமானவை பொய்க்
கலப்பற்றவை- நேரானவை, இனிமையும் இசைப் பொலிவும் நிறைந்தவை,
தீங்கற்ற கலைக் கருவூலங்கள் என்பர் திரு. அன்னகாமு”. (பாலசுந்தரம்.இ, 2005) “எவ்விதமான
செயற்கை பூச்சுகளும் இப்பாடல் மீது படுவது இல்லை”. (சண்முகசுந்தரம்.சு,1975) இவை “மக்களின்
பல்வேறுபட்ட வாழ்க்கைக் கட்டங்களின் பிரதிபலிப்பாகவும், பழமைக்கும்
சம காலத்திற்கும் பாலமாகவும், செந்நெறி இலக்கியத்
தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் அடிப்படையாகவும் வளமூட்டுவதாகவும்
அமைந்து காணப்படுகின்றன”. (சண்முகசுந்தரம்.சு,1975)
நாட்டுப்புறப்
பாடல்களின் தன்மைகள்
வாய்மொழிப்
பண்புகளாகக் குறிக்கப்படுவனவற்றுள்
தலைமையானவற்றை அறிந்து கொண்டால், மருதத்தில் எங்கெங்கு வாய்மொழி
இலக்கியப் பண்புகள் இடம் பெறுகின்றன என்பன புலனாகும். நாட்டுப்புறப் பாடல்களின்
உயிராக விளங்குவது இசை. “ஆடையில்லா மனிதன் அரைமனிதன் என்றால்
இசையில்லாப் பாடல் பாடலே அன்று, பாடற் பறவைகளுக்கு இந்த இசை
தான் சிறகுகளாம்”. (சண்முகசுந்தரம்.க 1975) என்பர்
சண்முகசுந்தரம்.
“உழவும் தொழிலும் இசைபாடும்
உண்மைச்
சரித்திரம் அசைபோடும்
இழவில்
அழுதிடும் பெண்கூட
இசையோ
டழுவது கண்கூடு”
என்ற
நாமக்கல்லாரின் பாடல் வாயிலாக நாட்டுப்புறப்பாடல்களில், இசை கொண்டுள்ள உயிரான இடத்தை உய்த்துணரலாம்.
இசைக்கு
அடுத்த நிலையில்,
சொற்களோ அல்லது கருத்துக்களோ திரும்பத் திரும்ப வருகின்ற தன்மை
இப்பாடல்களில் காணப்படுகின்றது. இப்பண்பு காணப்படும் இலக்கியத்தை நாம் வாய்மொழி
வழிப்பட்டது எனலாம். நாட்டுப்புற மக்கள் கூட்டுவாழ்க்கை நடத்துவதால் அவர்கள்
பாடும் பாடல்களும் பெரும்பாலும் குழுப் பாடல்களாக அமைகின்றன. சடங்கு தொடர்பாக
அமைவதும் நாட்டுப்புறப் பாடல்களின் தன்மையாகும்.
வாய்மொழி
பாடற் பண்புகளில் ஒன்று ஆவலுடன் கூடிய பாடல்களாக இருப்பது. காலப்போக்கில் இவை.
ஆடலை விடுத்து,
இசையை விடாதவையாய் விளங்கின. இப்பாடல்களில் புராண மரபுச்
செய்தியாகிய தொன்மை இடம் பெறுவதும், ஒரு பண்பாகக்
காணப்படுகின்றது. இவ்வாறு இடம்பெறும் புராண மரபுச் செய்திகள் மக்களிடையே
பெருவழக்காய் விளங்கும்.
நாட்டுப்புறக்
காதல் பாடல்களில் பெயரின்றி அமைவது ஒரு மரபாகும். வீரமும் காதலும் பற்றிய பொருள்
உடையதாய் அமைதல் வாய்மொழி இலக்கியப் பண்புகளில் ஒன்றாகும்.
வாய்மொழிப்
பாடல்கள் காலப்போக்கில் மாறுதல் பெறக்கூடியவை என்றாலும் அவை நிலைத்து வாழ்கின்ற
காலம் வரை,
சில வரிப் பாடல்கள் வாழ்வதில்லை. சிலப்பதிகாரத்தின் பெருமை, பல நூறு ஆண்டுகளாகியும் இன்னும் குன்றாமல் ஒளிவீசிக் கொண்டிருக்க, அதன் கண் அமைந்த வாய்மொழி இலக்கியத் தன்மைகளும் ஒரு காரணமாக விளங்குகின்றன.
மருதத்தொழிலோடு
இணைந்த நாட்டுப்புறப் பாங்கு
உழவுத்தொழில்
நம்
நாட்டின் தொழில்களுள் முதன்மையானதும் அடிப்படையானதும் உழவுத் தொழிலே ஆகும். இதனை
“உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உண்டி
கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே” (ஔவை துரைசாமிப்பிள்ளை,(உ.ஆ) 2008)
என்னும்
புறநானூற்றுப் பாடலடிகளாலும்,
“மலைகண் டன்ன நிலைபுணர் நிவப்பின்
பெருநெல்
பல்கூட்டு எருமை உழவ
கண்படை
பெறாது தண்புலர் விடியல்” (ஔவை துரைசாமிப்பிள்ளை, (உ.ஆ) 2003)
என்ற
நற்றிணை பாடலடிகளிலும்,
“உழுவார் உலகத்திற் காணியஃ தாற்றா
(உ.ஆ)
தொழுவாரை
யெல்லாம் பொறுத்து”
(பரிமேலழகர் (உ.ஆ) 1997)
என்ற
குறளும்
"
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிட
விளைப்போர்''
(வேங்கடசாமி நாட்டார்.ந.மு, (உ.ஆ) 2018)
என்னும்
சிலப்பதிகாரப் பாடலடிகளாலும் அறியமுடிகின்றது. இரப்போர்க்கும் புரப்போர்க்கும்
உணவை விளைவித்தரும் உழவரே உலகின் முதன்மையர், ஆதலால் ஒரு
நாட்டின் வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படை உழவுத் தொழிலே என்பதைப்
பண்டைத் தமிழ் சான்றோர் அறிந்திருந்தனர். இத்தொழிலுக்கு இன்றியமையாதவையாக நிலம்,
நீர், விதை, எருது ஆகிய
நான்கும் அமைகின்றன.
பண்டைத்தமிழர்
ஐந்நிலங்களுள் மருதத்தையும் நெய்தலையும் மென்புலமென்றும், குறிஞ்சியையும் முல்லையையும் வன்புலமென்றும் வகுத்து உள்ளனர். மருத
நிலத்தை ‘நாடு’ என்றும் மற்ற நிலத்தைக்
‘காடு’ என்றும் அழைத்தனர். குறிஞ்சி
நிலத்தில் உழத்தக்க பகுதிகளை ‘ஏர்க்காடு’ என்றும், உழத்தகாத பகுதிகளைக் ‘கொத்துக்காடு’ என்றும் அழைத்தனர். குறிஞ்சியிலும்
முல்லையிலுமுள்ள விளைநிலங்கள் ‘கொல்லை’ அல்லது ‘புனம்’ என்றும்,
மருத நிலத்திலுள்ள விளைநிலங்கள் ‘செய்’
எனறும் அல்லது ‘புதுக்கொல்லை’ என்றும் ‘பழங்கொல்லை’ என்றும்,
சிறிது செய்யப்பெற்ற செய் ‘புன்செய்’ என்றும் நன்றாகச் செய்யப்பட்ட செய் ‘நன்செய்’
என்றும் பெயர் பெற்றன. ‘செய்தல்’ என்பது சிறுமையைக் குறிக்கும். ‘கொல்லை’ என்பது
மானாவரிகாடாகும்.
புன்செய் கிணற்று நீர் பாய்ச்சலையும், நன்செய் ஆறு அல்லது
ஏரிப் பாய்ச்சலைப் பெறும். எள், முதலியன கொல்லை பயிராகும்.
கேழ்வரகு, சோளம் முதலியன புன்செய்ப் பயிராகும். நெல்,
கரும்பு முதலியன நன்செய்ப் பயிராகும். நன்செய்களுள் பழமையானது ‘பழனம்’ என்றும் போரடிக்கும் களமுள்ளது ‘கழனி’ என்றும் சொல்லப்பெறும். இதனை,
"
பூத்த கரும்பின் காய்த்த நெல்லின்
கழனி
ஊரன் மார்பு
பழனம்
ஆகற்க என வேட்டேமே (சதாசிவ ஐயர், (உ.ஆ) 1999)
என்னும்
ஐங்குறுநூற்றின் மருதத்திணைப் பாடலடிகளால் அறிய முடிகின்றது. ‘பண்ணை’ என்பது ‘பண்ணப்பட்டது’,
‘பண்படுத்தப்பட்டது’ என்னும் பொருளுடையதாகும்.
வழக்கில் களமர் அல்லது செறுமர் என்னும் பண்ணையாட்கள் குடியிருந்து வேலை செய்யும்
பெரிய வயற்பரப்பையே பண்ணை என்று குறிக்கப்படுகிறது. சேறுதுள்ளமையால் ‘செறு’ என்றும் வைப்பு போன்றமையால் ‘வயல்’ என்றும் நன்செய் நிலத்திற்குப் பெயர்கள் உண்டு.
புனமாயினும்
புன்செய்யாயினும் பண்டைத் தமிழர் மேட்டு நிலப்பகுதியில் பயிர் செய்ய விழையவில்லை.
மேடு ‘சுவல்’ என்றும், பள்ளம் ‘அவல்’ என்றும் பெயரினைப் பெற்றன. நன்செய்
பாசனத்திற்கு ஆற்றுநீர் கிடைக்காத இடங்களுக்குக் கண்ணாறுகளும் கால்வாய்களும்
வெட்டி நீர்பாய்ச்சினர். அது முடியாதபோது ஏரிகளை வெட்டினர். ஏர்த் தொழிலுக்கு
உதவுவது ஏரியாகும். குளிப்பது குளமாகும். இயற்கையாக உண்டான ஏரி அல்லது குளம்
பொய்கையாகும். முல்லை நிலத்தில் புன்செய் பாசனத்திற்குக் கிணறுகளை வெட்டினர்.
விதைக்கென்று முதற் காய்ப்பையும் சிறந்த மணிகளையும் ஒதுக்கி வைத்தனர். அக்காலத்து
உழவர் பொருளீட்டலைக் குறிக்கோளாகக் கொள்ளாமல், உணவு
விளைவித்தலையே குறிக்கோளாகக் கொண்டு பதிணென் கூலங்களையும் அவற்றின் வகைகளையும் ஆண்டுதோறும்
விளைவித்து வந்தனர்.
நடவுத்
தொழில்
தூங்கலோரியார்
என்ற சங்கப்புலவர் பாடிய நற்றிணையின் மருதப் பாடலில் எருமை மாடுகளை உடைமையாகக்
கொண்ட உழவன் குறிக்கப்படுகிறான். அப்பாடலில் நாற்றுநடும் உழத்தியரும் சுட்டப்
பெறுகின்றனர். மலையைச் செய்து வைத்தது போன்ற உயர்ச்சிமிக்க நிலைபொருந்திய பெரிய
நெற்கூடுகளைக் கொண்ட எருமை மாடுகளை உடைய உழவனே
வாரல் மீனின் பெரிய துண்டங்களைக் கொண்ட குழம்பினையும் அரிசியால் சமைத்த
சோற்றுத்திரளையும் உண்டு மயக்கத்தோடு நின் உழத்தியரோடு நீர்மிக்க நாற்றுக்களை
நடுவதற்குச் செல்வை.
“மலை கண்டனன் நிலை புணர் நிவப்பின்
பெருநெற்
பல்கூட்டு எருமை உழவ !
…………………………………
நீர்
உறுசெறுவின் நாறுமுடி அழுத்த, நின்
நடுநரொடு
சேறி ஆயின்”
(ஔவை துரைசாமிப்பிள்ளை, (உ.ஆ) 2003)
என்னும்
நற்றிணைப் பாடலடிகளில் நாற்றுநடும் உழவனும், எருமை மாடுகளை
உடைமையாகக் கொண்டு உழவதும் நாற்றுநடும் உழத்தியரும் சுட்டப் பெறுவது
குறிப்பிடத்தக்கதாகும்.
எருமை
மேய்த்தல்
பூதன்
தேவனார் பாடிய நற்றிணையின் மருதப்பாடலில் எருமை மாடுகளை மேய்க்கும் மருதநிலச்
சிறுவர்களின் தொழில் குறிக்கப் பெறுகின்றது. ‘ஊரிலுள்ள
இளஞ்சிறுவர்கள், அகன்ற தலைகளையுடைய கரிய எருமைகளின் மிகவினிய
பாலைக் கறந்து கொள்வதன் பொருட்டு அவற்றின் கன்றுகளைத் தொழுவத்தே விட்டு வைப்பர்.
எஞ்சிய எருமைகளின் மேலேறிக் கொண்டு தனியே மேய்த்து வருவர்’ என்பதை,
“மன்ற எருமை மலர்தலைக் காரான்
இன்தீம்
பாற்பயம் கொண்மார்,
கன்றுவிட்டு,
ஊர்க்
குறுமாக்கள் மேற்கொண்டு கழியும்” (ஔவை துரைசாமிப்பிள்ளை, (உ.ஆ) 2003)
என்னும்
நற்றிணைப் பாடலடிகளால் அறிய முடிகின்றது. எருமை மாடுகளை மருத நில மக்கள்
பால்கறந்து பயன் கொள்வதற்காக வீடுகளில் வளர்த்து வயல்களில் மேய்த்துள்ளனர்.
கதிர்
அறுத்தல்
பரணர்
பாடிய நற்றிணையின் மருதப்பாடலில் நெல்கதிர்
அறுக்கும் தொழில் சுட்டப்பெறுகின்றது. வெண்ணெல்லை அரிகின்ற உழவர்கள் தண்ணுமைக்கும்
அஞ்சி வயலில் உள்ள பலவாகிய பறவை இனங்கள் வயற் பரப்பை விட்டு அகன்றோடி வயலின்மீது
தாழ்ந்து வளைந்த கிளைகளையுடைய மருத மரத்தில் சென்று தங்கும். இதனை,
“வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
பழனப்
பல்புள் இரீய,
கழனி
வாங்குசினை
மருதத் தூங்குதுணர் உதிரும்” (ஔவை துரைசாமிப்பிள்ளை, (உ.ஆ) 2003)
என்னும்
நற்றிணைப் பாடலடிகளால் அறியமுடிகின்றது. வெண்ணெல் அரிநர் தண்ணுமை முழக்கம்
செய்யும் வழக்கத்தை,
“வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுரிமை
பன்மலர்ப்
பொய்கை படுபுள் ஒப்பும்” (புலியூர்க் கேசிகன்,(உ.ஆ) 2018)
என்னும்
அகநாநூற்றுப் பாடலடிகளாலும் அறியமுடிகின்றது.
‘நெல் அரியும் உழவர்கள், நெருப்பு கொழுந்து விட்டு
எரிவது போன்ற தாமரைப் பூக்களின் இடையிடையே விளைந்து சாய்ந்த சிவந்த நெற்கதிர்களை
அரிந்து குவிப்பர்; அவ்வாறு நெல்லரியும் உழவர்களுக்கு
கள்ளினை ஏற்றிக் கொண்டு பலகாலும் வந்து செல்லும்வண்டிச் சேற்றிலே புதையுமானால்,
அதன் சூழ்ச்சியைப் போக்குவதற்குச் சிறந்த கரும்புகளை அடுக்கி அடை
கொடுப்பர்’ என பரணர் பாடிய அகநாநூற்றின் மருதப்பாடல்
குறிப்பிடுகின்றது.
“எரிஅகைத்தன்ன தாமரை இடையிடை
அரிந்துகால்
குவித்த செந்நெல் வினைஞர்
கள்கொண்டு
மறுகும் சாகாடு அளந்து உறின்
ஆய்கரும்பு
அடுக்கும் பாய்புனல் ஊர” (புலியூர்க் கேசிகன்,(உ.ஆ) 2018)
அப்பாடலடிகளாகும்.
நெற்கதிர் அறுக்கும் உழவர்,
உழைப்பின் களைப்புத்தீர கள்ளினை உண்பர் என்பதை இதிலிருந்து
அறியமுடிகின்றது.
மீன்
பிடித்தல்
பரணர்
பாடிய அகநாநூற்றின் மருதப்பாடலொன்றில் மருதநில மக்கள் குளங்களிலும் ஏரிகளிலும்
தூண்டில் போட்டு மீன் பிடித்தல் சுட்டப்பெறுகின்றது. அப்பாடலடிகள் பின் வருமாறு,
“வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை
நோன்ஞாண்
வினைஞர் கோளறிந்து ஈர்க்கும்
மீன்முதிர்
இலஞ்சிக் கலித்த தாமரை
நீர்மிசை
நிவந்த நெடுநடதாள் அகலிலை” (புலியூர்க் கேசிகன்,(உ.ஆ) 2018)
வலிமையான
தூண்டில் கயிற்றினைக் கொண்டு மீன்பிடிப்போர் அத்தொழிலுக்கு இடையூறாக மழைபெய்வதை விரும்பமாட்டார்கள்.
மீன் இரைகோத்த தூண்டில் முள்ளினைப் பற்றியது அறிந்து தூண்டிலை இழுக்கும் மீன்
நிறைந்துள்ள நீர் நிலையில் தாமரை தழைத்து வளர்ந்திருக்கும். ஐயூர் முடவனார் பாடிய
அகநானூற்று மருதப்பாடலில்,
‘ கயிறு கட்டப்பெற்ற நுண்ணிய தூண்டிற் கோலினால் மீனைப்பிடிக்கும் பாண்மகள்,
நீரை அடுத்த கரையில் பிடித்த வரால்மீனை, பன்னாடையால்
வடித்து விறகுகொண்டு சுட்டு அவன் வாயில் உண்பிப்பாள் ' என்னும்
செய்தி இடம்பெற்றுள்ளது.
“நாண்கொள் நுண்கோலின் மீனகொள் பாண்மகள்
தண்புனல்
அடைகரைப் படுத்த வராஅல்,
நார்அரி
நறவுஉண்டு இருந்த தந்தைக்கு
வஞ்சி
விறகின் சுட்டு வாய்உறுக்கும்” (புலியூர்க் கேசிகன்,(உ.ஆ) 2018)
இதிலிருந்து
பாணனும் பாண்மகளும் குளத்தில் தூண்டில் போட்டு மீன்பிடிக்கும் தொழிலைச் செய்தனர்
என்பதை அறியமுடிகின்றது.
மீன்
பிடிக்கும் முறை
குளத்தில்
மீன்பிடிக்கும் முறையை பூங்கணுத்திரையார் என்னும் சங்கப் புலவர் பாடிய
குறுந்தொகைப் பாடல்,
“கடும்புனல் அடைகரை நெடுங்கயத்து இட்ட
மீன்வலை
மாப் பட்டாஅங்கு”
(புலியூர்க் கேசிகன்,(உ.ஆ) 2017)
எனக்
குறிப்பிடுகின்றது. புதுப்புனல் குளத்தை அடையும்போது குளத்தில் உள்ள மீன்கள், கடும்புனலின் எதிரே செல்ல முற்படும். இதனை அறிந்து மீன்பிடிப்பவர்
குளத்திற்கு புதுப்புனல் வரும் வழியில் வலைகளை இட்டுவைப்பர். இது வீசிய வலையன்று,
இட்ட வலையாகும். இவ்வாறு மீன்பிடிக்கும் முறையையும் மருதப் பாடல்கள்
குறிப்பிடுகின்றன.
நெற்கதிரின்
போரினைப் பிரித்துக் கடாவிடுதல்
'
உழவர்கள், தாழ்ந்த கிளைகளையுடைய மருதமரம்
தழைத்துச் சிறக்குமாறு அழகு பெற்றுத் திகழும் நீர் சூழ்ந்த நெற்களம் பொலிவு
பெறும்படி நெற்கதிரின் போரினைப் பிரித்துக் கடாவிட்டனர். கள்ளுண்டு களித்த அவ்
உழவர்கள் அக்காளைகளை மாற்றி வேறு காளைகளைக் கொண்டு கடா விட்டனர். பின்னர் விரைய
வீசும் காற்றில் நெல்லைத்தூற்ற பறந்து சென்ற நெல்லின் தூசும் துரும்பும்
அருகிலிருக்கும் உப்பு காயும் உப்பளத்திலுள்ள சிறிய பாத்திகளில் சென்று வீழ்ந்தது '
என குடவாயிற் கீரத்தனார் பாடிய அகநானூற்று மருதப்பாடல்
குறிப்பிடுகின்றது :
“தாழ்சினை மருதம் தகைபெறக் கவினிய
நீர்சூழ்
வியன்களம் பொலிய,
போர்புஅழித்து
கள்ஆர்
களமர் பகடுதலை மாற்றி,
கடுங்காற்று
எறிய,
போகிய துரும்புடன்
காயல்
சிறுததடிக் கண்கெடப் பாய்தலின்,
இருநீர்ப்
பரப்பின் பனித்துறைப் பரதவர்
தீம்பொழில்
வெள்உப்புச் சிதைத்தலின, சினைஇ” (புலியூர்க்
கேசிகன்,(உ.ஆ) 2018)
இச்செய்யுளில்
நெற்கதிரின் போரினைப்
பிரித்துக் கடாவிடுதல்,
நெல்லின் பொலியைத்
தூற்றுதல் முதலான உழவுத்தொழில் சார்ந்த செய்திகள் பேசப்பட்டுள்ளன. மருத நிலமும்
நெய்தல் நிலமும் அருகருகே இருப்பதும் இப்பாடலில் சுட்டப்படுகின்றது.
வள்ளைப்
பாட்டு
மகளிர்
உரலில் நெல்,
சுண்ணாம்பு ஆகியவற்றை இட்டு இடிக்கும் போது அவர்களுக்குச் சோர்வு தோன்றாமல்
இருக்கும்பொருட்டு தம்முள் பகுத்துப்பாடும் பாடும் பாட்டே ‘வள்ளைப் பாட்டு’ ஆகும். ‘பல்வரிக்கூத்து’
என்னும் பகுதியுள் அடங்கும் என சிலப்பதிகார உரையாசிரியர்
அடியார்க்கு நல்லார் கூறுவார். இது ‘உலக்கைப் பாட்டு’
என்றும் கூறப்படும். உலக்கையை ஓச்சி இடிப்பவரின் அன்புக்கு உரியார்
இப்பாட்டின் தலைவராக அமைவர். அரசனையும், தெய்வத்தையும்
வள்ளைப்பாட்டில் வாழ்த்திப்பாடும் மரபும் உண்டு. போர்க்களத்தில் கூழ்சமைத்து ஆடும்
பேய்களும் இவ்வுலக்கை பாட்டைப் பாடுவதாகப் பரணி நூல்கள் கூறுகின்றன. ‘வள்ளைப்பாட்டு’ ஒரு தனி இலக்கிய வகையாகவும்
வளர்ச்சியுற்றது.
தலைவி
வள்ளைப்பாட்டில் தலைவன் பெயரைச் சொல்லி இடித்தமை அறிந்து ஊரார் அவளைத் தலைவனோடு
தொடர்புப்படுத்தி அலர் மொழிந்தனர். தலைவன், சிறைப்புறமாக வந்து
நின்றபோது தோழி தலைவிக்குக் கூறுவதைப்போல அவனை தலைவியை மணந்துகொள்ள வேண்டுவது
இவ்வள்ளைப் பாட்டின் நோக்கமாகும். இதனைக் குறுந்தொகையின் மருதப்பாடலென்று,
“பாஅடி உரல பகுவாய் அன்னை
ஊதில்மாக்கள்
நுவறலும் நுவல்ப,
அழிவது
எவன்கொல்,
இப்போதை ஊர்க்கே ?” (புலியூர்க்
கேசிகன்,(உ.ஆ) 2017)
எனக்
குறிப்பிடுகின்றது. தலைவி மெல்லிய உரலில் பகுத்து வாயால்பாடும் வள்ளைப்பாட்டினைப்
பாடி உலக்கையை ஓக்கி இடிக்கும்போது, அயலார் தலைவனோடு
தொடர்படுத்தி அவளை அலர் தூற்றுவதும் உண்டு. இந்த மருதத்திணைப் பாடலில் தலைவி ‘வள்ளைப்பாட்டு’ என்ற ஊடகத்தின் வாயிலாகத் தன்
களவுக்காதலை வெளிப்படுத்துகின்றாள். அதனால் ஊரில் அவர் எழுகின்றது.
அகநானூற்றின்
மருதத்திணைப் பாடலொன்றில் ஓரம்போகியார் மருதநிலத்திலுள்ள இளம்பெண்கள் மெல்லிய
கருப்பங்கழியினை வெள்ளியாற் செய்யப்பட்ட பூணையுடைய உலக்கையைக் கொண்டு கொடிபோன்ற
தம் இடைஅங்கும் இங்குமாக அசையுமாறு மீனின் முட்டை போன்ற வெண்ணிற மணலைக் குவித்து
காஞ்சிமரத்தின் நிழலில் தம்
சுற்றத்தாரின்
அருமை பெருமைகளைப் புகழ்ந்து பாடிக் குற்றுகின்றனர். அவ்விசை மிகுந்த வள்ளைப்
பாட்டினைக் கேட்ட இறால் மீனைத் தின்ற சிறிய மீன்கொத்திப்பறவை அருகிலிருக்கும்
மருதமரத்தின் தாழ்ந்த கிளைகளில் சென்று உறக்கம் கொள்கின்றது, என வள்ளைப்பாட்டுச் சிறப்பித்துப் பேசப்படுகின்றது.
“வெள்ளி விழுந்தொடி மென்கருப்பு உலக்கை,
வள்ளி
நுண்ணிடை வயின்வயின் நுடங்க,
மீன்சினை
அன்ன வெண்மணல் இவை
காஞ்சி
நீழல்,
தமர்வளம் பாடி,
ஊர்க்குறு
மகளிர் குறுவழி,
விறந்த
வராஅல்
அருந்திய சிறுசிரல் மருதின்
தாழ்சினை
உறங்கும் தண்துறை ஊர”
(புலியூர்க் கேசிகன்,(உ.ஆ) 2018)
இவ்வாறு
மருதத்திணைப் பாடல்களில் மகளிர் விளையாட்டினுள் ஒன்றாக வள்ளைப்பாட்டுச்
சிறப்பித்துப் பேசப்படுவது எண்ணத்தக்கதாகும்.
பாசவல்
இடித்தல் வண்டல் அயர்தல்
இடித்தலும்
வண்டல் அயர்தலும் மருதநிலப் பெண்களுக்குரிய விளையாட்டாக குறுந்தொகையின் மருதப்
பாடலொன்று குறிப்பிடுகின்றது.
“பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை
ஆயக்கதிர்
நெல்லின் வரம்புஅணைத் துயிற்றி
ஒண்தொடி
மகளிர் வண்டல் அயரும்” (புலியூர்க் கேசிகன்,(உ.ஆ) 2017)
இப்பாடலடிகளில்
அவல் இடிப்பவர் தம் உலக்கையை வயல் வரப்புகளில் கிடத்திச் செல்லுதல், தாயார் தம் குழந்தைகளைப் படுக்கையில் கிடத்தித் துயிலச் செய்வதற்கு
ஒப்புமையாகக் கூறப்பட்டுள்ளது. இளம்பெண்கள் தொண்டியின் கடற்கரைப் பகுதியில் வண்டல்
அயர்வர். மருதநிலப் பகுதியில் பாசவல் இடிப்பர் என இப்பாடல் கூறப்படுவதால் மருதமும்
நெய்தலும் கலந்த திணை மயக்கத்திணையும் காணுகின்றோம்.
அலவனாட்டலும்
பூக்கொய்தலும்
‘அலவன்’ (நண்டு) மருதநிலக் கருப்பொருள்களில்
ஒன்றாகும். சங்ககால மருத நிலப் பெண்கள் நண்டுகளை அவை வாழும் வளையினின்றும்
வெளிப்படச் செய்து அவற்றை அலைத்து விளையாடுவது மரபாகும். இதனை ‘அலவனாட்டல்’ என்பர். இவ்வாறே மருதநில பெண்கள் பூக்களைப்
பறித்தலையும் ஒரு விளையாட்டாகக் கொண்டிருந்தனர். பிற்காலத்தில் தோன்றிய
பக்திபாடல்களில் ‘பூவல்லி’ என்ற
இலக்கிய வகையாக இது சிறப்பிக்கப் பெறுகின்றது. திருவாசகத்தின் ‘திருப்பூவல்லி’ இதற்குத் தக்கச் சான்று ஆகும்.
இவ்விரு விளையாட்டுகளையும் ஐங்குறுநூற்றின் மருதத்திணைப் பாடலென்று,
“முள்ளிவேர் அளைஇக் களவன் ஆட்டி,
பூக்குற்று, எய்திய புனல்அணி ஊரன்
தேற்றம்
செய்து நப்புணர்ந்து,
இனித்
தூக்கு
அணங்கு ஆவது எவன்கொல் ? அன்னாய்” (சதாசிவ ஐயர், (உ.ஆ) 1999)
எனக்
குறிப்பிடுகிறது. இப்பாடலில் அணங்கு மக்களைத் தீண்டி வருத்தித் துன்புறுத்தும்
என்ற நம்பிக்கை வழிப்பட்ட சிந்தனையும் குறிப்பிடப் பெறுகின்றது.
கூத்துக்கள்
பெண்களால்
மேற்கொள்ளப்படும் குரவைக்கூத்து, துணங்கைக் கூத்து பற்றி
அகப்பாடல் ஒன்று கூறுகிறது. பெண்கள் எழுவரோ, எண்மரோ, ஒன்பதின்மரோ கைக்கோத்துக் கொண்டு வட்டமாக நின்று ஆடும் கூத்தையே
குரவைக்கூத்து என்பர். இதில் பெண்கள் தங்கள் பாடல் வாயிலாக ஏதேனும் ஒரு செய்தியைச்
சொல்லுவர்.
பெண்கள்
நுண்ணிய வேலைப்பாடமைந்த அழகிய குடத்தினை நடுவில் வைத்து, தம் கணவரது நற்பண்பில்லாத பரத்தமை ஒழுக்கத்தைப் பாடி விரிந்த
பூங்கொத்துக்களையுடைய காஞ்சி மரத்தின் நிழலில் குரவை ஆடியதாக அறிகிறோம். பெண்கள்
வட்டமாய் நின்று வெறும் மணலை உலக்கையால் குற்றிக் குரவையாடுதல் உண்டு (அகம்.286).
இதனை
“தீக்கருப்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்
பூங்காஞ்சி
நீழல் அலைப்பார் புகார் மகளிர்
ஆழிக்
கொடித்திண்சேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப்
பாழித்
தடவரைத்தோட் பாடலே பாடல்
பாவைமார்
ஆரிக்கும் பாடலே பாடல்” (வேங்கடசாமி நாட்டார்.ந.மு, (உ.ஆ) 2018)
என்ற
வள்ளைப்பாட்டோடு ஒப்புநோக்கலாம்
சிலப்பதிகாரத்தில்
‘ஆய்ச்சியர் குரவை’ ‘குன்றக்குரவை’ என இரு காதைகள் இடம்பெற்றுள்ளன. முன்னது ஆயர்பாடிப் பெண்கள் மாயோனை
வாழ்த்திப் பாடியது. பின்னது குன்றிலே வாழும் முருகனை வழிபட்டு வேட்டுவப் பெண்கள்
பாடியது.
தொடக்கத்தில்
சமூக நெறிபிறழ் நிகழ்வுகளை எள்ளல் தன்மையுடன் பாடி ஆடுவதற்கான வடிவமாகிய இக்கூத்து, பின்னர் தெய்வங்களை வணங்கிப்பாடி ஆடுவதற்கான வடிவமாயிருக்கலாம் என்று
கருதலாம்.
விழாக்காலத்தே
முழவு ஒலிக்கு ஏற்றாற்போல தாளலயத்தோடு ஆடும் ஆட்டத்திற்கு துணங்கைக் கூத்து என்று
பெயர்.
துணங்கைக்
கூத்து
மருத
நிலத்து மக்களின் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றாக விளங்குவது துணங்கைக் கூத்தாகும்.
மகளிர் ஆடும்கூத்து துணங்கைக் கூத்தாகும். இது ஆடவர்க்கும் உரியது. இது சிங்கிக்
கூத்து எனவும் அழைக்கப்படுகின்றது. இக்கூத்து மகிழ்ச்சிக் காலத்தே ஆடப்படுவதாகும்.
மருதத்திணைப்
பாடல்களில் துணங்கைக் கூத்துப் பற்றிய செய்திகள் பரவலாகக் காணப்படுகின்றன. மருதக்
கலிப்பாடலொன்றில் தலைவன் பரத்தையரோடு துணங்கையாடினான். இதனைக் கேட்ட அவன் மனைவி
அவனுடன் ஊடல் கொள்கின்றாள்.
“தணந்தன் தலையும் நீ தளரிபலவரோடு
துணங்கையாய்என
வந்த கவ்வையின் கடப்பு அன்றோ” (புலியூர்க் கேசிகன்,(உ.ஆ) 2015)
பரத்தையிற்
பிரிந்த தலைவன் மீண்டு வந்து தோழியை வாயில் வேண்டி உதவுமாறு கேட்கின்றாள்.
தோழியும் வாயில் நேர்ந்து அவனை நெருங்கி ‘ நின் பரத்தையர்
கூடி நின்று பாடும் துணங்கைக் கூத்தின் ஒலி எம்மை எழுப்பித் துன்புறுத்தியது '
என்கிறாள்.
“நினக்குஒத்த நல்லாரை நெடுநகர்த் தந்துநின்
தமர்பாடும்
துணங்கையுள் அரவம்வந்து எடுப்புமே” (புலியூர்க் கேசிகன்,(உ.ஆ) 2015)
நிறைத்த
தொடியினை உடைய பரத்தையர் ஆடும் துணங்கைக் கூத்து நடக்கும் இடத்திற்குச் சென்ற
தலைவன் அப்பரத்தையர்க்குத் தடக்கை கொடுக்கின்றான். அப்பரத்தையின் சிலம்பினால்
அவனுடைய நீலநிற ஆடை கரையிடத்தே கிழிந்து விடுகின்றது. இதனை வைத்துத் தலைவன்
பரத்தையருடன் துணங்கையாடினான் என்பதைக் கண்டுகொண்ட அவன் மனைவி அவனுடன் ஊடல்
கொள்கின்றாள்.
“நிறைதொடி நல்லவர் துணங்கையுள் தலைக் கொள்ள,
கரையிடத்தே
கிழிந்த நின் காழகம் வந்து உரையாக்கால் ” (புலியூர்க்
கேசிகன்,(உ.ஆ) 2015)
இவ்வாறு
மருதக்கலிப் பாடல்களில் பரத்தையருடன் தலைவன் துணங்கைக் கூத்து பற்றிய செய்திகள்
பரவலாகப் பயின்று வந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். தோழி, பாணற்க்கு வாயில் மறுத்ததாக அமைந்த நற்றிணைப் பாடலில், தலைவன் காதில் குழையும் கழுத்தில் மாலையும் அணிந்து, குறுகிய பல் வளையல்களையும், அணிந்தவனாய் விழாக்
காலத்தில் பரத்தையர் பலரோடு துணங்கையாடினான் என்ற செய்தியைத் தோழி தலைவிக்குக்
கூறுவதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அப்பாடல் அடிகள் பின்வருமாறு
“குழையன் கோதையன் குறும் பைந்தொடியன்
விழவு
அயர் துணங்கை தமூஉலகம் செல்ல” (ஔவை துரைசாமிபிள்ளை, (உ.ஆ) 2003)
மங்கையர்
எழுவர் கைகோர்த்து ஆடும் ஒருவகைக் கூத்தே குரவைக் கூத்தாகும். எனினும் இக்கூத்து
ஆண் பெண் ஆகிய இருபாலரும் ஆடுதற்குரியதாகும். அகநானூற்றின் மருதத்திணைப்
பாடலென்றில் இக்கூத்தினைப் பற்றிய செய்தி நயப்புப் பரத்தை இற்பரத்தைக்குக்
கூறுவதாகப் பதிவாகியிருக்கின்றது.
கழங்கு
ஆடுதல்
அகநானூற்றில்
செல்லூர்க் கோசிகன் கண்ணனார் பாடிய மருதத்திணைப் பாடலில் கழங்காடுதல் மருதநிலப்
பெண்களின் பண்பாடு சார்ந்த விளையாட்டுகளில் ஒன்று எனச் சுட்டப்படுகின்றது.
“கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய
புழங்
கண்ணோட்டமும் நலிய”
(புலியூர்க் கேசிகன்,(உ.ஆ) 2018)
முடிவுரை
மருதநில
மக்களின் பல்வேறு காலகட்டங்களின் பிரதிபலிப்பாக புலவர்கள் தாம் வடித்த பாடல்களில்
எண்ணற்ற சடங்குகளையும்,
நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் பதிவு
செய்து வைத்துள்ளதை அறிய முடிகிறது. பண்டைய தமிழர்கள் மரபு வழிவழியாகப் பின்பற்றி
வரும் பண்பாட்டினையும், நாகரிகத்தினையும் ஓரளவேனும்
மருதப்பாடல்கள் மூலம் உணர்ந்துகொள்ள முடிகிறது. உழவுத்தொழில்
செய்வோர் முதன்மையாகக் கருதப்பட்டதையும், உணவு உற்பத்தி
செய்து தருவோரை உயிர் தருவோராகக் கருதுகிற வழக்கம் இருந்ததன் மூலம் அற்றைக்கு உழவு
விளங்கியிருத்தலையும், நாட்டின் வாழ்விற்கும்
முன்னேற்றத்திற்கும் அடிப்படை உழவுத் தொழிலே என்பதையும் இம்மருதப் பாடல்கள் வழி புலப்படுகிறது. உழவர்கள் கதிர் அறுக்கும் காலத்தே
பறை ஒலித்துப் பறவை இனங்களை வயற்பரப்பில் விட்டு அகன்று செல்லுமாறு அச்சுறுத்தும்
வழக்கம் இருந்தமையும்,
எருமையே உழவுக்காகவும், பாலுக்காகவும்
விரும்பி வளர்க்கப்பட்டதையும் உணரமுடிகிறது. உழவர்கள்
உழவுத்தொழிலில் மட்டுமல்ல மீன் பிடித்தலையும் செய்து வந்திருக்கிறார்கள், சுட்ட மீனை உண்ட செய்தியினையும் இதன் வழி பழந்தமிழரின் உணவுமுறை
புலப்படுகிறது. மருதநிலப்
பெண்கள் பிற திணை இலக்கியப் பெண்களிலும் வேறுபட்டுக் காணப்படுகிறார்கள். மருதநிலப்
பெண்களின் பழக்க வழக்கங்கள்,
விளையாட்டுகள், ஒப்பனை, கூத்துக்கள்,
பாட்டுக்கள், கைக்கொள்ளும் சடங்குகள், வழிபாடுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதை அறியமுடிகிறது.
நீர்த்துறையில் அஞ்சத்தகுந்த அணங்குகள் தங்கும் என்ற கருத்து வழி பெண்கள் தனியே
நீர்நிலைக்குச் செல்லுதலைத் தவிர்க்க ஆண்களால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகக் கொள்ளலாம்
ஏனெனில் ‘புனலாடுதலில் ' மார்பில் மாலை
சூடிய தலைவன் பல மகளிர்களுடன் சென்று நீர்த்துறையில் மகிழ்ந்திருத்தலை இம்மருதப்
பாடல்களில் அறியலாம்.
மேற்கோள்கள்
1.
அவினாசிலிங்கம்,1968, கலைக் களஞ்சியம், தொகுதி -6, முதல்பதிப்பு, தமிழப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
2.
அழகப்பன்.ஆறு.1952, நாட்டுப்புறப்பாடல்கள்
திறனாய்வு, முதல் பதிப்பு, பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை.
3.
பாலசுந்தரம்.இ, 2005, ஈழத்து
நாட்டார் பாடல்கள், முதல் பதிப்பு, தணிகாசலம் சாலை, தியாகராஜ நகர், சென்னை-17.
4.
சண்முகசுந்தரம்.சு,1975, நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம், முதல் பதிப்பு, மணிவாசகர் பதிப்பகம்,
31,சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை -8.
5.
புலியூர்க்
கேசிகன் (உ.ஆ),2018 அகநானூறு, இரண்டாம் பதிப்பு, சாரதா பதிப்பகம், ஸ்ரீ கிருஷ்ணா புரம்,
இராப்பேட்டை, சென்னை.14.
6.
புலியூர்க்
கேசிகன் (உ.ஆ),2010 புறநானூறு, இரண்டாம் பதிப்பு, சாரதா பதிப்பகம், ஸ்ரீ கிருஷ்ணா புரம்,
இராப்பேட்டை, சென்னை.14.
7.
ஔவை துரைசாமிப்
பிள்ளை (உ.ஆ), 2010, நற்றிணை, இரண்டாம் பதிப்பு, சாரதா பதிப்பகம், ஸ்ரீ கிருஷ்ணா புரம்,
இராப்பேட்டை, சென்னை.14.
8.
புலியூர்க்
கேசிகன் (உ.ஆ), 2015, குறுந்தொகை, இரண்டாம்
பதிப்பு, சாரதா பதிப்பகம், ஸ்ரீ கிருஷ்ணா புரம், இராப்பேட்டை, சென்னை.14.
9.
புலியூர்க்
கேசிகன் (உ.ஆ), 2017, கலித்தொகை, இரண்டாம் பதிப்பு, சாரதா பதிப்பகம், ஸ்ரீ கிருஷ்ணா
புரம், இராப்பேட்டை, சென்னை.14.
10.
புலியூர் கேசிகன்
(உ.ஆ), 1980, நற்றிணை, இரண்டாம்
பதிப்பு, நற்றிணை, பாரிநிலையம், சென்னை
- 5.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக