மருதத்திணைப் பாடல்களில் பாலுறவு சிக்கல்கள்
முன்னுரை
மனித
உறவுகளுள் இன்றியமையா உறவாகக் கருதப்படுவது கணவன,; மனைவி உறவாகும். உலக இலக்கியங்கள்
பலவும் இவ்வுறவை மையப்படுத்தியே உலாவருகின்றன. அவற்றுள் செவ்வியல் இலக்கியமான சங்க
இலக்கியம் கணவன், மனைவி உறவைத் திருமணத்தின் வழியாகக் கட்டமைக்கிறது. இத்திருமணத்தில்
ஒருவனுக்கு ஒருத்தி என்பது இன்றியமையாதக் கோட்பாடாகும். எனினும் இவற்றை மீறி பலதார
மணமும் பரத்தைமையும் சங்கச் சமுதாயத்தில் நிலவின. இதைச் சமுதாயம் ஓரளவு ஏற்றுக்கொண்டாலும்
குடும்ப உறவுத்தளத்தில் இருக்கும் தலைவி தன் மனதால் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே பரத்தைமையால்
கணவன் மனைவிக்கும் ஊடலும் பாலுறவுச்சிக்கலும் ஏற்பட்டது. அவ்வகையில் மருதத்திணை மக்களின்
வாழ்வில் ஏற்படும் ஊடல் எவ்வாறு பாலுறவுச் சிக்கலுக்கு வழிகோலுகிறது என்பதை ஆய்வாக
இக்கட்டுரை அமைகிறது.
அன்பு
வேறுபாடு
கணவன்,
மனைவி உறவு காதலால் கட்டப்பட்டது. எனினும் களவில் இருக்கும் காதல் கற்பில் மாறுபடுகிறது.
களவில் இனிதாக இருந்த தலைவி கற்பில் கணவனுக்குக் கசந்து போவதை,
‘‘வேம்பின் பைங்காய் என்தோழி தரினே
தேம்பூங்கட்டி என்றனிர் இனியே
பாரிபறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர்
தைத்திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனீர்
ஐய – அற்றால் அன்பின் பாலே’’ (குறுந்.196)
என்ற
பாடல் தலைவன் மனதில் வேறொரு பெண்ணை நாடும் வேட்கையை வெளிப்படுத்துகிறது. மேலும் பிற
பெண்டிரை விரும்பாத தலைவன் பரத்தை வயப்பட்டுவிட்டான். இந்த இழிசெயல் தலைவியின் மனதில்
ஆற்றமுடியாத வருத்தத்தைத் தோற்றுவித்ததோடு பாலுறவின் மீதும் வெறுப்பை ஏற்படுத்தியது.
அன்பில்லாத தலைவணோடு கொள்ளும் அன்பற்ற பாலுறவால் எவ்விதப்பயனும் விழையப்போவதில்லை என்று
தலைவி கூறுவதை,
வீழாக்கொள்கை
வீழ்ந்த கொண்டி
மல்லல்
மார்பு மடுத்தனன்
னில்லு
மற்று எவனோ அன்பிலங்கடையே (நற்.174:9-11)
என்ற
அடிகளின் வழி அறியமுடிகிறது. “பாலுணர்ச்சி திருமண வாழ்க்கை முதன்மையாகக் கருதப்படுகிறது.
அதுவே அடிப்படையானது ஆகும். அனைத்து சமயத்தத்துவங்களும் அதை உறுதிப்படுத்துகின்றன.
திருமணத்தில் பாலுறவு கணவன், மனைவி ஆகியோரிடையே ஓர் இணைப்புச்சக்தியாக விளங்குகிறது”. (க.சிவனேசன். தி.ஜானகிராமன் புதினங்களில் பாலியல் சிக்கல்கள்
ப.46) என்ற கூற்றுக்கிணங்க இணைப்புச்சக்தியாக
இருக்கவேண்டும் பாலுறவு தலைவனின் பரத்தைமையால் சிக்கலும் உண்டாகுவதைக் காணமுடிகிறது.
கழியப்பட்ட
தாழியும் தலைவனும்
மருதத்திணைத்
தலைவன் தன் கணவன் பரத்தையோடு உறவாடுவதை எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ளவில்லை. கணவனின்
தகாத நடத்தையால் மனம் வெறுக்கிறாள். மீண்டும் வரும் தலைவனுக்கு வாயில் மறப்பதோடு பாலுறவிற்கும்
மறுப்புத் தெரிவித்து தன் உச்சக்கட்ட எதிர்ப்பைத் தெரிவிக்கிறாள். ‘பரத்தையர் உறவறு
பற்ற வரும் கொடுமை’ ஒழுக்கம், பேணா ஒழுக்கம், கிழவோன் கொடுமை,
பிழைத்து வந்த கிழவன் எனும் சொற்கள் பெண்டிரின் மனநிலை வெளிப்பாடுகளாக இருப்பது மற்றொன்று.
இந்தப்பிரிவு பெண்டிரால் வெறுப்புக்குரியதாகக் கருதப்பட்டிருந்ததையும் இந்தச் சொற்றொடர்கள்
வெளிப்படுத்துகின்றன. (பெ.மாதையன். சங்க இலக்கியத்தில் குடும்பம், ப.128) தன்னுடைய
அழகு தொலைந்தாலும் சங்க இலக்கியத்தில் குடும்பம் ப.128) தன்னுடைய அழகு தொலைந்தாலும்
பரத்தையர் தீண்டினால் அது இடுகாட்டில் கழித்தெறிந்த தாழியைத் தீண்டுவது போலாகும் என்று
தலைவி கூறுவதை,
‘‘தொல்கவின் தொலையினும் தொலைச் சார
விடேஎன் விடுக்குவெண ஆயின் கடைஇக்
கவவுக்கை தாங்கும் மதுகையை குவவுமுலை
சாடிய சாந்தினை வாடிய கோதையை
ஆகில் கலம் தழீஇயற்று
வாரல் வாழிய கவைஇ நின்றோளே’’ (நற்.350:5-10)
என்ற
பாடல் உணர்த்துகிறது. மேலும் தலைவியின் மீது
உண்மையான அன்பில்லாமல் உலகியலுக்காகத் தலைவியின் பூப்பிற்குப்பின் பரத்தையிடமிருந்து
தலைவன் வருகிறான். இதையறிந்த தலைவி பிள்ளைப்பேற்றிற்காக வரும் தலைவனோடு புணர விரும்பவில்லை
என்றும் பைஞ்சாய்க் கோரையால் செய்த பாவையே தனக்குப் போதும் என்றும் தலைவி கூறுவதை,
‘‘வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென
காணிய சென்ற மடநடை நாரை
பதைப்ப தகைந்த செய்தல் கழிய
ஓதமொடு பெயரும் துறைவற்குப்
பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யானே’’ (ஐங்.155)
என்ற
பாடலின் வழி அறியமுடிகிறது. மேலும் தலைவி தன் கணவனோடு அன்பான இல்லறம் நடத்தவே விரும்புகிறாள்
என்பதும் புலப்படுகிறது.
தலைவியின்
முதுமையும் தலைவனின் வெறுப்புணர்வும்
சங்கப்பாடல்கள்
பெரும்பாலும் தலைவியின் தாய்மைப் பேற்றிற்குப் பிறகே தலைவன் பரத்தையாரிடம் சென்றதாகக்
கூறுகின்றன. திருமணமான புதிதில் தலைவி வேண்டாமென்றாலும் புணர்ந்த தலைவன் தலைவி குழந்தைப்
பெற்றதும் வெறுக்கிறான். தலைவனோடு புணரத் தலைவி விரும்பினாலும் தலைவியின் மார்பில்
சுரக்கும் பால் தன் மார்பைச் சிதைக்கும் என்று தலைவன் வெறுப்பதை,
“மாக்கண் அடைய மார்பகம் பொருந்தி
முயங்கல் விடாஅல் இல்லை என மயங்கி
யான்ஓம் என்னவும் ஒல்லார் தாம் மற்று
இவை பாராட்டிய பருவமும் உளவே இனியே
திதலை அணிந்த தேம்கொள் மென்முலை
நனுஞ் சாந்து அணிந்த கேழ்கிளர் அகலம்
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே
தீம்பால்படுதல் தாம் அஞ்சினரே’’ (அகம்.26:8-16) என்ற பாடல் புலப்படுத்துகிறது.
பரத்தையின்
நீங்கா நினைவு
தலைவன் பரத்தையிடமிருந்து மீண்டு வந்தாலும் பரத்தை
நினைவாகவே இருக்கிறான். எப்போதாவது தலைவியின் இல்லத்திற்கு வரும் தலைவன் பரத்தையையே
நினைத்துக் கொண்டிருப்பதைத் தலைவியால் பொருத்துக்கொள்ள இயலவில்லை. பிரிந்திருந்து துன்பத்தைச்
செய்த தலைவன் சேர்ந்திருக்கும் போதும் துன்பத்தையே தருகிறான் என்று தலைவி வருந்துவதை,
‘‘எக்கர் ஞாழல் நறுமலர் பெருஞ்சினைப்
புணரித் திளைக்கும் துறைவன்
புணர்வின் இன்னான் அரும்புணர்வினனே’’ (ஐங்.150)
என்ற
அடிகளின் வழி அறியமுடிகிறது. மேலும் தலைவியோடு அரிதாகப் புணரும் போதும் பரத்தையே நினைக்கும்
தலைவனுக்கு தலைவி வாயில் மறுப்பதையும் காணமுடிகிறது.
தலைவியின்
துன்ப உணர்வு
தலைவிக்குப்
பரத்தையின் இல்லத்தில் ஒலிக்கும் மணவோசை மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது. தூக்கம் வராமல்
தலைவி தவிக்கின்றாள். பரத்தைமைத் தொடர்புகொண்ட தலைவன் மீண்டு தலைவியிடம் வந்து அன்பு
பாராட்டுவதைத் தலைவியின் துன்பத்திற்குக் காரணமானச் செயல்களைச் செய்த தலைவனின் புறத்தொழுக்கத்தைத்
தலைவி மறக்கவில்லை என்பதை,
‘‘ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த
முகை அவிழ் கோதை வாட்டிய
பகைவன்மன்? யான் மறந்து அமைகலனே’’ (நற்.260:8-10)
என்ற
பாடலில் காணமுடிகிறது. மேலும் தலைவன் மீண்டு வந்துவிட்டாலும் தலைவிக்குப் பரத்தையோடு
தலைவன் இருந்த நாட்களில் நிகழ்ந்த நினைவுகளே நெஞ்சில் நிற்கின்றன. தலைவனோடு சோலைக்குப்
போனாலும் நீராடப் போனாலும் முன்பு தலைவன் பரத்தையோடு சோலையில் இன்பம் துய்த்ததும் புனலாடியதுமே
அவளது நினைவுக்கு வந்து துன்பம் தந்தன. எனினும் அதை மறைத்து தலைவனின் பொய்யே தன் துன்பத்திற்குக்
காரணம் என்று கூறுகிறாள். இதை,
‘‘துறை எவன் அணங்கும் யாம் உற்ற நோயே
சிறை அழி புதுப்புனல் பாய்ந்தெனக் கலங்கிக்
கழனித் தாமரை மலரும்
பழ ஊர – நீ உற்ற சூளே’’ (ஐங்.53)
என்ற
பாடல் புலப்படுத்துகிறது. ‘பரத்தைமையால் குலமகளிர் பெருந்துன்பம் அடைந்தனர் என்பதுதான்
தெரிய வருகிறது. பரத்தைமை மனைவியரினுடைய துன்ப நிலைகளின் வெளிப்பாடுகளால் கண்டிக்கப்பட்டாலும்
சங்க காலத்தை ஒட்டிய பதினென்கீழ்க்கணக்கு நூல்கள் காலத்தில் நேரடியாகக் கண்டிக்கப்பட்டது
போல் கண்டிக்கப்படவில்லை’ (ர.விஜயலட்சுமி. தமிழகமகளிர். ப.196)
என்ற கூற்றுக்கிணங்க இல்லற மகளிர் கணவனின் பரத்தைமையால் துன்பமடைந்தார். மேலும் சமுதாயத்தின்
கட்டாயத்தினால் ஊடல் தீர்ந்தாலும் தலைவி மனம் ஒன்றி வாழமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதை
அறியமுடிகிறது.
வையையிடம்
வேண்டல்
மருதத்திணை மகளிரின் வாழ்வாகவே அமைந்திருந்தது. இயல்பாகவே
ஒருபெண் கணவனின் பிற பிரிவுகளைவிடப் பரத்தைமைப் பரிவை அதிகமாகவே வெறுத்தாள். கணவனின்
பரத்தைமைக்குத் தான் குழந்தைப்பெற்று வயதாகிவிட்டதே காரணம் எனத் தாழ்வு மனப்பான்மைக்
கொண்டாள். இதனை,
‘‘மாநீர்ப் பொய்கை யாணர் ஊர
தூயர் நறியர் நின் பெண்டிர்
பேய் அனையேம் யாம் செய் பயந்தனமே’’ (ஐங்.70)
என்ற
பாடலின் வழி அறியமுடிகிறது. எனவே அச்ச உணர்வுடனே வாழ்ந்த மருதத்திணைத் தலைவி தலைவன்
பரத்தையிடம் சொல்லாமல் தன் மீது அன்பு செலுத்தி எப்போதும் தழுவி இருக்க வேண்டும் என்று
வையையிடம் வேண்டுவதை,
‘‘கழுந்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல
விழுத்தகை பெறுக ஏன வேண்டுதும் என்மாரும்
பூ வீழ் அரியின் புலம்பப் போகாது
யாம் வீழ்வார் ஏன்ம் ஏய்துக என்மாரும்’’ (பரி.11:116-119)
என்ற
பாடல் புலப்படுத்துகிறது.
முடிவுரை
இனக்குழுச்
சமுதாயத்திலிருந்து நிலவுடைமைச் சமுதாயமாக மாறிய போது பலதாரமணமும் பரத்தைமையும் பல்கிப்
பெருகின. மருதத்திணை மக்களின் குடும்ப வாழ்வில் பரத்தைமையால் ஏற்படும் ஊடலே மிகுதியாகக்
காணப்பட்டது. சமுதாயத்திற்காக மகளால் ஊடல் தீர்ந்தாலும் தலைவன் பரத்தைமை ஒழுக்கத்தில்
இருந்தபோதும் மீண்டு வந்தபிறகும் மிகுதியான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். இம்மன
உளைச்சல் கணவன்;;;, மனைவி பாலுறவுக்குள் சிக்கல்களை ஏற்படுத்தியதைச் சங்க இலக்கிய மருதத்திணைப்
பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன.
முனைவர் வீ.உதயகுமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக