வள்ளுவர் படை இயல்
முன்னுரை
உலகில்
தோன்றிய குடிகளில் தொன்மையில் தோன்றியக் குடியாக தமிழ்குடி திகழ்கிறது. பல்வேறு கண்டங்களில் வாழ்ந்த மக்கள் நாகரிகமற்ற நாடோடிகளாககத் திகழ்ந்த காலத்தில் தமிழர்கள் தனக்கென தனிப் பண்பாட்டுக் கட்டமைப்பையும் இலக்கிய செழுமையையும் கொண்ட நாகரிகம் பெற்ற குடிகளாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டனர். என்பதை,
கற்றோன்றி
மண்டோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி
மூத்த குடி (பு.வெ. குடிநிலை)
என்ற
வரிகள் நமக்க சான்று பகர்கின்றன. அந்த வகையில் தொன்மை
இலக்கியமான புறநானூறு பண்டைய தமிழரின் போர் சமூக வாழ்கையையும்
போரின் இன்றியமையாமையையும் நன்கு விளக்குகின்றன.
உலக
இலக்கியங்களில் தலையாய இலக்கிய பதிவாக எண்ணப்பெரும் திருக்குறளும் போரின் செயல்பாட்டைக் கூர்ந்து கவணித்துள்ளது என்றால் அது மிகையாகாது. போரின்
முக்கியத்துவம் கருதி படைசெருக்கு, படைமாட்சி ஆகிய அதிகாரங்களை வழங்கியுள்ளது.
புறநானுற்று வேந்தர்களின் படை இயல்பையும் வள்ளுவர்
சுட்டும் படையின் இயல்பையும் ஒப்பு நோக்கும் வகையில் இக்கட்டுரை அமையப்பெறுகிறது.
படையின்
இன்றியமையாமை
“ஒருவரை
ஒருவர் அடுதலும் தொடுதலும் உலகத்தியற்கை” என்ற
கூற்றிற்கு இணங்க போர் என்பது சங்க
காலத்தில் இன்றியமையாத ஒன்றாக விளங்கியுள்ளது. போர் என்பது ஒரு
நாட்டின் பேராண்மையைச் சுட்டும் அழகு சாதனமாக விளங்காது
நாட்டின் மையப்பொருளாகவும் உயிர்ப்பொருளாகவும் விளங்குகிறது என்பதை,
படை
குடி கூழ் அமைச்சு நட்பு
அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே
அரசருள் ஆண்சிங்கம் போன்றவன் என்றும் படை முதலிய ஆறு
உறுப்புகளுள் படை என்பது முதன்மை
உறுப்பாக வள்ளுவர் சுட்டக் காரணம் படை இன்றி ஒரு
வேந்தனால் பகைவரிடமிருந்து தன் நாட்டு மக்களைக்
காத்துக்கொண்டு சிறந்த ஆட்சிபுரிய இயலாது எனவே ஒரு நாட்டின்
படை என்பது இன்றியமையாத அங்கமாக
விளங்குகிறது.
படைகுடி கூழமைச்சு
நட்பர ணாறு
முடையா
னாரு ளேறு (குறள் 381)
மேலும்
எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும்
படை அரசருடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்தது என்று அருசருடைய செல்வங்களில் (உடைமைகளில்) படையே சிறந்தது என்றும் உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும்
அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்றும் ,
உறுப்பு
அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன்
வெறுங்கையுள்
எல்லாம் தலை (குறள் 761)
கூற்றுடன்று
மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற
லதுவே படை. (குறள் 765)
வீரம்,
மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின்
நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப்
பாதுகாக்கும் பண்புகளாகவும் வள்ளுவர் குறிப்படுகிறார்.
மறமானம்
மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே
ஏமம் படைக்கு. (குறள் 766)
படைத்தலைமையின்
ஆளுமை
போரில்
வெற்றி என்பது அனைத்து வீரர்களின் கூட்டு முயற்சியால் பெறப்பட்டாலும் படைத்தலைமையை மையமாகக் கொண்டே படையின் வெற்றி அமைகிறது. நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதாக இருந்தாலும்,
தலைமை தாங்கும் தலைவர் இல்லாதபோது படைக்குப் பெருமை அற்றுப்போய்விடும். எனவே, படைக்குத் தலைமையின் நிலைப்பாடு மிகவும் அவசியமான ஒன்றாகத் திகழ்கிறது. இதனை வள்ளுவர்,
என்னைமுன் னில்லன்மின்
றெவ்விர் பலரென்னை
முன்னின்று
கன்னின் றவர். (குறள் 771)
பகைவர்கேள!
என் அரசின் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே இதற்கு முன்பு பலர் நின்றனர்; எல்லாம்
மறைந்து இப்போது நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர். என்று படைத்தலைவரின் பெருமையைக் குறிப்பிடுகிறார்.
களம்புக
லோம்புமின் றெவ்விர்போரெதிர்ந்
தெம்முளு
முளனொரு பொருநன் வைகல்
எண்டேர்
செய்யுந் தச்சன்
திங்கள்
வலித்த காலன் னோனே. (புறம் 87)
பகைவர்களே
நீங்கள் போர்களம் போவதைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் உங்களை எதிர்த்துப் போரிட எங்களிடையேயும் ஒருமாவீரன் இருக்கிறான். அவன் திறம் யாதெனின்
நாளென்றிற்கு எட்டுத் தேர் செய்யும் திறமையுடைய
தச்சன் ஒரு மாதம் முழுவதும்
முயன்று பாடுபட்டுச் செய்த ஒரு தேர்க்காலைப் போன்ற
வலிமையும் அழகும் உடையவன் அவன். என்று ஒளவையார் அதியமானின் போர்த்திறம் பற்றி குறிப்பிடுகிறார்.
மேலும்,
படைத்தலைவர்கள் தன்னுடைய படைக்கு வீரம் தருகின்ற வகையில் தன்னுடைய வஞ்சின மொழிகளைக் கூறுதல் அவசியமான ஒன்றாகத் தேவைப்படுகிறது. அவ்வுரைகள் வீரர்களின் மனதில் தோன்றும் பயத்தினைப் போக்கி உற்சாகம் எழச்செய்ய வேண்டுமானதாகவும் படைத்தலைவன் அவ்வுரையின்படி நின்று போர் புரிதல் அதைவிட
அவசியமானதாகவும் கருதப்படுகிறது. இதனை,
இழைத்தது
இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது
ஒறுக்கிற் பவர். (குறள் 779)
சபதம்
செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாரும் இழித்துப் பேச மாட்டார்கள் என்று
வள்ளுவர் உரைக்கிறார்.
மெல்ல
வந்து, என் நல் அடி பொருந்தி,
'ஈ' என
இரக்குவர் ஆயின், சீருடை
முரசு
கெழு தாயத்து அரசோ தஞ்சம்;
………………………………………..
தீது
இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்
இருங் கூந்தல் மகளிர்
ஒல்லா
முயக்கிடைக் குழைக, என் தாரே! (புறம்
72)
என்ற
புறநானூற்றுப் பாடலில் மெல்ல என்னை நெருங்கி வந்து தருக என்று கேட்டிருந்தால்
பெருமைமிக்க என்னுடை புகழ் முரசையும் எனக்கு உரிமையாய்த் தொடர்ந்து வருகின்ற அரசினையும் தருவதோடு என் உயிரையும் கூட
அவர்களுக்குத் தானகத் தந்திருப்பேன் ஆற்றலும் வலிமையும் மிக்க அமைச்சினையும் படையினையும் மதியாது என்னை இகழ்ந்துரைப்போர் என்மீது படை கொண்டு வந்தால்
அவர்கள் நிச்சயம் தப்பிக்க முடியாது. என்னால் போரில் வெல்ல முடியாவிட்டால் மனம் விரும்பி காதல்
புரியாத விலை மகளிரின் உடல்
தழுவிக் கிடக்கும் துன்பத்தில் புரள்வதாக என் மார்பில் தவழும்
மலர் மாலை. என்று தன் வீரத்தையும் தன்
படையின் வலிமையையும் கூறும் சோழன் நலங்கிள்ளி தன்னுடைய பகை வீரரின் போர்
தாகத்தைத் தூண்டும் வகையில் தன்னுடைய வஞ்சினத்தை அமைத்து வீரர்கள் மத்தியில் போர் தாகத்தைத் தூண்டி
தனக்கான வெற்றியையும் தேடியிருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
படை
வீரரின் மறம்
போர்களத்தில்
தன்னுடைய உயிரைக்கூட துச்சமாக எண்ணி போர் புரியும் வீரர்களின்
பேராண்ணை மிகப்பெரியது. உயிர் போகும் நிலையில்கூட தன் நாட்டிற்காகவும் தன்னுடைய
வேந்தனுக்காகவும் இறுதி மூச்சு உள்ளவரை போராடும் படை வீரர்களின் ஆற்றல்
மிகப் பெரியது.
கைவேல்
களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல்
பறியா நகும். (குறள் 774)
கையிலிருந்த
வேலினை யானையின் மீது வீசி விட்டதால்
களத்தில் போரினைத் தொடர வேறு வேல்
தேடுகிற வீரன், தன் மார்பின் மீதே
ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு
மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான் என்றும்,
சுழலும்
இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக்
காரிகை நீர்த்து. (குறள்
777)
விழுப்புண்
படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன்
நாளை எடுத்து. (குறள்
776)
சூழ்ந்து
பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையது என்றும், ஒரு வீரன், தான்
வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில்
விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான் என்றும் வள்ளுவர் போர் மறவனின் வீரத்தைச்
சுட்டுகிறார்.
கடுங்கண்
மறவன் கனல்விழியாச் சீறி
நெடுங்கைப்
பிணத்திடை நின்றான் - நடுங்கமருள்
ஆள்வெள்ளம்
போகவும் போகான்கை வேலூன்றி
வாள்வெள்ளந்
தன்மேல் வர (பு.வெ. எருமை மறம்)
தறுகண்வீரன்
நெருப்புப்போல் விழித்துக் கோபம் கொண்டு நெடிய கையையுடைய யானைப்பிணத்தின் நடுவே நின்றான்; கண்டார் நடுங்கும் போரிடத்துக் கால்கள் வெட்டுண்ட நிலையில் குருதி வெள்ளம் இரிந்தோடவும் போகானாகித் தன் கைவேலை ஊன்றி,
பகைவர் வாட்படைவெள்ளம் தன்மேலே அடர்ந்துவர நின்று போர் செய்தான் என்று
படைவீரன் ஒருவனின் வீரத்தைப் புறப்பொருள் வெண்பாமாலை பகர்கிறது.
பரம்பரை
பரம்பரையாக போர் தொழில் புரிதல்
போர்
தொழிலில் ஈடுபடும் போர்வீரர்கள் பரம்பரை பரம்பரையாக போர் தொழில் கொண்டவர்களாக
இருப்பர். மேலும், அவர்கள் போர் களத்தில் உயிரை
மாத்தமையை எண்ணி பெருமை படக்கூடியவர்களாக இருந்துள்ளனர் என்பதை,
உலைவிடத்து
ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக்
கல்லால் அரிது. (குறள்
762)
அழிவின்றி
அறைபோகா தாகி வழிவந்த
வன்க
ணதுவே படை. (குறள் 764)
தம்
அரசுக்கு ஓர் அபாயம் வரும்போது,
தாம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், தமக்கு ஏற்படும் அழிவிற்கு அஞ்சாது நின்று போரிடும் வீரம், பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு மக்களுக்கே அன்றி, மற்றவர்க்கு வருவது கடினம் என்றும் எந்த நிலையிலும் அழியாததும்,
சூழ்ச்சிக்கு இரையாகாததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை என்றும் வள்ளுவர்
உரைக்கிறார்.
கெடுக
சிந்தை கடிதிவ டுணிவே
மூதின்
மகளி ராத றகுமே
மேனா
ளுற்ற செருவிற் கிவடன்னை
………………………………………………….
பாறுமயிர்க்
குடுமி யெண்ணெய் நீவி
ஒருமக
னல்ல தில்லோள்
செருமுக
நோக்கிச் செல்கென விடுமே. (புறம் 279)
என்று
முதல் நாள் போரில் தனையனையும்
கணவனையும் இழந்த பெண் ஒருத்தி அடுத்த
நாள் போருக்கு பால் முற்றா இளஞ்சிறுவனான
தன் மகனை போர்களம் நோக்கி
செல்ல ஆணையிடும் நிலையை ஒக்கூர்
மாசாத்தியார் பாடுகிறார். போர்களம் செல்லுதல் என்பது பரம்பரை பரம்பரையாக நங்க காலத்தில் தொடர்ந்து வந்துள்ளது
என்பதை அப்பாடல் உணர்த்துகிறது.
முடியுரை
வள்ளுவர்
படையின் பெருமைகளையும் அவசியத்தையும் படை மாட்சி, படை
செருக்கு ஆகிய இரண்டு அதிகாரத்தில்
விளக்கினாலும் சந்க இலக்கியமான புறநானூறு
நூல் முழுமையும் படையின் பெருமைகளை விளக்குகிறது. ஒரு நாட்டின் படை
என்பது அந்நாட்டின் மையமாகக் கருதப்படுகிறது. அது ஒரு நாட்டின்
செல்வ செழிப்பின் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. சங்க காலம் முதல்
இன்றுவரை இந்த விதி மறியதில்லை.
இன்றும் ஒரு நாட்டின் பெரும்
செலவுகள் அந்நாட்டின் படையாகிய இராணுவத்திற்கே வழங்கப்படுகிறது என்றால் படையின்; அவசியத்தையும் அதன் பங்களிப்பையும் நம்மால்
உணர முடிகிறது.
ச.பாலசுப்பிரமணியன்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக