சனி, 9 ஜனவரி, 2016

திருக்குறள் இன்பத்துப்பாலில் ஃப்ராய்டிய அழகியல்


திருக்குறள் இன்பத்துப்பாலில் ஃப்ராய்டிய அழகியல்
                                                                                                                      முனைவர் வீ.உதயகுமார் 
      படைப்புகளை உணர்வுபூர்வமாக அணுகும் உள்ளார்ந்த அணுகுமுறை அழகியல் ஆகும். ஒரு வகையில் தத்துவமே அழகியல் ஆகும். செவ்வியல், நவீனத்துவம், பின்நவீனத்துவம் போன்ற வளர்ச்சியுடனே அழகியலும் ஒன்றாகும். தொடக்கத்தில் தத்துவமாகக் கொண்டாடப்பட்டு வந்த அழகியல் கோட்பாட்டு அறிவியல் முறை உளவியல் வருகைக்குப் பிறகு அறிவார்ந்த விழுமியம் பெற்றுமைகிறது. அறிவியல் துறையிலும் அழகியல் சாயல் இருப்பது கண்டறியப்பட்டது. டார்வின் கூற்றுப்படி அழகியல் உணர்வு அனைத்தும் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது ஆகும்.
அழகியல் வரையறை
      ப்ளேட்டே அவர்கள் வடிவம்தான் அழகு என்கிறார். அவர் இந்த வடிவம் ‘போலச் செய்தல்’ வழியில் பெருவதாகும் என்கிறார். பல கூறுகளின் இணைப்பு வடிவமாகிறது. எனவே தொகுப்பான வடிவம்தான் அழகைத் தருகிறது என்கிறார்.
      அரிஸ்டாடில் அழகியலை வடிவத்தைக் குறிப்பிடுவதோடு அதற்கு அடிப்படையான பண்புகளையும் சேர்க்கின்றார். தனித்தனிப் பொருள்களின் பண்புகளுக்கு ஏற்ப அவற்றை முறைப்படுத்துவதால் அழகு உண்டாகிறது. முறைமை, ஒத்திசைவு, துல்லியம் அழகுக்கு அடிப்படை என்கிறார்.
அழகியல் திறனாய்வு அடிப்படையில்
      மார்க்சிய அழகியல், பெண்ணிய அழகியல், அமைப்பியல் அழகியல், நவீனத்துவ அழகியல், பின்நவீனத்துவ அழகியல், குறியியல் அழகியல், நாட்டுப்புற அழகியல், தேசிய அழகியல், இந்திய அழகியல், ஃப்ராய்டிய அழகியல் என திறனாய்வு அடிப்படையில் பல அழகியல் காணப்படுகின்றன.
ஃப்ராய்டிய அழகியல்
      அழகியல் என்பது ரசனையைச் சார்ந்தது. இதில் அகச்சார்பு, புறச்சார்பு இரண்டும் உண்டு. ஃப்ராய்டியம் முதலான உளவியல் அணுகுமுறைகள் அகம் சார்ந்தவை. இவற்றுக்கு உள்ளடக்கம் முதன்மையானது. ஒன்று முதன்மை என்றால் மற்றொன்று துணைமை என்பது பொருள் ஆகம்.
       அழகுக்கு வரையறைக் கூறமுடியது. ஒரு கோணத்தில் அழகாக இருப்பது மறு கோணத்தில் அசிங்கமாக இருக்கிறது. எனவே பார்க்கின்ற பார்வையைப் பொருத்து அழகு மாறுவதுண்டு. ‘எல்லாம் அழகு’ என்பது எவ்வாறு உண்மையோ அவ்வளவு உண்மையாக ‘எல்லாம் அசிங்கம்’ இருக்கிறது. கட்டுடைப்பு நோக்கில் அழகு அசிங்கமாகலாம் அசிங்கம் அழகாகலாம்.
      ஃப்ராடிய அழகியல் என்பது உளவியல் அழகியலின் ஒரு வளர்ச்சிக் கட்டமாகும். இவரது அழகியல் அகம் சார்ந்த உளவியல் முதன்மையானது மற்ற அணுகுமுறைகள் இரண்டாம் நிலையுடையவை. காரணம் அழகியல் என்பது உணர்வுப் பூர்வமானது உணர்வெழுச்சி வெளிப்பாடுடன் இயைபு உடையது. அழகுக்கு அகமும் புறமும் பின்னணிகளாக இருத்தாலும்  அகமே முதன்மை ஆகும்.
      சமூகக்காரணி, இடையகப் படிநிலை ஆகியவை மார்க்சிய அழகியலுக்கு அடிப்படை ஆகும். இதற்கு மாறாகத் தனியர் காரணி, அகைப்படிமுறை ஆகியவை ஃப்ராடிய அழகியலுக்கு அடிப்படை ஆகும். இரண்டிலும் பிரதிபலிப்பு உண்டு. நிகழ்காலப் பிரதிபலிப்புக்கு மார்க்சியமும் கடந்தகால பிரதிபலிப்புக்கு ஃப்ராய்டியமும் மையப்படுத்துகின்றன. இதன்படி பழைய இன்ப, துன்ப உணர்வுகளை மீண்டும் உணர்ந்து அனுபவித்தலை ஃப்ராய்டிய அழகியல் உள விழுமியமாகக் கருதப்படுகிறது.
காமத்துப்பால்
      காமத்துப்பாலில் காதலர்களின் அன்பின் வெளிப்பாடும், ஈடுபாடும்,
மனப்போக்கும், விழுமியங்களும் சுவையாக விளக்கப்படுகின்றன. மேலும் மனவெழுச்சிகள் இங்கு ஃப்ராய்டிய அழகியல் நோக்கில் பார்க்கப்படுகிறது.


மனம்
மனம் என்பது உள்ளம், உளம், நெஞ்சம், மனசு, இதயம், அகம் என பல்வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது. உள்ளம் என்னும் சொல் அதனிடத்து எழுகின்ற உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் நினைப்புகளையும் விருப்பு வெறுப்புகளையும் அவற்றால் அறியப்படும் தன்மைகளையும் குணங்களையும் இயல்புகளையும் பெருமை சிறுமைகளையும் பண்பாட்டினையும் குறிப்பதாகும்.
'மனம்' மூன்று நிலைப்பட்டது.
1.   Id          -      அடிமனம், நனவிலி மனம், ஆழ் மனம்
2.   Ego        -      நனவு மனம், தன்னுணர்வு மனம்
3.   Super Ego  -      மேனிலைமனம், துணை நனவு மனம், இடை மனம்
நனவிலி மனம் உணர்வுகள்
      மனத்தின் பெரும்பகுதி நனவிலிமனமாகும். இது ஆளுமையின் அடித்தளமாகும். குழந்தை பிறப்பின் தொடக்கத்திலிருந்து இது தொடங்குகின்றது. மரபு நிலை வழியைப் பெறப்படும் அனைத்தும் இதில் அடங்குகின்றன. நனவிலி மனம் இருப்பதை நேரடியாக உணரமுடியாது. நம் நடத்தையைப் பாதிப்பதன் மூலம் உணரமுடியும். அறியாமல் செய்யும் தவறு நனவிலியின் இயல்புகளாக வெளிப்படுகின்றன.

கருமணியில் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற் கில்லை இடம்.                 (1123)

      கருமணியிற் பாவாய் நீ போதாய் - என் கண்ணிற் கருமணியின்கண் உறையும் பாவாய், நீ அங்கு நின்றும் போதருவாயாக; யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை - போதராதிருத்தியாயின் எம்மால் விரும்பப்பட்ட திருநுதலையுடையாட்கு இருக்க இடமில்லையாம். ('யான் காணாது அமையாமையின் இவள் புறத்துப் போகற்பாலளன்றி என் கண்ணுள் இருக்கற்பாலள்; இருக்குங்கால் நின்னோடு ஒருங்கு இருக்க இடம் போதாமையின், நின்னினும் சிறந்த இவட்கு இடத்தைக் கொடுத்து நீ போதுவாயாக' என பரிமேழலகர் விளக்குகிறார்.

      என் கண்ணுட் கருமணியகத்து நிற்கும் பாவாய்! நீ அங்கு நின்று போதுவாயாக, எம்மால் விரும்பப்பட்ட அழகிய நுதலினையுடையாட்கு இருத்தற்கிடம் போதாது என்று மணக்குடவர் விளக்குகிறார்.
திருமணியில் பாவாய் - என் கண்ணின் கருமணியின்கண் தங்கும் பாவையே ! நீ போதாய் - நீ அவ்விடத்தை விட்டுப் போவாயாக; யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை - ஏனெனின் , எம்மால் விரும்பப்படும் அழகிய நெற்றியை யுடையாட்கு இருக்க வேறிடமில்லை என்று தேவநேயப் பாவாணர் விளக்குகிறார்.
தலைவியின் நனவிலிமன உணர்வுகளைக் கருமணியின் மூலம் வெளிப்படுத்துகின்றாள். தலைவன் என்னை விட்டு நீங்காமல் எப்போதும் என்னுடனே இருக்கவேண்டும். அதற்காக என் கண்பார்வை கூட தேவையில்லை. தலைவனே என்னை கண்ணுக்கு கண்ணாக இருந்து காப்பான். தலைவி மனவெழுச்சியின் மூலம் கருமணியையே நி என் கண்ணை விட்டுபோ என்று கூறுகிறாள். தலைவன் மீது கொண்டுள்ள மடமையான காதல் ஆழ்மனத்தில் இருந்து வெளிப்படுகின்றது. தலைவன் என்னை முழுமையாக அடையவேண்டும் அதற்கு நீ இடயூராக இருக்கக் கூடாது என்று தலைவியன் ஆழ்மன வெளிப்பாடாக நனவிலி அழகியல் வெளிப்படுகின்றன. குறளில் ஃப்ராய்டிய அழகியலைப்  பார்க்கமுடிகிறது.
தலைவியின் நனவிலி மனத்திலிருந்து வெளிப்படும் கருத்துக்கள் ஃப்ராய்டிய ஆழகியலோடு ஒப்பிடப்பட்டுள்ளன. மேலும் நனவிலிமன (ஆழ்மன) வெளிப்பாடுடைய குறட்பாக்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.

     வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
     அதற்கன்னள் நீங்கும் இடத்து.             (1124)
     
     நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
     அஞ்சுதும் வேபாக் கறிந்து.                     (1128)
     
நனவு மனம் உணர்வுகள்
      மனத்தினுள் மிகச் சிறியபகுதி நனவு மனமாகும். நனவிலியின் நடவடிக்கையை கவனிக்கின்ற காவல்காரனாக செயல்படும். இது தொடக்கத்திலேயே தோன்றுவதில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப நடத்தை பொருந்திப் போக வேண்டிய தேவையின் காரணமாக எழுகிறது. உண்மை நிலை கொண்டது. ஒவ்வொரு நடத்தையும் எப்படி வெளிப்பட வேண்டும் என்பதை இது தீர்மானிக்கின்றது. குறிப்பிட்ட ஒரு சமயத்தில் நம்மால் உடனே முற்றிலும் உணரக் கூடிய அனுபவங்கள், மனச்செயல்கள் ஆகியவற்றைக் கொண்டு இது விளங்குகின்றது.

     நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்
     காதலர் நீங்கிலர் மன்.                        (1216)
      நனவு மட்டும்  திடீரென   வந்து  கெடுக்காமல்   இருந்தால், கனவில்
சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே.

      நனவென ஒன்று இல்லையாயின் - நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி இல்லையாயின்; கனவினான் காதலர் நீங்கலர் - கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார் என்று பரிமேலழகர் விளக்குகிறார்.

      நனவென்று சொல்லப்படுகின்ற ஒருபாவி இல்லையாயின் கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார் என்று மணக்குடவர் விளக்குகிறார்.

      நனவு என ஒன்று இல்லையாயின் - நனவென்று சொல்லப்படுகின்ற ஒரு காலவேறுபாடு இல்லையாயின்; கனவினாற் காதலர் நீங்கலர் - கனவின்கண் வந்து கூடுங் காதலர் என்னைவிட்டு ஒருபோதும் பிரியார் என்று ஞா. தேவநேயப் பாவாணர் விளக்குகிறார்.
     கனவில் வந்து என்னை கூடும் காதலார் என்னை விட்டு பிரியாமல் இருக்கவேண்டும் என்று நினைக்கின்றார். ஆனால் நனவு மனம் உண்மை நிலை கொண்டது. அதனால் கனவில் இருந்து விழித்தெழுவதற்கு நனவுமனம் உதவுகின்றது. நனவுமனம் கனவு எப்போது வரவேண்டும் அதுஎப்போது வெளிப்பட வேண்டும் என அறிந்து சூழலுக்கு ஏற்ப நடத்தைப் பொருந்திபோக செய்கிறது. இது ஃப்ராய்டிய அழகியலாக பார்க்கப்படுகின்றன.
தலைவியின் நனவு மனத்திலிருந்து வெளிப்படும் கருத்துக்கள் ஃப்ராய்டிய ஆழகியலோடு ஒப்பிடப்பட்டுள்ளன. மேலும் நனவுமன வெளிப்பாடுடைய குறட்பாக்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.




     புல்லா திராஅப் புலத்தை அவருறும்
     அல்லல்நோய் காண்கம் சிறிது.                       (1301)

     உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
     மிக்கற்றால் நீள விடல்.                             (1302)

     இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
     கண்நிறை நீர்கொண் டனள்.                         (1315)

     உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
     புல்லாள் புலத்தக் கனள்.                            (1316)

     வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
     யாருள்ளித் தும்மினீர் என்று                          (1317)

     தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
     எம்மை மறைத்திரோ என்று.                         (1318)

     தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
     இந்நீரர் ஆகுதிர் என்று.                             (1319)

     நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
     யாருள்ளி நோக்கினீர் என்று.                         (1320)

மேனிலை மனம் உணர்வுகள்
மேனிலை மனம் ஆறு வயதில் தோன்றுகிறது. எண்ணங்கள், நினைவுகள், அனுபவங்கள் ஆகியவற்றை நாம் தற்சமயம் உணர முடியாவிட்டாலும் நமக்கு எப்போது தேவையோ அப்பொழுது நனவு நிலைக்கு உயர்த்தி நம்மை உணரச்செய்கின்றது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் வலியுறுத்தும் சமூக நடத்தை, அறக்கோட்பாடுகள் போன்றவற்றை உள்ளத்தில் அமைந்து மேனிலை மனத்தை உருவாக்குகின்றது.

     மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்
     உற்றநாள் உள்ள உளேன்.                               (1206)

      நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத்  தான் உயிரோடு
இருக்கிறேன். வேறு எதை நினைத்து நான் உயிர் வாழ முடியும்?

      யான் அவரொடு உற்ற நாள் உள்ள உளேன் - யான் அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைதலான் இத் துன்ப வெள்ளத்தும் உயிர் வாழ்கின்றேன்; மற்று யான் என்னுளேன் - அது இன்றாயின், வேறு எத்தால் உயிர் வாழ்வேன்? என்று பரிமேலழகர் விளக்குகிறார்.

      யான்அவரோடு புணர்ந்த நாள் இன்பத்தை நினைத்தலானே உயிர் வாழ்கின்றேன் அல்லது யாதொன்றினான் யான் உளேனாய் வாழ்கின்றேன்.
      இது தலைமகன் தலையளியை நினைந்து ஆற்றாளாயின தலைமகளை நோக்கி நீ இவ்வாறு நினைந்திரங்கல் உயிர்க்கு இறுதியாகுமென்ற தோழிக்கு அவள் கூறியதாக மணக்குடவர் விளக்குகிறார்.
      அவரொடு கூடி நுகர்ந்தகாலை யின்பத்தை நினைந்து இறந்து படுநிலை யடைகின்றாய். அதை மறத்தல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.

      யான் அவரோடு உற்ற நாள் உள்ள உளேன் - யான் அவரோடு கூடிய காலை யின்பத்தை இடைவிடாது நினைத்தலாலேயே இன்று இறந்து படாதிருக்கின்றேன்; மற்று யான் என் உளேன் - வேறு எவ்வகையில் நான் உயிர்வாழ முடியும்? என்று ஞா. தேவநேயப் பாவாணர் விளக்குகிறார்.
      தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், நினைவுகள், எண்ணங்கள் போன்றவை நமக்கு எப்பொழுது தேவை என்று மேநிலைமனம் உணர்கிறதோ அச்சமயம் நினைவுக்கு வருகிறது. மேனிலைமனத்தின் வெளிப்பாடாக தலைவனோடு வாழ்ந்த நாட்களில் பெற்ற இன்பங்களை நினைத்து வாழ்வதற்கு உதவுகிறது. நாம் வாழ்ந்த அனுபவங்களை நினைத்து மீண்டும் நாம் வாழ்வதற்கு உதவுகிறது. இது ஃப்ராய்டிய அழகியலாக பார்க்கப்படுகின்றன.
தலைவியின் மேனிலை மனத்திலிருந்து வெளிப்படும் கருத்துக்கள் ஃப்ராய்டிய ஆழகியலோடு ஒப்பிடப்பட்டுள்ளன. மேலும் மேனிலைமன வெளிப்பாடுடைய குறட்பாக்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.

     ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
     நீடுவ தன்றுகொல் என்று.                           (
1307)

     ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
     கூடி முயங்கப் பெறின்.                             (1330)

     நனவினான் நல்கா தவரைக் கனவினால்
     காண்டலின் உண்டென் உயிர்.                       (1213)

முடிவுரை
      அழகியல் என்றாலே சுவையானது ஆகும். திறனாய்வு அடிப்படையில் பல அழகியல்கள் காணப்படுகின்றன. சிக்மண்ட் ஃப்ராய்ட் குறிப்பிடும் மூன்று மனங்களைக் (Id, Ego, Super Ego) கொண்டு ஆய்வுச்செய்ப்பட்டது. காமத்துப்பாலில் ஃப்ராய்டிய அழகியல் கண்டறியப்பட்டுள்ளது. தலைவியின் அடிமன நிகழ்வுகளும் அனுபவங்களும் எண்ணங்களும் வெளிப்படுகின்றன. நனவிலிமனம் ஆழ்மன வெளிப்பாடுகளாகவும், நனவுமனம் உண்மை வெளிப்பாடுகளாகவும் மேனிலைமனம் அனுபவங்கள், நினைவுகள், எண்ணங்கள் போன்றவை தக்க சமயத்தில் வெளிப்படும் வெளிப்பாடுகளாக இருக்கின்றன. இம் மூன்று மனங்களும் ஒருவரின் ஆளுமையைத் தீர்மானிக்கின்றன.


கருத்துகள் இல்லை: