‘‘அன்றாட செயல்பாடுகளில் தற்காப்பு நடத்தைகள்’’
முனைவர் வீ.உதயகுமார்
விரிவுரையாளர்
மனம் என்பது உள்ளம், உளம், நெஞ்சம், மனசு, இதயம், அகம் என பல்வேறு
பெயர்களில் வழங்கப்படுகிறது. உள்ளம் என்னும் சொல் அதனிடத்து எழுகின்ற உணர்ச்சிகளையும் எண்ணங்களையும்
நினைப்புகளையும் விருப்பு வெறுப்புகளையும் அவற்றால் அறியப்படும் தன்மைகளையும்
குணங்களையும் இயல்புகளையும் பெருமை சிறுமைகளையும் பண்பாட்டினையும் குறிப்பதாகும்.
மனம் மூன்று நிலைப்பட்டது.
1. Id
- அடிமனம், நனவிலி மனம், ஆழ் மனம்
2. Ego
- நனவு மனம், தன்னுணர்வுமனம்
3. Super Ego
- மேனிலைமனம், துணை நனவு மனம், இடை மனம்
இட்
மனத்தின்
பெறும்பகுதியாகும். இது ஆளுமையின் அடித்தளமாகும். குழந்தை பிறப்பின் தொடக்கத்தில் இருந்து தொடங்குகிறது. மரபு நிலை வழியைப்
பெறப்படும் அனைத்தும் இதில் அடங்கும். நனவிலி மனம் இருப்பதை நேரடியாக உணரமுடியாது. நம் நடத்தையைப்
பாதிப்பதன் மூலம் உணரமுடியும். அறியாமல் செய்யும் தவறு நனவிலியின் இயல்புகள் ஆகும்.
ஈகோ
மனத்தினுல் மிகச்
சிறியபகுதி. இட்டின்
நடவடிக்கையை கவனிக்கிற காவல்காரன் ஆவான். இது தொடக்கத்திலேயே
தோன்றுவதில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப நடத்தைப் பொருந்திப் போக வேண்டிய தேவையின் காரணமாக
எழுகிறது. உண்மை
நிலை கொண்டது. ஒவ்வொரு நடத்தையும் எப்படி வெளிப்பட வேண்டும் என்பதை இது தீர்மானிக்கிறது. குறிப்பிட்ட ஒரு
சமயத்தில் நம்மால் உடனே முற்றிலும் உணரக் கூடிய அனுபவங்கள் மனச்செயல்கள் ஆகியவை
கொண்டபகுதி.
சூப்பர் ஈகோ
இது ஆறு வயதில் தோன்றிகிறது. எண்ணங்கள், நினைவுகள், அனுபவங்கள் ஆகியவற்றை நாம்
தற்சமயம் உணராவிட்டாலும் நமக்கு எப்போது தேவையோ அப்பொழுது நனவு நிலைக்கு உயர்த்தி
நம்மால் உணரமுடியும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் வலியுறுத்தும் சமூக நடத்தை, அறக்கோட்பாடுகள்
போன்றவற்றை உள்ளத்தில் அமைந்து மேநிலைமனத்தை உருவாக்குகிறது. ஆளுமை சமநிலை
சீர்குலைந்து சிக்களைத் தோற்றிவிக்கும். அச்சிக்கல்களை ஒருவன் எவ்வாறு சமாளிக்கிறான் என்பதை பொறுத்து ஆளுமை
அமையும். இட், ஈகோ, சூப்பர் ஈகோ ஆகியவை
இணைந்து செயலாற்றினால் தான் ஆளுமை சமநிலை ஒருவனிடத்தில் தோன்றும் இது தான் இசைவான
ஆளுமை என்கிறோம்.
தற்காப்பு நடத்தை
‘தற்காப்பு’ என்பது தன்னைக் காப்பது
என்று பொருள்படும். மனிதனுக்கு பல தேவைகள் ஏற்படுகின்றன. அவற்றை பூர்த்தி செய்ய பல
செயல்கள் செய்கின்றான். அச்செயல்களின் விழைவாக சிக்கல்களும் போராட்டங்களும் ஏற்படுகின்றன. அவற்றில் விளைவாக எழும்
மன இறுக்கத்தையும் சமாளிப்பதற்காகப் பல உத்திகளைப் பின்பற்றுகின்றான். அவை பல்வேறு சூழல்களில்
பலவிதமான தற்காப்பு நடத்தையை வெளிப்படுகின்றான்.
நனவிலிக் (இட்) கருத்துக்களில் இருந்து
தம்மையும் தான் சார்ந்த சமூகத்தையும் காத்துக்கொள்ள வேண்டி ஈகோ பல நடவடிக்கைகளை
மேற்கொள்கிறது. இவற்றையே ‘தற்காப்பு செயல்கள்’ (அல்லது) ‘தற்காப்பு இயக்கங்கள்’ என்பார் ஃப்ராய்ட்.
தற்காப்பின் பன்முகம்
தற்காப்பு இயக்கங்கள்
இரண்டு நிலைப்பட்டவை. சுதந்திரத்தைத் தன் வரம்புக்கு கொண்டுவர நனவு மனம் தற்காப்புச் செயல்களைச்
செய்கிறது.
1. முதல்
குறிக்கோள் வேட்கைகளில் இருந்து தன்னைக் காத்துக்கொள்கிறது.
2. இரண்டாவது
குறிக்கோள் தாம் சார்ந்த புறவுலகைக் காப்பது.
‘தற்காப்பு’ என்கிற சொல் மிகவும் ஆழம் பொருந்திய சொல்லாகும். இராணுவ வீரர்கள் நாட்டு
எல்லையில் முகாமிட்டு எதிரிகளிடமிருந்து காக்கின்ற நடவடிக்கைக்குத் ‘தற்காப்பு’ என்று பெயர். இராணுவத்தினரின் முக்கிய
நோக்கம் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்வதே ஆகும். அப்போது தான் தன்னுடைய
எல்லைக்குள் எதிரிகள் வராமல் தடுக்கமுடியும். முதலில் ‘தற்காப்பு’ பின்பு ‘எதிர்ப்பு’ அமைகின்றது. இது போன்ற படிமுறை தான்
உள்ளத்திலும் நிகழ்கிறது.
உணர்வு எழுச்சிகளின்
பன்முக வெளிப்பாடுகளே ‘தற்காப்பு இயக்கங்கள்’ எனப்படும். இத் தற்காப்புச் செயல்களை முதலில் ஃப்ராய்ட் நரம்பு நோயாளிகளிடம் கண்டார். நரம்பு நோய்க்குறிகள்
பன்முகத் தன்மையாக இருப்பதற்குத் தற்காப்புச் செயல்களே காரணம் என்று
கண்டுபிடித்தார். பிறகு இயல்பான மனிதரிடத்திலும் தற்காப்புச் செயல்கள் நிகழ்வதால்
உள்ளத்தின் முக்கிய இயக்கங்களாக இவற்றைக் காண்கிறார் ஃப்ராய்ட்.
தற்காப்பு இயக்கங்கள்
அனைத்தும் அமுக்கத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. அமுக்கம் நிகழாத
கட்டத்தில் தற்காப்புச் செயல்களுக்கு இடமில்லை.
அமுக்கத்தையும்
தற்காப்பையும் கிட்டத்தட்ட ஒரே பொருளைக் கொண்டு ஃப்ராய்ட் கையாளுகிறார். ‘அமுக்கத்தின்’ மறு சொல்லாகத் தற்காப்புச் சொல்லைப் பல இடங்களில்
பயன்படுத்துகிறார். அமுக்கத்தின் பிறதிகளே தற்காப்புச் செயல்கள் என்பது ஃப்ராய்டின் வாதமாகும்.
ஃப்ராய்டின் மகள் அன்னா ஃப்ராய்ட் ஈகோ உளவியலை
வளர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவராவார். அவர் தற்காப்புச்
செயல்கள் என்று சிலவற்றை வரிசைப்படுத்துகிறார்.
1. தனித்தல் (Isolation)
2. செய்யாமை (Undoing)
3. புறத்தேற்றம் (அ) புறத்தெறிவு (Projection)
4. அகத்தேற்றம் (Introjection)
5. தன்னிலைக்குத்
திரும்புதல் (Turning)
6. எதிர்நிலைக்கு
மாற்றுதல் (Reversal
into Opposite)
7. உயர்வழிப்படுத்தல் (Sublimation)
ஆகியவை ஈகோவின் முக்கியத் தற்காப்புச் செயல்களாகும்.
தற்காப்புச் செயல்களில்
அமுக்கம் மட்டும் உளநிகழ்வாக உள்ளது. மேற்கூறிய அனைத்தும் உள நிகழ்வுகளாக மட்டுமல்லாமல் உள
வெளிப்பாடுகளாகவும் உள்ளன. அதாவது இவையனைத்தும் நடத்தைகள் வழியில் வெளிப்படுகின்ற தற்காப்புச்
செயல்களாகும் அதே சமயம் நரம்பு நோய்களில் அதிகமாக வெளிப்படுபவையாகும். அதனால் தான் தற்காப்புச்
செயல்களை நரம்பு நோய்க்குறிகளாக ஃப்ராய்ட் காண்கின்றார்.
தற்காப்பு நடத்தைகள்
நனவிலி மனத்தில் குடிகொண்டு இருக்கும் சிக்கல்களையும்
போராட்டங்களையும் பல தற்காப்பு நடத்தைகலாக உளப்பகுப்பாளர் பிரிக்கின்றனர். உளவியல் நூல்களில்
அறுபதுக்கு மேற்பட்ட தற்காப்பு நடத்தையினைக் குறிக்கும் சொற்கள் காணப்படுகின்றன. அவற்றுள் முக்கியமானவை,
1. அகநேக்குடையன (Introversion)
2. பகல் கனவு
காணுதல் (Fantasy
or Day Dreaming)
3. புறத்தெறிதல் (Projection)
4. காரணம்
கற்பித்தல் (Rationalisation)
5. ஈடு செய்தல் (Compensation)
6. ஒன்றுதல் (Identification)
7. பின்னோக்கம் (Regression)
8. இடமாற்றம் (Displacement)
9. மடைமாற்றம் (Sublimation)
10. பின்வாங்கள் (Withdrawal)
அகநோக்குடைமை
ஒருவன் பிறருடன்
கூடிப்பழகாமல் தனிமையாக ஒதுங்கி வாழ முற்படுகின்றான் அவ்வாறு அவனாகவோ அல்லது
பிறராலையோ தனிமைப்படுத்தப்படும் போது அவனுக்குள் பொருத்தப்பாடற்ற நடத்தை
ஏற்படுகிறது. அகநோக்குடைமை தீவிரமாயின் அவன் சமூக எதிரிகளாகவும் மாறும் வாய்ப்பு
ஏற்படுகிறது.
அன்னா ஃப்ராய்ட்
தற்காப்புச் செயல்களை வரிசைப்படுத்தும் போது தனித்தல் என்பதை முதலாவதாக
குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் ‘தனித்தல்’ என்பது அகநோக்குடைமை சார்ந்ததாகும்.
‘தனித்தல்’ என்பது
மற்றவர்களிடமிருந்து விலகித் தனிமையாக இருத்தலைக் குறிக்கும். அது மட்டுமல்லாமல்
தம்மைப் பிறர் தொடுவதை எதிர்ப்பதும் தனித்தலின் முக்கியக் குணமாகும். உள நிகழ்விலும் இதே
அடிப்படையில் தான் தனித்தல் நிகழ்கிறது.
நனவிலிக் கருத்துகளின்
தொடர்பிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நனவு எண்ணங்களின் செயல்பாடுகள் தனித்தலுக்கு
அடிப்படையானவையாகும்.
தீட்டு
என்கிற பெயரில் நடக்கின்ற தீண்டாமை எனும் சமூக நடத்தை தனித்தலின் வெளிப்படாகும்.
பொருளாதார
ஏற்றத்தாழ்வில் ஏற்படுகின்ற இடைவெளிக்கூட தனித்தல் வெளிப்பாடாகும்.
பெண்களின்
மாதவிலக்கு மரபு வழிப்பட்ட தனித்தல் எனும் தற்காப்புச் செயலாகும்.
தீண்டுதல் உடல் தொடர்பு
ஆகியவை ஊள்ளுணர்ச்சிகளின் உடனடிக் குறிக்கோளாக இருந்தாலும் அவற்றைப் புறக்கணிப்பது
ஒருவித தற்காப்பு நடவடிக்கையே என்பார் ஃப்ராய்ட்.
அகநேக்குடைமையைக்
கட்டுபடுத்துவதற்கு அல்லது குறைப்பதற்கு செய்ய வேண்டியது. எந்த சூழ்நிலையிலும் தனிநபராக
ஒதுக்கி தனிமைப்படுத்தக் கூடாது. உறவினரையோ, நண்பர்களையோ, மாணவர்களையோ, அல்லது பிறரையோ ஒதுக்கி தனிமைப்படுத்தாமல் ஒன்றாக இணைத்து வாழும் போது
அகநோக்குடைமை தீவிரமடைவதைத் தடுக்கமுடியும்.
பகல் கனவு காணல்
மனதில்
அமுக்கப்பட்ட இச்சைகளே கற்பனை மூலம் பகல் கனவாக வெளிப்படுகிறது. பகல் கனவுகளில் நாயகனாகத்
தோன்றுபவன் கனவு காண்பவனே ஆவான். பகல் கனவுகள் இருவகைப்படும் அவை,
1. கனவு காண்பவன்
வெற்றி கொண்டு வீரனாகத் திகழ்வான்.
2. தியாகி போல்
துன்பப்படுவான்.
பகல் கனவு காண்பது தவறு என்று கூற முடியாது. ஆனால் அது தீவிரமடைந்தால்
நிகழ்கால வாழ்வில் கனவு காண்போனைத் தனிமைப்படுத்திவிடும்.
கற்பனை செய்வது தவறு
என்று கூற முடியாது எனினும் கற்பனையிலிருந்து விடுபட்டு நிகழ்கால வாழ்வில் தனது
ஆற்றல்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து தான் கண்ட கனவை அடைவதற்கு முயற்சி
செய்பவனுக்குப் பகல் கனவு ஆக்கச் சிந்தனைக்கு வழிவகுக்கும். நினைத்த இலக்கை அடைய பகல்
கனவை; அதாவது
கற்பனையை சரியான முறையில் பயன்படுத்தும் போது நமக்கு வெற்றியைத் தேடித்தரும்.
உதாரணம்
1.
வகுப்பில் சரியாக
படிக்காத மாணவன் ஒருவன் நன்றாகப்படித்து மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்றுவது போல்
கனவு காண்பது.
2.
பிறர் துன்பப்படுவதைக்
கண்டு மகிழக்கூடிய ஒருவன் பிறருக்காக துன்பப்படுவது போல் கனவு காணக் கூடும்.
3.
இருசக்கர வாகணம் ஓட்ட
தெரியாத ஒருவன் கார் பந்தயத்தில் முதல் இடம் பிடித்து வெற்றி பெறுவது போன்று கனவு
காணக் கூடும்.
புறத்தெறிதல்
நம்மிடம் காணப்படும்
இச்சைகலும் மனவெழுச்சிகலும் உளச்சிக்கல்கலும் பிறரிடமும் காணப்படுகின்றன என்பதை
அறிந்து அதற்கேற்ப செயல்படுதலே புறத்தெறிதல் ஆகும். தனது தோல்விகளையும்
குறைபாடுகளையும் மற்றவர்கள் மீது ஏற்றிக் கூறுதல் புறத்தெறிதல் ஆகும்.
புறத்தெறிதலில் நம்மை
நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். நம்மிடம் இருக்கின்ற குறைபாட்டை நம்மைச் சார்ந்தவர்கள் எடுத்து கூறும்
போது அக்குறைபாட்டை நீக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்சி செய்யாமல்
எந்த ஒரு செயலுக்கும் விதியின் செயல் என்பதும் தனக்கு அதிர்ஷ்டமில்லை என்று
கூறுவதும், நேரம்
சரியில்லை என்று கூறுவது வழக்கமாகிவிட்டது. இவற்றை குறைத்துக்கொள்வதற்குத்
தோல்வியைக் கண்டு சோர்வு அடையாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும் போது
புறத்தெறிதல் என்ற தற்காப்பு நடத்தைப் படிப்படியாகக் குறையத் தொடங்குகின்றன.
புறத்தேற்றம் என்கிற பழமை
வாய்ந்த சொல் அகநிலை இயல்புகளைப் புறநிலையில் ஏற்றிப் பார்ப்பதைக் குறிக்கிறது. மேலும் புறச்சார்
கருத்துகளை அகச்சார்புடையதாக பாவிக்கின்றச் செயலையும் குறிக்கும் இச்செயல் மூலம்
புறநிலை அகநிலையின் பிம்பமாகிவிடுகிறது.
புறத்தேற்றமும்
அகத்தேற்றமும் வாய் உணர்ச்சியின் பெருமுகங்கள் என்று ஃப்ராய்ட் கூறுவார். குழந்தைப் பருவத்தில்
வாய்ப் பருவம் தான் முதலில் அமைந்துள்ளது. இப்பருவத்தில் பாலை(அ)உணவை வேண்டாத பொருளைத் துப்புவதன் மூலம்
புறத்தேற்றத்தையும் குழந்தை ஈகோ பட்டறிவாகப் பெறுகிறது.
தனக்கு வேண்டியதைப்
பெறுவதில் இன்பம் காண்பது அகத்தேற்றமாகும். தனக்கு ஒவ்வாததைப்
புறந்தள்ளி இன்பம் காண்பது புறத்தேற்றமாகும். இதனால் அகத்தேற்றத்திற்கு
அகநிலையும் புறத்தேற்றத்திற்குப் புறநிலையும் மையக்கருவாக விளங்குகின்றன.
உதாரணம்
1.
வகுப்புக்கு தாமதமாக
வரும் மாணவரைப்பார்த்து ஆசிரியர் ஏன் தாமதமாக வருவதற்கு என்ன காரணம் என்று
கேட்கும் போது அதற்கு பேருந்து வரவில்லை என்று கூறுவான். தனது தவறையும்
குறைபாட்டையும் மறைத்துவிட முயற்சிப்பான்.
2.
கடை முதலாளியிடம் ஏன்
இந்த ஆண்டு அதிகப்படியான இழப்பு வந்துவட்டது என்று கேட்டால் அதற்கு இந்த வருடம்
நேரம் சரியில்லை என்று கூறுவது புறத்தெறிதல் ஆகும்.
காரணம் கற்பித்தல்
தனது தவறுகளுக்கும்
இயலாமைக்கும் உரிய உண்மையான காரணங்களை விடுத்து சமுதாயத்தினரால் ஏற்றுக்கொள்ளக்
கூடிய பொருத்தமான வேறு காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூறுதலே ‘காரணம் கற்பித்தல்’ அல்லது ‘காரணம்
புனைந்துரைத்தல்’ ஆகும்.
புறத்தெறிதல் என்னும்
பண்பு தீவிரமானால் அஃது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் நிலையினைத் தோற்றிவிக்கும். ஆனால், ‘காரணம் கற்பித்தல்’ தீவிரமானால் பொய்
பேசுவதின் மூலம் நாம் பிறரை ஏமாற்றுகிறோம்.
காரணம் கற்பித்தல்
இருந்து நாம் மீண்டு வெளிவருவதற்கு பொய் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு தவறை மறைக்க காரணம்
கற்பிப்பது. அந்த
காரணத்தை மறைப்பதற்கு வேறு ஒரு காரணம் சொல்வது என்று இப்படி நீண்டு கொண்டே
சென்றால் பல பிரச்சனைகளும் போராட்டங்களும் வந்து சேறும். இதன் மூலம் மனப்பிறழ்வு
ஏற்பட வாய்ப்புள்ளது.
இதை குறப்பதற்கு நடந்த
உண்மை நிகழ்வுகளை வெளிப்படையாக கூற வேண்டும். அப்படி கூறும் போது நம்
மீது தவறு இருந்தாலும் அது நம்மை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. இல்லையேல் மனப்பிறழ்வை
ஏற்படுத்த வாய்பு உள்ளது.
உதாரணம்
1.
கடன் வாங்கிய நபரிடம்
கடன் கொடுத்தவர் பணத்தைத் திருப்பி கேட்டால் அதற்கு நீங்கள் வருவதற்கு முன்பு வரை
கையில் இருந்தது. இப்பொழுதுதான்
பொருள் வாங்க கொடுத்துவிட்டேன் என்று கூறுவான். பணம் இல்லை என்பதை
மறைப்பதற்கு காரணம் கற்பிப்பான்.
2.
வகுப்பில் ஒப்படைவை
ஆசிரியர் கேட்டால் வீட்டில் மறந்து வைத்துவிட்டேன் என்று கூறுவார்கள். எழுதாமல் வகுப்புக்கு
வந்துவிட்டதைச் சரிசெய்ய காரணம் கற்பிப்பார்கள்.
ஈடுசெய்தல்
தன்னிடம் காணப்படும்
குறைப்பாட்டினைப் பொருட்படுத்தாமல் அக்குறைபாட்டினை ஈடுசெய்யும் வகையில் தனது
சக்தி முழுவதையும் வேறொருசெயலில் செலுத்தி வெற்றி காண விழைவது ஈடுசெய்தல்
எனப்படும். ஒரு
துறையில் ஏற்படும் மனமுறிவினைப் போக்க வேறொரு துறையில் அதிக அளவு ஆர்வம்
செலுத்துவது ஈடுசெய்தலாகும். ஈடுசெய்தல் மூலம் போட்டி மனப்பான்மை அதிகரிக்கிறது. சமுதாயங்களில் ஈடுசெய்தல்
அதிக அளவில் காணப்படுகிறது.
ஈடுசெய்வதற்கு அடிப்படைக்
காரணம் தாழ்வு மனப்பான்மையே ஆகும். ஈடுசெய்தல் சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும் ஈடுசெய்தலை
மீண்டும் மீண்டும் கையாளும் போது சமுதாயத்தால் வெறுத்து ஒதுக்கப்படும் நடத்தைகளாக
மாறும் சூழல் ஏற்படுகிறது. இதில் இருந்து நாம் வெளிவருவதற்கு நமக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை
நீக்கினால் ஈடுசெய்தல் படிப்படியாகக் குறையத் தொடங்கும்.
உதாரணம்
1.
கருப்பு நிற உடையவனை
அனைவரும் விலக்கும் போது அவன் அனைவரின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப வேண்டும்
என்று திரைப்படங்களில் நடிப்பது.
2.
படிப்பில் சிறந்து
விளங்க முடியாதவன் தொழிலில் சிறந்து விளங்குவது.
3.
ஆங்கில பாடத்தில்
தேற்சி பெற முடியாத மாணவர் கணிதத்தில் முதல் வகுப்பில் தேற்சி பெறுவது.
ஒன்றுதல்
நம்மால் வெளிப்படுத்த
முடியாமல் ஒடுக்கப்பட்ட இச்சைகளும் தேவைகளும் வேறொருவரது நடத்தையில் வெளிப்படும்
போது அவற்றைக் கண்டு இரசிப்பதன் மூலம் ஓரளவு நிறைவு பெறுதலே ஒன்றுதலாகும்.
உதாரணம்
1.
நமக்கு எப்பொதும் துன்பத்தைத் தரக்கூடியவரை நம்மால் தண்டிக்க முடியாத
பொழுது அவரை மற்றொருவர் தண்டிப்பதைப் பார்த்து நிறைவு பெறுவது ஒன்றுதலாகும்.
பின்னோக்கம்
தான் எதிர் கொண்டுள்ள
மனப்போராட்டங்களிலிருந்து விடுபட ஒருவன் தன்னையும் அறியாமல் வளர்ச்சிப்படிகளில்
கீழறங்கி சிறுபிள்ளையைப் போல் செயல்படுவது பின்னோக்கம் எ னப்படும். இப்பின்னோக்கம் ஒருவரின்
எல்லாச் செயல்களிலுமோ அல்லது குறிப்பிட்ட ஒரு வாழ்க்கை நிகழ்வுகளில் எழும்
பிரச்சனைகளை மட்டும் பொறுத்தே அமையக்கூடும்.
உதாரணம்
1.
பெரியவர்கள்
பிரச்சனைகளைக் கண்டு பயந்து அதை தீர்ப்பதற்கு வழிதெரியாமல் அவருக்கு கீழ்
இருப்பவரை நீ இந்த பிரச்சனையைப் பார்த்து முடித்துவிடு என்று கூறுவது
பின்னோக்கமாகும்.
2.
வீட்டை விட்டு வெளியேறி
விடுவேன் என்று பயமுறுத்துவது, பிறரிடம் பேச மறுப்பது
போன்ற குழந்தைத்தனமான செயல்களை வயது வந்தவர்களும் வெளிப்படுத்துதல்
பின்னோக்கமாகும்.
இடமாற்றம்
ஒரு குறிப்பிட்ட ஊக்கி
அல்லது மனவெழுச்சி இயல்பான தன்னுடன் தொடர்புடைய பொருளிலிருந்து விலகி முற்றிலும்
தொடர்பில்லாத வேறோரு பொருள் அல்லது ஊக்கியின் பால் செல்லுதலே இடமாற்றம் அல்லது
நிலைமாற்றம் எனப்படும்.
‘பலிகாடா ஆக்கப்படுதல்’ இத்தகைய தற்காப்பு
நடத்தையின் பால்பட்டதே இடமாற்றம் பெறும்பாலும் கோபத்தின் காரணமாக எழுகின்றன.
நாம் செய்யும் ஒவ்வோரு
செயல்பாடும் பொறுமையாக செய்ய வேண்டும். பதட்டத்துடன் செய்யக்கூடாது. அவ்வாறு செய்யும் பொழு தான் வெற்றியை உடமையாக்கித்தரும்.
நாம் செய்யும்
செயல்பாடுகளில் நல்லவற்றை எடுத்துக்கொண்டு தீயவற்றை விட்டு ஒதுக்க வேண்டும். மனதை நிதானமாக
வைத்துக்கொண்டு வேரொரு செயலில் ஈடுபட்டால் இடமாற்றத்தைத் தவிர்க்க முடியும்.
உதாராணம்
1.
தொழிலில் நஷ்டம்
ஏற்பட்டால் அதை தாங்கி கொள்ள முடியாமல் பார்க்கும் நபர்கள் அனைவரிடமும் மிகக்
கடுமையாக நடந்து கொள்ளவது.
2.
நண்பர்களுக்கு இடையில்
ஏற்பட்ட பிரச்சனையால் வீட்டில் இருக்கும் அனைவரிடத்திலும் கோபத்தைக் காட்டுவது.
மடைமாற்றம்
இயல்பு ஊக்கத்தின் வழியாக
ஏற்படும் மனவெழுச்சிகளையும் ஊக்கிகளையும் சமூகத்தால் ஒப்புக் கொள்ளக் கூடிய
வகையில் நிறைவேற்றிக் கொள்ள வழியில்லாத சூழ்நிலைகளில் மனஇறுக்கமும் மனமுறிவும்
ஏற்படுத்திக் கொள்வதற்குப்பதில் அவ்வூக்கிகள் அனைத்தையும் சமூகம் ஏற்றுக் கொள்ளக்
கூடிய ஊயர்நிலை ஊக்கிகளாக மாற்றுதலே ‘மடைமாற்றம்’ எனப்படும்.
‘‘உயர்வழிப்படுத்தலுக்கு ‘மடைமாற்றம்’ எனகிற உளச்செயல் முக்கிய அங்கம்
வகிக்கிறது’’ என்கிறார் ஃப்ராய்ட்.
உதாரணம்
1.
இயல்பாக காணப்படும்
பாலுணர்வை சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை. அவற்றை சமூகம்
ஏற்றுக்கொள்ளும் வகையில் கவிதை இயற்றுதல், சிற்பம் வடித்தல், ஓவியம் வரைதல் போன்ற ஆக்க
பூர்வமான கலைகளில் திசை திருப்பிவிடுதல்.
2.
குழந்தைப் பேறு
இல்லாதவர்கள் செல்லப்பிராணிகளை வளர்த்தல்.
பின்வாங்கள்
மனமுறிவு அல்லது தோல்வியை
உண்டு பண்ணும் சூழ்நிலையில் இருந்து ஒருவன் விலகிக்கொள்ளும் முறையைப்
பின்வாங்குதல் என்று கூறுகிறோம். இக்கட்டான சூழ்நிலையிலிருந்து பின் வாங்கிக் கொள்ளுவதால் தாமே
பாதுகாப்பைத் தேடிக்கொள்கின்றனர். தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை உடையவர்கள் பின் வாங்குகின்றனர்.
முதலில் கடினமான
செயல்களில் பின்வாங்குதல் நிகழ்கிறது. அது தொடர்ந்து நிகழும் போது எளிமையான செயலைக் கூட நம்மால் செய்ய முடியாத
மனநிலை ஏற்பட்டு பின்வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது.
உதாரணம்
1.
மலை மீது ஏற முடியாத
ஒருவன் தோல்வியடைவதை விரும்பாதவன் ஏறுவதைத் தவிர்க்கின்றான். நான் சென்று இருந்தால்
மலை மீது ஏறிறுப்பேன் என்று கூறுவது.
2.
தன்னால் ஒரு செயலை
முழுமையாகச் செய்து முடிக்க முடியாது என்று அறிந்த ஒருவன் பின்வாங்குவான்.
முடிவாக
செயலில் ஈடுபடாமல் அதில்
இருந்து விலகிநிற்கும் செயலே தற்காப்பு நடத்தையாகும். இதன் விழைவு நம்மை நாமே
ஏமாற்றிக் கொள்ளும் முயற்சியே தற்காப்பு நடத்தை ஆகும்.
மனப்போராட்டங்களால்
ஏழக்கூடிய மனஇறுக்கம், மனமுறிவு ஆகியவற்றை தவிர்க்க பல உத்திகளைக் கையாள்கின்றோம்.
ஈகோ
யாரை அதிகமாக விரும்புகின்றதோ (குறிப்பாக பெற்றோர், உறவினர், ஆசிரியர், தலைவர், நடிகர்) அவர்களை உயர்வாக எண்ணி உறவு கொள்ளவைக்கிறது. அன்பு, பற்று, நட்பு, மரியாதை, பணிவு ஆகிய அனைத்தும்
ஈகோவின் வெளிப்பாடுகளாகும். நெறிவயமாக்கப்பட்ட வெளிப்பாடுகள் வழியில் பாலுணர்ச்சியை ஈகோ
வெளிப்படுத்துவதன் வழியில் அகஇறுக்கம் குறைகிறது.
கவலை, அவமானம் குற்றஉணர்ச்சி
போன்றவற்றிலிருந்து ஒருவனைப் பாதுகாக்கின்றன. தற்காப்பு நடத்தைகள்
ஒருவனை இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து விடுவித்து அவனது சுயகௌரவம் பாதிக்கப்படாமல்
தப்பிப்பதற்கு உதவிகின்றன. கடுமையான மனஇறுக்கத்தால் பாதிக்கப்பட்டு மனநோயாளியாக மாறுவதில் இருந்து
தடுக்கப்படுகிறது. எனவே, தற்காப்பு நடத்தையைக் குறைவாகப் பயன்படுத்தும் போது நமது செயல்பாடுகளில்
திருப்தி அடைய முடியும். இல்லை எனில், அதிக அளவில் பயன்படுத்தப்படும் போது அது நமது பொருத்தபாடற்ற நடத்தையையும்
மனநோயையும் உண்டாக்குகின்றன. தற்காப்பு நடத்தையைக் குறைத்துக் கொள்ளும் போது உடல், மனம் சமநிலை அடையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக